ராட்சத மிருகங்கள்

மனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்

சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன் மெகா சைஸ் ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழியத் தொடங்கியதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா கண்டங்களில் இந்த மிருகங்கள் அழியாமல் ஆதிமனிதன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த மெகா சைஸ் ராட்சத மிருகங்கள் காலநிலை மாற்றத்தின் காரணத்தினாலும், மனித இனம் ஆப்பிரிக்காவில் உருவாகி பிற பகுதிகளுக்கு பரவத் தொடங்கிய காரணங்களினாலும் அழிந்திருக்ககூடும் என ஆய்வாளர்கள் முன்னர் நம்பி வந்தனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மனித இனங்களின் இடப்பெயர்வுகளால் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா கண்டங்களில் இந்த விலங்கினங்கள் அழியவில்லை என ஆச்சர்யமான தகவல் வெளியாகியுள்ளது.

நீண்டநாள் கேள்விக்கு கிடைத்த பதில்

ஆப்பிரிக்காவில் மட்டும் கடந்த 60 ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் இது போன்றதொரு ஆய்வு மேற்கொள்ளப்படாமலேயே இருந்தது. தற்போது இந்தியத் துணைக் கண்டத்தில் கிடைத்த புதை படிவங்களை ஆராய்ந்ததில் தொல்லுயிரியல்(palaeoarchaeology) ஆராய்ச்சியாளர்களின் பல நாள் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வில் யேல் பல்கலைக்கழகம், ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், நெப்ராஸ்கா பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்  ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

டாக்டர் அத்வைத் ஜுகார், இந்த மெகா சைஸ் மிருகங்கள் தெற்காசிய துணைக்கண்டத்தில் பிழைத்திருக்கக் காரணமாக “இணை பரிணாமம்” எனும் கோட்பாட்டை பயன்படுத்துகிறார்.

Stegoton எனும் வகை ராட்சத யானையின் பல்லை ஆய்வு செய்யும் அத்வைத் ஜுகார்

‘இணை பரிணாமம் (Co-Evolution)’

இது 20-ம் நூற்றாண்டில் உருவாக்கபட்ட ஒரு சுவாரஸ்யமான கருதுகோள் ஆகும். 1960-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த தொல்லுயிரியல் ஆய்வாளர் பால் மார்ட்டின் இதனை உருவாக்கினார்.

“ஆப்பிரிக்காவில் இன்றும் நிறைய பெரிய விலங்குகள் இருப்பதை அவர் கண்டார். ஆனால் அமெரிக்காவில் அவை இல்லை. எனவே அவர் அதைப் பற்றி யோசித்து, ஆப்பிரிக்காவில் மனிதர்கள் பரிணமித்து வந்த அதே காலகட்டத்தில் மற்ற பெரிய உயிரினங்களும் மனிதர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பரிணமித்து இருக்கலாம் எனும் முடிவுக்கு வந்ததாக” டாக்டர் அத்வைத் ஜுகார் தெரிவித்தார்.

அதாவது மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்து விளங்கினால் விலங்குகள் தப்பிப்பதில் சிறந்து விளங்கும். மனிதர்கள் நதி சமவெளிகளில் வாழ்ந்திருந்தால், விலங்குகள் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் பாதுகாப்பிற்காக நகரும்.

இந்த முறை ஆப்பிரிக்காவில் முற்றிலுமாக பொருத்திப் பார்க்க முடிந்தது, ஆனால் இந்தியாவில் எந்த மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்பது மர்மமாகவே இருந்து வந்தது.

ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்

இந்தியாவில் 25 இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 5 மெகா சைஸ் மிருகங்களின் புதைபடிவங்களை பகுப்பாய்வு மேற்கொண்டனர். 

  • இந்த palaeoloxodon namadicus, Stegodon Namdicus, Hexaprotodon, Equus Namadicus, Bos Namadicus ஆகிய 5 மெகா சைஸ் விலங்கினங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றை இந்தியாவில் வாழ்ந்த பாலூட்டிகளில் 4% விலங்கினங்களுடன் மட்டுமே தொடர்புபடுத்த முடிகின்றது. ஆனால் இவை ஆப்பிரிக்காவின் மாதிரிகளை அப்படியே ஒத்து இருப்பதாக தெரிவிக்கின்றன.
palaeoloxodon namadicus
  • 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வருகை தந்த ஹோமோ சேர்பியன்களால் இந்த மெகா சைஸ் மிருகங்கள் அழியவில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால் இந்த விலங்கினங்கள் காணாமல் போனது சுமார் 30,000 முதல் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தான் என தெரிகிறது.

    ஆதலால் இந்தியத் துணைக் கண்டத்தில் 30,000 ஆண்டு காலங்கள் மனிதர்களுடன் மெகா சைஸ் மிருகங்கள் பரிணமித்து வாழ்ந்து இருக்கக்கூடும் எனும் கருதுகோளுடன் ஆய்வாளர்கள் ‘இணை பரிணாமம்’ கோட்பாட்டை முன்வைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது மட்டுமின்றி வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் குரங்கு, மான் போன்ற சிறிய மிருகங்களையே அதிகளவில் வேட்டையாடி வந்துள்ளனர். இதற்கான சான்றுகள் இலங்கை மற்றும்  இந்தியாவில் காணப்படுவதால், மனிதர்களுக்கும் மெகா சைஸ் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் இல்லாமல் இருந்திருக்கலாம் எனவும் ஆய்வு முன்வைக்கிறது.
  • இந்த மெகா சைஸ் மிருகங்கள் தெற்காசியாவின் நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்த காரணத்தினால் அவை பிழைத்திருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆய்வு நடத்தவேண்டிய தேவை

கிட்டத்தட்ட 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே இந்தியத் துணைக்கண்டம் ஆப்பிரிக்காவைப் போல பல்வேறு வகையான உயிரினங்களின் உயிர் ஊற்றாக இருந்து வந்திருக்கிறது. பூமியில் எங்கும் கிடைக்காத பல பாலூட்டிகளின் புதைபடிவங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் கிடைக்கின்றன. 

சமீபத்தில் சிவாலிக் எனும் இடத்தில் கிடைத்த ஒரு புதைபடிவம் சுமார் 24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் போதுமான வசதிகள் இல்லாததால் ஆராய்ச்சி தடைபட்டு வருவதாக டாக்டர் அத்வைத் ஜுகார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *