இணைய உலகில் மீம்கள் எனப்படும் ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் புகைப்படங்கள் பிரபலமானவை. தமிழ் இணைய உலகில் பொதுவாக திரைப்படங்களின் குறிப்பிட்ட காட்சிப் புகைப்படங்கள் பகிரப்படுவது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
சூரியவம்சம் திரைப்படத்தில் நடிகை ராதிகா அறிவுரை கூறுவது போன்ற புகைப்படம், சங்கமம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்கள் நால்வர் வைக்கோல் போரில் சாய்ந்து கனவு காணுவது போன்ற புகைப்படம் ஆகியவை மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை மற்றொருவரின் கற்பனையில் உதித்தவை அல்லது திரைப்படங்களின் காட்சிகளில் இருந்து எடுத்து கையாளப்பட்டவை. இதைப்போன்று உலகளவில் சில புகைப்படங்கள் பிரபலமானவையாக இருக்கின்றன.
வெளிநாட்டினர் அவர்கள் தங்கள் சொந்த அல்லது இயல்பாக உண்மையிலேயே நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீம்ஸ்-க்காக அதிகமாக பயன்படுத்துகின்றனர். உதாரணமாக சர்வதேச அளவில் பிரபலமான ஒசிதா இஹெம் (Osita Iheme) எனும் ஒரு நைஜீரிய நடிகரை சொல்லலாம்.
ஆனால் இங்கு சொல்லப்போவது உண்மையிலேயே சாதாரணமாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அது மீம் உலகைக் கலக்கியதோடு மட்டுமல்லாமல், கடந்த வாரத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று கோடியே எழுபது லட்சம் ரூபாய் மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அழிவின் சிறுமி புகைப்படம்
இணைய உலகில் ‘அழிவின் சிறுமி’ (Disaster Girl) என்ற தலைப்பில் அடிக்கடி பகிரப்படும் ஒரு சிறுமியின் புகைப்படம் மிகவும் பிரபலமானது. “அழிவின் சிறுமி” புகைப்படத்திலிருக்கும் சிறுமியின் பெயர் ஜோ ரூத் . (Zoë Roth). ஜோ இப்போது அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவி. குறிப்பிட்ட புகைப்படம் எடுத்து ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பின் புகைப்படத்தின் இணையப் புகழை கருதி அதன் அசல் புகைப்படத்தை இப்போது விற்பனை செய்திருக்கிறார். அவரின் அந்த அசல் புகைப்படம் $473,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது 2005-ம் ஆண்டில் தனது நான்காம் வயதில் ‘ஜோ ரோத்’ தனது குடும்பத்தினருடன் வட கரோலினாவின் மெபேன் (Mebane) நகரில் வாழ்ந்தபோது எடுக்கப்பட்டது. அப்போது அவரின் வீட்டின் அருகில் நகரின் தீயணைப்பு நிலையம் ஒன்று இருந்தது. அவரின் வீட்டருகே இருந்த ஒருவரின் இடத்தில் அந்த இடத்தை சீர்திருத்துவதற்காக நெருப்பு வைத்து அழிக்கப்பட்டது. இது தீயணைப்பு வீரர்கள் முன்னிலையில் அவர்கள் பாதுகாப்புடன் நிகழ்ந்தது. அதை ஜோ பார்த்துக் கொண்டிருக்கும் போது அவரின் தந்தை ‘டேவ் ரோத்’ (Dave Roth) எடுத்த அந்த புகைப்படத்தில் தூரத்தில் பற்றியெரியும் நெருப்பின் முன்னால் அவர் நின்று கொண்டிருக்கிறார்.
புகைப்படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது ஜோ ரோத் தீயை பற்றவைத்து அதை ரசித்து பார்த்திருப்பது போலத்தான் தெரியும். ஆனால் உண்மையில் அவரின் தந்தை புதிதாக வாங்கிய புகைப்படக்கருவியை சோதிக்க எடுத்த முதல் புகைப்படம் அது.
துபாயைச் சேர்ந்த இசை தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி
புகைப்படம் எடுத்து பதினாறு ஆண்டுகள் கழித்து இந்த நவீனகால மோனாலிசாவின் புகைப்படம் 180 எத்தேரியம் எனப்படும் இணைய பணமதிப்பிற்கு விற்கப்பட்டது. இது $473,000 அமெரிக்க டாலரும் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் மூன்று கோடியே ஐம்பது லட்சம் மதிப்பு கொண்டது. இந்த புகைப்படம் 3FMusic என்றழைக்கப்படும் ஒரு கலை சேகரிப்பாளருக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஏலத்தை நடத்திய நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த புகைப்படத்தை வாங்கியவர் ஃபார்சின் ஃபார்டின் ஃபார்ட்’ (Farzin Fardin Fard). இவர் துபாயை தலைமையிடமாக கொண்ட இசை தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
‘அழிவின் சிறுமி’ புகைப்படம் இணையத்தின் தற்போதைய நவீன தொழில்நுட்பமான ‘Non-fungible token'(NFT) மூலம் எண்முறை கோப்புகளாக (Digital ledger) மாற்றப்பட்டு அவரின் எண்முறை கையொப்பம் கொண்டு கலைபடைப்பைப் போல விற்கப்படுகிறது.
“இது வேடிக்கையானது என்று மக்கள் கருதியதால் அதைப் பரவலாகப் பகிர்ந்து கொண்டார்கள். இப்போது நான் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கிறேன்” என்று இந்த புகைப்படத்தைப் பற்றி 21 வயதான ஜோ ரோத் கூறுகிறார். எரியும் கட்டிடத்திற்கு வெளியே அதை விரும்பும் வகையில் சிரித்ததாக பொருள்படும் அந்த புகைப்படம் தன்னை மக்களிடம் ஒரு பிசாசு போல அறிமுகப்படுத்தியதாகக் கூறுகிறார். அவரின் 4 வயதில் எடுத்த இந்த புகைப்படத்தின் மூலம் ஜோ இணையத்தில் மிகப் பிரபலமானார். இந்த புகைப்படம் 2008 இல் ஜேபிஜி பத்திரிகையின் (JPG magazine) சிறந்த உணர்ச்சிகளை படம்பிடித்தல் (Emotion Capture) என்ற பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் வென்றது.
இந்த புகைப்படத்தை வாங்கிய உரிமையாளர் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “எங்கள் நிர்வாக குழு எப்போதும் அதிக அறிவுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த கலை ஆலோசகர்களுடன் ஒத்துழைக்கிறது, அவர்கள் எங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப இயக்கங்களுடன் வளர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். கலைஞர்கள் மற்றும் கலைச் சந்தையை ஆதரிக்க இத்தகைய முயற்சிகள் தேவைப்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.
‘ஜோ ரூத்’ தன்னுடைய இணையப் புகழைப் மேம்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தவுடன் “அழிவின் சிறுமி ” புகைப்படத்தை ஒரு இணைய உரிமைகொண்டதாக மாற்றினார். இது எதிர்காலத்தில் எப்போதெல்லாம் விற்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ரோத் மற்றும் அவரது தந்தைக்கும் 10% லாபத்தை தரக்கூடிய வகையில் அதன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச உறவுகள் தொடர்பான பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஜோ ரூத், பட்டம் பெறுவதற்கு முன் ஒரு ஆண்டு இடைவெளி எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அவர் தனது இணைய புகழிலிருந்து சம்பாதித்த தொகையை தொண்டு நிறுவனங்களுக்கும், தனது கல்விக் கடனை அடைப்பதற்கும், மற்ற பொது நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கும் பயன்படுத்தப்போவதாக கூறியிருக்கிறார்.
இப்போதும் ஜோ ரூத் வீட்டில் இருக்கும்போது அவளை இந்த அளவிற்கு பிரபலப்படுத்திய இடத்தை அடிக்கடி சென்று பார்க்கிறார். இப்போது அந்த இடம் மிக மதிப்பு வாய்ந்த, பிரபலமான புகைப்படத்தின் நினைவிடம் என்று உள்ளூர்வாசிகள் அறிந்ததால் ஆச்சரியப்படுகிறார்கள்.
“மீம்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு உண்மையில் அதிலிருக்கும் தெளிவு இல்லை, இணையம் பெரியது. அதில் உங்களுக்கு நல்ல அனுபவம் அல்லது மோசமான அனுபவம் இருந்தாலும், நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று ஜோ ரூத் கூறுகிறார்.