புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்

நெடுஞ்சாலைகளில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 81,385 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவை அனைத்தும் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற விபத்துகளாகும்.

இந்த சாலை விபத்துகளில் 29,415 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரது கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றபோது இந்த தகவல்களை சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியுள்ளார். 

மார்ச் 25-ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கிடையிலும் அத்தியாவசியப் பொருட்களைத் தவிர மற்ற பயணங்கள் முழுவதும் தடுக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு வழியின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளாப்பட்டனர். நடந்தே தங்கள் ஊர்களுக்குச் சென்றார்கள். 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்ததால் சாலை வழியாக நடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தார்கள். ஏப்ரல் 9-ம் தேதிதான் அரசாங்கத்தால் சில பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. மே 1-ம் தேதி தான் தொழிலாளர்களுக்கென்று பிரத்யேகமாக இரயில்கள் இயக்கப்பட்டது. அதுவும் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் தொழிலாளர்கள் மாநில நெடுஞ்சாலைகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இந்த பயணத்தில் பல சாலை விபத்துகள் நடைபெற்றதும், அவற்றில் சில நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியதும்  குறிப்பிடத்தக்கது.

மேலும் எவ்வளவு தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள் என்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு தொழிலாளர் துறையின் தகவல்களின் அடிப்படையில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் 1.06 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தன் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர் என்று கூறினார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய சாலை போக்குவரத்துத் துறை அதிகாரி, இந்த தகவல்கள் மாநில சாலை போக்குவரத்துக் காவல்துறையினர் அளித்த விவரங்கள் அடிப்படையில் பெறப்பட்டது என்றும், அதனால் இது சரியானதாகத் தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதற்கான தனிப்பட்ட தரவுகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் பயணத்தின்போது அவர்களுக்கான உணவு குடிநீர் காலணிகள் ஓய்வெடுக்கும் இடம் உள்ளிட்டவற்றை அரசு ஏற்பாடு செய்தது என்றும், அவர்களுக்கான போக்குவரத்தும் ஏற்பாடு செய்தது என்றும் கூறியிருக்கிறார்.

பெரும்பான்மையான போக்குவரத்துக்கள் முடங்கியிருந்த காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே பயணிக்கையில், அத்தியாவசியப் பொருட்களுக்கான பயணங்களும் மட்டுமே இயங்கி கொண்டிருந்த போது   81,385 என்கிற அளவுக்கு விபத்துகள்  நடைபெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *