இந்தியா கொரோனா

2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமி

இந்த கட்டுரை எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளரான மீனா கந்தசாமி அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Wire இணையதளத்தில் வெளிவந்ததன் மொழியாக்கம் ஆகும்.

பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக ஆனந்த் டெல்டும்ப்டே கைது செய்யப்படுவதற்கு முன்பாக சென்ற ஆண்டு ஏப்ரல் 14,2020 ஆம் தேதி அவருடன் உரையாடினேன். அப்போது அவரை சமாதானப்படுத்தும் விதமாக நரேந்திர மோடியின் ஆட்சியில் நீதியற்ற தன்மையை குறிக்கும் விதமாக “இவர்கள் அரசியல் சாசனத்தை அழித்துவிட்டார்கள்” என தெரிவித்தேன். அதற்கு அவர் “இல்லை அவர்கள் இந்தியாவையே அழித்துவிட்டார்கள்” என மறுமொழி கூறினார்.

தற்போது இந்தியா சந்தித்து வரும் பேரழிவிற்கு கொரோனா இரண்டாவது அலையை தடுப்பதற்கான எந்தவித முன்னேற்பாடும் செய்யாத மோடி அரசே காரணமேன உலகெங்கிலும் பேசப்படுவதும், மோடி ஆட்சியின் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள கோபங்களும் வெறும் மேம்போக்கானவை அல்ல. இந்த அரசாங்கம் இந்திய தேசியத்தின் அழிவை நோக்கியே வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பொது சுகாதாரம்

ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி நிரலை (கார்ப்பரேட் இந்து மேலாதிக்க அரசை) நிர்மாணிக்க நாட்டை மறு கட்டமைப்பு செய்வதில் காட்டி வரும் அக்கறையைத் தொடர்ந்து, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வேண்டுமென்றே அலட்சியப் போக்குடன் அழித்து சீர்கேடாக்கி நோய்த் தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்ததோடு ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்கும் காரணமாகவும் அமைந்தது மோடி அரசு.

கடந்த ஆண்டு வெளிப்படைத் தன்மை இல்லாத PM Cares நிதிக் கையாடல் ஆகியவை பற்றி எந்த வித கவலையும் இல்லாமல் நரேந்திர மோடி அரசு பெறுந்தொற்று காலத்தில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடிய பெண்கள் மற்றும் முஸ்லிம் செயற்பாட்டாளர்களை தேடித்தேடி கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியது. இந்த பெருந்தொற்று காலத்திலும் லாப நோக்கில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளின் கைகளில் மருத்துவக் கட்டமைப்பினை கையளித்த மோடி மற்றும் அமித்ஷா இருவரும், தங்களின் கனவுத் திட்டமான ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே அனைத்து மாநிலங்களிலும் பிஜேபி அரசு அமைவதற்கான பணிகளை இந்நேரத்தில் துரிதமாக செய்தது.

மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு

கடந்த ஏழு ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவில் 9 இடங்களில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சபையைக் கலைத்து புறவாசல் வழியாக ஆட்சி அதிகாரத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு தழுவிய லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னதாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் குதிரை பேரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தன்வசம் ஆக்கிக் கொண்டபின் காங்கிரஸ் ஆட்சியை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடித்து பின்னர் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஜனநாயகமற்ற செயல்பாடுகளில் பல மாதங்களை செலவு செய்த இதே பாஜக அரசு வெறும் நான்கு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டு கடந்த ஆண்டு நாட்டை முடக்கிப் போட்டது. இதனால் ஒரு மாநிலத்திலிருந்து வெளியேறி பிறிதொரு மாநிலத்தில் வேலை செய்து வந்த லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேர்ந்த கொடுமை அரங்கேறியது.

இது மக்களின் உயிரை துச்சமாகக் கருதி அவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே சுருக்கிப் பார்க்கும் பாஜகவின் அதிகாரப் பரவல் பசியானது சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சட்டசபை உறுப்பினர் கூட கொண்டிராத பாஜக கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து ஆட்சியைக் கவிழ்த்தது. அங்கே தேர்தல் நடைபெற இரண்டு மாதங்களே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் மீதான தாக்குதல்

இதுமட்டுமின்றி கடந்த செப்டம்பர் 2020-ல் மோடி அரசு நாடாளுமன்றத்தில் அமல்படுத்திய மூன்று விவசாய சட்டங்கள், இந்திய அரசியல் சாசனத்தைக் கிழித்தெறிந்ததோடு மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் விவசாயம் தொடர்பான அதிகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளை அழித்து கார்ப்பரேட் விவசாயத்திற்கு வழிகோலும் என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் தனியார் உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளை ஊக்குவித்து அரசின் இந்திய உணவுக் கழகத்தை (food coperation of India) வலுவிழக்கச் செய்யபடும் முயற்சிகளினால் ஏழை, எளிய மக்கள் தற்போது பெரிய அளவில் பயன் பெற்று வரும் நியாயவிலைக் கடைகளுக்கு முதுகெலும்பாக செயல்ப்பட்டு வரும் அரசின் இது போன்ற கட்டுமானங்களை பலவீனப்படுத்தும் மூன்று விவசாய சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து உணவுப் பாதுகாப்பு சங்கிலியை கேள்விக்குறியாக்கி விடும் என தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு எதிராக மோடி அரசு தடைகள், கண்ணீர்புகை குண்டு வீச்சு, வன்முறை, கைது நடவடிக்கைகள் மற்றும் தவறான பிரச்சாரங்கள், டாக்டர்களை தடுத்து நிறுத்துவதற்காக சாலைகளில் பள்ளம் தோன்டியது, மின்சாரம் மற்றும் தண்ணீரை பீச்சி அடிடித்ததோடு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்குக் கூட அனுமதிக்காமல் ராணுவ வீரர்களால் முற்றுகையிடப்பட்டது. மேலும் இந்த போராட்டத்தைக் குறித்து ஆளும் கட்சி சார்புடையவர்கள் தேசத்திற்கு எதிரான போராட்டங்கள் எனவும் பிரிவினைவாதத்திற்கான போராட்டம் எனவும் முத்திரை குத்தியதோடு இதில் சர்வதேச நாட்டின் சதி இருப்பதாக புரளிகளை கிளப்பியது.

உலகளாவிய பசி குறியீட்டில் (Global Hunger Index) 107 நாடுகளில் 94வது இடத்தைப் பிடித்துள்ள ஒரு நாடு, உலக அளவில் குழந்தைகளுக்குத் தேவையான போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தினால் போதிய வளர்ச்சி பெறாத குழந்தைகள் அதிகமுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்த பெருந்தோற்று காரணமாக மந்த நிலையை எதிர் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாட்டில் இதுபோன்ற கார்ப்பரேட்டுகலுக்கு சாதகமான விவசாய சட்ட திட்டங்களை உருவாக்குவது எழைகளின் உணவுப் பாதுகாப்பை பேரழிவுக்கே இட்டுச் செல்லும். மோடி அரசாங்கத்தின் ஆணவமும் பிடிவாதமும் எந்த ஒருவருடனும் ஒப்பிடமுடியாத ஒன்று. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாததோடு பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிக்கு மையமாகத் திகழும் விவசாயத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் தனது பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இதுபோன்ற நவ தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்துவதில் மட்டுமே அக்கறைகொண்டு செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம்

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போது நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச் சட்டங்களை வெறும் 4 சட்டங்களுக்குள் சுருக்கி வலிமை இழக்கச் செய்த சட்ட திட்டங்கள் எதுவும் தொழிலாளர் அமைப்புகளில் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டதல்ல. இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் வெறும் மூன்று மணிநேரத்திற்கு குறைவாக வாய்மொழியாகவே விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இப்புதிய சட்டங்கள் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க மறுப்பது, வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் நாட்டின் 75% மேற்பட்ட தொழிலாளர்களை எளிதாக வேலையில் இருந்து தூக்கி எறிய வழி செய்வது போன்ற சரத்துகளை உள்ளடக்கியது. இதைக் கண்டிக்கும் விதமாக கடந்த நவம்பர் 26, 2020 அன்று நாட்டின் முன்னணி 10 தொழிற்சங்கங்கள் அணியமாகி இச்சட்டத்தினை மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோத சட்டங்களாக குற்றம்சாட்டி இந்த சட்டத்திற்கு எதிராக போராட வருமாறு அழைப்பு விடுத்தனர். இதன் காரணமாக வரலாறு காணாத அளவில் 250 மில்லியன் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். லாக் டவுன் நடவடிக்கைகளுக்கு பின் நாட்டின் பொருளாதாரம் 24% அளவுக்கு குறைந்து மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு நாட்டில், பெறுந்தொற்று பரவுவதற்கு முன்பாகவே 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மோசமான நிலைமையில் இருக்கும் ஒரு நாட்டில் இது போன்ற சட்ட திட்டங்கள் வரக்கூடாத ஒன்று.

மாட்டு சிறுநீர் மற்றும் மாட்டு சாணம் குறித்த வதந்திகள்

ஒரே நேரத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இருவரையும் இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் வலுவிழக்கச் செய்தது மோடி அரசின் சாதனை. மேலும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமே இது போன்ற நவ தாராளமயக் கொள்கை மாற்றங்கள் மற்றும் இந்து மேலாதிக்க அரசியல் ஆதிக்கத்தால் அதிருப்தி அடைந்தவர்கள் இல்லை. கொரோனா நோய்ப் பரவல் காலத்தில் முன்னணி களப்பணியாளர்களைப் புறக்கணித்த காரணத்தால் நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போதிய சம்பளம் வழங்காமை, முகக் கவசம் மற்றும் PPE பாதுகாப்பு உடைகள் வழங்காமை போன்றவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இது மட்டுமின்றி உள்நாட்டு மருத்துவ முறை (ஆயுர்வேதா போன்ற) மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. பண்டைய மருத்துவ முறைகளை மீட்டு எடுப்பதாகக் கூறிக்கொண்டு போலி அறிவியலை ஊக்குவிக்கும் அரசின் கொள்கை குறிப்பாக மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தைச் சுற்றி முன்னெடுக்கப்படும் இது போன்ற அம்சங்கள் இந்து தேசியவாத மறுமலர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.

கொரோனாவை எதிர்கொள்ள மாட்டு சாண குளியல் நடத்தும் இந்துத்துவ அமைப்பினர்

புகழ்பெற்ற கடந்த காலத்துக்கு திரும்பவும் என்பதே மிகவும் நயவஞ்சகமானது. ஏனென்றால் இந்தியாவின் பழமை அதன் சனாதன தர்மத்தில் அல்லது சாதிய ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது. ஒன்றிய அரசு தேசிய பசு அறிவியலுக்கான தேர்வை கடந்த பிப்ரவரி மாதம் நடத்தத் திட்டமிட்டு இருந்தது. இதுமட்டுமன்றி பசுக்களின் சிறுநீரில் தங்கம் இருப்பதாகவும், பசுக்களை கொன்றால் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்பது போன்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகள் கேலிக்குள்ளானது.

குலக் கல்விக் கொள்கை

மறுபக்கம் மோடி அரசின் பாரபட்சமான வலதுசாரி கல்வி அம்சங்கள் நிறைந்த புதிய கல்விக் கொள்கையை கடந்த 2020 ஜூலை மாதம் நடைமுறைப்படுத்த முயன்றபோது ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அந்த திட்டத்தினை எதிர்த்து கடுமையாக குரல்களை வெளிப்படுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் புதிய கல்விக் கொள்கை என்பது குலக்கல்வி முறையை மீண்டும் மீட்டெடுப்பதோடு கல்வியில் சாதிக் கோட்பாட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே என சுட்டிக் காட்டினார். மேலும் அவர் மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுதும் நடைமுறை என்பது பெரும் அளவிலான விளிம்புநிலை மாணவர்களை கல்வி நிலையங்களில் இருந்து வெளியேற்றுவதற்கே எனவும் தெரிவித்தார். இது போன்ற திட்டங்கள் கல்வியை ஒரு குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தினருக்கு மட்டுமானதாக மாற்றி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எட்டாக்கனி ஆக்குவதற்கே.

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்பனை

மோடியின் நவ தாராளமயக் கொள்கைகள் கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. 2021-ம் ஆண்டிற்கான நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு ஒன்றிய பட்ஜெட்டில் இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் திட்டத்தை முன்மொழிந்தார். மேலும் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் இலக்காக வைக்கப்பட்டு பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற அரசின் சொத்துக்களின் பங்குகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைக் கண்டிக்கும் விதமாக கடந்த 2021 மார்ச் 15 மற்றும் 16 இல் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் வெகுதூரம் பயணிக்கும் வாய்ப்பு அளிப்பதோடு மிக அதிக அளவிலான வேலைவாய்ப்பை வழங்கி வரும் அரசின் சேவைத் துறையான ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 109 ரயில் வழித் தடங்களை தனியாருக்கு கடந்த ஜூன் மாதம் 2020-ல் ஒதுக்கீடு செய்தது. இந்த நடவடிக்கை ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்பட்டு நாடு தழுவிய அளவில் இடதுசாரிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 2022, பாரதிய ஜனதா கட்சி நாட்டின் பட்ஜெட்டை அறிவித்த சில வாரங்களுக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான சோனியா காந்தி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டங்கள் குறித்து எச்சரிக்கும் விதமாக “மோடி அரசாங்கமானது கொரோனா தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையை சுட்டிக்காட்டி நாட்டின் பெரும் சொத்துக்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து வருகிறார்”. ஆனால் அப்பெரும் முதலாளிகள் யார் என்பது பற்றி குறிப்பிடவில்லை.

அதானியின் சொத்து மதிப்பு வானளாவிய உயர்வு

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் செலவிற்கு நிதி வழங்கிய கௌதம் அதானியின் சொத்துக்கள் சுமார் 19.1 பில்லியன் அமெரிக்க டாலராக இந்த பெருந்தொற்று காலத்தில் உயர்ந்துள்ளது. அதானிக்கு சொந்தமாக துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி மற்றும் சூரிய சக்திகள், வளங்கள், வேளாண் வணிகம், ரியல்எஸ்டேட், ரயில்கள் நிதி சேவைகள், எரிவாயு விநியோகம் மற்றும் பாதுகாப்பு என அதானியின் கால் படாத துறைகளே இல்லை. அதானிக்கு நிகரான முகேஷ் அம்பானியின் சொத்துக்களும் கிட்டத்தட்ட 16.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இதுபோன்ற பெருமுதலாளிகளின் ஆக்டோபஸ் கரங்கள் நிதி ஆயோக் போன்ற அரசின் உயரிய சிந்தனை அமைப்புகளுக்குள்ளும் புகுந்துள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கிராமங்களில் பயன்பெற்று வரும் 75 சதவிகித மக்கள் தொகையிலிருந்து 50 சதவீதமாகவும், அதே சமயம் நகர்புறத்தில் 60 சதவிகிதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

ஒரே கட்டுரையில் பட்டியல் போட முடியாத பாசிச திட்டங்கள்

இதுபோன்ற எண்ணற்ற பாசிசத் திட்டங்களை ஒரே கட்டுரையில் பட்டியலிடுவது கடினமானது. மேலும் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத மாநிலங்களில் மோடி அரசானது நெருப்பு அரசியல் தந்திரங்களை மேற்கொள்கிறது. லவ் ஜிஹாத் என்று, இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு மதம் மாற்றுவதாகவும், தங்கள் மதத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு கட்டுக்கதையைப் உருவாக்கி பொய் பிரச்சாரங்களைப் பரப்பி வந்த ஆர்எஸ்எஸ் பாஜகவினர் தற்போது அதற்காக மதமாற்றத் தடை சட்டம் ஒன்றை பல மாநிலங்களில் ஏற்படுத்துகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் இந்த பொய் பிரச்சாரங்களினால் தாக்கப்பட்டு வந்த சூழலில் தற்போது இந்த சட்டம் மிகப்பெரும் காழ்ப்புணர்வை முஸ்லிம் சமூகத்தினர் மீது ஏற்படுத்த சட்ட வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமின்றி இதுபோன்ற சட்டங்கள் ஏற்கனவே சாதியும், ஆணாதிக்கமும் நிறைந்த இந்த சமூக கட்டமைப்பில் பெண்களை மேலும் அடிமைத்தனத்திற்குள்ளையே கட்டி வைக்கும் என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.

மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு வீடு வீடாகச் சென்று நிதி சேகரிக்கும் செயலில் ஈடுபட்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்ததோடு, கட்டாயப்படுத்தும் நிதி வசூல் வேட்டையிலும் களமிறங்கினர். நிதி கொடுக்காவிட்டால் சுற்றுப்புறத்தில் தாங்கள் மட்டும் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்கிற பயத்திலே பலர் நிதி அளித்தனர். நிதி வசூல் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே கிட்டதட்ட 5000 கோடி ரூபாய்க்கு மேல் சேகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இது போதாதென்று சூழ்நிலையை இன்னும் மோசமாக்க வருடம்தோறும் நடைபெறும் கும்பமேளா நிகழ்வை எந்தவித முன்னெச்சரிக்கை ஏற்பாடுமின்றி அரசு அனுமதித்தது. இதே அரசு கடந்த ஆண்டு டில்லியில் தப்லீக் ஜமாத் கூட்டத்திற்கு முறையான அனுமதியோடு ஒன்று கூடிய முஸ்லிம்களை கொரோனா பரப்புவதற்காகக் கூடினார்கள் என குற்றம்சாட்டி “கொரோனா ஜிகாத்” எனும் பெயரில் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஒரு மாதத்தில் மேற்கொண்ட சோதனையில் 99% கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியும் கும்பமேளா நிகழ்வு அனுமதிக்கப்பட்டது தொடர்பாக எந்தவித கேள்விகளும் விவாதங்களும் ஏற்படவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் மோடியின் ஆட்சி இந்தியாவின் ஒவ்வொரு நிறுவனக் கட்டமைப்பையும், வாழ்க்கை அம்சங்களின் கழுத்தையும் நெறித்ததொடு நில்லாமல் இரத்தக் களரியில் ஆழ்த்தியது என்றே கூற வேண்டும். தொழிலாளருக்கு எதிரான தாக்குதல், விவசாயிகளுக்கு எதிரான தாக்குதல், ஜனநாயக நிறுவனங்கள் மீதான தாக்குதல், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் மீதான தாக்குதல்கள் என இவை எல்லாம் ஏன் சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளாக முக்கியத்துவம் பெறவில்லை? இந்த பெருந்தொற்று மோடிக்குத் தேவையான முழு அனுமதி வழங்கியது என்றே கூறவேண்டும்.

செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறை

தி வயர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில் பிஜேபி தான் ஆளும் மாநிலங்களில் எவ்வாறு உள்ளூர் காவல்துறையைப் பயன்படுத்தி அரசை விமர்சிப்பவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு குறி வைக்கப்பட்டார்கள் எனவும், தேசிய புலனாய்வு முகமை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்றவற்றைப் பயன்படுத்தி சமூக செயல்பாட்டாளர்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டனர் எனவும் சுகன்யா சாந்தா என்கிற செய்தியாளர் வெளியிட்ட செய்தி அதிர்ச்சியளித்தது. 21 வயதான காலநிலை மாற்றம் குறித்த செயற்பாட்டாளரான திஷா ரவி டெல்லியில் போராடிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பரப்பிய தகவலை உலகளவில் புகழ்பெற்ற காலநிலை மாற்ற செயற்பாட்டாளரான சிறுமி கிரேட்டா துன்பர்க் பகிர்ந்ததைத் தொடர்ந்து திஷா ரவி கைது செய்யப்பட்டார்.

மோடி ஆட்சியின் கீழ் இந்தியா ஒரு தோல்வியுற்ற நாடு என்பதை இந்த கொடிய வைரஸ் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. சரியான முன்னேற்பாடு இல்லாத காரணத்தினால் ஒரே இடத்தில் எரிக்கப்பட்ட பிணங்களின் புகைப்படங்கள் மனதை பதைபதைப்புக்கு உள்ளாக்கியது. மோடியின் செயலற்ற தன்மை, திறமையற்ற தன்மை மற்றும் தவறான கொள்கையின் காரணமாகவே முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

தற்போது கொரோனா காரணமாக மூச்சுத் திணறலால் உயிர் இழக்கும் உறவினர்கள், மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் இறந்த நண்பர்கள் மற்றும் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக பல மணி நேரங்களாகக் காத்திருப்பவர்கள் இந்த சோகத்தினால் மட்டும் மூழ்கி விடாமல், கடந்த ஆண்டு மோடி அமல்படுத்திய பல சட்டங்களால் இனி வரும் காலங்களில் ஏற்படப்போகும் மரணங்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

இந்த புற்றுநோய் இல்லாத ஒரு உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் கூட கடந்த மார்ச் 2020 முதல் இன்றுவரை மோடியின் செயல்பாடுகள் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிரியோரின் விலையைக் கொடுத்து கார்ப்பரேட் இந்து தேசியத்தை நிறுவ விரும்பும் மோடியின் இரக்கமற்ற அதிகாரப் பசியையே காட்டுகிறது. மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு போதுமான பலம் இல்லாத காரணத்தினால் மட்டுமே மக்களின் கோப தாபங்களை முறைப்படுத்துவதற்குத் தேவையான அரசியல் வழிமுறைகளைக் கொடுக்கவும் தவறக்கூடாது. இந்த சோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை. தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக தனிப்பட்ட ரீதியில் ஒருவருக்கு அரங்கேறி வரும் இந்த பேரழிவுகள் எதிர்காலத்தில் பாஜகவால் ஏற்படப் போகும் பெரிய ஆபத்துகள் குறித்து மக்களை எச்சரிக்கை செய்துள்ளது. மக்கள் தற்போது மாற்றத்திற்காக கூச்சலிட்டு வருகிறார்கள். தற்போது நடைபெறும் இரண்டாவது வகை முடிவு வரும்போது இந்த கூச்சல்கள் அடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. மோடியின் நவதாராளவாத இந்து தேசியவாத கொள்கைகளால் ஏற்பட்ட சேதங்களை மாற்றியமைப்பதற்கு தேவையான சமரசமற்ற மற்றும் வலுவான தலைமையை உடனடியாக இந்தியாவின் எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டிய காலத்தின் நிர்பந்தத்தில் தற்போது இருக்கிறார்கள்.

– மீனா கந்தசாமி, தி வயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *