பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சமீபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்வருமாறு கூறியதாவது, கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை என்றும் மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசுகள் விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் அரசு 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு எரிபொருள் விலையை குறைத்தது என்றும் அதனால்தான் தங்களால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்றும் கூறினார். எண்ணெய் பத்திரங்களுக்கு கடந்த 7 ஆண்டுகளில் ரூ.70,195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வட்டி செலுத்தியபோதும் 1.30 லட்சம் கோடி நிலுவையில் உள்ளதாகக் கூறிய அமைச்சர், எண்ணெய் பத்திரங்களின் சுமை இல்லை என்றால் எரிபொருள் மீதான கலால் வரியை அரசு குறைத்திருக்கும் என்றும் சொன்னார்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியிருக்க பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்புக்கும் அதன் விலையை குறைக்க முடியாததற்கும் அவர் கூறிய காரணம் ஏற்புடையதா என ஒரு சில தரவுகளை வைத்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
பாஜக ஆட்சியில் எவ்வளவு விலை உயர்வு?
கடந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததும் தற்போதைய பாஜக தலைமையிலான ஆட்சி வந்த பின்பு மட்டும் ஒன்றிய அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.23.87 மற்றும் ரூ.28.87 வீதம் உயர்ந்திருக்கிறது.
பெட்ரோல், டீசல் வரி மூலம் பாஜக அரசு ஈட்டிய லாபம்
2020 – 21 ம் நிதியாண்டில் மட்டும் மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி மூலம் ரூ. 4,53,812 கோடி வரிவசூல் செய்துள்ளது. இதில் லாபம் மட்டும் 3.7 லட்சம் கோடி. அதேபோல் பாஜக ஆட்சியில் இருந்த கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல் வரிவசூல் மூலம் ரூ. 22,33,868 கோடி வரி வசூலும், அதில் ரூ.15.5 லட்சம் கோடி லாபமும் ஈட்டியுள்ளது. மொத்தமாக ரூ. 17.30 லட்சம் கோடி கடந்த ஆட்சியை விட அதிகமாக வரிவசூல் செய்துள்ளது.
ஒன்றிய அரசின் லாபம்-கடன் ஒப்பீடு
நிதியமைச்சர் கூறும் கடன் மற்றும் வட்டிக்கான தொகையானது அரசு ஈட்டிய வரிவசூல் வருவாயை ஒப்பிட்டு பார்க்கையில் மிக மிக சொற்ப தொகையாகவே தெரிகிறது.
அதாவது கடந்த 7 ஆண்டுகளில் கடனிற்கான வட்டி தொகையானது ரூ.70,195 கோடியும், அசல் ரூ.3500 கோடியும் இதுவரை கட்டியுள்ளனர். இவர்கள் சொல்வது போல 2026 வரை ரூ.37,000 கோடி வட்டி தொகையும் இன்னும் 1.30 லட்சம் கோடி நிலுவையும் உள்ளது. அரசு வரிவசூலில் ஈட்டிய லாபத் தொகையான ரூ.15.5 லட்சம் கோடியோடு இதுவரை கட்டிய 1 லட்சம் கோடியையும் இனி கட்டவிருக்கும் 1.30 லட்சம் கோடியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த மதிப்பு மிகவும் குறைவானதாகும்.
இன்னொரு வகையில் பார்த்தால் கடன் பத்திரத்தின் படி 2026 வரை கால அளவு இருப்பதால் அரசு பெரிய தொகையும் கட்ட வேண்டிய அவசியமும் நெருக்கடியும் இப்போதைக்கு இல்லை.
ஏன் இந்த கடன் பத்திரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது?
எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் பத்திரங்களானது 2007 மற்றும் 2008 ஆகிய வருடங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தைத் தொட்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடாது என்பதற்காக மன்மோகன் சிங் அரசு மானியம் அளிக்க முடிவு செய்தது. ஆனால் மானியம் அளிப்பதற்கான தொகை அரசிடம் போதிய அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பத்திரங்களாக வழங்க முடிவு செய்தது. அதன் காரணமாகவே 1.3 லட்சம் கோடி கடன் பத்திரங்களாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த கடன் பத்திரம் குறித்து இன்று தான் ஒன்றிய பாஜக அரசிற்கு தெரியவந்துள்ளதா?
இல்லை. 2008-லேயே எண்ணெய் நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டது. அது தெரிந்துதான் பாஜக-வின் முந்தைய பாராளுமன்ற தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர். தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு விலை குறைப்புக்காக ஏதாவது நடவடிக்கை எடுத்ததா என்றால் பெரிய அளவில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம். மாறாக கலால் வரி உயர்வு, செஸ் வரிவிதிப்பு, GST-க்குள் பெட்ரோல் டீசலைக் கொண்டு வராதது என விலை உயர்வுக்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கலால் வரியை பல மடங்கு உயர்த்திய பாஜக அரசு
கலால் வரி மட்டும் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு ரூ. 9.48 லிருந்து ரூ. 32. 98 வரை உயர்ந்துள்ளது. அதே போல டீசல் ரூ. 3.56 லிருந்து ரூ. 31 83 வரை உயர்ந்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால் டீசலுக்கான வரியானது பெட்ரோல் அளவிற்கு வந்தது தான். இது டீசலை நம்பி இருக்கும் பஸ், லாரி, ஆட்டோ என அன்றாட மக்களை பெருமளவில் பாதித்துள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருடகளின் விலை உயர்வுக்கும் இது ஒரு காரணமாகும்.
ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கலால் வரியின் ஒரு பகுதியைக் குறைப்பது போல் காட்டி, செஸ் எனப்படும் கூடுதல் வரி சேர்க்கப்பட்டது. இதன்மூலம் கலால் வரியின் ஒரு பகுதியாக மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் தொகை குறைந்துள்ளது. மேலும் செஸ் வரியும் நேரடியாக ஒன்றிய அரசுக்கேயே சேரும். அந்த தொகையிலிருந்தும் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு எனும் தொகையையும் ஒன்றிய அரசு சரியாக கொடுப்பதில்லை என்பதுதான் மாநிலங்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இது ஒருபுறமிருக்க எதற்காக பெட்ரோல் டீசலை பாவப்பட்ட பொருளாகக் கருதி GST வரிவிதிப்புக்குள் ஏன் அதனை கொண்டுவரவில்லை என இன்றுவரை ஒன்றிய பாஜக அரசிடம் பதிலில்லை. இவ்வாறு பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு வரியானது ஒன்றிய அரசிடம் குவிக்கப்படுகிறது. அதன் பலனை மாநில அரசுக்கு சரியாக பிரித்து வழங்காமலும் இன்னும் சொல்ல போனால் மாநில அரசுக்கு கொடுக்கவேண்டிய தொகையைக் கூட தர மறுத்து வருகிறது.
கடன் பத்திரங்கள் காங்கிரஸ் ஆட்சியில் மட்டும்தான் வழங்கப்பட்டதா?
அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கடன் பத்திரம் எங்களுக்கு தேவையற்ற சுமை என இன்னொரு கூற்றையும் கூறினார். அவர் சொல்லும்படி பார்த்தால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மட்டும்தான் நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டனவா என்று பார்போமேயானால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு கடன் பத்திரங்களை வழங்கியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் 57 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்திரக் கடனானது 2020-ல் 107 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஒன்றிய அரசின் வரி வருவாயும், மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட பங்கும்
இவ்வரி மாற்றம் மற்றும் வரி உயர்வானது மக்களுக்கு மட்டுமல்ல மாநிலங்களுக்கும் கூட மிகப்பெரிய வகையில் நட்டம் தான்.
2014 – 2015 ல் 99 ஆயிரம் கோடியாக இருந்த ஒன்றிய அரசின் வரி தொகையானது 2020 – 21 ல் 3.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே 2014 – 15ல் 1.3 லட்சம் கோடியாக இருந்த மாநில அரசின் வரி தொகையானது 2020 – 21ல் 2 லட்சம் கோடியைக் கூட எட்டவில்லை. ஒன்றிய அரசின் வரியானது 250% உயர்ந்துள்ளது. இப்படியிருக்க மாநில அரசின் வரி வருவாய் 50% கூட உயரவில்லை.
எனவே விலை உயர்வில் மாநில அரசு பங்கு கொள்ளவில்லை என்பதும் ஊர்ஜிதமாகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய காரணமானது உண்மை தரவுகளுக்கு முரணானதாகவே இருக்கிறது.