கொரோனா அவசர காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நிவாரண நிதியும் ஒன்றிய அரசினால் மிக மிகக் குறைவாகதான் கொடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமை, தமிழ்நாடு அரசை மதுவிற்பனையை நோக்கி தள்ளியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் சூழலை இன்னும் ஆபத்தினை நோக்கி தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணம் மக்களுக்கு செலவழிக்க தேவைப்படும் நேரத்தில் திரும்ப கிடைக்காததால், மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் மாநில அரசுகளின் இயந்திரம்தான் மக்களிடம் நேரடியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்புப் பரிசோதனை, மருத்துவப் பணிகள் மற்றும் ஊரடங்கு காலத்தின் போதான மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஆகியவை மாநில அரசுகளின் நேரடி நிர்வாகப் பொறுப்பின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிக் கிடப்பதால் கொரோனா கால செயல்பாடுகளுக்கு தேவைப்படும் போதுமான நிதியின்றி மாநில அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. அதன் முக்கிய வருமான ஆதாரங்களாக இருப்பது டாஸ்மாக் வணிகம், மதிப்புக் கூட்டு வரி வருமானம் மற்றும் பத்திரப் பதிவு, முத்திரைத் தாள் விற்பனை ஆகியவைதான். அவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஜி.எஸ்.டி வரி வருமானம் உள்ளிட்ட அரசினுடைய மேலதிக நிதி ஆதாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதன் காரணமாக கொரோனா நெருக்கடி காலத்தை சமாளிக்க தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் தொடர் நிதி கோரிக்கையை எழுப்பிக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கொரோனா கால நிதித் தேவையாக ஒன்றிய அரசிடம் ரூ.9000 கோடி கேட்டது; ஆனால் ஒன்றிய அரசு ரூ.510 கோடிதான் அளித்திருக்கிறது. அதுவும் கூட கொரோனா காலப் பணிகளுக்கென்ற பிரேத்யேக கூடுதல் நிதியாக கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த மாநில பேரிடர் கால நிதியைத் தான் சற்று முன்னதாகவே வழங்கியிருக்கிறார்கள். இந்த நெருக்கடி சமயத்திலும் கூட, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை ரூ.5909 கோடி கொடுக்கப்படவில்லை. மாநில அரசுகளுக்கான நிதி தேவைகளில் ஒன்றிய அரசு கொண்டுள்ள பாராமுகப் போக்கு, மக்களுக்கு செலவு செய்ய மக்களிடமே அடித்துப் பிடுங்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு அரசை தள்ளியிருக்கிறது.
மே 4ந் தேதி முதல் டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 3.6 சதவீதமும், பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி 7 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள போதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.78 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 1.70 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது மட்டுமல்லாமல் டாஸ்மாக் விற்பனை மதுக்களுக்கான மதிப்புக் கூட்டு வரியும் 15 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மதுபானங்களின் விலை 10-20 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட முதல்நாளில் மட்டும் ரூ.170 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. தமிழ்நாடு அரசிற்கான நிதித் தேவை, மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட மனித இடைவெளி நடவடிக்கைகளையும் புறந்தள்ள வைத்திருக்கிறது. கொரோனா பரவல் சாத்தியத்தை அதிகப்படுத்தி, குடிக்கக் கொடுத்து குடி காக்கப் போகிறார்களாம்?! மக்களைக் காப்பதற்கு வேறு வழியில்லாத கையறு நிலையென்று சமாதானம் சொல்லக்கூடிய நடவடிக்கையா இது? மக்கள் தரப்பை தெரிந்தே பலி கொடுக்கத் துணிந்த படு பாதக செயல்தானே இது.
தமிழ்நாடு மட்டுமல்லாது வட மாநிலங்கள் பலவும் ஒன்றிய அரசின் நிதி உதவியின்மையின் காரணமாக மது விற்பனையை அனுமதித்து, மது விற்பனைத் தொகையில் ’கொரோனா வரி’ என்ற பெயரிலே வரி வசூலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மாநில கூட்டாட்சித் தத்துவம் ஏட்டளவோடு மட்டும் குறுக்கப்பட்டு, ஒன்றிய அரசின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் மூலமாக அதனது யதார்த்த விளைப்பயன் அழிக்கப்பட்டிருக்கிறது. விளைவு, ஒன்றிய அரசிற்கு கீழான வரி நிர்வாகம் மையப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் அதிகார குவிப்பு நடவடிக்கைகள் மாநில அரசுகளை மக்களிடம் அடித்துப் பிடுங்கும் ”பேட்டை ரவுடிகள்” நிலைக்குத் தள்ளியிருக்கிறது.