கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் கொரோனாவால் டெல்லியில் 348 மரணங்கள் நிகழ்ந்த அன்று லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் அவசரப் பிரிவின் முன் நின்றிருந்தேன். அது மாநில அரசின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை பிரிவாகும். அங்கிருந்த அறிவிப்பு பலகை “படுக்கை எண்ணிக்கை – பூஜ்யம்” என்று அங்கிருந்த நிலமையின் சாரத்தை சிவப்பு எழுத்துக்களில் கூறிக் கொண்டிருந்தது.
மருத்துவமனை வளாகத்தில்
ஓர் இளம் பெண் எனது பத்திரிக்கையாளர் அட்டையைப் பார்த்துவிட்டு கடந்து சென்றார். அப்பெண்ணின் சகோதரி அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரும் அந்தப் பெண்ணின் கணவனும் மூன்று நாட்களாக அந்த இடத்திலேயே காத்திருப்பதாகவும் கூறினார். “உங்களை உள்ளே அனுமதிக்காத நிலையிலும் ஏன் இங்கே காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு , “ஒருவேளை ஆக்சிசன் தீர்ந்துவிட்டால் அவளுக்காக உடனே வாங்கிவர வேண்டுமல்லவா?” என்றார்.
திடீரென ஒரு அழுகுரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு கணவனும் மனைவியும் வந்து கொண்டிருந்தனர். அந்த கணவன் ஒரு கையில் கைபேசியை காதில் வைத்தவாரும், இன்னொரு கையில் தனது மனைவியை கீழே விழாமல் பிடித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தார். அவர் தனது மனைவியை நடைபாதையில் அமரவைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த முயன்றார்.
அந்தப் பெண் அவரது கணவனிடமிருந்து கைப்பேசியை வாங்கி அழுகைகளின் ஊடே தேம்பித் தேம்பி பேசினார். “எனக்கு என் தாய் வேண்டும். அவளைத் திருப்பி கொண்டு வாருங்கள், அவள் இறந்து விட்டாள்… என் அம்மா இறந்து விட்டாள். என் தந்தையிடம் நான் எப்படி கூறுவேன். நான் உடைந்து விட்டேன் அத்தை… எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” என்றார்.
“நான் உடைந்து விட்டேன் எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” என்பதைத் திரும்பத் திரும்ப தனக்குள்ளேயே கூறிக்கொண்டார். ஒருவேளை அவர் நடப்பதை தனக்குத்தானே விளங்கிக்கொள்ள முயன்றிருக்கலாம். ஒரு பத்திரிக்கையாளர் அவர்களை புகைப்படம் எடுக்க நெருங்கினார். அதற்கு அவளது கணவர் அனுமதிக்கவில்லை. அதை மீறியும் அவர் புகைப்படம் எடுக்க முயன்றார். இதனைக் கண்ட மருத்துவமனையின் காவலாளி ஒருவர் அந்த பத்திரிக்கையாளரிடம் அவர்களை நிம்மதியாக இரங்கல் செலுத்தவாவது விடுங்கள் எனவும் தடுப்பின் பின் செல்லுமாறும் கூறினார்.
நேரம் மந்தமாக சென்றது.
உறவினர்கள் அனைவரும் சிலை போல தங்களின் அன்பானவர்கள் மரணத்தோடு போராடும் செய்தியைக் கேட்க காத்திருக்க, பலதரப்பட்ட வாகனங்களும் ஆம்புலன்சுகளும் வாயிலின் உள்ளும் புறமும் சென்று கொண்டிருந்தன. அதிலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மூச்சு விடுவதற்குக் கூட நேரமின்றி உள்ளும் புறமும் விரைந்தனர்.
அங்கிருந்த பெரும்பாலானோர் கையில் கைபேசியுடன் காணப்பட்டனர். சிலர் தங்கள் உறவினர்களின் மரணச் செய்தியை தெரிவித்துக் கொண்டும், சிலர் சில காணொளிகள் கண்டும், இசை கேட்டும் கொண்டிருந்தனர். அங்கிருந்த எல்லாருமே அந்த சோகத்தை மீண்டும் மீண்டும் உணரவோ அல்லது அதில் இருந்து ஒரு கணமேனும் தப்பவோ முயன்று கொண்டிருந்தனர்.
மவுலானா ஆசாத் கல்லூரி பிணவறை
நான் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு சென்றேன். எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் இருந்து வரும் பிணங்கள் இங்கேதான் கொண்டுவரப்படுகிறது. வருகிற வழியில் ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதைக் கண்டேன். இச்சூழலுக்கு சம்பந்தமே இன்றி மிகவும் கொண்டாட்டமாக அது நிகழ்ந்து கொண்டிருந்தது.
பிணவறையில் மௌனம் கனத்துக் கிடந்தது. அந்த மௌனம் உறவினர்களின் அழுகுரலாலும், வேலையாட்கள் அவ்வப்போது எரியூட்டவோ,புதைக்கவோ தயாரென அறிவிக்கும் பிணங்களின் பெயர்களாலும் மட்டுமே கலைந்தது.
தனது மனைவியை இழந்த ஒரு கணவன், உடல் எடுப்பதற்கு தேவையான எழுத்துப்பணிகள் முடிந்துவிட்டதா என காணச்சென்ற மகனுக்காக காத்திருந்தார். அவரது மனைவி ஐம்பது வயது நிறைந்தவர் என்றும் ஆக்சிஜன் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் ஒரு வாரத்துக்கு முன் அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிந்தது. அவரது பெயர் என்ன என்று கேட்டதற்கு “இதற்கு மேல் அது தெரிந்து என்ன லாபம், அவள் மறைந்து விட்டாள்” என சோகத்துடன் கூறினார். அவரை ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் நெருங்கி, உங்களது மகனுக்காகவாவது தைரியமாக இருங்கள் என்றும், மருந்தே இல்லாத நோய் தாக்கினால் யாரால் என்ன செய்ய முடியும் என்றும் ஆறுதல் உரைத்தார். அவர் நிமிராமலேயே சரியென்பது போல் தலையை ஆட்டினார்.
அந்த மகன் வெளிய வந்து “இன்று மாலை 6 மணிக்குத்தான் உடல் கிடைக்கும் ,மேலும் நிகாம்போத் காட்டில் உள்ள வரிசையின் காரணமாக நள்ளிரவில் தான் அடக்கம் செய்ய இயலும். நள்ளிரவில் அடக்கம் செய்வது மரியாதையாய் இருக்காதென உள்ளிருந்த அதிகாரிகள் கூறினர். ஆகவே நாளை காலை 8 மணிக்கு உடலை வாங்க வரவேண்டும்” என்றான்.
பின்னர் தான் காஜல் கமத்தின் குடும்பத்தை சந்தித்தேன்.
காஜல் கமத் எனும் இளம் பெண்ணின் மரணம்
காஜல்(18), மதன் மோகன் மாளவியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 3 நாட்கள் இருந்துவிட்டு, ஒரு வாரம் முன்னே தான் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவளுக்கு மூச்சு விடுவதில் மட்டுமே சிரமம் இருந்ததாகவும், வேறு எந்த கொரோனா அறிகுறியோ, நோயோ முன்னர் இருக்கவில்லை எனவும் கூறினார் அவளது மாமா இந்தர்.
மூன்று நாட்கள் மதன் மோகன் மாளவியா மருத்துவமனையில் இருந்த பிறகு அந்த மருத்துவர்கள் இங்கே மாறச்சொன்னதாகவும், ஒருவேளை ஆக்சிசன் பற்றாகுறை காரணமாக இருக்கலாம், தனக்கு சரியாகத் தெரியவில்லை எனவும் கூறினார்.
“ஒரு வாரத்திற்கு முன் அவளை இங்கு சேர்த்தோம். மருத்துவர்கள் அவ்வப்போது அவளின் நிலையைக் கூறுவர். சிலமுறை காணொளி அழைப்பின் மூலம் அவளிடமே பேசியுள்ளோம். சில நாட்கள் அவள் மற்ற நாட்களைவிட முன்னேறி காணப்பட்டாள். இன்று காலையும் மருத்துவர்கள் காணொளியில் அழைத்து அவளைக் காட்டினர். மூச்சுவிட முடியாத நிலையில் காணப்பட்டாள். சில மணிநேரம் கழித்து அவள் மறைந்து விட்டதாகத் தெரிவித்தனர், இன்னும் என்னால் அதை நம்பமுடியவில்லை” என்றார்.
அந்த குடும்பம் மதியமே பிணவறைக்கு வந்துவிட்டனர் , ஆனால் அவளது பெயர் மாலை நான்கு மணிக்கே அழைக்கப்பட்டது. உடனே அவளது உடலை, அந்த குடும்பம் சூழ்ந்துகொண்டது.
“கண்ணே எழுந்திரு” என காஜலின் தாயார் கதறினார். “அவளை எழுப்பிவிடுங்கள், எழுந்துவிடுவாள்” என்றார்.
அந்த கதறும் தாயை தூக்கி நிறுத்த குடும்பமே முயன்றது.
உறவினர்கள் அனைவரும் வெளியே வந்தவுடன் காஜலின் தந்தை அனில் கமத், அவரது ஆற்றுப்படுத்த முடியாத மனைவியை மற்ற பெண்களோடு ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்தார். இந்தர் என்னைப்பார்த்து, ” காஜல் மறைந்துவிட்டாள். ஆனால் உண்மையில் இறந்தது அவளது தாய்தான். அவள் எப்படி இனி வாழ்வாள்? பெண்களை ஆறுதல் படுத்துவது கடினம் அதனால் தான் அவர்களை சாம்சன் காட்டிற்கு அழைத்துச்செல்வதில்லை” என்றார்.
பிணவறையில் காகிதப்பணி முடிந்தவுடன் அவர்கள் இரண்டு ஆட்டோவை எரியூட்டும் இடமான நிகம்போத் காட்டிற்கு செல்ல அழைத்தனர்.
நிகம்போத் மலைத்தொடர் மயானம்
20 நிமிடப் பயணத்தின் பின் அவர்கள் தகன மையத்தின் அலுவலகத்தில் உடலை எப்படி எரியூட்டுவது, விறகு கொண்டா அல்லது சி.என்.ஜி முறையிலா என்று குழம்பிக் கொண்டிருந்தனர்.
மனோஜ் கமத், (அனிலின் சகோதரன்) காஜலின் உடலை விறகு கொண்டு தகனம் செய்ய இடமுள்ளதா என பார்க்கச் சென்றார். அவர் யமுனை கரையில் கோவிட் வைரசினால் இறந்தவர்கள் எரியூட்டப்படும் இடத்தை நோக்கி சென்றார்.
மனோஜ் அங்கேயிருந்த ஒரு சாமியாரிடம் விறகு கொண்டு எரியூட்ட இடமுள்ளதா என கேட்டார். அதற்கு அவர் உங்களால் அலுவல்பூர்வ எழுத்துப் பணிகளை முடித்து, விறகு தயார் செய்ய முடியுமானால் இடம் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் வரிசை மிக அதிகமாக உள்ளதை நினைவில் கொள்ளுங்கள் என்றார்.
மனோஜ் திரும்பிவந்து அனிலிடம் நிலமையை கூறியபோது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் சி.என்.ஜி முறையைத் தேர்வு செய்திருப்பதாகவும், நள்ளிரவு வரை விறகு கொண்டு எரியூட்டும் முறைக்கு வாய்ப்பு இல்லையென்றும் தகவல் வந்தது.
அலுவலகத்தில் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது என்றும், அவர்கள் ஆவணங்களை கொடுப்பதற்கு தாமதப்படுத்துவதாகவும் கூறினார். இறுதியில் சி.என்.ஜி. முறை எப்போது ஒதுக்கப்படும் என கேட்டதற்கு, இரவு 8 மணிக்கு தான் ஒதுக்கப்படும் என்றும், அதுவரையில் ஆம்புலன்ஸ் உள்நுழைய முடியாதென்றும் கூறியிருப்பதாக தெரிவித்தார். மேலும் மெல்லிய குரலில் “நாம் காத்திருக்க வேண்டும்” என்றார்.
அனிலும் அவரது உறவினர்களும் அந்த இடத்தை சுற்றிக்கொண்டும், என்ன நடக்கிறதென கவனித்துக்கொண்டும் இருந்தனர். ஒவ்வொரு முறை ஒரு உடல் ஆம்புலன்சில் இருந்து இறக்கப்படும் போதெல்லாம் அனில் பதட்டமாகிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழிந்த பின் தனது மகளின் உடல் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சை நோக்கிச் சென்றார். அது ஏற்கனவே இருந்த இடத்தை விட்டு நகர்ந்து இருந்தது. ஓட்டுனரிடம் ஏன் என கேட்டபொழுது அவரது மகளின் உடல் அதில் இல்லை என்றார். மொத்த குடும்பமும் பதட்டமாகி உடல்களின் பெயர்களைப் பார்த்தது. அவர்கள் தகன மையத்தின் உள்ளிருந்த பொழுது உடல்களை வேறு ஆம்புலன்சிற்கு மாற்றியுள்ளனர் என தெரிந்தது. அதற்கு பின் காஜலின் தந்தை அவரது மகளின் உடல் இருந்த அந்த ஆம்புலன்சின் அருகிலிந்து நகர்வதாய் இல்லை.
நான் இந்தரிடம் காஜலின் தாயார் வரவில்லையா என கேட்டேன். எங்களின் முறை வருவது உறுதியான பின் அழைத்து வரப்படுவார் என்றுகூறினார். அனில் என பெயர்கொண்ட இன்னொரு குடும்பத்தினர் ஒருவர் எரியூட்டப்பட்டு வெளியாகும் புகையுடன் கலந்த சாம்பலைக் காட்டி அதில் வைரஸ் இருக்குமாவென கேட்டார். நான் அதற்கு பதில் கூறும் முன்னரே இந்தர் இடைமறித்து, “பரவ வேண்டியதெல்லாமும் ஏற்கனவே பரவி விட்டது. அது இப்போது மக்களின் மனங்களில் உள்ளது. நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். நான் என்னுடைய முடியில் படிந்துள்ள சாம்பலின் வாசனையை போக்கிவிடுவேன், ஆனால் நிச்சயம் மறக்கமாட்டேன்” என்றார்.
நன்றி: சுப்ரிதி டேவிட், NewsLaundry