பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு 3 – Madras Radicals
“சென்ற பதிமூன்று ஆண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது என்பதே என் குற்றச்சாட்டு. மாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக்கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப்போல் விரைந்து மாறி வருகின்றன. அவை இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் விரக்தியடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன். நமது அரசியல் சட்டம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும். மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும். இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கைகளாகும்”
மேலே குறிப்பிடப்பட்டவை ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை ஒதுக்கீடு, கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மின்சார சட்ட மசோதா, விவசாய அவசர சட்டம், நீர்வளத்துறை விதிகள் திருத்தம் போன்ற மாநிலங்களின் உரிமை பறிப்பு தொடர்பாக கொரோனா காலத்தையொட்டி மாநில அரசுகளால் முன் வைக்கப்பட்ட வாதமல்ல.
இன்று மாநிலங்கள் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்ற கல்வித்துறை தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரங்களற்று இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணமாக திகழ்கின்ற 1975-அவசரநிலை காலத்தில் கல்வித்துறை இந்திய ஒன்றிய அரசால் பொதுப்பட்டியலுக்கு பறித்துக்கொள்ளப்பட்ட காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட வாதமல்ல.
13 ஆண்டுகளிலேயே ஒன்றிய அரசுடன் முரண்பட்ட தமிழ்நாடு
இவை, இந்திய ஒன்றிய அரசியலமைப்பு செயல்பாட்டுக்கு வந்த பதிமூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே, இந்திய பாராளுமன்றத்தில் ‘ஒன்றிய- மாநில அரசுகளின் உறவு’ குறித்து அறிஞர் அண்ணா ஆற்றிய உரையாகும்.
அந்த பதிமூன்று ஆண்டுகளுக்குள்ளாக (மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்படாத, பிரிக்கப்பட்ட பின்னரான) தமிழ்நாடு இந்தி திணிப்பு, தட்ச சீலக் கொள்கை, எல்லை மீட்பு போராட்டம் போன்ற அடிப்படையான ‘உரிமைகளை நிலைநாட்டுதல்’ என்றளவிலே இந்திய ஒன்றிய அரசோடு முரண்பட்டது. ‘உரிமை பறிப்பு’ என எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டின் (அன்றைய மெட்ராஸ் பிரெசிடென்சி) மருத்துவ இட ஒதுக்கீட்டு பறிப்புக்கு எதிராக இந்திய ஒன்றிய அரசுடன் முரண்பட்டது; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத் திருத்தத்தை உருவாக்கியது.
மேற்கோள் காட்டப்பட்டுள்ள உரையை அண்ணா நிகழ்த்துகின்ற 1963-ம் ஆண்டு காலக்கட்டத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கிற காவிரிப் பிரச்சனை கூட இந்திய ஒன்றிய அரசியலமைப்புக்குள் உருவாகவில்லை.
மாநில உரிமைகளின் போதாக் குறைகள்
மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு அதன்பிறகு பறிக்கப்பட்ட அதிகாரங்கள், உரிமைகள் பற்றியல்ல அண்ணா பேசியவை. ஒன்றிய கூட்டாட்சிக்கு உட்பட்ட மாநிலங்கள் ‘சமூக வளர்ச்சித் தேவைக்கு’ அடிப்படையாக கொண்டிருக்க வேண்டிய அதிகாரங்கள், உரிமைகள் பற்றியே அவர் பேசியது; ஒன்றிய கூட்டாட்சிக்கு உட்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மற்றும் உரிமைகளின் போதாக்குறையை சுட்டிக்காட்டிப் பேசினார்.
மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களின், தேசிய இனங்களின் சமூக வளர்ச்சிக்குத் தேவையான போதிய அதிகாரங்களற்று, இந்திய ஒன்றியத்துக்குள் ‘மாநிலங்கள் சுங்கத் தொகை வசூலிக்கக்கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப் போல் விரைந்து மாறி வருகின்றன’ என அண்ணா அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார்.
அண்ணா உரைக்குப் பிறகான 57 ஆண்டுகளில் கொரோனா காலம் எதை உணர்த்துகிறது?
மாநிலங்களின் நிலை குறித்து அவர் பதிவு செய்ததற்குப் பிறகான இந்த 57 ஆண்டுகால சூழலில், மாநிலங்கள் சுங்கத் தொகை வசூலிக்கும் நிலையில் கூட இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நகராட்சிகளின் மீதுள்ள அதிகாரங்களும் மாநிலங்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இக்கொரோனா காலத்தில் ஒன்றிய “..கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் விரக்தியடையச் செய்துள்ளது”.
கொரோனா காலம், ‘மக்களுக்கு எல்லாமும் செய்கிற உயர் அதிகாரத்தினன் தானே’ என்கின்ற இந்திய ஒன்றிய அரசின் ‘அதிகார ஒப்பனையை’ களைத்துப் போட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக செயல்பாட்டளவில் மாநில அரசுகள் மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருக்கிற நிலையில், மாநிலங்கள் செயல்படுவதற்குரிய அதிகாரங்களை, வளங்களை ஒன்றிய அரசு தன்னிடம் குவித்து வைத்துக் கொண்டு, மாநில அரசுகளின் சமூகப் பணிக்கு தடையாக இருந்து கொண்டு இருக்கிறது.
பெருந்தொற்று அவசர காலத்தில் உச்ச அதிகாரத்தினன் என்று பறைசாற்றிக் கொண்டுள்ள ஒன்றிய அரசு, கூடுதலாக நிதி கொடுப்பதற்குப் பதிலாக, பறித்துக் கொண்ட நிதியைக் கூட தேவைப்படும் நேரத்தில் கொடுக்க மறுக்கிறது. ஒர் அரசாக மக்களிடையே மாநில அரசுகளே யதார்த்தத்தில் செயல்படும் முடியுமென்பதை கொரோனா காலம் உணர்த்தியுள்ள போதும் கூட, செயல்பாட்டு அதிகாரமென்ற அளவில் “அவை இருக்கும் இடம் தெரியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.” எனவே, “அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன.” மாநில தன்னாட்சி (சுயாட்சி) வாதம் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
விரிவடைந்த மாநில சுயாட்சி வாதம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய அரசியலமைப்பு உருவான காலந்தொட்டே, சற்றேறக்குறைய மாநில சுயாட்சி வாதமும் உருவாகிவிட்டது. தேசியம், தேசிய இனம் குறித்த முழு அரசியல் பரிமாணம் எட்டிடாத அன்றைய சூழலில் தனித் தமிழ்நாடு என்றும், திராவிட நாடு என்றும் ‘இந்திய ஒற்றை அதிகார மையத்திற்கு எதிரான’ போர்க் குரல்கள் எழுப்பப்பட்டன. அந்த வகையில் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகான 2 ஆண்டுகளில் அண்ணாவின் தலைமையில் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் ‘மாநில சுயாட்சி’ வாதத்தை முன் வைத்தது.
நடைமுறைக்கு வந்துவிட்ட இந்திய ஒன்றிய கூட்டாட்சிக்கு உட்பட்டு, டெல்லியை மையப்படுத்திய ஒற்றை அதிகாரமைய வாதத்திற்கு எதிராக தமிழ்நாட்டின் தேசிய இன உரிமைகளை நிலைநிறுத்த ‘மாநில சுயாட்சி’ என்பதனை அண்ணா முழங்கினார். அரசியல் அதிகார தளத்தில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் வழியாகவும், தமிழ்நாடு மாநில அரசின் தலைமையாகவும், இந்திய ஒன்றிய அதிகார மையத்தோடு தமிழ்நாட்டிற்கான அதிகாரங்களைக் குறித்து வாதிட்டார்.
“அன்புத் தம்பி! பதவிப் பித்து பிடித்து திரிபவனல்ல நான். வெற்றுத் தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மேன்மேலும் அதிகாரங்களை குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை”
என தன் தலைமையிலான அரசியல் அமைப்பின் உறுப்பினர்களான தம்பிகளிடையே, இந்திய ஒற்றை மையவாதத்தை குறித்து வருந்துகிறார்; வருந்தி,
“… கூட்டாட்சி தத்துவத்தை மக்களுக்கு கற்றுத்தர வேண்டும். கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது இன்றைய அரசியல் சட்டம் என்பதை, திமுக ஆட்சியில் பொறுப்பிலிருப்பதன் மூலமாக, சிந்திக்கும் ஆற்றல் படைத்த மக்கள் கவனத்திற்கு கொண்டு வர முடியுமெனில், உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்கு செலுத்திய உரிய பங்காகும்.”
என மக்களிடையே மாநில சுயாட்சி குறித்து பணியாற்றுவதே நமது பணி என்றார்.
ஆய்வுகளாக வெளிவர ஆரம்பித்த மாநில சுயாட்சி கொள்கை
மேடைப் பேச்சுகளின் மூலமாக மக்களிடையையேயும், தன் தம்பிகளை ஊக்கப்படுத்தி ஆய்வுகளாக தமிழ் அறிவுசீவி தரப்பினரிடையேயும் மாநில சுயாட்சி கொள்கையைக் கொண்டு சேர்த்தார். அண்ணாவின் ‘தம்பிகளான’ எஸ்.ஜே.சாதிக் பாட்சா ‘மாநில சுயாட்சி ஏன்?’ என்ற நூலையும், கு.ச.ஆனந்தன் ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற ஆய்வு நூலையும் தமிழ் அறிவுலகத்திற்கு ஆக்கித் தந்தனர்.
ராஜமன்னார் குழு உருவாக்கம்
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, திமுகவினுடைய மாநில சுயாட்சி கொள்கையினை அக்கட்சி தலைமையிலான ஆட்சி பி.வி.ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய்ந்து, கூட்டாட்சியை வலுப்படுத்தும் பரிந்துரைகளை முன்வைத்தது.
கேள்விக்குறியாகியிருக்கும் தமிழ்நாட்டின் உரிமைகள்
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகார போதாமையை சுட்டிக்காட்டி, மாநிலங்களுக்கான கூடுதல் அதிகாரங்களைக் கேட்ட அண்ணாவுக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில், தமிழ்நாடு தான் கொண்டிருந்த குறைந்தபட்ச உரிமைகளையும், அதிகாரங்களையும் இழந்து நிற்கிறது.
நீட் தேர்வுக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டமன்றம் நிலைப்பாடு எடுத்துவிட்ட பின்னும், இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மேல் திணிப்பதை அதனால் தடுக்க இயலவில்லை. சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, சட்டம் உருவாக்கிய பின்னரும் தமிழ்நாடு சட்டமன்றத்தால், தன் தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டை நடத்த இயலவில்லை; தமிழ்நாட்டு மக்கள் வீதிக்கு வந்த பின்னரே இந்திய ஒன்றிய அரசு இணங்கிப் போகிறது.
இந்திய ஒன்றிய அரசமைப்புக்கு முன்னர் தமிழ்நாடு கொண்டிருந்த காவிரி உரிமையை இந்திய ஒன்றிய அரசு கொஞ்சம், கொஞ்சமாக பறித்து கொண்டுவிட்டது. பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்யும் சிறைத்துறை நிர்வாகம் தொடர்பான தமிழ்நாடு அரசின் உரிமையில் கூட ஒன்றிய அரசு தலையிடுகிறது. இன்றும் கூட நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் தான் தமிழ்நாடு அரசின் மொழியுரிமை இருக்கிறது.
அதிகாரம் இழந்த தமிழ்நாடு மாநில அரசு
அடிப்படை அதிகாரங்கள், உரிமைகள் மட்டுமன்றி வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டு மக்கள் முன்னிறுத்துகின்ற கோரிக்கை முழக்கங்கங்களைக் கூட தமிழ்நாட்டு அரசினால் நிறைவேற்றித்தர இயலுவதில்லை. ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களுக்கு குறிப்பிட்ட பகுதி மக்களிடையே எதிர்ப்பு உருவாகி அவை அரசியல் அமைப்புகளின், கட்சிகளின் கோரிக்கை முழக்கங்களாக்கப்பட்டு, தமிழ்நாட்டினுடைய பரந்துபட்ட நிலைப்பாடாக மாற்றமடைந்து, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி அதற்கான அரசு அங்கீகாரம் கொடுக்கும் நிலையேற்பட்டால் கூட, ஒர் அரசாக தமிழ்நாடு அரசினால் குறிப்பிட்ட விடயத்தை நிறைவேற்ற முடியவில்லை.
ஒர் அரசாக தமிழ்நாடு மக்களுடன் நேரடித் தொடர்பிலுள்ள தமிழ்நாடு அரசு, ஒரு அரசின் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை. ஜி.எஸ்.டி வரிமுறை மாநில அரசுகளை, தமிழ்நாடு அரசினை செல்லாக்காசாக்கியுள்ளது. தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழலில் பிரதான முரணாக உள்ள தமிழ்நாடு அரசின் உரிமைகளைப் பறிக்கும் இந்திய ஒன்றிய அரசின், எதேச்சதிகாரத்திற்கு தீர்வாக அண்ணா முன் வைத்த மாநில சுயாட்சி இருக்கிறது.
1963-ல் இந்திய ஒன்றிய பாராளுமன்ற மக்களவையில் அண்னா குறிப்பிட்டதைப் போல்,“நமது அரசியல் சட்டம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும். மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும். இதனை மத்திய அரசு உணர வேண்டும்”.
அரசியலமைப்பு சட்டம் அண்ணாவின் பார்வையிலிருந்து மாநில அதிகாரங்களுக்கான முக்கியத்துவத்தை தரும் வகையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டுமே தவிர ஆர்.எஸ்.எஸ்-ன் பார்வையில் அல்ல.