கடலூர் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!

கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை விடவும் அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பதாகவும், அக்கட்டணத்தை இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர்களும், பெற்றோர்களும் இணைந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

2013-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தினை நிறைவேற்றி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது.

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்ததுதான் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும். இந்திய மருத்துவக் கழக ஆவணங்களில் அது அரசு மருத்துவக் கல்லூரி என்றே குறிப்பிடப்படுகிறது. அங்கு தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கையும் 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 14.02.2020 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பொழுது, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியானது கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்தார்.

அரசுக் கல்லூரியாக அறிவித்த பிறகு தனியார் கல்லூரியை விட கூடுதல் கட்டணம்

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டுவரும் அக்கல்லூரியின் கல்விக் கட்டணமானது, ஏற்கனவே இருந்த அளவிற்கே ரூ 5.44 லட்சம் என நிர்ணயித்து வசூல் செய்யப்படுகிறது.

சென்ற ஆண்டு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கின் மூலம், சென்ற ஆண்டு பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூபாய் 4 லட்சம் என நிர்வாகம் 12.10.2020 அன்று அறிவிப்புப் பலகையில் வெளியிட்டது. ஆனால் மீண்டும் அதை ரூ 5.44 லட்சமாக அதிகரித்து, 12.11.2020 அன்று கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் 30.11.2020 என்று நிர்ணயித்துள்ளது.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்ட IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரி

அதேபோல், ஈரோடு மாவட்டம், IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்பொழுது அது ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக  செயல்படுகிறது. அக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படும்போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணங்களைத் தான் அரசு வசூல் செய்ய வேண்டும். ஆனால் அதைவிடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணங்களை வசூல் செய்து வருகிறது. 

மருத்துவர்களும், பெற்றோர்களும் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு

இது குறித்து திங்கள்கிழமை அன்று ’சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது. அதில் கடலூர் மற்றும் ஈரோடு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர் 

அரசு மருத்துவக் கல்லூரி என்று அறிவித்த பின்னர் 5.44 லட்சம் வசூல் செய்வது அரசே நடத்தும் கட்டணக் கொள்ளை என்று குற்றம் சாட்டினர். மேலும் தமிழக அரசே வசதி படைத்தோருக்காக, மக்கள் வரிப்பணத்தில் தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளை நடத்துவது போல் இது உள்ளதாகவும், இது சமூக நீதிக்கும், ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானது என்றும் கூறினர்.

அரசுக் கட்டணத்தையே நிர்ணயிக்க கோரிக்கை

  • இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான 13,670 ரூபாயை, இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.
  • கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான 11,610 ரூபாயை மட்டுமே கட்டணமாக  நிர்ணயிக்க வேண்டும்.
  • கட்டணத்தை கட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் போக்கை இக்கல்லூரிகளின் நிர்வாகங்கள் உடனடியாகக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதும், அந்த ஒதுக்கீட்டு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றிருப்பதும் மனமாற வரவேற்புக்குரியது என்று தெரிவித்தனர். ஆனால்,அதே சமயம் ,ஏழை எளிய ,நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கக்கூடிய கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்களிடம் தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணங்களை வசூலிப்பது சரியல்ல, இந்த பாரபட்சப் போக்கை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் உருவான பொருளாதார பாதிப்பால் பெற்றோர்கள் மிகப்பெரும் இழப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதை அரசு  கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்விச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

  • போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, இந்த கட்டணங்களை இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைத்திட வேண்டும்.
  • தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச்  செலவை அரசே ஏற்றது போல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
  • அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிட தனி நிதியத்தை (முதலமைச்சர் நிவாரண நிதி போல்) அரசு உருவாக்கிட வேண்டும்.
  • “போஸ்ட் மெட்ரிக்” கல்வி உதவித் தொகையையும் முறையாக வழங்கிட வேண்டும். அதை அதிகப்படுத்த வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கான வருமான வரம்பை ரூ 2 லட்சத்திலிருந்து ரூ 8 லட்சமாக உயர்த்திட வேண்டும்.
  • தனியார் மருத்துவக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகளின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது. அவற்றை குறைக்க வேண்டும்.

என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *