புலி

மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்

அசாமில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகளுகு உணவுக்காக மாட்டுக்கறி பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாஜக தலைவர்களில் ஒருவரான சத்திய ரஞ்சன் போரா மற்றும் சிலர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமைந்துள்ள மிருகக் காட்சி சாலையின் வாயில் கதவை மூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இது குறித்து அசாம் மாநில மிருகக் காட்சி சாலையின் பிரதேச வன அலுவலரான தேஜஸ் மாரிசாமி இந்துஸ்தான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “வனக் காப்பகத்திற்கு உணவு எடுத்துச் செல்லும் வண்டியை சிலர் இடை மறித்ததாகவும், பின்னர் காவல்துறை அழைத்து கூட்டத்தை களையச் செய்த பின்னர், தற்போது வன மிருகங்களுக்கு தரப்படும் மாமிசம் தடையில்லாமல் கொடுக்கப்பட்டு வருகிறது. மிருகக்காட்சிசாலையில் சிங்கம் மற்றும் புலிகளுக்கே மாட்டுக்கறி கொடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

பாஜக தலைவர் ரஞ்சன் போரா மற்ற கறிகளைத் தவிர்த்து குறிப்பாக மாட்டுக்கறி மட்டும் ஏன்  கொடுக்கப்படுகிறது? இது இந்து சமூகத்தைப் புண்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்..

மேலும் அவர் மாட்டுக்கறிக்கு பதிலாக சம்பர் இன மான் கறிகளை புலிகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மிருகக் காட்சி சாலையில் சம்பர் இன மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த ஆண் மான்களை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்துவருவதாகவும், மாமிச உண்ணிகளுக்கு அந்த மான்களை உணவாகக் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் சம்பர் மான்கள் இனத்தினை அழிந்து வரும் இனங்களின் (Vulnerable) பட்டியலில் வைத்துள்ளது. மேலும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் அட்டவணை III-ன் கீழ் பாதுகாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அசாம் வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா இந்த விஷயத்தை அறிந்து கொண்டு, விலங்குகளின் சத்தான தேவைகளுக்கு மாட்டிறைச்சி அவசியம் என்று கூறியுள்ளார். சில மாநிலங்கள் மாட்டிறைச்சிக்கு பதிலாக எருமை இறைச்சியை மாமிச உண்ணி மிருகங்களுக்கு வழங்குவதாகவும், ஆனால் அசாமில் போதுமான எருமை இறைச்சி இல்லாத காரணத்தால் பசு மாட்டிறைச்சி வழங்கப்படுவதாக குவாஹாத்தி பிளஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அசாமில் இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதற்கு தடை செய்யப்படவில்லை. பல இந்திய மாநிலங்களைப் போலல்லாமல், அசாமில் உள்ள சட்டம் எருமைகள், பசுக்கள் அல்லது காளைகளை வேறுபடுத்துவதில்லை. 1950-ம் ஆண்டின் அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 14 வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளை (அல்லது வேலை செய்ய இயலாத அல்லது இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்த முடியாத) இறைச்சிக்காக வெட்ட அனுமதிக்கிறது.

இந்த செய்தியைப் பார்த்த நெட்டிசன்கள் “விட்டா பாஜககாரங்க புலிய புளியோதரை சாப்பிட சொல்வாங்க போல”ன்னு கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *