சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவர் லோகேஷ் குமார் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசியைச் சேர்ந்த லோகேஷ் குமார் (24) சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வந்தார்.
இறந்து கிடந்த மருத்துவர் லோகேஷ்
கொரோனா வார்டில் பணியாற்றிய இவர் கடந்த அக்டோபர் 14-ம் தேதி தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 25-ம் தேதி விடுதி ஊழியருடன் தொலைபேசியில் பேசியதற்குப் பின்னர் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 27-ம் தேதி மாற்று சாவியைப் பயன்படுத்தி விடுதி ஊழியர்கள் கதவைத் திறந்தபோது அங்கு படுக்கையில் இறந்து கிடந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மறைக்க முயற்சித்த அரசு
மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. ஆனால் அரசு இதனை மறைக்கவே முயற்சி செய்தது. சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்கள் சக மருத்துவர்களை லோகேஷ் மரணம் குறித்து யாரும் பேசக் கூடாது என்று கூறியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மருத்துவர் லோகேஷ் மரணம் குறித்த ஆவணங்களை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் அல்லாத மருத்துவ நிபுணர் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவரது மரணத்தை கொரோனா மரணமாக ஏற்று, இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று தொடர்ச்சியாக மருத்துவ சங்கங்கள் வலியுறுத்தி வந்தனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன் களப்பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஐம்பது லட்சம் இழப்பீடு என்று பல அறிவிப்புகளை செய்த அரசு தற்போது மருத்துவரின் மரணத்தை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
முன்களப்பணியாளர்களின் இறப்பை கொச்சைப்படுத்தும் செயல் – மருத்துவர் ரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான் மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.
இந்த அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், கொரோனா இறப்பு குறைவாக இருப்பதாகவும், மருத்துவத் துறை பணியாளர்களின் மரணம் குறைவாக இருப்பதாகவும், முன்களப்பணியாளர்கள் இறப்பு குறைவாக இருப்பதாகவும் காட்டுவதற்கும், அதனை அரசின் சாதனையாக சொல்வதற்கும்தான் இப்படி மறைக்கிறார்கள். இது முன்களப் பணியாளர்களின் இறப்பை கொச்சைப்படுத்துவதாகும் என்றார்.
மேலும் ஒரு பக்கம் இழப்பீடு, நிவாரணம், அரசுப் பணி என்று அறிவித்துவிட்டு, இன்னொரு பக்கம் அதை செய்யாமல் இருப்பதற்கான பணியையும் செய்கிறது. இந்த அரசு முதலில் ஐம்பது லட்சம் ரூபாய் அறிவித்துவிட்டு, இப்போது இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் என்று குறைத்துவிட்டது. இப்போது அதைக்கூட கொடுப்பதையும் தடுக்க இப்படி மறைக்கும் வேலைகளை செய்கிறது. கொரோனா மரணத்தை வேறு விதமான மரணங்கள் என்று சொல்வது அந்த குடும்பத்திற்கு மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. வாரியர் என்று கூறிவிட்டு இப்படி செய்யக்கூடாது. அவர்கள் மரணத்தை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
மருத்துவர் பிரதீபாவின் மரணம்
தொடர்ந்து பேசிய அவர், ”இதேபோல கே.எம்.சி மருத்துவமனையில் பிரதீபா என்ற மருத்துவர் மரணத்தையும் மறைத்திருக்கிறார்கள். இப்படி பல மருத்துவர்களின் மரணத்தை மறைத்துள்ளனர். இதேபோல எம்.எம்.சி-யில் ஒரு செவிலியர் கொரோனா என்று அறிவித்து கொரோனா வார்டில் சிகிச்சை எடுத்தார். ஆனால் கொரோனா மரணம் இல்லை என்றார்கள். அதன்பின் பெரும் போராட்டத்தின் பிறகு கொரோனா மரணம் என்று அறிவித்தார்கள்.
மிரட்டப்பட்ட மருத்துவர்கள்
அதேபோலத்தான் லோகேசின் மரணத்திலும் பரிசோதனை செய்து அறிக்கை கொடுத்த மருத்துவர்கள் மிரட்டப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் செய்திகளாகி அழுத்தம் ஏற்பட்ட பின் தற்போது கொரோனா மரணம் என்று அறிவிக்க முடிவு செய்துள்ளார்கள். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அதேவேளையில் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
600-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் மரணம்
மொத்தமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்கள் எத்தனை பேர் கொரோனா மரணம் மற்றும் இதர பாதிப்புகளை அடைந்திருப்பார்கள் என்று மருத்துவர் ரவீந்திரநாத் அவர்களிடம் கேட்டோம்.
அரசுதான் முழுமையான புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும். ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியா முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் மரணம் அடைந்திருப்பார்கள். அண்மையில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கூறினார். இது பலத்த எதிர்ப்பை சந்தித்தது.
மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவது சரியல்ல. இது கொரோனா வாரியர் என்று சொல்லப்படும் முன்களப்பணியாளர்களுக்கு செய்யப்படும் சமுக அநீதி என்று கூறலாம்.
கொரோனாவில் முன் களப்பணியாளராக இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களின் நிலையே இவ்வாறாக இருக்கிறது. இதில் அனைத்து விதமான கழிவுகளையும் அகற்றிய துப்புரவுப் பணியாளர்களின் நிலையை இந்த அரசு என்னவாக வைத்திருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது என்று முடித்தார்.
முகப்புப் படத்தில் இருப்பவர் :மருத்துவர் லோகேஷ்குமார்