பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
தாய்மொழியின் வலிமையை தனது சிந்தனையாக வடிவமைத்து, பார்ப்பனர் அல்லாதார் பண்பாட்டைப் போற்றுகிற பாடல்களை தமிழில் கொடுத்தவர் பரதிதாசன். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்திலிருந்து தன் மொழி ஆற்றலை எடுத்து நவீன உலகில் கொடுத்தவர்.
பாரதிதாசன் குறித்து எழுதுகிற போது பேராசிரியர் தமிழவன், ”சமஸ்கிருத கலப்பில்லாத தனித்தமிழிலிருந்து பாரதிதாசன் போல் நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை” என்று கூறுவார்.
புரட்சிக் கவியான பாரதிதாசன் எழுதிய காதல் கவிதைகளும் சிறப்பு வாய்ந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ’அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பயன்படுத்தப்பட்ட பாரதிதாசனின் பாடலான ’அவளும் நானும்’ பாடல் இன்றைய தலைமுறையாலும் கொண்டாடப்பட்டது.
”எல்லோரும் பாட்டுக்கு உரை எழுதியபோது பெரியாரின் உரைக்கு எல்லாம் பாட்டெழுதியவன் பாரதிதாசன்” என்று புகழப்பட்ட பாரதிதாசன் தனது காதல் கவிதைகளிலும் சாதி எதிர்ப்பு மறுமணம் குறித்தெல்லம் சேர்த்துப் பாடியவர்.
கவிஞனுக்கும், அரசன் மகளுக்குமான காதலில் சமூக சமத்துவம்
’பில்கணீயம்’ என்ற வடமொழி நூலைத் தழுவி தமிழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய காவியம் ‘புரட்சிக் கவி’. புரட்சி சிந்தனைகளும், பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் நிறைந்த இந்நூல் படிப்பதற்கு மிகவும் சுவையானது; ஆண்டான் அடிமையெனும் நடைமுறை ஒழியவேண்டும் என வலியுறுத்துவது. அதில் கவிஞனுக்கும், அரசன் மகளுக்குமான காதல் குறித்து எழுதுகிற போதும் அவர் சமூக சமத்துவத்தைப் பற்றி எழுதியிருப்பார்.
”நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக்
கோலமுழுதும் காட்டிவிட்டாற் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?”
என்று துவங்கும் அந்த புகழ்பெற்ற கவிதையில்,
”நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”
என்று காதலியைக் காணும் இன்பம் குறித்து எழுதுகிற போதும் மொழிச்சுவையுடன் பொதுவுடமை சிந்தனையை சேர்த்து சுரண்டப்படும் மக்களின் வாழ்வையும் பாடினார்.
பொருள்தேடச் சென்ற காதலனும், பிரிவால் உழலும் காதலியும்
சங்க இலக்கியங்களில் காதலன் பொருள் தேடி பிரிந்து செல்லும்போது பாடப்படும் பாடல்களைப் போல, பொருள் சேர்க்க காதலன் சென்றதால் பிரிந்திருக்கும் காதலர்கள் எழுதிக் கொள்ளும் கடிதங்களில் தங்கள் வருத்தங்களை, அன்பை, காதல் ஏக்கத்தைப் பாடும் கவிதையாக வடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதத்தில்,
“தன் வீட்டில் அனைவரும் நலம், மான் நலம், மயில் சேமம், பசுக்கள் நலம், நான் சாகாமல் இருக்கிறேன், இப்படிக்கு எட்டிக்காய்” என்று காதலி தன் கசப்புணர்வை வெளிப்படுத்துவதாய் பாரதிதாசன் எழுதியிருப்பார். அதற்கு பதில் எழுதும் காதலன் ”செங்கரும்பே உன் கடிதம் பெற்றேன்” என்று துவங்குவார்.
காதலியின் கடிதம்
”என் அன்பே,
இங்குள்ளார் எல்லோரும்
சேமமாய் இருக்கின்றார்கள்;
என் தோழியர் சேமம்!
வேலைக்காரர் சேமம்! இதுவுமன்றி
உன்தயவாம் எனக்காக உன்வீட்டுக்
களஞ்சியநெல் மிகவுமுண்டே,
உயர் அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்
பத்துவிதம் உண்டு. மற்றும்
கன்னலைப்போல் பழவகை பதார்த்தவகை
பட்சணங்கள் மிகவுமுண்டு.
கடிமல்ர்ப்பூஞ் சோலையுண்டு. மான் சேமம்.
மயில் சேமம். பசுக்கள் சேமம்.
இன்னபடி இவ்விடம்யா வரும் எவையும்
சேமமென்றன் நிலையோ என்றால்,
‘இருக்கின்றேன்; சாகவில்லை’ என்றறிக.
இங்ஙனம் உன்,
எட்டிக்காயே”
காதலன் பதில்
செங்கரும்பே,
உன்கடிதம் வரப்பெற்றேன்.
நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.
தேமலர்மெய் வாடாதே! சேமமில்லை
என்றுநீ தெரிவிக் கின்றாய்
இங்கென்ன வாழ்கிறதோ? இதயத்தில்
உனைக்காண எழும்ஏக் கத்தால்,
இன்பாலும் சர்க்கைரையும் நன்மணத்தால்
பனிக்கட்டி இட்டு றைத்த
திங்கள் நிகர் குளிர்உணவைத் தின்றாலும்
அதுவும் தீ! தீ! தீ! செந்தீ!
திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன்.
உனை அங்கே விட்டுவந்தேன்!
இங்குனைநான் எட்டிக்காய்
என நினைத்ததா யுரைத்தாய்; இதுவும் மெய்தான்.
இவ்வுலக இன்பமெலாம் கூட்டிஎடுத்
துத்தெளிவித் திறுத்துக்காய்ச்சி
எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை
எட்டிக்காய் என்பா யாயின்
எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்
சொல்லிடுவேன்”
இப்படி காதலை உருகி உருகி தன் பாடல்களில் எழுதி வைத்திருக்கிறார் பாவேந்தர்.
சாதியவாதிகளை மீறிய மறுமணக் காதல்
மாந்தோப்பு எனும் கவிதையில் அமுதவல்லிக்கும் குப்பனுக்குமான காதலை பாடியிருப்பார். ஒரு பெண்ணை விரும்பி அவளிடம் தன் காதலை சொல்லும்போது, நான் சிறுவயதில் விதவையானவள் என்று அவள் கூறுகிறாள். குப்பன் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். பிற்போக்கு எண்ணம் கொண்ட ஊர்காரர்கள், சாதிகாரர்கள் போன்றோர் ஊர் விலக்கம் செய்வோம் என்று பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். சாதியவாதிகளை எல்லாம் மீறி அப்பெண்ணை மணக்கும் அந்த கவிதையில் மறுமணத்தை வலியுறுத்தி பாரதிதாசன் எழுதிய வரிகள் சிறப்பு வாய்ந்தவை.
”உன்னை எனக்குக் கொடுத்துவிடு! – நான்
உனக்கெனைத் தந்திட அட்டியில்லை’ – இந்தக்
கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் – எட்டிக்
காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்;
‘சின்ன வயதினில் என்றனையோர் – பெருஞ்
சீ மான் மணந்தனன் செத்துவிட்டான்! – எனில்
அன்னது நான் செய்த குற்றமன்று! – நான்
அமங்கலை’ என்றுகண் ணீர்சொரிந்தாள்!
வீதியிற் பற்பல வீணர்களும் வேறு
விதியற்ற சிற்சில பண்டிதரும் – வந்து
சாதியி லுன்னை விலக்கிடுவோம் – உன்
தந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்! – நம்
ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! – தாலி
அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! – நல்ல
கோதை யொருத்தியை யாம்பார்த்து – மணம்
கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்!
கூடிய மட்டிலும் யோசித்தனன் – குப்பன்
குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! – முன்
வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் – அந்த
வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் – !
ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! – மூடர்
எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி!
காதல் அடைதல் உயிரியற்கை! – அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? – அடி
சாதல் அடைவதும் காதலிலே – ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! – இனி
நீதடு மாற்றம் அகற்றிவிடு! – கை
நீட்டடி! சத்தியம்! நான் மணப்பேன்! – அடி
கோதை தொடங்கடி! என்று சொன்னான் – இன்பம்
கொள்ளை! கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!”
என்று காதல் கவிதையில் கூட புரட்சியைப் பாடியவர் பாரதிதாசன்.
காதலின் வலிமை
”கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.”
என்று காதலின் வலிமை எத்தகையது என்று ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் காவியத் தன்மை கொண்ட கவிதையில் பாடுகிறார் பாவேந்தர்.
அரசர்களின் காதலைப் பாடியவர்கள் மத்தியில் உழைப்பாளிகளின் காதலைப் பாடிய ஒருவர்
தமிழில் உழைப்பாளிகளின் காதலைப் பாடியவர் பாரதிதாசன். வண்டிக்காரர், மாடு மேய்ப்பவர், பாவோடு பெண்கள், தறித் தொழிலாளி நினைவு, உழவர் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக்(கோடரி)காரர், கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரர், சுண்ணம் இடிக்கும் பெண்கள், ஓவியக்காரன் என்று காதல் பாடல்களைப் படைத்துப் புதுமை செய்தவர் பாரதிதாசன். இந்த தொழிலாளிகளின் தொழில் சார்ந்த எண்ணங்களுடன் காதலை எழுதியவர்.
”ஆலையின் சங்கே நீ ஊதாயோ? மணி
ஐந்தான பின்னும் பஞ்சாலையின் சங்கே ஊதாயோ?
காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே
வேலை செய்தாரே! என் வீட்டை மிதிக்கவே
மேலைத் திசைகளில் வெய்யிலும் சாய்ந்ததே
வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே
மேலும் அவர் சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே
விண்ணைப் பிளக்கும் உன் தொண்டையேன் காய்ந்ததே
குளிக்க ஒரு நாழிகையாகிலும் கழியும்
குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்
விளைத்த உணர்வில் கொஞ்ச நேரம் அழியும்
வெள்ளி முளைக்கு மட்டும் காதல்தேன் பொழியும்.”
ஒரு ஆலைத் தொழிலாளியின் வாழ்க்கையையும், அதில் காதலனுக்காக காத்திருக்கும் தலைவி ஆலை சங்கு இன்னும் ஒலிக்காதது குறித்து சிந்திப்பதை எழுதியிருப்பார்.
காதல் பாடல்களில் உழைக்கும் மக்களின் வாழ்வை, சாதி மத எதிர்ப்பை, கைம்பெண் மறுமணம் குறித்த விழிப்புணர்வை பாடிய பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் இன்று.