காஷ்மீருக்குள் கொரோனா நுழைவதற்கு முன்பாகவே அரச அடக்குமுறைகள் நுழைந்துவிட்டது. கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாகக்கு அமைதியை இழந்து நிற்கிறது. மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக கடுமையான பொதுமுடக்கத்தில் மூச்சுத்திணறி நிற்கிறது. உலகமே கொரோனாவால் செயலற்று நிற்பதற்கு 8 மாதத்திற்கு முன்பே, இந்த நெருக்கடி அவர்களை ஆட்கொண்டுவிட்டது. காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த சிறப்பு அதிகாரமான பிரிவு 370 மற்றும் 35-Aவை, நரேந்திர மோடி அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக மாநில அந்தஸ்த்தை கலைத்துவிட்டு ஜம்மு காஷ்மீரை மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரித்து, ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, அதிகாரத்தினூடாக காஷ்மீர் கைப்பற்றப்பட்டது. ஜனநாயகமும், கூட்டாட்சித் தத்துவமும் ஒரே நாளில் கேள்விக்குறியாக்கப்பட்டது. காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய தேதியும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியும் ஆகஸ்ட் 5 என்ற ஒரே தேதியாக அமைந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
ராணுவக் குவிப்பு
மக்களின் இயல்பு வாழ்க்கையின் மீது கடுமையான கண்காணிப்பு, ராணுவக் குவிப்பு போன்ற செயல்பாடுகள் காஷ்மீரிகளை மேலும் வெகு தூரத்திற்கு தள்ளிவிட்டது. கூடுதலாக 38,000 இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த செயல் பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. காஷ்மீரிகள் தங்களை இந்தியர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள, ஒரு சிறு நியாயத்தைக் கூட இல்லாமல் செய்கிறது பாஜக அரசு. ஏறத்தாழ 34,000 காஷ்மீரிகள் வீட்டு சிறையிலும், நேரடி காவலிலும் சிறைப்படுத்தப் பட்டுள்ளனர். பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் அந்த நிலப்பரப்பு இந்துத்துவா சித்தாந்தத்தால் நசுக்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக காஷ்மீர் மக்களுக்கு உணவு, மருத்துவம், தொலைதொடர்பு, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். 4G இணையதள வசதியும் இன்றுவரை இல்லாமல்தான் இருக்கிறது..
ஊடக சுதந்திரம் பறிப்பு
பத்திரிக்கைகள், சமூக வலைதளங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. பாஜக அரசுக்கு எதிராக வரும் செய்திகள் தடுக்கப்படுகின்றன. அதையும் மீறி செயல்பட நினைக்கும் ஊடகங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக பத்திரிக்கையாளர்களை UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அச்சுறுத்துகிறது. அவர்களின் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைக்கும் சிறு செய்திகளைக்கூட வெளிவிடமுடியாமல் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்குள் என்ன நடக்கிறது என்று உலக மக்களுக்கு தெரியப்படுத்த முடியாத அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலப்பரப்பாக காஷ்மீர் இருக்கிறது.
தடைபட்ட மருத்துவ சேவைகள்
நெருக்கடிக்கு பயந்து மருத்துவ சேவை தடைபட்டுள்ளது. செவிலியர்களும், மருத்துவர்களும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லமுடியவில்லை. அதேபோல் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு உள்ளாகிய காஷ்மீர் பள்ளத்தாக்கு விவரிக்க முடியாத பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமல் இருக்கும் மக்கள் அத்தியாவசிய தேவையான மருத்துவத்துக்கு செலவு செய்ய பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். பல மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் மருந்து சப்ளை தடைபட்டதால் போதிய மருந்துகள் இல்லாமல் மருந்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதிப்பு
கடந்த ஒரு ஆண்டாக பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. குழந்தைகளின் இயல்பான மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அய்வுகள் தெரிவிக்கின்றன. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தன் வயதுக்கு மீறிய கேள்விகளை கேட்கின்றனர் என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட மனநல மையங்கள் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் மனநலத்தை மேம்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் சரியான உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வீழ்ந்த காஷ்மீர் பொருளாதாரம்
ஊரடங்கு பிறப்பித்தது முதல் 5 மாதத்தில் காஷ்மீரின் உற்பத்தித் துறை மட்டும் ஏறத்தாழ 17,878 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது. அதேபோல் 4,97,000 பேர் வேலையிழந்துள்ளனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகள் விவசாயம், தோட்டக்கலை, சுற்றுலா, கட்டுமானம், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, தெலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, ரியல் எஸ்ட்டேட் மற்றும் சில்லறை வணிகம் ஆகியவை.
காஷ்மீரின் GDP-ல் 10 சதவீதமானது பழங்களின் உற்பத்தியை உள்ளடக்கியது. பேக்குவரத்துத் தடையால் அத்துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அதேபோல் GDP-ல் 8% சதவீதம் சுற்றுலாத் துறையை நம்பியுள்ளது. அது ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. எனவே காஷ்மீர் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதிலிருந்து மீண்டு வருவது மக்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
அரசியல் பிரதிநிதிகளற்ற மக்களாய் காஷ்மீரிகள்
காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் பிரிவு 370 மற்றும் 35-Aவை ரத்து செய்த இந்திய அரசின் உத்தரவினை திரும்பப் பெறக்கோரி உச்சநீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதித்துறையின் அமைதியும் காஷ்மீரிகளை கையறு நிலைக்கு தள்ளியுள்ளது. தேர்தல் ஜனநாயத்தினூடாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தனது அரசியல் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான குரல் இல்லாமல் தவிக்கிறது காஷ்மீர். முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், சமூக தலைவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள் என 400-க்கும் அதிகமானவர்கள் தடுப்புக் காவலில் உள்ளனர். தனது அரசியல் உரிமையை மீட்டெடுக்கவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருக்கிறது காஷ்மீர்.