நிவர் புயல் கால்நடைகள்

நிவர் புயலின் காரணமாக 3900 கால்நடைகள் இறந்துள்ளன

நிவர் புயலின் காரணமாக 3,900 கால்நடைகள் இறந்திருப்பதாக தமிழக அரசு விவரங்களை வெளியிட்டுள்ளது. நவம்பர் 25 அன்று இரவு நிவர் புயலானது மரக்காணத்திற்கு அருகில் கரையைக் கடந்தது. நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 

அதில் கால்நடைகளைப் பொறுத்தவரை 3,900 வளர்ப்பு உயிரினங்கள் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த வளர்ப்பு உயிரினங்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கோழிகள் பெருமளவில் இறந்திருக்கின்றன. மேலும் 101 பசு மாடுகளும், 127 கன்றுக் குட்டிகளும், 9 எருமை மாடுகளும் இறந்துள்ளன. 134 ஆடுகள் வரை இறந்திருப்பதாக தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த கால்நடைகளின் மதிப்பு 90 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

17 மாவட்டங்கள் நிவர் புயலின் காரணமாக பாதிப்பினை சந்தித்துள்ளன. அவற்றில் கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ளன. காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கான பாதிப்பினை சந்தித்துள்ளன.

தமிழக அரசு கணக்கெடுத்திருக்கும் பகுதிகள் வரை, கடலூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மணிலா, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

மூழ்கியுள்ள பயிர்கள்

முதல்கட்ட கணக்கெடுப்பின்படி, காவிரி டெல்டா பகுதியில் 2.5 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 1.45 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 23,500 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருப்பதால், நிலத்திலிருந்து தண்ணீர் வடிவதற்கான சூழல் இல்லாமல் உள்ளது. 

நிவர் புயல் பாதிப்பைக் கணக்கிட்டு முடிப்பதற்கு முன்னரே புரேவி புயல் உருவானதால், பாதிப்புகளைக் கணக்கிடும் பணி என்பது இன்னும் நீளும் என தெரிகிறது. அதன் காரணமாக முழுமையான பாதிப்புகளின் அளவும் இன்னும் தெரிய வராததாக இருக்கிறது. புரேவி புயலின் காரணமாக கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பினை சந்தித்திருக்கிறது. 

தமிழக அரசு கோரியுள்ள நிவாரணத் தொகை

தற்போது நிவர் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். நிவர் புயல் நிவாரணப் பணிகளுக்காக 3758 கோடி ரூபாய் தேவைப்படுவதாக ஒன்றிய அரசுக்கும் தமிழக அரசு கோரிக்கை வைத்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் உள்ள 14,144 ஏரிகளில், 3,487 ஏரிகள் 100 சதவீத முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளன. தற்காலிக உடனடி நிவாரணமாக 650 கோடி ரூபாயும், சீரமைப்பிற்கு 3108 கோடியும் தமிழக அரசு கோரியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *