இலங்கை ஐ.நா தீர்மானம்

ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் இந்தியா? தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். கொதிக்கும் அரசியல் கட்சிகள்

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் அவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நாளை செவ்வாய்கிழமை பேரவையில் வாக்கெடுப்பிற்கு வரப் போகிறது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா அத்தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களிப்பதாக உறுதி அளித்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை செயலர் ஜெயநாத் கொலம்பாகே தெரிவித்திருப்பது தமிழ்நாட்டில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. 

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 46-வது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மாண்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து தீர்மானத்தினை முன்வைக்கின்றன.

இதுவரை ஐ.நா தீர்மானங்களில் இந்தியாவின் நிலைப்பாடு

  • 2009-ம் ஆண்டு போருக்குப் பிறகு இதுவரையில் இலங்கை குறித்து ஏழு தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமைகள் அவையில் வந்திருக்கின்றன.
  •  அதில் 4 தீர்மானங்கள் மட்டும் வாக்கெடுப்பு என்பதை நோக்கி வந்தன. 
  • 2009-ம் ஆண்டு தமிழினப்படுகொலை செய்த இலங்கை அரசினை பாராட்டி மனித உரிமைகள் ஆணையத்தில் வாக்களித்தது இந்தியா.
  • 2012-ம் ஆண்டு இந்தியா இலங்கை மீதான தீர்மானத்தினை ஆதரித்து வாக்களித்தது. 2013-ம் ஆண்டும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.
  • 2014-ம் ஆண்டு தீர்மானத்தையும் ஆதரிக்கவும் இல்லாமல், எதிர்க்கவும் இல்லாமல், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அமைதி காத்தது. 
  • 2015-ம் ஆண்டு அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கை அரசும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு முன்வைத்ததால், வாக்கெடுப்பிற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அதன்பிறகு இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கும் மேல் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இலங்கை அரசு மீது தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. 

அதானியின் துறைமுகமும், இந்தியாவின் முடிவும்

சமீபத்தில் இலங்கைக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டதும், அதன் பிறகு சில காலத்தில் இலங்கையின் மேற்கு கடற்கரை முனையத்தில் அதானி குழுமத்திற்கு 85% சதவீத பங்குகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட துறைமுக ஒப்பந்தமும், இந்திய வெளியுறவுத் துறை இலங்கை அமைச்சரின் பயணமும் தான் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவெடுக்கும் பின்னணியில் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. 

 படிக்க: தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?

தமிழக தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து அமைதி காத்துவரும் இந்திய அரசு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தீர்மானத்தில் இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைத் தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. 

இலங்கை அதிபராக இருக்கக் கூடிய கோத்தபாய ராஜபக்சே ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளாக உள்ள 47 நாடுகளுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி ஆதரவு திரட்டி வருகிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோத்தபாய ராஜபக்சே நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். 

இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஏற்கனவே சீனா தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் வாக்கு முக்கிய நோக்குப் பொருளாய் மாறியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நேரத்தில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால், அது தேர்தலில் பாஜகவிற்கு பின்னடைவாக அமையக் கூடும் என்பதாலேயே இதுவரை இந்தியா தனது முடிவைப் பற்றி வாய்திறக்காமல் இருக்கிறது. 

மோடிக்கு எதிராக கொதிக்கும் தமிழக கட்சிகள்

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் மோடி அரசு இனப்படுகொலை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக கண்டனங்களை எழுப்பத் தொடங்கி விட்டன. 

திமுக

இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றபோது ஈழத்தமிழர்களின் மீதான அக்கறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கான எந்தவித அறிகுறியும் வெளியே வரவில்லை என்றும், தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினைக் கூட கேட்காமல் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க திட்டமிடுவது தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். 

மதிமுக

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

”மார்ச் 22 ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் விவாதத்திற்கு வரப்போகிறது. இத்தீர்மானம் முழுமையானதாகவோ, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கான வகையிலோ இல்லை. எனினும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பு ஆகும். இந்த அரைகுறைத் தீர்மானத்தைக்கூட இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்ற செய்திகள் தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள எட்டுக்கோடி தமிழர்களின் இதயக் குமுறலை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.” என்று எச்சரித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிடுள்ள அறிக்கையில்,

”பெரும்பாலான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க உள்ள நிலையில் நிச்சயமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அரசு அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலோ அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தாலோ அது முழுக்க முழுக்க தமிழர் விரோத நிலைப்பாடாகவே கருதப்படும். எனவே, இந்திய அரசு தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இந்தத் தீர்மானம் முழுமையான தீர்வளிக்குமென்றோ இனப்படுகொலைக்கு முழுமையான நீதியை வழங்குமென்றோ கூறமுடியாது என்றாலும், தொடர்ந்து இலங்கை அரசை சர்வதேசக் கண்காணிப்பில் வைத்திருக்கவும்;  ஈழத்தமிழர் அமைப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுத்த கோரிக்கையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை என்பதை நோக்கி நகர்த்துவதாகவும் இது நிச்சயம் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை செயலரின் கருத்து பற்றி குறிப்பிடாமல் கடிதம் எழுதியுள்ள பாமக

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தினை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்று, ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் அன்புமணி ராமதாஸ், இந்திய அரசு இலங்கையை ஆதரிப்பதாக உறுதியளித்திருப்பதாகக் கூறியுள்ள இலங்கை வெளியுறவுத் துறை செயலரின் கருத்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

வாய் திறக்காத அதிமுக

இலங்கை அரசு மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் இயற்றினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாக சொல்லும் அதிமுக சார்பில் இதுவரை இந்த விவகாரம் குறித்தும் எந்த கருத்தும் இல்லாமல் அமைதி காக்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இலங்கை மீதான தீர்மானத்தில் தங்கள் நிலைப்பாடு குறித்தோ, பாஜகவிற்கு தமிழ்நாடு சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுமா என்றோ இதுவரை வாய் திறக்கவில்லை. 

தற்போதைய சூழலைப் பொறுத்தவரை இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களிக்காது என்பதையே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாஜக-வுடன் கூட்டணியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி கூட பாஜக-விற்கு கண்டனம் எழுப்பவில்லை.

என்ன முடிவை எடுக்கும் இந்தியா?

இரண்டு முடிவுகளில் ஒன்றையே பாஜக எடுக்கக் கூடும் என்று தெரிகிறது.

  1. ஒன்று தீர்மானத்தை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பது. இதை பாஜக செய்யும்பட்சத்தில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
  1. ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து தமிழக மக்களின் கோபம் இன்னும் தணிந்திடவில்லை என்பதால், தமிழக சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, தேர்தலில் தோற்கக் கூடாது என்பதற்காக, இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஆக மொத்தத்தில் மேலே சொன்ன இரண்டு முடிவுகளில் எந்த முடிவினை இந்தியா எடுத்தாலும் அது தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு ஆதரவானதாகவே முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *