சென்னை கொரோனா தொற்று

கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது அலையின் தீவிரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டின் தலைநகர் டெல்லியில் மக்கள் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டெல்லியைத் தொடர்ந்து வட மாநிலங்கள் பலவற்றிலும் மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மருத்துவமனை வசதிகள் இல்லாமலும் திண்டாடி வருகின்றனர். 

இந்தியாவிலேயே சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாய் சொல்லப்படும் தமிழ்நாட்டின் நிலையும் டெல்லியின் நிலையைப் போல மாறும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கொரோனா தொற்று கொண்ட மக்கள் மருத்துவப் படுக்கைகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். நோயாளிகள் மருத்துவமனைகளில் இடம் தேடி திண்டாடும் நிலை உருவாகி இருக்கிறது. மே மாதம் கொரோனா தொற்று இன்னும் தீவிரமடையும் என்று சொல்லப்படும் சூழலில் சென்னையின் மருத்துவமனைகளின் நிலையானது அச்சமூட்டக் கூடியதாய் மாறியிருக்கிறது. 

நிரம்பிய மருத்துவமனைகள்

சென்னையில் கொரோனா சிறப்பு அரசு மருத்துவமனைகள் 84% சதவீதம் நிரம்பிவிட்டன. பல தனியார் மருத்துவமனைகள் 100% நிரம்பிவிட்டதாய் தெரிவித்திருக்கின்றன. அரசு உருவாக்கியுள்ள https://stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தில் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் படுக்கைகளின் நிலை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் குறித்த விவரங்கள் இல்லை. தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளின் எண்ணிக்கைகள் கூட அந்த இணையத்தில் முறையாக அப்டேட் செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. அந்த இணையதளத்தின் தகவல்படி, 22 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள 4,354 படுக்கைகளில் செவ்வாய்கிழமை நிலவரப்படி 2,356 படுக்கைகள் நிரம்பிவிட்டன. 

தமிழ்நாட்டில் மருத்துவப் படுக்கைகளின் நிலை

தமிழ்நாட்டில் தற்போது 1,08,855 கொரோனா பாசிட்டிவ் உள்ள நோயாளிகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மாநிலம் முழுதும் சேர்த்து,

  • மொத்தம் 51,135 மருத்துவ படுக்கைகள் உள்ளன. அவற்றில் 25,028 படுக்கைகள் நிரப்பப்பட்டு விட்டன.

  • 8,313 பேர்  ஆக்சிஜன் உதவியுடன் உள்ளனர்.

  • மொத்தம் 7,243 ICU படுக்கைகள் உள்ளன. அதில் 2,753 படுக்கைகள் நிரப்பப்பட்டு விட்டன. 

சென்னையில் மருத்துவப் படுக்கைகளின் நிலை

சென்னையைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 5,227 படுக்கைகளில் 3,273 படுக்கைகள் நிரம்பிவிட்டன. தனியார் மருத்துவமனைகளில் உள்ள 3,971 படுக்கைகளில் 2,811 படுக்கைகள் நிரம்பிவிட்டன.

மருத்துவ படுக்கைகள் (சென்னை)மொத்தம்நிரம்பியவை
அரசு மருத்துவமனைகள்52273273
தனியா மருத்துவமனைகள்39712811

மொத்த கொரோனா பாசிட்டிவ் உள்ளோரின் எண்ணிக்கை சென்னையில் 31,142 ஆக இருக்கிறது. ஒரு நாளைக்கு சென்னை மண்டலத்தில் 6,839 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கக் கூடும். 

பெரும்பாலான நோய் தொற்றாளர்கள் மருத்துவமனைகளின் இடம் கிடைப்பதற்காக சென்னை முழுவதும் மருத்துவமனைகளைத் தேடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒரு சிலருக்கே மருத்துவப் படுக்கைகள் கிடைக்கின்றன. சமூக வலைதளங்களில் பலர் மருத்துவப் படுக்கைகளுக்கு தாங்கள் திண்டாடும் கதைகளை குறிப்பிட்டு வருகிறார்கள். 

அரசு மருத்துவமனைகளில் ஒரு செவிலியர் சராசரியாக 15 நோயாளிகளையும், ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ள 8 நோயாளிகளையும், 4 ICU நோயாளிகளையும் பார்த்துக் கொள்ளும் நிலை இருக்கிறது. பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சைகளுக்கான இடம் குறைக்கப்பட்டு கோவிட் வார்டுகள் விரிவாக்கப்பட்டுள்ளன. OP வார்டுகள் மூடப்பட்டு எமெர்ஜென்சி நோயாளிகளை மட்டுமே மருத்துவர்கள் பார்க்கும் நிலை இருக்கிறது. 

தொற்றுப் பரவல் மிகவும் அதிகரிக்கும் சென்னையின் பகுதிகள்

சென்னையின் 5 பகுதிகளில் கொரோனா தொற்றின் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. 

தேனாம்பேட்டையில் – 3192 பேர் 

அண்ணா நகரில் – 3168 பேர் 

கோடம்பாக்கம் – 2823 பேர் 

திருவிக நகர் – 2690 பேர் 

அடையார் – 2497 பேர் 

சோழிங்கநல்லூர், அம்பத்தூர், ஆலந்தூர், திருவிக நகர், திருவொற்றியூர், மாதவரம் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 50% அதிகரித்துள்ளது. 

எப்படி பரவுகிறது என கண்டறிய முடியவில்லை என கைவிரிக்கும் மாநகராட்சி

எப்படி தொற்றுப் பரவல் அதிகரிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு எங்கிருந்து தொற்றுப் பரவல் நடந்தது என்று சில க்ளஸ்டர்களைக் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்த முடிந்தது. இப்போது அப்படி எந்த க்ளஸ்டர்களையும் கண்டறிய முடியவில்லை. ஆனாலும் தினந்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோடம்பாக்கத்தில் உள்ள 30 தெருக்களில் ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஒரே வாரத்தில் 3 மடங்கு உயர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

10-க்கும் மேற்பட்ட தொற்றுகளைக் கொண்ட தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக (Containment Zone) அறிவிக்கப்பட்டு மற்றவர்கள் உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்படுகிறது. அப்படி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இந்த ஒரு வாரத்தில் 118 லிருந்து 308 ஆக உயர்ந்திருக்கிறது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 65 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், ராயபுரம் மண்டலத்தில் 64 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் இருக்கின்றன. 

ரெம்டெசிவர் மருந்துக்காக கீழ்பாக்கத்தில் கூடும் கூட்டம்

ரெம்டெசிவிர் மருந்துக்காக சென்னையில் கூடியுள்ள கூட்டம்

ரெம்டெசிவிர் மருந்தைத் தேடியும் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுதிலும் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ரெம்டெசிவிர் மருந்தைப் பெறுவதற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகிறார்கள். நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். கடந்த 2 நாட்களில் மட்டும் 2800 ரெம்டெசிவிர் குப்பிகள் அங்கு விற்பனையாகி உள்ளன. மருந்தைப் பெறுவதற்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு மாலை 6 மணி வரை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. 

1500 ரூபாய் மருந்து 14000 வரை விற்கப்படுகிறது

8 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தும் பயனில்லாமல் அடுத்த நாள் வரச்சொல்வதாக சிலர் புகார் எழுப்புகின்றனர். கீழ்ப்பாக்கத்தில் உண்மை விலையான 1,568 ரூபாய்க்கு விற்கப்படும் ரெம்டெசிவிர் குப்பி, வெளியில் வாங்கச் சென்றால் 14000 ரூபாய் வரை விலை சொல்லப்படுகிறது. 

பரிசோதனை மையங்களில் 2 முதல் 5 மணி நேரம் காத்திருக்கும் மக்கள்

கொரோனா பரிசோதனை மையங்களிலும், தடுப்பூசி மையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொரோனா பரிசோதனை மையங்களில் ஒருவரை 45 நிமிடத்திற்கு மேலாக காக்க வைக்கக் கூடாது என்று சென்னை மாநகர ஆணையர்  பிரகாஷ் தெரிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலானோர் பரிசோதனை மையங்களில் 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை காக்க வைக்கப்படுகின்றனர். ஒரு மையத்தில் ஒரே ஒரு எக்ஸ் ரே இயந்திரம் மட்டுமே இருப்பதால், ஒரு நோயாளிக்கே ஒரு மருத்துவர் அரை மணிநேரம் வரை செலவழிக்க வேண்டி இருக்கிறது. 

நிலவும் ஆட்பற்றாக்குறை; உடனடியாகத் தீர்க்குமா அரசு?

கடந்த ஆண்டு இருந்ததைப் போல போதுமான அளவிற்கு ஊழியர்களோ, தன்னார்வலர்களோ பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதையும் மருத்துவர்கள் குறையாக சொல்வதைக் கேட்க முடிகிறது. முறையான எண்ணிக்கையில் பணியாட்கள் இல்லாததாலும், குறைந்த பரிசோதனை மையங்களில் அதிக கூட்டம் கூடுவதாலும், பரிசோதனை மையங்களும், மருத்துவமனைகளுமே நோய் தொற்றைப் பரப்பும் க்ளஸ்டர்களாக மாறிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

ஆக்சிஜன் பற்றாக்குறையை நோக்கி தமிழகம்

தமிழ்நாட்டின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் ஆக உள்ளது. இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை வரும் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய ஆக்சிஜன் பயன்பாடு 310 மெட்ரிக் டன்னை தொட்டுவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். கூடிய விரைவில் ஆக்சிஜன் தேவை 450 மெட்ரிக் டன்னாக மாறும் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டின் ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்பக் கூடாது என்றும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனைக் கூட தமிழ்நாட்டிற்கு அளிக்காமல், மத்திய அரசே எடுத்துக் கொண்டு பிரித்தளிக்கும் என்று சொல்லியிருக்கிறது. இதனால் தமிழ்நாடு ஆக்சிஜனுக்காக கையேந்தும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. 

தேவை போர்க்கால நடவடிக்கை

ஏற்கனவே டெல்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜனைக் குறைத்து உத்திரப் பிரதேசத்திற்கு அனுப்பியதால் டெல்லி அரசு பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து ஆக்சிஜனுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது. டெல்லியைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசாங்கமும் ஆக்சிஜனுக்காக விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு இதே போக்கினைத் தொடரும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கும் இந்த நிலை விரைவில் வரும் என்கிற நிலையே இருக்கிறது.

டெல்லியின் நிலையை நோக்கி சென்னை நகர்ந்து கொண்டிருக்கிறது. உடனடித் தேவை அரசின் போர்க்கால நடவடிக்கையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *