விவசாயிகள் போராட்டம்

இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்

கிசான் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை கிருஷி பவனில் சந்தித்தனர். 

மேலும் கிசான் சேனா சங்கத்தின் சார்பாக சுமார் 20,000 உறுப்பினர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக மேற்கு உத்திரப்பிரதேசத்திலிருந்து டெல்லி நோக்கி அணிவகுத்து வருவார்கள் என்று தெரிவித்த நிலையில், ஒன்றிய அரசு நிறைவேற்றிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் இன்றுடன் 29-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தின் போது களைப்பில் டிராக்டரின் மீது வைக்கோல்களைப் பரப்பி படுத்து உறங்கும் சிறுவன்

கடந்த சில தினங்களாக போராட்டத்தில் நடைபெற்ற சுவாரசியமான மற்றும் முக்கியச் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), சார்பாக டெல்லியில் விவசாயப் போராட்டத்தின் போது உயிரிழந்த 40 தியாகிகளுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 90,000 நிகழ்வுகள் நடைபெற்றன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றார்கள் என ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது.

முடக்கப்பட்டு பின்பு மீண்டும் அளிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம்

ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் விவசாயப் போராட்டம் தொடர்பான செய்திகளைப் பதிவேற்றம் செய்வதற்காக ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ எனும் பெயரில் ஒரு வலைதள பக்கத்தைத் தொடங்கி விவசாயிகளின் கூட்டமைப்பு நடத்தி வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (20/12/20) மாலை ஃபேஸ்புக் நிறுவனம் ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பக்கத்தை தடைசெய்தது. 

இதைக் கண்டித்து சமூக வலைத்தளத்தில் எழுந்த எழச்சியைத் தொடர்ந்து மூன்று மணி நேரம் கழித்து தடை நீக்கபட்டது. கிசான் ஏக்தா மோர்ச்சாவின் ஃபேஸ்புக் பக்கம் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் பக்கமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. “எங்கள் போராட்டத்தில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லா வகையான ஊடகங்களும் எங்களை பற்றி எழுதுகையில், சமூக ஊடகங்கள் எங்களுடைய உண்மையை எங்களின் சொந்த வார்த்தைகளில் சொல்ல உதவுகின்றன. பிரதமர் மோடிக்கு சேவகம் செய்யும் ஊடகங்கள் ஒருபோதும் யதார்த்தத்தைக் காட்டாது, ஆதலால் சமூக ஊடகங்களில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது ”என சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயி ஹிம்மத் சிங் ‘PTI’- ல் தெரிவித்தார்.

பட்டினிப் போராடம் அறிவிப்பு

டெல்லி-ஹரியானா எல்லையான சிங்குவில் தங்கி போராடி வரும் விவசாயிகள் கடந்த திங்கள்கிழமை(21/12/2020) முதல் தினமும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்கள். “தினமும் 11 விவசாயிகள் 24 மணிநேரம் உண்ணாவிரதத்தில் அமர்வார்கள்” என பி.கே.யூ விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் பல்வந்த் சிங் ‘ANI’ செய்தியில் தெரிவித்தார்.

கொண்டாட்டத்துடன் தொடரும் போராட்டம்

விவசாயிகளின் கவலைகளை குறைக்கும் விதமாக டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பெரிய ஒலிபெருக்கிகளில் பாடல்கள் இசைக்கபட்டு சிங்கு எல்லையானது திருவிழாவைப் போல காட்சியளிக்கிறது.

விவசாயிகளுக்கு சிகிச்சையளிக்கும் பல் மருத்துவர்

விவசாயிகளுக்கு பல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க மருத்துவர் சன்னி அலுவாலியா தனது வேனை இரண்டு நாற்காலிகள் மற்றும் ஒரு எக்ஸ்ரே இயந்திரத்துடன் போராட்டக் களத்தில் இடம்பெற்றுள்ளார். “நாங்கள் தற்போது மருத்துவர்களாக இருக்கலாம், ஆனால் நாங்கள் எப்போதும் விவசாயிகளின் மகன்கள்” என்று அலுவாலியா ‘ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்’ செய்தியில் தெரிவித்தார்.

பற்பசை, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள்

டெல்லி எல்லைகளில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் முகாம்கள் முடிகிற இடத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ள டிராக்டரில் பற்பசையிலிருந்து மருந்து வரை அனைத்தும் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

போராட்டத்தி இளைஞர்கள் விவசாயிகளுக்கு இலவசமாக துணி துவைத்து தருகிறார்கள். அதற்காக துணிகளுடன் வரிசையில் நிற்கும் விவசாயிகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களுடன் சந்திப்பு

ஒரு செய்தியாளர் சந்திப்பில்  டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று சந்தித்து  மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற பாஜக-வை கட்டாயப்படுத்துமாறு அவர்களிடம் வேண்டுகோள் வைக்க இருப்பதாக தெரிவித்து இருப்பதாக ‘ஃபர்ஸ்ட்’ போஸ்ட் ‘ செய்தி வெளியிட்டு உள்ளது.

20 மசாஜ் இயந்திரங்கள்

இதேபோன்ற மற்றொரு கூடாரத்தில் விவசாயிகளுக்கு மசாஜ் அளிப்பதற்காக தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த சுமார் 20 மசாஜ் இயந்திரங்களை வைத்து சேவை அளித்து வருகிறார்கள். “போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பலர் வயதான விவசாயிகள் என்பதால் அவர்கள் முழங்கால்களிலும் கால்களிலும் ஏற்படும் வலிகளுக்காக அவர்கள் எங்களிடம் மசாஜ் கேட்கிறார்கள்” என்று தன்னார்வ பூபிந்தர் சிங் ‘ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்’ செய்தியில் தெரிவித்தார்.

போராட்டக்களத்தை சுத்தம் செய்யும் குழு

மேலும் சுமார் 50 தன்னார்வலர்கள் அடங்கிய குழு ஒன்று துடைப்பம் மற்றும் முறங்களுடன் தங்களை இரண்டு அணிகளாகப் பிரித்து போராட்டம் நடைபெறும் இடத்தை தினமும் சுத்தமாக செய்து வருகிறார்கள். “நாங்கள் நீண்ட காலமாக இங்கு இருக்கும் காரணத்தால் இந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டிய கடைமையை நாங்கள் உணர்ந்துள்ளோம்” என்று சுக்விந்தர் சிங்  ‘ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்’ செய்தியில் தெரிவித்தார்.

விவசாயி தற்கொலை முயற்சி

இதற்கிடையில் சிங்கு எல்லையில் போராடி வந்த 65 வயதான பஞ்சாப் விவசாயி ஒருவர் செவ்வாய் கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். பின்பு அவர் அருகிலிருந்த ரோக்டக் PGIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

செய்தித்தாள்கள்

விவசாயிகளுக்கு தினமும் செய்தித் தாள்களை வழங்குவது மற்றும் விவசாயப் போராட்டத்தையும் விவசாயத்தையும் குறிக்கும் படங்களை பச்சை குத்திக் கொள்வதற்கான வசதிகளும் விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக சைக்கிளில் பயணித்து டெல்லிக்கு வந்த விவசாயி

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக பஞ்சாபைச் சேர்ந்த 36 வயதான விவசாய கூலித் தொழிலாளி சுக்பால் பஜ்வா தனது சைக்கிளில் இரண்டு நாள் பயணம் செய்து சிங்கு எல்லைக்கு வந்தடைந்துள்ளார். “வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படாவிட்டால், நான் எனது வாழ்வாதாரத்தை இழப்பேன்” என்று சுக்பால் பஜ்வா ‘PTI’-ல் தெரிவித்தார்.

இரத்ததானம்

லூதியானாவைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இரத்த தான முகாம் அமைத்து இருந்தது. இதில் வரிசையில் நின்று விவசாயிகள் இரத்த தானம் செய்யதனர்.

மழை, குளிரில் இருந்து காக்க கூடாரங்கள்

நாளாக நாளாக தலைநகர் டெல்லியில் வெப்பநிலை குறைந்து வரும் சூழலில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருவது அதிகரித்துள்ளது. ஆதலால் மழை மற்றும் பனியில் இருந்து தற்காத்துக்கொள்ள தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். சிங்கு எல்லைப் பகுதியே இரவில் ‘கூடார நகரமாக’ காட்சி தருகிறது.

மதிய உணவை தவிர்த்த தொழிற்சங்கங்கள்

போராடும் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக டிசம்பர் 23 அன்று “மதிய உணவைத் தவிர்க்கும்” நாளாக AITUC தொழிற்சங்கங்கள் கடைப்பிடித்தன.

மோடிக்கு ரத்தத்தில் கடிதம்

மேலும் நேற்று நொய்டா எல்லையில் போராடி வரும் பாரதீய கிசான் யூனியன் (லோக் சக்தி) சங்கத்தின் தலைவர் ஷியோராஜ் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பிவைத்தார்.

One Reply to “இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்”

  1. இந்தியப் பிர்தமர் மூர்க்கன் மட்டுமல்ல ,முழுமடையன்.கார்ப்பொரேட்டுகள் காப்பாற்றுவர் என எண்ணிக் கொண்டிருக்கிறான்.அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் விற்பர்,56″ யும் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *