வாட்சப் வழக்கு

அரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்கு

ஒன்றிய அரசினுடைய புதிய சமுக வலைதள நெறிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது; ஒன்றிய அரசின் புதிய சமூக வலைதள வழிகாட்டு நெறிமுறைகள் அரசமைப்பு சட்ட விரோதமானது மற்றும் தனிநபர் உரிமைக்கு எதிரானது என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ஒன்றிய அரசு, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021ஐ அறிவித்தது. இவ்விதியானது சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாற்றத்தைக் அரசு கண்காணிக்க வழிவகுக்கக் கூடியது; சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களின் எந்தவொரு தகவலையும் அதனை முதலில் பரப்பியது யார் என்று அரசுக்கு சொல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

மேலும் இவ்விதியின் படி பேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் சட்ட விதிகளுக்குட்பட்ட செயல்பாட்டை உத்திரவாதப்படுத்தும் தலைமை அதிகாரி, வட்டார தொடர்பு அதிகாரி மற்றும் புகார் பெறும் அதிகாரி நியமனங்களை உருவாக்கக் கோருகிறது.

இதையும் படிக்க: 36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?

குறிப்பிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் இப்புதிய விதிகளை இம்மாதம் 25-க்குள் செயல்படுத்தக் கேட்டிருந்தது. இந்நிலையில் தான் காலக்கெடு வழங்கப்பட்டிருந்த இறுதி நாளான நேற்று வாட்ஸ்அப் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனிநபர் உரிமைக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானதாக உள்ளது என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு இடையே நடைபெறும் Chat களை ட்ரேஸ் செய்யக் கோருவது வாட்சப் நிறுவனம் கொண்டுள்ள End to End Encryption எனப்படும் தனிநபர் ரகசியங்களை பாதுகாக்கும் நடவடிக்கையை உடைக்கச் சொல்வதற்கு சமமாகும் என்று வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இவ்விதிகள் செயல்பாட்டுக்கு வந்தால் நபருக்கும் நபருக்கும் இடையேயான தகவல் பரிமாற்ற நம்பகத்தன்மைக்கு அர்த்தம் இருக்காது” என்கிறது வாட்ஸ் அப்.

வாட்ஸ் அப் வழக்குத் தொடுத்திருப்பது தொடர்பாக கருத்து கூறியுள்ள அரசுத் தரப்பு, “வழங்கப்பட்ட கால அவகாசத்தைக் கடத்தி கடைசி நேரத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது வாட்ஸ் அப். இந்தியாவில் நடக்கும் எத்தகைய செயல்பாடும் விதிகளுக்கு உட்பட்டே நடக்க வேண்டும். அத்தகைய வழிகாட்டு விதிமுறைகளை வாட்ஸ் அப் மறுப்பதானது சந்தேகத்திற்கிடமின்றி சட்டமீறல் செயலாகும்” என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *