கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பாமல் வெயில் மழையில் வீணாகும் நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறியதாவது.
நெல் கொள்முதலை உடனே செய்திட வேண்டும்
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. விவசாயிகள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் கொள்முதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான நெல் மூட்டைகள் காவிரி டெல்டாவில் கொள்முதல் நிலைய வாயிலிலேயே அடுக்கி வைக்கப்பட்டு மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் மடிந்து அழிந்து வருகிறது. இதனை உடனடியாக அரவை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து காத்துக் கிடங்கின்றனர் விவசாயிகள். அதனை உடன் கொள்முதல் செய்திட வேண்டுகிறேன்.
மேலும் எங்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அடிப்படையில் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 விலை நிர்ணயம் செய்திடுக.
காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை மற்றும் குடிமராமத்து திட்டம்
காவிரியில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாண்டும் குறுவைக்கு தண்ணீர் திறப்பதற்கான வகையில் மேட்டூர் அணையில் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதால் திறப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதோடு, குடிமராமத்து திட்டத்தை உடனே துவங்கிட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அனுமதி வழங்கிட வேண்டும். பாசன கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும்.
முன்னால் முதல்வர் கலைஞர் ஆட்சியில் பின்பற்றியது போல், வேளாண் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கு உடனடியாக நீர்ப்பாசனத்துறை, வேளாண்துறை, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர்களை காவிரி டெல்டாவிற்கு அனுப்பிவைத்து விவசாயிகள் கருத்தறிந்து பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள்
மாநில அளவில் பதிவு பெற்று பல்வேறு மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக செயல்படும் விவசாயிகள் சங்க அமைப்புகளின் நிர்வாகிகளை உள்ளடக்கி மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் சிறப்புக் குழுவை ஏற்படுத்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.
மேட்டூர் அணை – சரபங்கா உபரிநீர் திட்டத்தை நிறுத்த வேண்டும்
மேட்டூர் அணை-சரபங்கா உபரிநீர் திட்டம் என்கிற பெயரில் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக மேட்டூர் அணையை உடைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும். இத்திட்டம் தான்தோன்றித்தனமாக அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல், தான் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற சுய நல நோக்கத்தோடு காவிரி டெல்டாவை அழிக்கும் நயவஞ்சக நடவடிக்கையாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டிருக்கிறார்.
இத்திட்டம் ஏற்கனவே 2015-ல் ஜெயலலிதாவால் டெல்டா பாதிக்கும் என கைவிடப்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறேன். மேலும் 16 கண் மதகு வழியே வெளியேற்றுவது மட்டுமே தான் உபரி நீர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்திட்டத்தை எதிர்த்து காவிரி டெல்டா விவசாயிகள் அதிமுக-விற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. பாசன விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதிப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை பி.ஆர்.பாண்டியன் முன்வைத்தார்.