டெல்லி விவசாயிகள் போராட்டம்

மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்

கடந்த 2020 நவம்பர் மாதம் ஒன்றிய அரசு அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் அமல்படுத்திய 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடத் துவங்கிய விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் தற்போது வரை நடத்திவரும் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது வரை போராட்டக் களத்திலேயே 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ள நிலையிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தினை வீரியம் குறையாமல் தொடர்ந்து வருகின்றனர்.

11 சுற்று பேச்சுவார்த்தைகளில் முடிவில்லை

தற்போதுவரை ஒன்றிய அரசு மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து 11 சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் விவசாயிகளுக்கு சாதகமான ஒரு முடிவைக் கொண்டுவர ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை.

போராட்டத்தில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் அறுவடையை மேற்கொள்ள விவசாயிகள் குழு

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பட்சமாக போராட்டக்காரர்களின் நிலங்களில் தற்போது வளர்ந்துள்ள கோதுமையை அறுவடை செய்வதற்கு ஊரில் உள்ள பிற விவசாயிகள் குழுவாக இணைந்து அறுவடை செய்து வருகின்றனர்.

 “டெல்லி எல்லைகளில் போராடி வரும் எந்த ஒரு விவசாயியும் தங்கள் பயிர்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். போராட்டத்தில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு வராமல் இருக்கும் விவசாயிகளுக்காக இங்கு ஒரு விவசாயக் குழுவை அமைத்து எந்நேரமும் அறுவடை செய்யத் தயாராக உள்ளோம். போராட்டத்தில் கலந்து கொண்டு வரும் விவசாயிகள் குறித்து முழுமையான அக்கறை கொண்டுள்ளோம்” என ஏக்தா டகாய்வ் இண் டா மான்சா அமைப்பின் பொதுச்செயலாளர் மோகிந்தர் சிங் தெரிவித்தார்.

போராட்டக் களத்தில் விவசாயிகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரிக்கை

தற்போது அதிவேகமாக பரவிவரும் கொரோனா நோய் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடங்களில் தடுப்பூசி செலுத்துவது மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டுமென போராடும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான “சம்யுக்தா கிசான் மோர்ச்சா” நேற்று கோரிக்கை வைத்தது.மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் முகக் கவசங்களை அணிந்து கொண்டும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அக்கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்தை வைத்து புகழ் வணக்கம் செலுத்தும் விவசாயிகள். இடம் காசிப்பூர் எல்லை

அம்பேத்கர் பிறந்த தினத்தை அனுசரிக்கும் போராட்டக்குழு பிரதிநிதிகள்
அம்பேத்கர் பிறந்த தினத்தை அனுசரிக்கும் போராட்டக்குழு பிரதிநிதிகள்

போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்கு தீ வைப்பு

கடந்த வியாழக்கிழமை சிங்கு மற்றும் காசிப்பூர் எல்லையில் இருக்கும் போராட்டக்களத்தில் சில விஷமிகளால் போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்கு தீ வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த அசம்பாவிதத்தால் யாருக்கும் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும் அருகில் இருக்கும் குந்த்லி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பீம் ஆர்மி ஆதரவு

பீம் ஆர்மி அமைப்பின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல்வேறு தலித்திய அமைப்புகள் டெல்லி எல்லைக்குச் சென்று விவசாய சட்டத்துக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து “அரசியலமைப்பை பாதுகாக்கும்” தினமாக ஏப்ரல்14-ம் தேதியைக் கொண்டாடினர். 

விவசாயிகள் போராட்டத்தின் பிரதிநிதி ராகேஷ் திகைத்துடன் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்

முன்னாள் ராணுவ அதிகாரிகள் இணைந்து உருவாக்கிய அமைப்பு

போராட்டத்தை இன்னும் ஒருபடி முன் நகர்த்தும் விதமாக முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர்கள் உட்பட முன்னாள் ராணுவ உயரதிகாரிகள் இணைந்து கீர்த்தி கிசான் எனும் அமைப்பை உருவாக்கி போராடும் விவசாயிகளுக்கு உதவி வருகின்றனர். இந்த அமைப்பு தற்போது வரை மூன்று விவசாயிகள் சட்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்குவதற்காக ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளதோடு விவசாயிகளுக்கு தேவையான படுக்கை மற்றும் புத்தகங்களையும் தந்து உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன இரண்டு மாணவர்கள்

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரு மாணவர்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை மற்றும் சீக்கிய அமைப்பு சார்பாக ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகத்தின் குடோன்கள் முற்றுகை

கடந்த திங்கட்கிழமை போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்திய உணவுக் கழகத்தின் குடோன்களை(FCI- Food corporation of India) 24 மணிநேரம் முற்றுகையிட்டு போராடப் போவதாக அறிவித்தனர். இது மட்டுமின்றி போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் குந்திலி – மனேசர்பல்வல் நெடுஞ்சாலையை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்தனர்.

ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி மாபெரும் பேரணி

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த முனைப்பும் காட்டாத இந்திய ஒன்றிய அரசைக் கண்டிக்கும் விதமாக வருகிற ஏப்ரல் 21-ம் தேதி டெல்லியை நோக்கி மிகப்பெரும் அணிவகுப்பு ஒன்று நடத்த இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கான நினைவுநாளில் ஒன்று கூடிய விவசாய தலைவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

-Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *