Eelam Tamils and Srilanka election

இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5, 2020 அன்று நடைபெற்றது. இத்தேர்தலை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்களின் தரப்பானது மூன்று அணிகளாக பிரிந்து சந்தித்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட சிக்கல்களால் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ என்ற அணி உருவாக்கப்பட்டு தனித்து போட்டியிட்டது. மூன்றாவது அணியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்சியான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ’தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ போட்டியிட்டது. 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் பலர் இனப்படுகொலை குறித்த தங்கள் கோரிக்கைகளில் சமரசம் மேற்கொள்வதால் கூட்டமைப்பின் வாக்குகளில் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் சற்று சரிவு ஏற்பட்டிருக்கிறது. 

தமிழர் பகுதிகளிலிருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக 10 பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் அவர்களும் இனப்படுகொலை போருக்குப் பிறகு முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு செல்கின்றனர். இருவரும் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மாவட்டங்களின் சார்பாக பாராளுமன்றம் செல்கின்றனர்.

விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்று, தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களைப் பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது.

(குறிப்பு: இலங்கையில் தேர்தல் நடைபெறும் முறை குறித்து பின்னால் விளக்கப்பட்டிருக்கிறது)

தமிழர்களுக்கு தீர்வு என்ன?

இந்த தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நெட் இணையதளம், இனப்படுகொலை இலங்கை அரசினை உருவாக்கிய 1970 தேர்தலோடு இம்முடிவு ஒத்திருப்பதாக தெரிவித்துள்ளது. 

மேலும் அந்த இணையதளத்தில், ” 1970-களில் பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, பிரிட்டன் அரசினால் உருவாக்கப்பட்டிருந்த சிலோன் அரசியல் சாசனத்தினை மாற்றினார். தமிழர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி ஒற்றை ஆட்சி நாடாக அரசியல் சாசனத்தினை உருவாக்கி, சிறீலங்கா என பெயர் மாற்றம் பெற்று இனப்படுகொலை அரசு உருவானது. இப்போது முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜபக்சே கட்சி பெற்றிருக்கும் பெரும்பான்மை வெற்றி, மீண்டும் அதே நிலையைக் கொண்டு வந்திருக்கிறது. 

1972 முதல் 1977 வரை தந்தை செல்வநாயகம் வழிகாட்டியதைப் போல ஈழத்தமிழர்கள் தங்கள் தலைமையினை இலங்கையின் பாராளுமன்றத்துக்கு வெளியில் உருவாக்க வேண்டும். சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் மேற்கொள்ளும் சமரச அரசியல் நிலைகளை திருத்தி அமைக்கும் பொறுப்பினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் தோள்களில் ஈழத்தமிழ் வாக்காளர்கள் அளித்துள்ளனர். ஆனாலும் ஈழத்தமிழர்கள், வரலாறு கற்றுத் தந்திருக்கிற பாடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற அரசியலினைத் தாண்டி சிந்திக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை நம்பி எல்லா பணிகளையும் விட்டுவிடக் கூடாது. 

கடவுளோ அல்லது புவிசார் அரசியலில் நிகழும் மாற்றங்களோ எதுவும் தமிழர்களுக்கு உதவப் போவதில்லை. இனப்படுகொலை அரசினை எதிர்கொள்ள சர்வதேச அடிப்படையிலான புதிய வடிவிலான எதிர்ப்பு முறையினை கட்டியமைப்பதே தீர்வு என்பதை தமிழர்கள் உணர வேண்டும். புலம்பெயர் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் இதில் பெரிய பொறுப்பு இருக்கிறது. பாராளுமன்ற அரசியலுக்கு அவர்கள் அடிபணிந்து விடாமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தினை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியினைப் பெறவும் அவர்கள் தங்கள் பங்களிப்பினை செய்ய வேண்டும்.” இவ்வாறு தமிழ்நெட் இணையதளம் தெரிவித்துள்ளது.

 போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இனப்படுகொலை இன்னும் முடிந்திடவில்லை. ராஜபக்சேவின் ஆட்சி என்பது இன்னும் தமிழர்களின் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை நோக்கி தமிழர்கள் நகர்வது மட்டுமே தமிழர்களுக்கான தீர்வாக இருக்கும் என்பதே உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக உள்ளது.


இலங்கையின் தேர்தல் முறை எந்த முறையில் நடைபெறுகிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பதால் அதைப் பற்றிய அறிமுகத்தினை கீழே அளிக்கிறோம்.

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

இலங்கையின் தேர்தல் முறை என்பது இந்தியாவின் தேர்தல் முறையைப் போல் அல்லாமல் வேறுபட்ட, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையாகும். ’தேர்தல் மாவட்டங்கள்’ என்ற அடிப்படையில் தான் தேர்தல் நடக்கும். ’தேர்தல் மாவட்டங்கள்’ என்பவையும் ‘நிர்வாக மாவட்டங்கள்’ என்பவையும் வெவ்வேறானவை. (யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்ற இரண்டு நிர்வாக மாவட்டங்களையும், வன்னி தேர்தல் மாவட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கியது.)

 இலங்கையில் மொத்தம் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன. அதில் நான்கு தேர்தல் மாவட்டங்கள் தமிழர் பகுதிகளில் உள்ளன. மீதம் உள்ளவை சிங்களப் பகுதிகளில் உள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். 

தேர்தல் மாவட்டங்கள்

உதாரணமாக சொல்லவேண்டுமென்றால், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கு 7 உறுப்பினர் பதவிகள் உள்ளன. வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு 6 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதைப் போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு எண்ணிக்கை இருக்கும். 

தேர்தல் மாவட்டங்களின் வாரியாகத் தான் கட்சிகள் வேட்பாளர்களை நியமனம் செய்ய முடியும். ஒரு மாவட்டத்தில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் பதவி இருக்கிறதோ, அதைக் காட்டிலும் மூன்று வேட்பாளர்கள் அதிகமாக ஒவ்வொரு கட்சியிலிருந்தும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதாவது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கான உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை 7. எனவே ஒவ்வொரு கட்சியும் அதைவிட 3 பேர் அதிகமாக 10 வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 

ஒவ்வொரு வாக்காளரும் தாங்கள் விரும்பிய ஒரு கட்சியின் சின்னத்திற்கும், அவற்றால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் மூன்று பேருக்கும் வாக்களிக்க முடியும். கட்சியின் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அந்த மாவட்டத்தில் கட்சிகளின் பெரும்பான்மை முடிவு செய்யப்படும்.

கட்சிகள் அந்த மாவட்டத்தில் தாங்கள் பெற்றுள்ள மொத்த வாக்குகள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். 

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை உதாரணம்

ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டம் ஒன்றின் தேர்தலில் வாக்களிப்பு விபரங்கள் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம்-X
உறுப்பினர் தொகை – 7
அளிக்கப்பட்ட வாக்குகள் – 288,705
கட்சிபெற்ற வாக்குகள்வீதம்
கட்சி-A11174738.71%
கட்சி-B7656326,52%
கட்சி-C5553319.24%
கட்சி-D4212114.59%
சுயேச்சை-116110.56%
சுயேச்சை-211300.39%

மேலே காணப்படும் தேர்தல் முடிவுகளின்படி கட்சி A என்பது அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றிருப்பதால், இத் தேர்தல் மாவட்டத்துக்குரிய 7 இடங்களில் ஒரு இடம் முதலில் கட்சி-A க்கு வழங்கப்படும்.

மாவட்டத்தி மொத்த வாக்குகளில் 5%க்கும் குறைவான வாக்குகள் பெற்ற கட்சிகள் தகுதி இழக்கும். இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 5% இலும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் அவை உறுப்பினரைப் பெறும் தகுதியை இழக்கின்றன. அவை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கையிலிருந்து கழிக்கப்பட்டு விடும்.

அவ்விரு குழுக்களும் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளிலிருந்து கழிக்கப்படும்.

288,705 – 1,611 – 1,130 = 285,964 வாக்குகள்

தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை = 7, ஒரு உறுப்பினர் ஏற்கனவே கட்சி A இற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மீதி = 6. எனவே:

ஒரு உறுப்பினருக்குரிய வாக்குகள் = 285,964 / 6 = 47,661

கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒரு உறுப்பினருக்குரிய வாக்கினால் வகுக்க:

கட்சிவாக்குகள்ஈவுமிச்சம்
கட்சி-A111,747 / 47,661216,425
கட்சி-B76,563 / 47,661128,902
கட்சி-C55,533 / 47,66117,872
கட்சி-D42,121 / 47,661042,121

இதில் வரும் ஈவு எண்ணிக்கை அக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

இப்பொழுது கட்சி நிலைவரம்:

கட்சிபோனஸ்சுற்று1சுற்று2மொத்தம்
கட்சி-A123
கட்சி-B011
கட்சி-C001
கட்சி-D000

மொத்தம் 5 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 2 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இனி ஒவ்வொரு கட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும். கட்சி-D ஆகக்கூடிய மிச்சமாக 42,121 வாக்குகளையும், கட்சி-B அடுத்ததாக 28,902 வாக்குகளையும் கொண்டுள்ளன. இதனால் கட்சி-D க்கும், கட்சி-B க்கும் தலா ஒரு உறுப்பினர் கிடைக்கும்.

முடிவில் கட்சி நிலவரம்

கட்சிபோனஸ்சுற்று1சுற்று2மொத்தம்
கட்சி-A1203
கட்சி-B0112
கட்சி-C0101
கட்சி-D0011

இப்படித்தான் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைகளின் அடிப்படையில், வேட்பாளர்களில் யார் பாராளுமன்ற உறுப்பினர் என்பதை அக்கட்சி முடிவு செய்யும்.

தீர்வைத் தராத ஒற்றையாட்சி

இப்படித்தான் இலங்கையில் தேர்தல் நடக்கிறது. ஆனால் தமிழர்களுக்கான பிரநிதித்துவத்தினை இலங்கையின் ஒற்றை ஆட்சி நடைமுறையின் கீழ் இருந்து கொண்டு எப்படியாகினும் பெற்றுவிட முடியாது என்பதே கடந்த 72 ஆண்டுகால வரலாறாக இருக்கிறது. இலங்கையில் இத்தனை ஆண்டுகளில் நடந்த அத்தனை ஆட்சி மாற்றங்களும் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்திடவில்லை. தமிழர்கள் தனித்த தேசிய இனம் என்பதை அங்கீகரித்திடவும் இல்லை. இலங்கையின் அரசியல் சாசனம் என்பதே ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்த ஒன்று என்பதுதான் உண்மையாக இருக்கிறது. எனவே ஈழத் தமிழர்களுக்கான தீர்வு என்பது இலங்கைக்கு அரசியல் சாசனத்திற்கு வெளியேதான் இருக்கிறது. 

தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தனித்தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரி உலகத் தமிழர்கள் நகர்வதன் மூலம் மட்டுமே, எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களின் உரிமைகளையும், உயிரையும் பாதுகாத்திட முடியும் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *