உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மனிஷா தனது அண்ணன் மற்றும் அம்மாவுடன் வயல் வேலைக்குச் சென்ற இடத்தில் காணாமல் போனார். பிறகு உடலில் பல பகுதிகளில் பலத்த காயங்களுடனும் நாக்கு அறுக்கப்பட்ட நிலையிலும் மிக மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அந்த பெண்ணை ஆதிக்க சாதியான தாக்கூர் சாதியைச் சேர்ந்த நான்கு பேர் கூட்டு பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கியதும், கழுத்தை நெரித்து, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்தது கொடூரமான முறையில் கொலை செய்வதற்கு முயன்றுள்ளதும் தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அலிகாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவரின் உடல்நிலை மேலும் மோசமானதால், செப்டம்பர் 28-ம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செப்டம்பர் 29 அன்று காலையில் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட மனிஷா செப்டம்பர் 22-ம் தேதி சுயநினைவில் இருந்த போது தான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை கூறியுள்ளார். மேலும் மூன்று குற்றவாளிகளின் பெயரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.
குடும்பத்தினரிடம் கூட அளிக்காமல் உடலை எரித்த காவல்துறையினர்
ஆனால் அலிகார் காவல்துறை ஆய்வாளர், மனிஷா பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஹத்ரஸ் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்கின்றனர். இறந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட கொடுக்காமல் காவல்துறையினர் எரித்திருக்கின்றனர்.
எவ்வளவோ கதறி அழுத பிறகும் மனிஷாவின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் தரவில்லை. கடைசியாக ஒரு முறை பெண்ணின் முகத்தைப் பார்ப்பதற்கு கெஞ்சி கேட்டபோதும் அனுமதி தரவில்லை.
சர்ச்சைக்குரிய வழக்காக இருக்கும் போது, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை எரிப்பது சட்டவிரோதமானதாகும். இதனை காவல்துறை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலித்துகள் மீதான தாக்குதல்கள் உ.பியில்தான் அதிகம்
மேலும் யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இந்தியாவில் நடக்கும் தலித்துகள் மீதான தாக்குதலில் 44% உத்திரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு மிக அருகில் இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கும் போது, அரசு இவ்வளவு மோசமாக நடத்திருப்பதற்கான காரணங்களை தேடும்போது நமக்கு சில கேள்விகள் எழுகிறது.
நிர்பயா வழக்கும், மனிஷா வழக்கும்
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் டெல்லியில் நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போது தன்னிச்சையாக பெரும் போராட்டங்கள் நிகழந்தது. மாணவர்களும், திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் என்று எல்லோருடைய கவனமும் நிர்பயாவிற்கு நீதி கேட்பதில் இருந்தது. ஊடகங்கள் போராட்டங்களை நேரலையாக காட்டிக் கொண்டிருந்தன.
இந்த அழுத்தம் காரணமாக நிர்பயா சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் 2012 டிசம்பர் 29 அன்று உயிரிழந்தார். அதன்பின் போராட்டம் இன்னும் தீவிரமாக நாடு முழுவதும் நடைபெற்றது. நிர்பயாவின் வழக்கின் போது நடைபெற்ற ஊடக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தையும் பார்த்தபோது இனி இந்தியாவில் பாலியல் வன்புணர்வே நடைபெறாது என்றே எண்ணத் தோன்றியது.
ஆனால் அதன் பின்னும் தினந்தோறும் பாலியல் வன்புணர்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நிர்பயா வழக்கு பெற்ற கவனம் அதன்பின் எந்த பெண்ணிற்கும் கிடைக்கவில்லை. குறிப்பாக ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியல் பிரிவு பெண் மனிஷா டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவர் உடலை பெற்றோரிடம் கொடுக்கச் சொல்வதற்குக் கூட யாரும் போராடவில்லை. எந்த ஊடகங்களும் நேரலை செய்யவில்லை. திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் கண்களுக்கு மனிஷா தெரியவில்லை.
இதிலிருந்து இந்தியாவில் பாலியல் வன்புணர்விற்கான நீதியில் கூட சாதி அல்லது வர்க்க அல்லது நிறம் என ஏராளமான பாகுபாடு காட்டப்படுவது அப்பட்டமாக தெரியவருகிறது.
தினந்தோறும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் தலித் பெண்கள்
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நான்கு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. அவர்கள் எல்லோர் நிலையும் கிட்டத்தட்ட மனிஷாவிற்கு ஏற்பட்ட நிலைதான் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.
இந்தியாவில் தலித் பெண்கள் மீதான வன்முறை என்பது பெரும்பாலும் பாலியல் வன்முறையாகவே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு பதிவு செய்யபட்ட 3,172 தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 2,541 குற்றங்கள் பாலியல் தாக்குதகள் தான் என்று அரசு ஆவணங்களே கூறுகிறது. இந்த எந்த வன்கொடுமைகளும் பொது சமூகத்தில் அக்கறையுள்ளோரின் கவனத்தை பெறாமல் போனதென்பது இங்கு அனைத்துமே சாதியை மையப்படுத்தியே இருக்கிறது என்பதை நிறுவுவதாக உள்ளது.
தமிழ்நாட்டிலும் இதே நிலை..நீதி கேட்பதில் ஏன் இந்த பாகுபாடு?
வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் கூட இதே நிலைதான். சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எச்.ராஜா, வானதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் சுவாதியின் வீட்டிற்கு நேரிலேயே சென்று ஆறுதல் கூறினர்.
ஆனால் அதற்கு அடுத்த இரண்டு மாதத்தில் நெல்லையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் கொல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி கல்பனா, கோவையில் கொல்லப்பட்ட சுமதி, அரியலூரில் இந்துத்துவ அமைப்பினரால் பாலியல் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட நந்தினி ஆகியோரின் மரணத்திற்கு எழாத குரல்கள், சுவாதியின் மரணத்திற்கு எழுந்ததற்கான காரணம் சுவாதியின் குடும்பத்தின் சமூகப் பின்புலம், சென்னைவாசி; கணிணிப் பணியாளர் ஆகியவற்றால் மட்டுமே என்பதை நாம் மறுக்க இயலாது. விவாதத்திற்கு உட்படுத்துவதற்கு கசப்பான தகவலாக இருந்தாலும் உண்மை நிலை அதுவாகத்தானே இருக்கிறது.
இந்த சாதி, வர்க்க பேதங்கள் ஒழியாமல் பொதுவான பெண்கள் பாதுகாப்பு என்று மேல் தட்டு பெண்கள் பாதிக்கப்படுகிற போது மட்டும் பேசுவது எதற்கும் தீர்வாக அமையாது என்ற உண்மையை சமூகப் பொறுப்புள்ளவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் இவற்றிற்கு தீர்வை நோக்கி நாம் நகர முடியும்.