கடந்த ஞாயிறன்று புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தார் இந்திய ஒன்றியப் பிரதமர் மோடி. புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க இந்திய குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததைக் கண்டித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணித்தன. திறப்பு விழாவின் போது ஆட்சியதிகாரத்திற்கான குறியீடாக செங்கோல் முன்னிறுத்தப்பட்டதும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் மோடி அரசால் திறக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களுக்கென்று 888 இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய பாராளுமன்றத்தின் மக்களவையில் 552 இருக்கைகள் மட்டுமே இருந்தன; பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆகும். ஆனால் புதிய பாராளுமன்றத்திலோ மக்களவை உறுப்பினர்களுக்கான இருக்கைகளின் எண்ணிக்கை 888 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கான இருக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதைக் கூர்ந்து பார்க்க வேண்டிய தேவையுள்ளது.
மாநில அரசுகளின் கூட்டாட்சியாக விளங்குகின்ற இந்திய பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்குள், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுவது கூட்டாட்சி அமைப்பு முறைக்குள் பாரதூரமான விளைவுகளை உருவாக்கும்.
பாராளுமன்ற இருக்கைகள் வரலாறு
முதல் இந்திய பாராளுமன்ற தேர்தலின் போது (1952ல்) பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 489 மட்டுமே ஆகும். இது பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 1971ல் பாராளுமன்ற மக்களை உறுப்பினர்களின் எண்ணிக்கை 512 ஆக மாறியது.
இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலையின் போது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2001 வரையும் 543-க்கு மிகாமல் இருக்க சட்டம் கொண்டுவரப்பட்டது.
543ஆக தீர்மானிக்கப்பட்டுவிட்ட மொத்த மக்களவை உறுப்பினர்களுக்கான எண்ணிக்கையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது, 1971ல் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் ஒவ்வொரு மாநிலமும் கொண்டிருந்த மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
உதாரணத்திற்கு 1971-ம் ஆண்டைய ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகை விகிதாசாரத்தில் (100%), தமிழ்நாட்டின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் பங்கு 7.51 சதவீதமாகும்; இதனடிப்படையில் 543 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 7.18 சதவீத இடங்களை அதாவது 39 இடங்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கினார்கள்.
இதனடிப்படையிலேயே மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர்களின் இடங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்குமுரிய இடங்கள் பிரித்தளிக்கப்பட்டு இன்றுவரையும் பின்பற்றப்பட்டு வருகிறது.
திருத்தப்பட்ட சட்டம்
543 மக்களவை உறுப்பினர்களுக்கு மேல் எண்ணிக்கை உயர்த்தக்கூடாது எனும் 1976ம் ஆண்டைய சட்டம் 2001ல் மீண்டும் திருத்தப்பட்டு 2026 வரை பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது என்பதாக மாற்றப்பட்டது; 2026ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படுகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை தொகுதிகளை மாற்றியமைக்கலாம் என்பதாக ஏற்கனவே இருந்த சட்டம் திருத்தப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் கால இடைவெளியின்படி, 2026க்கு பிறகாக 2031ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அதில் தெரியவரும் பல்வேறு மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படப் போவதற்கான அறிகுறியே, புதிய பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களுக்கான இருக்கைகளின் எண்ணிக்கை 888 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாகும்.
1971ம் ஆண்டின் மக்கள் தொகை பொது அளவீடாக பயன்படுத்தப்படுவது ஏன்?
இந்தியக் கூட்டாட்சி அரசமைப்பிற்குள் மாநிலமொன்றினுடைய மக்கள் தொகையை கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டிய அம்சங்களில், மக்கள் தொகை அளவீட்டிற்கான வரையறையாக (Threshold), 1971ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் எண்ணிக்கை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1971க்குப் பிறகு இந்திய அரசால் தீவிரமாக மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1975-76, அவசரநிலைக் காலத்தில் இந்திரா காந்தி கட்டாய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தார். பின்னர் கட்டாயம் என்பது தவிர்க்கப்பட்டாலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியதில் ஒவ்வொரு மாநிலத்திற்குமிடையே வித்தியாசம் இருந்தது. சில சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தின; சிலவற்றால் தங்களது மாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக கூடக் குறைய நிகழ்ந்த மாநிலங்களின் மக்கள் தொகை விகிதாச்சார மாற்றம் கூட்டாட்சி பிரதிநிதித்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்று கோரப்பட்டது.
இதனாலேயே மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் பரவலாக்கப்பட்டு மாநில அரசுகளால் தத்தமது மாநில மக்கள் தொகையை கட்டுப்படுத்தப்படுவதற்கு முன்னாலிருந்த மக்கள் தொகை கணக்கீட்டு அளவென்பதால் 1971ம் ஆண்டைய மக்கள் தொகை அளவீடு பொது அளவீடாக பயன்படுத்தப்படுகிறது.
நிதி ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்ட நிதிக் குறைப்பு
நிதி ஆணையத்திலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய நிதிப்பங்கீட்டு அளவை தீர்மானிப்பதில் மாநிலங்களின் மக்கள் தொகையும் மிக முக்கியமான அம்சமாக கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது. 13வது நிதி ஆணையம் வரையிலும் மாநிலங்களுக்கான நிதிப்பங்கீட்டிற்கு 1971ல் மாநிலங்களில் இருந்த மக்கள் தொகையளவே கணக்கிலெடுத்துக் கொள்ளபட்டது.
இது பின்னர் 14வது நிதி ஆணையத்தின் போது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை என்பதில் 1971ம் ஆண்டின் மக்கள் தொகை பகுதியளவாகவும், 2011ம் ஆண்டின் மக்கள் தொகையளவு மற்றொரு பகுதியளவாகவும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டது.
நடப்பிலிருக்கும் 15-வது நிதி ஆணையத்தில் 1971-ம் ஆண்டின் மக்கள் தொகையளவு முற்றிலுமாக நீக்கப்பட்டு, 2011-ம் ஆண்டின் மக்கள் தொகையளவு மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் 1970களுக்குப் பிறகு தங்களது மாநிலங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீடு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, 10வது நிதி ஆணையத்தின் காலத்தின் போது மாநிலங்களுக்கான மொத்த நிதிப் பங்கீட்டில் கேரளாவிற்கு 3.87 சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1971 மக்கள் தொகையளவோடு, 2011 மக்கள் தொகையளவும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்ட 14வது நிதி ஆணைய காலத்தில் கேரளாவிற்கான நிதிப் பங்கீட்டின் அளவு 2.5 சதவீதம் மட்டுமே. 1971ம் ஆண்டின் மக்கள் தொகையளவை கணக்கிலெடுத்துக் கொள்வது முற்றிலுமாக கைவிடப்பட்டு 2011-ம் ஆண்டின் மக்கள் தொகையளவு மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் காலத்தில், கேரளாவிற்கான நிதிப் பங்கீட்டின் அளவு 1.92 சதவீதம் மட்டுமே ஆகும்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன
ஒன்றிய அரசு முன்வைத்த மக்கள் தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையை ஏற்று தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் தங்களது மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தின. இதனால் இம்மாநிலங்களில் மக்கள் வளர்ச்சி விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு குறைந்து போனது.
மறுபுறமோ வட இந்திய மாநில அரசுகள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த போதிய முயற்சிகள் எடுக்கவில்லை. விளைவு, வட இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதன் காரணமாக 1971- 2011 கால இடைவெளியில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.2 ஆக இருக்கிற நிலையில், தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.75 மட்டுமே ஆகும். மறுபுறமோ உத்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகை 2.38 மடங்கு உயர்ந்திருக்கிறது; மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை 2.41 மடங்கு உயர்ந்திருக்கிறது; ராஜஸ்தானில் 2.66 மடங்கு உயர்ந்திருக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் விகிதாசார பங்களிப்பு 1971ல் 7.51 சதவீதமாக இருந்ததிலிருந்து, 2011ல் 5.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மறுபுறமோ 1971ல் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் உத்திர பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை விகிதாசாரம் முறையே 15.3 மற்றும் 5.47 சதவீதமாக இருந்தது; இது 2011ல் முறையே 16.5 மற்றும் 6 சதவீதமாக மாறியிருக்கிறது.
2011க்குப் பிறகு 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டியது கொரோனா பெருந்தொற்றால் நடத்தப்படாமல் போனது. 2031 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் காலத்தில் வடஇந்திய மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும், ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் அவைகளினுடைய விகிதாச்சாரமும் மேலும் குறையும்.
இந்நிலையில் 2031ம் ஆண்டிலுள்ள மாநில மக்கள் தொகையின் விகிதாசார அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெருமளவு குறைந்து போகும்.
கட்டுப்படுத்தப்படாத இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள் தொகை பிறப்பு விகிதம்
இப்பிரச்சனைப் பற்றி 2019-ம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியாவில் வளர்ந்து வரும் பிரிதிநிதித்துவப் பிரச்சனை (India’s Emerging Crisis of Representation)’ என்ற ஆய்வு விரிவாகப் பேசுகிறது. அந்த ஆய்வில், ‘தற்போது உத்திரப் பிரதேசத்திற்கு உள்ள 80 நாடாளுமன்ற மக்களைவை உறுப்பினர் இடங்கள் 143 ஆகவும், பீகாரின் தற்போதை 40 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 ஆகவும் உயரும்’ என மதிப்பிட்டிருக்கிறது.
மேலும்,’ ஹிந்தி பேசுகின்ற மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களாக உள்ள பீகார், சட்டீஸ்கர், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் ஆகிய 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தற்போது ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களின் இடங்களில் 42 சதவீத இடங்களைக் கொண்டிருக்கின்றன; 2026க்குப் பிறகான இம்மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகையளவின் படி இவைகளுக்கான பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்பட்டால், மேற்சொன்ன 10 மாநிலங்கள் மட்டும் மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 48 சதவீதத்தை இடங்களை கொண்டிருக்கும்’ என சுட்டிக்காட்டுகிறது.
குறைக்கப்படும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
மறுபுறமோ தமிழ்நாடு (பாண்டிச்சேரி தவிர்த்து), கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்கள் மொத்த பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் இடங்களில் 24 சதவீத பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கின்றன. தென்மாநிலங்களின் இந்த பிரிநிதித்துவ விகிதிச்சாரமானது 2026ம் ஆண்டுக்குப் பிறகான மக்கள் தொகை அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டால், 20 சதவீதமாகக் குறைந்து போகும்.
கேரளாவை மட்டுமே எடுத்துக் கொண்டோமானால் அதனது பாராளுமன்ற மக்களவை பிரிதிநிதித்துவ விகிதாசாரம் 3.7 சதவீதத்திலிருந்து, 2.4 சதவீதமாக குறைந்து போகும்.
2026க்குப் பிறகான மக்கள் தொகையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தென் மாநிலங்கள் மற்றும் ஹிந்தி பேசும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்தப் போகிறது.
தமிழ்நாடு – மத்தியப் பிரதேசம் ஒரு ஒப்பீடு
உதாரணமாக தென் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசம் ஆகியவைகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஏற்படப் போகும் தலைகீழ் மாற்றத்தைப் பற்றி பார்ப்போம். 1971ம் ஆண்டின் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை விகிதாசாரத்தின் (7.51%) அடிப்படையில் 39 இடங்கள் வழங்கப்பட்டது; மத்தியப் பிரதேசத்திற்கோ அதன் 5.47 சதவீத மக்கள் தொகை பங்கின் விகிதாசாரப்படி 29 இடங்கள் வழங்கப்பட்டது.
2011-ம் ஆண்டின் போது ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை விகிதாசாரம் முறையே 5.95 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக மாற்றமடைந்தது. சற்றேறக்குறைய சமமாகிவிட்ட இவைகளின் மக்கள் தொகை விகிதாசாரப்படி இவ்விரு மாநிலங்களுக்கும் 32 இடங்கள் வீதம் வழங்கப்பட வேண்டும். 2011-ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தாலே கூட தமிழ்நாடு 7 இடங்களை இழக்கிறது. மத்தியப் பிரதேசம் கூடுதலாக 3 இடங்களைப் பெறுகிறது. 2026-க்குப் பிறகான மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தோமானால் இந்த பாரதூரமான பிரதிநிதித்துவ இடைவெளி மேன்மேலும் அதிகரித்திருக்கும்.
தென் மாநிலங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட 10 இந்தி பேசும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து மீதமுள்ள வட கிழக்கு, கிழக்கு மேற்கு, மத்திய மாநிலங்கள் தற்போது 34 சதவீத பாராளுமன்ற மக்களவை பிரிதிநிதித்துவ விகிதாசாரத்தைக் கொண்டுள்ளன. இவைகளின் பிரதிநிதித்துவம் 2026-க்குப் பிறகான மக்கள் தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டால், 32 சதவீதமாகக் குறைந்து போகும்.
இந்தி பேசும் மாநிலங்களே பெரும்பான்மையை தீர்மானிக்கும்
இந்தி பேசும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்படப் போகும் பெரும்பான்மையான பாராளுமன்ற பிரதிநிதித்துவ நிலை ‘இந்தி’யக் கட்சிகளின் எதேச்சதிகாரத்திற்கே பயன்படும். குறிப்பாக இந்திய அரசமைப்பை பல்வேறு வழிகளிலும் மாற்றி, சீர்குலைத்து இந்து ராஷ்டிரமாக மாற்றி வரும் பாஜகவின் இந்துராஷ்டிர திட்டத்திற்கே பயன்படும்.
கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மேற்குறிப்பிட்ட 10 இந்தி பேசும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலுள்ள 225 இடங்களில், சற்றேறக்குறைய 80 சதவீத இடங்களை 178 மக்களவை தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. 2014 தேர்தலில் பாஜக கைப்பற்றிய மொத்த பாராளுமன்ற மக்களவைக்கான இடங்களில் 51 சதவீத இடங்கள் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய நான்கு இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே கைப்பற்றப்பட்ட இடங்களாகும்.
2026க்குப் பிறகான மக்கள் தொகையின்படி பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மாற்றி அமைக்கப்படும் போது இந்தி பேசும் மாநிலங்களில்/ யூனியன் பிரதேசங்களில் பெறக்கூடிய வெற்றியே ‘பாராளுமன்ற பெரும்பான்மைக்கு’ போதுமானதாக அமைந்துவிடக்கூடும். பாராளுமன்ற ஆட்சியதிகாரம் என்பது ஒர் ஒற்றை மொழியின் அதனது பண்பாட்டு, அரசியலை முன்னிறுத்துகின்ற ஒர் ஒற்றைக் கட்சியின் நிரந்தர எதேச்சதிகாரமாக மாறிவிடும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் பாஜகவிற்கு ஒரு இடத்தில் கூட வாய்ப்பளிக்காமல் மொத்தமாக பாஜகவை புறக்கணித்த போதும், அவை இன்று பாஜகவின் ஆட்யின் கீழ் இருக்கின்றன. இந்த நிலை எதிர்வரும் காலத்தில் மிக மோசமானதாக மாறும். தேர்தல் ஜனநாயக முறையில் ஒட்டுமொத்த தென் மாநிலங்களும் இணைந்து ஒரு குறிப்பிட்ட கட்சியைப் புறக்கணித்தாலும், அவைகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால், நடைமுறையில் அந்த புறக்கணிப்பு நிகழாமல் போய்விடும்.
பலவீனப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பங்கேற்பு
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களினுடைய தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவ விகிதமே பலவீனமாக உள்ளது. இது மேலும் பலவீனமாக்கப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவக் குரல் என்பது பொருட்படுத்தத் தேவையில்லாத புறக்கணிக்கத்தக்கதாக (Negligible) மாறிவிடும். பாராளுமன்ற ஜனநாயகம் என்பதை பெயரளவில் மட்டுமே வைத்துக் கொண்டு ஏக ‘இந்தி’ய அரசதிகார மன்றம் நிலைநிறுத்தப்படும். இதனையும் கூட்டாட்சி அமைப்பாகக் கூறி தமிழர்கள் உள்ளிட்ட மொழிவழித் தேசிய இனத்தினர் முதுகிலேறி சவாரி செய்யக்கூடியதாக இந்திய அரசியலமைப்பு முறை மாறிவிடும்.
நடைமுறையிலுள்ள இந்திய பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்குள் தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம். பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும் கூட 1962வரை தமிழ்நாட்டிற்கான பாராளுமன்ற மக்களவை இடங்கள் 41 ஆக இருந்தது. 1967ம் ஆண்டும் இந்த இடங்களில் இரண்டு இடங்கள் குறைக்கப்பட்டு இப்போது வரை 39 இடங்களே உள்ளது. இந்தியக் கூட்டாட்சி அரசமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த தமிழ்நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஏற்கனவே இரு இடங்கள் பறிக்கப்பட்டு, அதனது இந்தியக் கூட்டாட்சியுடனான பங்கேற்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா முன்வைத்த தென்மாநிலங்களின் கூட்டமைப்பு
இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குரிய கூட்டாட்சி பங்கேற்பின் நியாயமான பிரதிநிதித்துவம் உத்திரவாதப்படுத்தப்படுத்துதல் தேவையாக உள்ளது இதற்கேற்றாற் போல் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்படுதல் அவசியமாகும். இந்த பிரச்சனையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான காலத்திலே அண்ணா சுட்டிக்காட்டினார். அவரது திராவிட நாடு கோரிக்கையை- அதாவது தென்னிந்திய மொழிவழித் தேசியங்கள்/ மாநிலங்கள் அவைகளுக்குரிய தனித்த மொழி, பண்பாடு, பொருளாதாரம் ஆகிவைகளுடன் கூடிய தனித்த அரசாக இயங்கி, இந்திய கூட்டாட்சி அமைப்பிற்குள் தங்களது பங்கேற்பு பலத்திற்காக இணைந்த கூட்டமைப்பாக இயங்குவதான வடிமைப்பே அண்ணா முன்வைத்த திராவிட நாடு ஆகும்- மறுபரீசிலனை செய்வதற்குரிய காலம் முன்னைக் காட்டிலும் தற்போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
2026-க்குப் பிறகான மக்கள் தொகைக்கு ஏற்ப இந்திய பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மாற்றி அமைக்கப்படுமாயின், பாராளுமன்றத்தின் மூலம் இயற்றப்படும் சட்டங்கள், கொள்கை முடிவுகளை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்கிற முடிவெடுக்கும் அதிகாரம் தென்னிந்திய மாநிலங்கள் இணைந்த கூட்டமைப்புக்கு வழங்கப்படுதல் அவைகளுக்கான குறைந்தபட்ச தீர்வாக (குறைந்தபட்ச தீர்வு மட்டுமே, மொழிவழி தேசியங்களாக தங்களது அரசதிகாரத்திற்கான முழுமையான தீர்வு அல்ல) இருக்கும்! இதை நோக்கியான சமூக விவாதம் வளர்த்தெடுக்கப்படுதல் அவசியம்!
– பாலாஜி தியாகராஜன்