குருநானக்

சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?

குருநானக்கின் வைதீக பார்ப்பன எதிர்ப்பும், சீக்கியர்கள் மீதான இந்துத்துவாதிகளின் காழ்ப்புணர்வும்! குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு.

பாஜக அரசின் விவசாய சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சீக்கியர்கள் தனித்துவமான போராட்ட குணமுடையவர்கள் என்ற போக்கை மீண்டும் நிறுவியுள்ளனர். இந்த தருணத்தில் இன்று சீக்கியர்கள் கொண்டாடும்  குருநானக்கின் 551-வது பிறந்தநாளை மிக முக்கியமான ஒன்றாகக் கருதவேண்டியுள்ளது. 

சீக்கிய விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சேர்ந்தவர்கள் அப்போராட்டத்தை காலிஸ்தான் தீவிரவாதிகளின் சதி என்று பரப்பி வருகிறார்கள். சீக்கியர்களின் மீதான இந்துத்துவ அமைப்பினரின் இந்த எதிர்ப்பை விவசாய சட்டத்தை மையமாக வைத்து மட்டும் சுருக்கிவிட முடியாது. பாஜக-வின் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையான வைதீக பார்ப்பன முறையை சீக்கியர்கள் கடந்த 500 ஆண்டுகளாக தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.

இந்துத்துவமயப்பட்ட ஆளும் வர்க்கம் எப்போதும் சீக்கியர்கள் குறித்து ஒரு தற்காப்புத் தனத்துடன் இருப்பதற்கு, சீக்கிய மதத்தின் குருவான குருநானக்கின் போதனைகள் முக்கியக் காரணமாக இருப்பதனை மறுதலித்து விட முடியாது. அடிப்படையில் குருநானக் தீண்டாமையையும், சாதியப் படிநிலைகளையும் எதிர்த்தார். 

பூணூலோடு வர்ணாசிரமத்தை மறுத்த குருநானக்

சிறுவயதில் அவருக்கு பூணூல் அணிவதற்காக புரோகிதர் முன் அமரச் சொன்னபோது அவர், ”என்ன செய்கிறீர்கள்? இதனால் என்ன பயன்?” என்று கேட்டார். உடனே புரோகிதர் ”பூணூல் என்பது இந்து மதத்தின் அடிப்படை, அதைப் போடாத வரை ஒரு மனிதன் வெறும் சூத்திரன். அதைப் போட்டால் இந்த உலகில் பெருமையும், மறுவுலகில் மகிழ்ச்சியும் கிடைக்கும்” என்று கூறினார். இதைக் கேட்டவுடன் நானக் பின்வருமாறு ஒரு பாடலைப் பாடினார்.

கருணையே பஞ்சு, திருப்தியே நூல்,
சுயக்கட்டுப்பாடே முடிச்சு, உண்மையே முடிச்சு,
அதுவே ஆன்மாவுக்கான பூணூல்,
அது உங்களிடம் இருந்தால், ஒரு பிராமணரே
எனக்கு சூட்டுங்கள்.
அது உடையாது, அழுக்காகாது, எரியாது, 
காணாமல் போகாது,
நானக்கின் கழுத்தில் அந்த,
நூலை போட்டு ஆசீர்வதியுங்கள்.
நாலு காசுக்கு ஒரு பூணுலை வாங்கினீர்கள்,
ஒரு சதுரப் பலகையில் உட்கார்ந்தீர்கள்,
இந்துக்களின் குரு பிராமணரே என்று ஓதுகிறார்கள்.
மனிதன் சாகிறான், பூணுல் விழுகிறது,
அது இல்லாமல்தான் ஆன்மா பிரிகிறது.

இந்த வரிகள் வெறும் பூணூல் முறையை மட்டும் எதிர்க்கவில்லை. அந்த முறையை அடிப்படையாக உருவாக்கி வைத்திருக்கும் வர்ணாசிரமத்தை எதிர்க்கிறது. அவர் அனைத்துவிதமான பார்ப்பன சடங்குமுறையை எதிர்ததார். அது வெறும் வெற்றுச் சட்ங்கு, அதில் எந்த பலனும் இல்லை, இதனால் ஒருவன் மெய்யான ஞானத்தை எய்த முடியாது என்று உரைத்தார். இந்த பாட்டை அவர் ஒன்பது வயதில் பாடியதாக சீக்கியப்  பாரம்பரியம் கூறுகிறது. 

பெண்களுக்கு பூணூல் இல்லை,
உமது தூய்மையற்ற செயல்களுக்கு பூணூல் இல்லை,
கால்களுக்குப் பூணூல் இல்லை, கைகளுக்கு பூணூல் இல்லை,
நாவிற்கு பூணூல் இல்லை, 
கண்களுக்கும் காம உறுப்புக்கும் பூணூல் இல்லை, 
இதற்கெல்லாம் பூணூல்கள் இல்லாமல்,
பிராமணர்கள் கெட்டலைகிறார்,
கழுத்துக்கு மட்டும் முறுக்கிய பூணூல்,
பிறருக்கு அதை மாட்டுகிறார்,
திருமணத்திற்கு தட்சணை பெறுகிறார்,
ஒரு காகிதத்தை எடுக்கிறார்,
திருமணமான ஜோடியின் விதியை சொல்லுகிறார்
கேளுங்கள், பாருங்கள் ஓ மக்களே, இந்த வினோதத்தை 
குருட்டு அறிவு படைத்த மனிதனை
அறிவாளி என்கிறார்கள்.

வைதீக மதத்திற்கு எதிராக சடங்குகளற்ற எளிய மதத்தை உருவாக்க முனைந்தார்

பிராமணர்கள் மக்களை மூடர்களாக்கி வெற்று சடங்குகளைச் செய்து மக்களிடம் பணம் பறிக்கிறார்கள். அத்தோடு அவர்கள் ஊருக்குள் அறிவாளி என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று வெளிப்படையாக போதித்தார். வைதீக இந்து மதத்திற்கு எதிராக சடங்குகளற்ற ஒரு எளிய மதத்தை உருவாக்க முனைந்தார்.

உருவாக்க முற்பட்டார். 
ஒரே ஒரு கடவுள் உண்டு,
அவர் பெயர் சத்தியம்,
அவரே படைத்தவன், 
அவருக்கு பயம், பகைமை கிடையாது,
அவர் நித்தியவான், பிறப்பற்றவர்
சுயம்புவானவர், கருணையானவர்,
அந்த மெய்யானவர் துவக்கத்தில் இருந்தார், 
அந்த மெய்யானவர் ஆதிநாளில் இருந்தார்,
இருக்கிறார் இருப்பார்.

இந்து மதத்தின் பல தெய்வக் கோட்பாட்டிற்கு நேர் எதிரான ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். அத்தோடு கடவுளின் பெயர் சத்தியம் என்றார். அதாவது உண்மை. நானக் உண்மையை அறிவதுதான் கடவுள் நிலை என்று கூறினார். எனவே போலி மதவாதத்தன்மையை 500 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்த்தார்.

மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க முயன்றார்

ஒரு நாள் திடீரென்று குருநானக் பின்வருமாறு அறிவித்தார். ”இந்துவும் இல்லை, முசல்மான்களும் இல்லை” இதைக் கேட்டவர்கள் மிரண்டு போனார்கள். அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளரான தவுலத்கானிடம் புகார் செய்தார்கள். அவன் கூப்பிட்டு விட்டான். ”எனக்கு தவுலத் கானோடு என்ன வேலை?” என்று கூறிவிட்டு அவனைப் பார்க்கப் போகவில்லை.

தொடர்ந்து மக்களிடம் ”இந்துவும் இல்லை, முசல்மான்களும் இல்லை” என்று பிரச்சாரம் செய்தார். தவுலத்கானுக்கு புகார்மேல் புகார் போனது. மீண்டும் அவன் அழைப்பு விடுத்தான். இந்தமுறை குருநானக் போனார். அங்கிருந்த முஸ்லீம் மதகுரு காஜு கேட்டார், ”என்னவாயிற்று உங்களுக்கு ஏன் இந்துவும் இல்லை முசல்மான்களும் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்?” அதற்கு குருநானக் பின்வருமாறு ஒரு பாடலைப் பாடினார்.

அன்பே உங்களது மசூதியாய்,
உண்மையே உங்களது தொழுகை விரிப்பாய்,
நீதியே உங்களது குரானாய்,
அடக்கமே உங்களது சின்னத்தாய்,
பண்பாடே உங்களது நோன்பாய்,
இருந்தால் நீங்கள் முசல்மான்கள்.
நல்ல செயல் உங்களது காபா ஆகட்டும்,
சத்தியம் உங்களது ஆன்மிக வழிகாட்டியாகட்டம்,
நல்ல பணிகள் உங்களது தொழுகை ஆகட்டும்,
கடவுளின் விருப்பம் உங்களது 
தொழுகை மாலை ஆகட்டும்,
கடவுள் உங்களுக்கு கவுரவத்தை காப்பார்,
மற்றவர்களின் உரிமைகள் முசல்மான்கள் பன்றி போலவும்,
இந்துக்களுக்கு பசு போலவும் இருக்கட்டும்,
அவரவருக்கு வேண்டாததை உண்ணாமலிருந்தால்
இந்து, முசல்மான் குருமார்கள் உங்களைக் காப்பார்கள்.
வெறும் பேச்சால் நீங்கள் சொர்க்கம் போகமாட்டீர்கள்,
உண்மையான செயலே உங்களுக்கு முக்தி தரும்,
சாஸ்திர விரோதமான உணவில் சுவைசேர்த்தால் அது 
சாஸ்திரப்பூர்வமாகி விடாது.

குருநானக் வாழ்ந்த காலத்தில் இந்து முஸலீம்களுக்கு இடையில் இந்துகள் பன்றிக் கறி சாப்பிட கூடாது என்றும், இஸ்லாமியர்கள் பசுக்கறி சாப்பிடக்கூடாது என்றும் கருத்து முரண்பாடு இருந்தது. உணவின் பெயரால் ஏன் மோதிக்கொள்ள வேண்டும்? ஒருவரின் உரிமை இன்னொருவருக்கு புனிதமாகலாம், இருந்தும் அவரவர் உரிமைகளை அவரவர் கடைபிடிக்க வேண்டும். அதை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்துவும் இல்லை முசல்மானும் இல்லை என்று பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து மத சுதந்திரத்தையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்கப் போராடினார். 

நால்வர்ணத்தையும் தீண்டாமையையும் நிராகரித்தார்

ஒருமுறை ஊர் அதிகாரி ஒருவன் பெரிய விருந்து வைத்து, அதற்கு நான்கு வருணத்தைச் சேர்ந்த இந்துக்களையும் அழைத்தான். பிராமணர் ஒருவர் குருநானக்கிடம் சென்று நான்கு வர்ணத்தாரையும் அழைத்திருக்கிறார்கள். என்வே நீங்களும் வரலாம் என்று கூறியுள்ளார். அதைகேட்ட நானக் ”நான் எந்தவொரு வர்ணத்தையும் சார்ந்தவனல்ல. என்னை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று கூறினார். ஆத்திரமடைந்த பார்ப்பனர் ”நீர் மத விரோதி, ஏற்கனேவே நீ கீழ்சாதிக்காரர்களின் வீடுகளுக்கு சென்று சாபிட்டு தீட்டுபட்டுள்ளீர்” என்று கூறினார். அதற்கு நானக், ”முழு பூமியுமே எனக்குத் தீட்டுப்படாத இடம்தான். யார் சத்தியத்தை நம்புகிறாரோ அவர் தூய்மையானவரே” என்று கூறினார். அந்த காலகட்டத்தில் கடைபிடித்துவந்த தீண்டாமைக் கொள்கையை முழுமையாக நிராகரித்தார்.

மாமிசம் கொடுப்பவன் பாவி என்றால், அவன் கொடுக்கும் தட்சணையை வாங்குபவன் எப்படி புனிதனாக முடியும்?

ஒருமுறை குருநானக் குருசேத்திரத்தில் தங்கியிருந்தபோது அங்குள்ள  மக்கள் புலால் சமைத்து உண்டதற்காக பிராமணர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனைக் கேட்ட நானக் பிராமணர்களிடம் சென்று பின்வருமாறு கூறினார். 

மனிதன் சதையால் ஆனவனே,
அவன் சபையில் தான் இருக்கிறான்.
சதையிலிருந்து சதை பிறக்கிறது.
மனித உறவுகள் எல்லாமே சதையால் ஆனதே.
ஓ பிராமணரே, உனக்கு தெய்வீக ஞானம் இல்லை,
கடவுள் தியானமும் இல்லை,
ஆனாலும் உண்மை அறிவாளி என அழைத்துக் கொள்கிறீர்,
வெளியில் இருந்து கிடைக்கும் சதை மோசம் என்கிறீர்,
உன்னுடைய சொந்த சதை மட்டும் நல்லது.
அனைத்து மிருகங்களும் சதையிலிருந்தே வருகின்றன.
ஆன்மா தனது இருப்பை சதையில் தான் கொண்டுள்ளது.
புராணங்களில் சதை அனுமதிக்கப்பட்டுள்ளது.
முசல்மான்கள் புத்தகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நான்கு யுகங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யாகங்களிலும், திருவிழாக்களிலும்,
சதை கொண்டாடப்படுகிறது.
அங்கெல்லாம் சதை சம்பந்தப்பட்டுள்ளது.
பெண்கள், ஆண்கள், ராஜாக்கள், சக்கரவர்த்திகள்,
எல்லாம் சதையிலிருந்து வந்தவர்கள்
அவர்கள் எல்லாம் நரகத்திற்கு போவார்கள் என்றால்
அவர்கள் தரும் தானங்களை ஏற்காதீர்.
காரணம், கொடுப்பவர்கள் நரகத்திற்கு  போவார்கள் என்றும் 
வாங்குபவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்றும்
கூறுவது முறையற்றது 
உம்மையே நீர் அறியவில்லை 
ஊருக்கு உபதேசம் செய்கிறீர் !

அவர்களைநோக்கி இதுபோன்ற ஒரு தர்க்கத்தை முன்வைத்தார். மாமிசத்தை திண்பவன் பாவி என்றால், அதைத் திண்பவன் கொடுக்கும் தட்சணையை வாங்குபவன் மட்டும் எப்படி புனிதமானவர் ஆகமுடியும் என்று முனவைத்தார். 

திதி போன்ற சடங்குகளை நிராகரித்தார்

இதேபோன்று ஒருமுறை ஹரித்துவாரில் நானக் இருந்தபோது அங்குள்ள நதியில் பிராமணர்களை வைத்து சில சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அதில் சிலர் கிழக்கு நோக்கி எள்ளும் தண்ணீரும் இறைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த் நானக் அதே நதியில் இறங்கி மேற்கு நோக்கி தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தார். 

நானக்கைப் பார்த்த அவர்கள் ”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். நானக் அவர்களை நோக்கித் திரும்பி ”நீங்கள் என்ன செய்து கெண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். ”எங்கள் முன்னோர்களுக்கு தண்ணீர் இறைக்கிறோம். அது அவர்களின் தாகத்தை ஆற்றி சந்தோசப்படுத்தும்” என்று கூறினார்கள். 

அதற்கு நானக் ”நான் மேற்கே இருக்கும் எனது ஊரில் உள்ள நிலத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறேன்” என்றார். இந்த பதிலைக் கேட்ட அவர்கள் சிரித்துக்கொண்டு ”ஏங்கேயோ இருக்கிற ஊருக்கு இங்கிருந்து தண்ணீர் பாய்ச்சுகிறீர். அது எப்படிப் போய் சேரும்? நீர் எவ்வளவு பெரிய முட்டாள்?” என்று சிரித்தனர். உடனே நானக் அவர்களை நோக்கி ”எங்கேயோ இருக்கிற பிதுர்க்களின் லோகத்திற்கு இங்கிருந்து நீர் பாய்ச்சுகிறீர்களே போய்ச் சேருமா? நீங்கள் என்னைவிட பெரிய முட்டாள்கள்” என்றார்.

”கடவுளர்களுக்கு சில பிண்டங்கள்
முனனோர்களுக்கு சில பிண்டங்கள் வைக்கப்படுகின்றன.
அதைப் பிரைவதும், சாப்பிடுவதும் பிராமணரே.
கடவுளின் தானமாகிய பிண்டங்கள் 
ஒரு நாளும் தீருவதில்லை”

இறந்தவர்களுக்கு திதி போன்ற முடநம்பிக்கைகளை அவர் முழுமையாக நிராகரித்தார். அத்தோடு இதைவைத்து சடங்கு சம்பிரதாயம் செய்ய வேண்டும் அதற்கு தட்சணை என்ற பெயரில் பொருள்களையும் பணத்தையும் ஏழை எளிய மக்களிடம் பார்ப்பனர்கள் பிடுங்குவதையும் கண்டித்தார். அத்தோடு அதில் எந்த  அர்த்தமும் இல்லை என்று பெரும் பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தார். இதனால் குருநானக் வைதீக இந்து மதத்தினரால் எதிர்க்கப்பட்டார்.

சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக சமபந்தி உணவு முறை துவங்கினார்

சாதிய ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருந்த அந்த காலக்கட்டத்தில் சமபந்தி உணவு வழங்கும் முறையை முதன்முதலாக துவங்கியவர் குருநானக். பார்ப்பனர்கள் கடைபிடித்து வந்த தீட்டுப்படுதல் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாதி, மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து உணவு உண்பதற்கு லங்கார் என்னும் பொது சமையற்கூடம் துவங்கி பெரும் புரட்சி செய்தார். அந்த நடைமுறை இன்றுவரை சீக்கியர்களிடம் தொடர்கிறது. 

C:\Users\Admin\Desktop\Langar (1).jpg இந்தியத் துணைக்கண்டத்தில் வைதீக மேலாதிக்கத்தை எதிர்த்து உறுதியாக நிற்கும் சீக்கியர்களை, தொடர்ந்து தீவிரவாதிகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தோர் முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இந்துத்துவா சக்திகள் இதனை காலிஸ்தான் தீவிரவாதக் கூட்டத்தின் சதி என்று சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். 

கடந்த 500 ஆண்டுகளாக சாதி, மதம் கடந்து சமத்துவத்தை கடைபிடிக்க உதவும் லங்கார் என்றும் பொது சமையல் கூடத்தை நடத்துவதற்காக சீக்கிய விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பகுதியை லங்காருக்கு கொடையாக கொடுத்து வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் தங்களை லத்தியால் அடிக்கும் டில்லி காவல்துறையினருக்கும் உணவு கொடுக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *