”குளம் கொட்டுக் கோடு பதித்து வழி சீத்து
உளம் தொட்டு உழுவயல் ஆக்கி, வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது”
என்று குளம் அமைத்தல் குறித்து பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலம் பாடுகிறது.
ஆற்றுப் பாசனமும், ஏரிப்பாசனமும் தமிழர்களின் நீர் மேலாண்மை முறைகளில் முக்கியமானவை. ஒவ்வொரு மழைக்காலம் வரும்போதும் சரி, கோடைக் காலம் வரும்போதும் சரி, தலைப்புச் செய்திகளில் செம்பரம்பாக்கம் ஏரி எனும் பெயரை நாம் கேட்காமல் கடக்க முடியாது. அப்படிப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி தமிழரின் நீர் மேலாண்மைக்கு முக்கிய சாட்சி.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் எங்கிருந்து வருகிறது?
செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. அது திருப்பெரும்புதூர் வட்டத்தில் பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் அருகில் உள்ள பழம்பெரும் ஏரியாகும்.
பாலாறு, கூவம், ஆரணி, கொற்றலை ஆறுகளும் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் 3700 ஏரிகளும் வலைப்பின்னல்களாக இணைக்கப்பட்டு இறுதியில் வந்து நேமம் ஏரி, திருபெரும்புதூர் ஏரி மற்றும் பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவற்றுடன் இணைகிறது. பின் அங்கிருந்து திருபெரும்புதூர் ஏரி, நேமம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளின் உபரி நீரானது முறையே,
- சவுத்திரி கால்வாய்
- புதிய பங்காரு கால்வாய்
- கம்ப கால்வாய்
மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இயற்கையோடு இணைந்த தமிழரின் நீர் மேலாண்மை முறை
மேட்டு நிலப்பரப்பில் இருந்து கடற்கரை நோக்கி சரியும் நில அமைப்பினைப் புரிந்துகொண்டு, எந்த செயற்கையான உந்துவிசையும் செலுத்தாமல் இயற்கையாக நீரின் பண்பான பள்ளத்தை நோக்கிப் பாயும் இயல்பை திறமையாகப் பயன்படுத்தி, இந்த பெரும் வலைப்பின்னல் நீர்மேலாண்மை அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பான இயற்கை நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். இந்த இயற்கையான நீரோடும் தன்மையைப் புரிந்துகொண்டு மாபெரும் நீர்ப்பாசனக் கட்டமைப்பை பழந்தமிழர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பான்மை ஏரிகளின் உபரிநீர் திருபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் மூலமும், உபரிநீர் நேமம் ஏரி வழியாகவும் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இப்படியாக தங்கள் அனுபவத்தினால் புரிந்து இயற்கையைப் பயன்படுத்தி, வாழ்வை செம்மையாக்கும் அறிவியலை கண்டார்கள் நம் முன்னோர்கள்.
செம்பரம்பாக்கம் ஏரி குறித்த அளவீடுகள்
- சென்னை நகரின் குடிநீர்த் தேவையை முக்கியமாகப் பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கனஅடி (3645 மி.க.அடிகள் mcft).
- 24 அடிகள் உயரம் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் தேக்கப்படும்.
- ஏரியின் பாசனப் பரப்பளவு 13 ஆயிரம் ஏக்கர். கரையின் நீளம் 9.5 மைல்கள்.
- நீர் பரப்பளவு 9.5 சதுர மைல்கள். இதில் சுதந்திரமான நீர்பிடிப்பு பகுதி 77.13 சதுர கிலோமீட்டர்களும், துணை நீர்பிடிப்பு பகுதி 357.42 சதுர கிலோமீட்டர்களும் கொண்டுள்ளது என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
- கடல் மட்டத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி 85 அடிகள் உயரத்தில் இருக்கின்றது.
- செம்பரம்பாக்கம் ஏரியில் எட்டு நீர்ப்பாசன மதகுகளும், இதிலிருந்து செல்லும் 15-க்கும் மேற்பட்ட பாசன கால்வாய்களும் இருந்தன. அவைகள்
- பூந்தமல்லி மதகு,
- மேப்பூர் மதகு,
- செட்டி மதகு அல்லது மணப்பாக்கம் மதகு,
- கோண மதகு அல்லது மலையம்பாக்கம் மதகு,
- பெரிய மதகு,
- குன்றத்தூர் மதகு,
- நத்தம் மதகு,
- சிறுகளத்தூர் மதகு
போன்றவைகளாகும். இந்த நீர்ப்பாசன மதகுகள் இன்று எந்த பராமரிப்பும் இன்றி சிதலமடைந்து கிடக்கின்றன.
செம்பரம்பாக்கத்தின் நீர்ப்பாசனப் பகுதிகள்
15 ஆண்டுகளுக்கு முன் இவைகளில் இருந்து சென்ற பதினைந்து பாசனக் கால்வாய்கள் 37 கிராமங்களில் உள்ள 13,223 ஏக்கர்கள் விவசாய நிலங்களுக்கு சென்றன. பல ஆயிரம் டன்கள் உணவுப் பொருட்களை உற்பத்திச் செய்தன.
மூன்று போகம் நெல் விளையும் இந்த பூமி தான் இன்றைய சென்னையின் புறநகர் பகுதிகளாக இருக்கின்றன.
இயல்பாகவே கடினப் பாறை நிறைந்த இப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் நிலத்திற்குள் ஊறுவதற்கு செம்பரம்பாக்கம் ஏரியின் பிரமாண்டமான நீர்பிடிப்புத் தொகுப்பு காரணமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இது மட்டுமல்ல தொண்டை மண்டலத்தின் வளமான பகுதியான செம்பரம்பாக்கம் ஏரி, நேமம் ஏரி, திருபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவற்றின் என்பது நீர்ப்பாசனப் பகுதி பல்லாயிரம் ஏக்கர்களுக்கு விரிந்த விவசாயப் பகுதியாகும். சென்னை நகருக்கு உணவளித்தது இந்த ஏரிகளும், அதன் பாசனப் பகுதிகளும் தான்.