தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை இந்தியத் தத்துவம் என்பது மாயைகளும், கற்பனைகளும், பிற்போக்குத்தனங்களும் நிறைந்த கருத்து முதல்வாத தத்துவங்கள் தான் என்று ஐரோப்பிய அறிவுஜீவிகள் சிலர் எழுதிக் கொண்டிருந்தனர். வேத வைதீக மரபின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட இந்திய தத்துவவாதிகளும் அதை தேசியப் பெருமிதம் எனக் கொண்டாடினர்.
இந்த சூழலில்தான் தத்துவப் பேரறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா பண்டைய இந்தியப் பொருள்முதல்வாத தத்துவ முறைகளை ஆய்வு செய்து அதுவரை இருந்த கருத்துகளை உடைத்தார்.
இளமைக் காலம் மற்றும் கல்வி
கொல்கத்தாவில் 1918 நவம்பர் 19 அன்று பிறந்தார் சட்டோபாத்யாயா. அவரின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். தந்தையின் அரசியல் வாழ்வு சட்டோபாத்யாவை அதிகம் ஈர்த்தது. அதனால் இளம் வயதிலிருந்தே சட்டோபாத்யாயா அரசியல் மற்றும் தத்துவம் குறித்த படிக்கத் துவங்கினார்.
மேலும் அவருக்குள் இருந்த அறிவார்ந்த தேடல், அவருக்கு அன்றைய காலத்தில் மேற்கு வங்கத்தில் எழுச்சி பெற்ற இடதுசாரி அமைப்புகளோடு தொடர்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக 1936-ல் உருவான முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார் சட்டோபாத்யாயா.
கொல்கத்தா பவானிபூர் மித்ரா நிலையத்தில் தொடக்கப் பள்ளிக் கல்வியையும், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தத்துவத்தினை கற்றார்.
1939-1942 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் B.A.(Honours), M.A ஆகிய பட்ட வகுப்புகளில் முதலிடம் பெற்று தேர்ச்சியடைந்தார். ஜார்ஜ் தாம்சனின் ஆய்வுமுறையைப் பின்பற்றி உலகாயதம் பற்றி ஆய்வு செய்தார்.
கொல்கத்தாவில் அவர் புகழ்பெற்ற இந்திய கருத்துமுதல்வாத சிந்தனையாளர்களான பேராசிரியர்கள் எஸ்.என்.தாஸ் குப்தா, எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோரின் மாணவராக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். கொல்கத்தா நகரக் கல்லூரியில் (city college) நீண்ட காலம் பேராசிரியராகப் பணியாற்றினார்.
உலகாயதம் பற்றிய ஆய்வு
அவரது முக்கியப் பணி உலகாயதத்தை ஆய்வு செய்ததாகும். பிறகு ‘இந்தியத் தத்துவம் – ஓர் அறிமுகம்’ என்னும் சிறிய நூல் ஒன்றை, அதன் தலைப்புக்கேற்ப அறிமுக வடிவில் எழுதினார். எவ்வேளையும் தத்துவ ஆய்வுப் பணியிலேயே மூழ்கியிருந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா 1981-ம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூலான ’மதமும் சமூகமும்’ (Religion and Society) எனும் புத்தகம் மிக முக்கியமான விவாதங்களை உருவாக்கியது
”மக்கள் தங்களின் மிகப் பிரபலமான கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை காணும்போது சஞ்சலம் அடைய வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்தை சந்திக்க மறுத்தவர்கள் சமூகக் கடமையில் இருந்து தப்பி ஓடவே பார்க்கின்றனர்” என்று சட்டோபாத்யாயா கூறுவார்.
இந்திய சமூகப் பின்புலத்தின் உண்மையை அறிவதற்கு தொல்லியலுடன் இணைந்த இனவரைவியல் ஆய்வினை மேற்கொண்டு அதன்மூலம் தெரியவந்ததை எடுத்துக்கூறினார். மனிதனிடம் கடவுள் நம்பிக்கையும் ஆவியும் இல்லாத காலம் ஒன்று இருந்தது என்ற மெய்நிலையை ஆய்வுகள் மூலம் நிறுவினார்.
இந்தியத் தத்துவ மரபே வேத மரபுதான் எனும் கற்பிதத்தை உடைத்தவர்
இந்தியாவில் வேதத்தை முன்வைத்து இந்திய தத்துவ மரபே வேத மரபுதான் என்று கூறிவந்த காலகட்டத்தில், ”வேதம் என்பது வெவ்வேறு சிறந்த கவிஞர்களால் பல்வேறு காலகட்டங்களில் பலவகையான சூழ்நிலைகளில், பலவகை நோக்கங்களுடன் பாடப்பட்ட செய்யுட்கள் என்பதைத் தவிர வேறொன்றுமல்ல. இதனை விளக்க முயலும்பொழுது சமஸ்கிருதத்தைப் பற்றி உயர்வாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனை தொழில் சார்ந்த ஒன்றாக மாற்றி விடுகின்றனர்” என்று விளக்கினார்.
மேலும் ‘வேத மதம் – மாயையும், எதார்த்தமும்’ என்ற தலைப்பிலான இயலில் வேதத்தின் உண்மையான அகத்தன்மை மற்றும் அது சமூகத்தில் ஆற்றும் புறவினை என இரண்டையும் விளக்கினார்.
இந்திய மதவியலுக்கு எந்த பங்களிப்பையும் செய்யாத வேதங்கள்
மேலும் வேதங்கள் இந்திய மதவியலுக்கு எந்தவொரு பங்கையும் அளிக்கவில்லை. தருமசாத்திரங்களும், பார்ப்பனர்களும் வன்முறை வழியில் வேதத்தை முன்னிலைப்படுத்தி பாதுகாத்தனர். ஏனென்றால் அப்படி செய்வதில் அவர்களின் நலன்கள் அடங்கியிருந்தன என்றும் உரைத்தார்.
இந்தியாவில் பல்வேறு சிந்தனைகளும், சைவம், சாக்தம், வைணவம் போன்ற மதங்களும் வெறும் பேச்சளவுக்கே வேத முதன்மையை ஏற்கின்றன. மற்றபடி அவர்கள் அவரவர் வழியிலேயே செல்கின்றனர் என்பதை ‘வேதமதம் – மாயையும், எதார்த்தமும்’ என்ற தலைப்பில் எழுதி இந்திய தத்தியவங்களில் வேதங்கள் மீது கட்டபட்ட அனைத்து கற்பனைகளையும் உடைத்தவர்.
புனிதமானதாகக் கருதப்படும் பழமையான கருத்துக்களைப் பற்றிய விமர்சனப் பார்வையைக் கொண்டிருப்பது கூட தேசவிரோத உணர்வுடையவர் என்று சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் பார்க்கப்படுகிறது என்கிற அபாயத்தை 1964-ம் ஆண்டிலேயே தனது நூலான ”இந்திய தத்துவம் ஓர் அறிமுகம்” நூலின் முன்னுரையில் கூறியிருப்பார்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியப் பொருள்முதல்வாதத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து, அதனடிப்படையில் அறிவியல் போக்கை வளர்க்க முயல்வதையே தன்னுடைய முக்கியப் பணியாகக் கொண்டார்.
1998-ல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் தமிழில் வந்த புத்தகங்களில் சில
- உலகாயுதம்
- இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
- அறிவியல் தத்துவம் சமுதாயம் இந்திய தத்துவம் ஓர் அறிமுகம்
- இந்திய நாத்திகம்
- உலகாயதம்: பண்டைய இந்தியப் பொருள்முதல் வாதம் – ஓர் ஆய்வு
- தத்துவவாதி லெனின்
- கருத்தியல் சிந்தனைகள்
இன்று இந்துத்துவ மதவாதிகள் மிகத்தீவிரமாக பழமையையும், அதன் பிற்போக்குத்தனத்தையும் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு மீள் கட்டுமானம் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், பகுத்தறிவு மற்றும் அறிவியல் நோக்கு என்கிற அடிப்படையில் இந்திய தத்துவ இயலின் பாரம்பரியத்தை ஆராய்கின்ற மிகப்பெரிய பணியை செய்த சட்டோபாத்யாயாவின் ஆய்வுகள் நமக்கு உதவும்.
இந்திய பொருள்முதல்வாத தத்துவத்தினை ஆய்வுகள் மூலம் நிரூபித்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் பிறந்த நாள் இன்று.