2018 la விண்கல்

பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

ஜூன் 2, 2018 அன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) இருக்கும் மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயத்தின் (Central Kalahari Game Reserve) வான்வெளியில் விண் எரிகற்கள் மத்தாப்பு போல் சிதறி வான வேடிக்கையை நிகழ்த்தின. மொத்தம் 23 விண்எரிகற்கள் அதன் நிலப்பகுதியில் எரிந்து விழுந்தன. 

இதன் பின் சேகரிக்கப்பட்ட இந்த அரிய விண்கல் துண்டுகளின் தோற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். 2018 LA என்று பெயரிடப்பட்ட பெரிய விண்கல்லில் இருந்து சிதறிய கற்கள் பூமியில் வந்து விழுவதற்கு முன்பு சுமார் 23 மில்லியன் ஆண்டுகளாக தன்னுடைய விண்வெளிப் பயணத்தை தொடர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய போட்ஸ்வானாவில் உள்ள மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயப்பகுதியில் பகுதியில் மீட்கப்பட்ட 2018 LA என்ற விண்கல்.

வனவிலங்கு சரணாலயத்தை நீராதாரத்திற்கு துணைநிற்கும் ‘மோட்டோபி பான்’ என்ற ஏரியின் பெயரை இதற்கு வைத்துள்ளார்கள். இதற்கான அறிவிப்பை என்று போட்ஸ்வானா புவி அறிவியல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி மொஹுட்சிவாகபாடிர்வே (Mohutsiwa Gabadirwe) ஒரு அறிக்கையில், “இந்த விண்கல் போட்ஸ்வானாவின் தேசியப் புதையல்” என்று கூறியிருக்கிறார்.

அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்தனர்

இந்த விண்கல்லை முதன்முதலில் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் (University of Arizona) விஞ்ஞானிகள் தங்களது கேட்டலினா வான்வெளி கண்காணிக்கும் திட்டத்தின் கீழ் (Catalina Sky Survey) முதலில் கண்டறிந்து பின்தொடர்ந்து வந்தனர். இதன்படி ஒரு விண்கல்லை அது புவியில் மோதுவதற்கு முன் கண்டறிந்து அதனை பின்தொடர்வது இதுவரை இந்த நிகழ்வையும் சேர்த்து இரண்டு தடவைகள்தான் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வரும்போது புவியின் விண்வெளியில் நுழையும்போது ஏற்படும் காற்றின் உராய்வில் இதுபோன்ற விண்கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும். இக்கட்டுரையை படிக்கும் எவராவது எப்பொழுதாவது இரவில் விண்வெளியில் இதுபோன்ற விண்கற்கள் எரிந்து விழுவதைப் பார்த்திருக்கலாம். அவை இதுபோன்ற சிறு விண்கற்களே.

38,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்தது

போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட இந்த விண்கல் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது சுமார் 6 அடி குறுக்களவில் இருந்திருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பின் பாதுகாப்பாக உடைந்து போகும் அளவுக்கு சிறியது. இந்த விண்கல் ஒரு மணிநேரத்திற்கு 38,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

முதலில் சூடான் நாட்டில் மோதிய சிறுகோள்

பூமியில் நிலத்தைத் தாக்குவதற்கு முன்பே விண்வெளியில் இதுபோன்ற ஒரு சிறுகோள் இருப்பதை நாம் கண்டறிந்தது இதனுடன் சேர்த்து இரண்டாவது முறையாகும். முதலாவதாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சூடான் நாட்டில் அதன் நிலப்பகுதியில் 2008 டிசி 3 (2008 TC3) என்ற சிறுகோள் மோதியது.

விண்கற்களின் குழு

போட்ஸ்வானாவில் மோதிய கற்பாறை அளவிலான சிறுகோளின் சுற்றுப்பாதையையும், பூமிக்கான அதன் பாதையையும் துல்லியமாக வரைபடமாக்குவதன் மூலமும், ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் (University of Helsinki) மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், ஆராய்ச்சியாளர்கள் அவை ஹோவர்டைட்-யூக்ரைட்-டையோஜனைட் (Howardite-Eucrite-Diogenite – HED meteorites) விண்கற்களின் குழுவைச் சேர்ந்தவை என்று தீர்மானித்தனர். பின்பு அவற்றின் கலவைக்கு பெயரிடப்பட்டது. அவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை விண்கற்கள் மற்றும் கிரக அறிவியல் இதழில் ( journal Meteoritics and Planetary Science) வெளியிட்டனர்.

வெஸ்டா பகுதியிலிருந்து வந்தது

இந்த வகையான விண்கற்கள் நமது சூரியகுடும்பத்தில் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள இரண்டாவதும்  மிகப் பெரியதுமான ஏராளமான சிறுகோள்கள் உலவும் வெஸ்டா (Vesta) என்றழைக்கப்படும் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்டாவில் உருவாகிய இரண்டு பெரிய விண்விளைவுகள் அங்கு பெரிய, மிகவும் ஆபத்தான சிறுகோள்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை உருவாக்கியது. இப்போது புதிதாக மீட்கப்பட்ட விண்கற்கள் அந்த தாக்கங்கள் எப்போது நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான ஒரு குறிப்பை எங்களுக்குக் கொடுத்திருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம் வெனீனியா தாக்கப்படுகை (Veneneia impact basin) என்னும் விண்வெளியின் பகுதி சுமார் 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஜூன் 2, 2018ல் ‘கேடலினா ஸ்கை சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்ட 2018 LA என்ற சிறுகோளின் படங்கள். இந்த படங்கள் எடுக்கப்பட்ட சுமார் எட்டு மணி நேரத்திற்குப் பிறகு இந்த சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவுக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் சிதைந்தது.

விண்கற்களின் தோற்றத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். வெஸ்டாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து தனித்ததாக பாறைத் துண்டுகளின் கலவையாக இருக்கக்கூடிய ப்ரெசியா (Breccia) என்ற சிறுகோளை வகைப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த ஐந்து விண்கற்களின் பெட்ரோகிராபி மற்றும் கனிம வேதியியலை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அவை முன்பு குறிப்பிட்ட ஹெச்இடி (HED) குழுவைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் இந்த விண்கற்கள் HED விண்கற்களின் குழுவான டியோஜனைட்டுகள் மற்றும் யூக்ரைட்டுகள் (Diogenites and Eucrites) வகையைச் சார்ந்தவை என்பதையும் கண்டறிய முடிந்தது.

பூமிக்கு வரும் அனைத்து HED விண்கற்களில் மூன்றில் ஒரு பங்கு சுமார் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருக்கும் விஸ்டாவின் சிறுகோள்கள் உலவும்  விண்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவையாகும்.

மேலதிக ஆராய்ச்சியில் “இந்த விண்கல் கூட சுமார் 23 மில்லியன் ஆண்டுகளாக ஒரு சிறிய பொருளாக விண்வெளியில் இருந்ததை அறியமுடிந்தது” என்று பெர்க்லியில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் (University of California, Berkeley) கீஸ் வெல்டன் (Kees Welten) சொல்கிறார். ஆனால்இந்த கணக்கிலிருந்து சுமார் 4 மில்லியன் ஆண்டுகள் கூடலாம் அல்லது குறைக்கலாம் என்றும் அதன் வயது  கணக்கிடப்படுகிறது.

இந்த விண்ணியல் ஆய்வுகள் மூலம் மர்மமான வெஸ்டா சிறுகோளைச் சுற்றியுள்ள கூடுதல் ரகசியங்களை வெளிக்கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு மைல்கல்லாக சமீபத்தில் நவம்பர் 2020-ல் ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு ‘மோட்டோபி பான்’ விண்கல்லைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது 2.3 அவுன்ஸ் எடை கொணடது. மேலும் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களிலேயே மிகப்பெரியது.

இந்த ஆய்வுகள் விண்வெளியைப் பற்றி நீடிக்கும் பல்வேறு ஆய்வுகளில் சிறிய வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறது. இது போன்ற நவீனமான ஆய்வுகள் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புதிரையும் சிறிது சிறிதாக விடுவித்துக்கொண்டு வருவது அறிவியலின் சிறந்த பாய்ச்சல் என்றும் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *