ஜவஹர் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு நேரடியாக தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் தன் துவக்க நாட்களில் தொழிற்சங்கங்களில் பங்காற்றி தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர். கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை, மகளிர் தினம்- உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இரா.ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனா தொற்றால் காலமானார்.
ஜவஹர் அவர்கள் பல்வேறு இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். புதிய தலைமுறைக்கு கம்யூனிசம் குறித்தான புரிதலை உருவாக்கக்கூடிய எளிய வடிவத்தில் வரலாற்றை எழுதியதோடு, நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் கம்யூனிசத்தின் தேவை குறித்தும் விரிவாக எழுதியவர்.

இரா.ஜவஹர் அவர்களின் இறப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எழுதியிருக்கக்கூடிய அஞ்சலி குறிப்புகளின் வழியாக அவரது பணியை நாம் காணமுடியும். அவற்றில் சில:
இடதுசாரி இயக்கத்திற்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும் – ஜி.இராமகிருஷ்ணன்
துவக்க காலத்தில் சென்னையில் குறிப்பாக அம்பத்தூரில் சிஐடியூ தொழிற்சங்க முழுநேர ஊழியராக செயல்பட்டவர். பிறகு பல வார இதழ்களில் பணியாற்றி சிறந்த பத்திரிக்கையாளராக உயர்ந்தார். பரந்த வாசிப்பாளர். இடதுசாரி சிந்தனையாளர். கம்யூனிசம் நேற்று இன்று நாளை என்று அவர் எழுதிய நூல் பல பதிப்புகளைக் கண்டது.
உலக மகளிர் தினம் என்ற அவரது ஆய்வு நூல் தமிழ், ஆங்கிலம் அல்லாமல் மலையாளம்,தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.
அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும்.
அரசியல் ஆர்வமுள்ள பல இளம் தோழர்களை அறவணைத்து ஊக்கப்படுத்தியவர். எங்கள் குடும்ப நண்பர் . 2020லில் தான் அவரது இணையர் பூரணம் கோவிட்-19 பாதிக்கப்பட்டு இறந்தார். தற்போது அவர். தாய், தந்தை இருவரையும் பெருந்தொற்று பாதிப்பால் இழந்து வாடும் மகன்கள் டார்வின், பாலு மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஜவகரின் சாவு மலையை விடக் கணமானது – ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை
மாவோ கூறினார்: “ சாவு எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தேரும். ஆனால் தன்மையில் வேறுபாடுகள் உண்டு. ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்காக வாழ்ந்து மடிபவர்களின் சாவு ”தாய் (இமய) மலை”யைவிடக் கனமானது. ஒடுக்குவோருக்கும் சுரண்டுவோருக்கும் வாழ்பவர்களின் சாவு பறவையின் சாவை விட இலேசானது”. தோழர் ஜவகர் முதல் வகையைச் சேர்ந்தவர்; அதானல்தான் அவரது இறப்பு மலையைவிடக் கணமானதாகத் தோன்றுகிறது. எனினும் கடந்த 4 ஆண்டுகளாக வரை அனுபவித்து வந்த வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் அவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்பது நமக்கு சற்று ஆறுதல் அளிக்கட்டும்.
அழிவில்லாத பொக்கிஷங்களை நமக்கு விட்டுச்செல்கிறார் – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
நீங்களும் விடைபெற்று விட்டீர்களா தோழர்…..
எந்தப்பாதையில் நூல் மூலம் எம்போன்ற எண்ணற்ற இளைஞர்களை இடதுபக்கம் திருப்பிய எங்கள் ஆசான் தோழர் இரா.ஜவகர்…
எளிமையின் சின்னம்…கருத்தில் பிடிப்பு..உழைக்கும் மக்களுக்கு அரசியல் கல்வி புகட்டுவதில் தணியாத ஆர்வம் என தன் முழு வாழ்வையும் ஒப்புக்கொடுத்தவர்.இணையரை இழந்ததன் தொடர்ச்சியாக அவரும் இன்று விடைபெற்றார். அழிவில்லாத பொக்கிஷங்களை நமக்கு விட்டுச்செல்கிறார்.
ரெட் சல்யூட் காம்ரேட்.
எதையும் நேர்மறையாக விமர்சிப்பவர் – வன்னியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பேசிக்கொண்டே இருக்கலாம்.
அவ்வளவு செய்திகளையும் போரடிக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார். படிப்பதற்கு நிறைய புத்தகங்களை சந்திக்கும் போதெல்லாம் அறிமுகம் செய்து வைப்பார். அவரது நூலகத்தில் உள்ள புத்தகங்களையும் கொடுத்து படிக்கச்சொல்வார்.
அப்படித்தான் கடந்த 3 மாதங்களுக்கு முன் தோழர் சீனு அவர்களோடு சந்தித்தோம். வீட்டுக்குள் நுழையும் போதே, “கேன்சரில் சீக்கிரம் இறந்து விடுவேன்” என்பதற்காக பார்க்க வந்தீங்களா? என்று சாவுச்செய்தியை கூட கிண்டலடித்து வரவேற்றவர்.
தோழரது மகன் டார்வின் உடன் இருந்தார். ”மகனிடமும் நான் சொல்லி விட்டேன். மருத்துவர்கள் 6 மாதம் தான் உயிரோடு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது வரை இருப்பேனா?“ என்று சாவு வரும் நாளை எதிர்பார்த்து கிடந்தவர் தான் தோழர் ஜவகர்.
தமது சாவு முன்கூட்டியே எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் தோழர் ஜவகர் சாவு குறித்து தெரிந்து எல்லோரிடமும் அதை பகிர்ந்தவர்.
மார்க்சிய தத்துவங்களை ஏற்றுக்கொண்டாலும் எதையும் நேர்மறையாக விமர்சிப்பவர். விடுதலைச்சிறுத்தைகளையும் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களையும் நேசித்தவர். லட்சக்கணக்கான சிறுத்தைகளால் நேசிக்கப்பட்டவர் தோழர் ஜவகர். வீட்டிலிருந்து விடைபெறும் போது அவர் கொடுத்த நூல் ‘இந்து இந்தி இந்தியா’!
இப்போதும் அந்த நினைவுகள் எம்மை அழுத்துகிறது. கேன்சர் என்றாலும் கொரானா தொற்றில் தான் இறந்தார் என்னும் செய்தி பெரும் துயரமானதாக வலிக்கிறது.
தோழருக்கு எமது செவ்வணக்கம்!
மார்க்சிய சித்தாந்தத்துக்கு ஆட்பட்டு அந்த முகாமிலிருந்து கொண்டே திராவிட இயக்கத்தின் தேவையை அழுத்தமாக உணர்ந்திருந்த சிந்தனையாளர்களின் முன்னோடி – எழுத்தாளர் ஓவியா
எப்போது பார்த்தாலும் வேலை வேலைன்னு இருக்கியே கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டுப் போ-ன்னு செல்லமா சொல்ல இனி ஜவஹர் அப்பா இல்லை. எனது மூத்த மகள் என்கின்ற அடைமொழியின்றி என்னை அவர் குறிப்பிட்ட தருணங்கள் மிகக் குறைவு. என்னோடு சண்டை போடவும் எனக்காக சண்டை போடவுமான இதயம் இயங்குவதை இன்று நிறுத்திக் கொண்டது. மதுரை கண்ணன் தோழர்… அவருடைய டார்வின் ஹோமியோ கிளினிக் ……ஜவஹர் அப்பா….. திருவான்மியூர் வீடு… தோழமைக் குடும்பம் என்று பல புள்ளிகளை இணைக்கும் நினைவுச் சங்கிலி மனதை அழுத்துகிறது. தொழிற்சங்க செயற்பாடுகளில் தனது பயணத்தைத் தொடங்கியவர் இறுதிவரை தனது அந்த காலத்திய பங்களிப்புகளே தனது வாழ்வுக்கான நியாயத்தை வழங்கியவை என்கின்ற உணர்வோடு வாழ்ந்தவர். மார்க்சிய சித்தாந்தத்துக்கு ஆட்பட்டு அந்த முகாமிலிருந்து கொண்டே திராவிட இயக்கத்தின் தேவையை அழுத்தமாக உணர்ந்திருந்த சிந்தனையாளர்களின் முன்னோடி. அதற்கான காரணமாக சின்னக்குத்தூசி அவர்களின் தோழமை இவருக்கமைந்திருந்தது. அழுத்தமான சுயமரியாதை உணர்வுள்ளவர். அதில் மிகவும் பிடிவாதக்காரரும் கூட. எளிமையான தர்க்கவியலே எந்தத் தத்துவத்திற்கும் சரியான முகமாக இருக்க முடியும் என்று நம்பியவர். சிபிஎம் கட்சிக்காரர். தோழமைக் குடும்பம் என்கின்ற அமைப்பில் தோழமைத் தந்தையாக வாழ்ந்தவர். இனியும் எழுத இருக்கிறது. யார் சொன்னார்கள் மரணம் முடிவென்று. சில மனிதர்களுக்கு அது பொருந்தாது. டார்வின், பாலு, மகிழ் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அப்பா இல்லாத அந்த வீட்டை பார்ப்பது வலி மிகுந்தது.
ஏற்றுக்கொண்ட தத்துவத்தின் வழியில் வாழ்ந்த போராளி – பத்திரிக்கையாளர் கோவி.லெனின்
அடுத்தடுத்த தலைமுறையையும் அதே பாதையில் விரல் பிடித்து அழைத்துச் சென்ற தோழமைத் தந்தை. கொள்கை வழி நின்ற எழுத்தாளர்-மூத்த பத்திரிகையாளர்-தோழர் இரா.ஜவகர் அவர்களைப் பேரிடர் காலத்தின் கொடுங்கரம் பறித்துக் கொண்டது.
போய் வாருங்கள் தோழர். உங்கள் படைப்பு போலவே நேற்று-இன்று-நாளை எப்போதும் எங்களுக்குள் நிறைந்திருப்பீர்கள்.
தன் மீதான விமர்சனங்களையும் தானே காதுகொடுத்துக் கேட்கும் சங்கப்பலகை – பத்திரிக்கையாளர் ப.திருமாவேலன்
எழுத்தில் இது சரி – இது தவறு என்று நெத்தியில் அடித்துச் சொல்லும் வாத்தியார்!
தன் மீதான விமர்சனங்களையும் தானே காதுகொடுத்துக் கேட்கும் சங்கப்பலகை!
கம்யூனிஸ்ட் சிரிக்கக் கூடாது – தீவிர கம்யூனிஸ்ட் என்றால் முகம் இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற வரையறைகளை மீறி என்றும் எப்போதும் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் இருந்த பூ!
நாளையைப் பற்றி மட்டுமல்ல அடுத்த அரைமணி நேரத்தைப் பற்றியும் கவலைப்படாத மெல்லியலாளன்!
சின்னக்குத்தூசி அறையில் உருவான உணர்ச்சி வெடிகுண்டு!
கம்யூனிசம் – பெரியாரியம் – அம்பேத்கரியம் என அனைத்து தத்துவங்களுக்குமான ஆசான்!
பத்திரிகையே ஜாதி!
எழுத்தே மதம்!
தோழமையே ரத்த ஓட்டம்!
இரா. ஜவஹரால் உருவாக்கப்பட்ட எழுத்துயிர் எத்தனையோ?
அப்பூ – என்று அவர் அழைக்கும் போது…!
அழைக்க மாட்டார் இனிமேல்!
பூர்ணம் தேடிப் போய்விட்டார்!
பூரணம் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இறந்தபோது – அவர் வீடு நோக்கி போய்க் கொண்டு இருக்கிறேன்!
வர வேண்டாம்ப்பூ என்றார்!
வரவில்லையே என்பவர் வர வேண்டாம் என்றார்!
தோழர்கள் மரணிப்பதில்லை!
பழைய பாடங்களில் பயணத்தைத் தொடர்கிறார்கள்!
அவரது வீடு எல்லோரையும் அரவணைக்கும் கூடு – பத்திரிக்கையாளர் கவின்மலர்
இரா.ஜவஹர் – அவரை ஓர் ஆளுமையாக, எழுத்தாளராக வெகுகாலம் முன்பே அறிவேன். நேரில் அறிமுகமில்லாத காலம் அது. அப்போது நான் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விகடன் என்னை பலரிடமும் கொண்டு சேர்த்திருந்தது. அப்படி ஜவஹர் அப்பாவிடம் என் பெயர் சென்று சேர்ந்திருக்கிறது என அவர் விகடன் அலுவலகத்துக்கு வேறு ஏதோ வேலையாக வந்து அன்றே புரிந்துகொண்டேன்.
முதல் சந்திப்பிலேயே அசரடித்த அன்பு அவருடையது. தன் கொள்கையை ஒத்த ஒருவரை சந்திப்பதாய் ‘நம்ம பிள்ளை நீ’ என்றார். கடைசியாய் சந்திக்கும்போதும் அதே வாஞ்சையுடன் கன்னம் தட்டி வரவேற்றார்.
அவரது வீடு எல்லோரையும் அரவணைக்கும் கூடு. எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
எங்களுக்குள் பேச, பகிர எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. குழூவுக்குறி போல இடதுசாரிகள் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்த சில நகைச்சுவைத் துணுக்குகளை சொல்லி வாய்விட்டு சிரித்துக்கொண்டிருப்போம்.
மதுரையில், வடசென்னையில் அவர் கட்சியிலும் களத்திலும் ஆற்றிய பணிகள், அவருடைய பத்திரிகை அனுபவங்கள் என பல்வேறு விஷயங்களை மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டிருப்போம். சி.பி.எம்முக்கு உள்ளேயும் வெளியேயுமான அனுபவங்கள், கற்றல்கள் என நாங்கள் பகிர்ந்துகொள்ள எவ்வளவோ விஷயங்கள் பொதுவில் இருந்தன. சொந்த வாழ்க்கை, கட்சி வாழ்க்கை, பத்திரிகை வாழ்க்கை என பேசிக்கொண்டிருப்பதில் நேரம் போவதே தெரியாது.
ஒரு கட்டத்தில் ஊடக உலகில் எனக்கு மிகவும் சிக்கல்கள் வந்த சமயத்தில், என் பக்கம் உறுதியாக நின்றார். பெரும்பாலான சகபத்திரிகையாளர்களே ஒரு சில காரணங்களுக்காக என்னை ஒதுக்கி வைத்திருக்கும்போது, ஓர் அரணாக அவர் நின்றார். அதில் அவர் வெளிப்படையாகவும் இருந்தார். அந்த நேரத்தில் அந்த கடுங்காலத்தை கடக்க அவர் பெறும் ஆறுதலாய் நின்றதோடு அடுத்து என்ன செய்யவேண்டுமென வழிகாட்டுபவராகவும் இருந்தார்.
‘குங்குமம் தோழி’ யில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டபின்னர் இன்று வரை நான் பணியில் இல்லை. அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என் வேலை குறித்து அக்கறையோடு விசாரிப்பதும் வழிகாட்டுவதுமாக இருப்பார். வேலை கிடைக்காமல் போகவே, சந்திக்கப் போனால் அப்பா அது குறித்து கேட்பாரே என்பதற்காகவே சங்கடப்பட்டுக்கொண்டு, பார்க்கச் செல்வதை குறைத்துக்கொண்டேன். கொஞ்ச காலம்தான். அடுத்த முறை பார்க்கும்போது கேட்டார் ‘ அதைக் கேட்பேன் என்பதற்காகத்தானே வரவில்லை?’ என சரியாகவே கணித்துக் கேட்டார்.
இடையில் புற்றுநோய் வந்திருந்தது. பூர்ணம் அம்மாவின் மறைவு என அவருக்கு சோதனைக் காலம். ஆனால் எல்லாவற்றையும் புன்னகையுடன் கடந்தார். வாழ்க்கை குறித்த புகார்கள் அவருக்கு இல்லை. அவரிடம் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டியது அதைத்தான் என எண்ணுகிறேன். மரணத்தையும் அவர் எதிர்நோக்கியே இருந்தார். ‘வரட்டும். போய்க்கலாம்’ என்றவாறிருந்தார்.
புகார்களற்று புன்னகையோடு மரணத்தை சந்திக்க மருத்துவமனை புறப்பட்டுச் சென்றதாக நர்மதா சொல்கிறார்.
சதீஷ் என்கிற அன்பு சகோதரன் எனக்கு நீங்கள் அளித்த பரிசு அப்பா. நீங்களே அவனை என்னிடம் சேர்த்தீர்கள்.
உங்களிடம் நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். அந்தத் திருப்தியோடு சொல்கிறோம் உங்கள் பிள்ளைகள். போய் வாருங்கள் அப்பா!
செவ்வணக்கம்!
காலமெல்லாம் மக்களின் பெருவாழ்விற்காக சிந்தித்த தோழர் – காஞ்சி அமுதன், தமிழ் உரிமைக் கூட்டப்பு
அருமைத் தோழர் இரா.ஜவகர் காலமானார்.
1985 ஆம் ஆண்டு சிபிஐ அமைப்பில் இருந்து செயல்பட்டபோது அறிமுகம். தோழர் அ.பத்மநாபனும் ஐவகரும் சென்னைப் பகுதியின் பொறுப்பாளராக அமைப்பை வழிநடத்தினர். மிகக் குறுகிய காலத்தில் கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகி சென்றுவிட்டார்.
ஆழ்ந்த மார்க்சிய அறிவும் கொண்ட அவரின் பங்களிப்பு மகாத்தானது. இதழில் துறையில் அவர் இயன்ற வகையில் எல்லாம் இயக்கங்களின் கருத்துகளை கொண்டு சேர்த்தார்.
1990 ஆம் ஆண்டு காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது என தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நெய்வேலியில் திடீர் முற்றுகை இட்டு 25 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்கள் எதுவும் அப்போராட்டத்தை செய்தியாக்கவில்லை.
அப்போராட்டம் குறித்து தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச்செயலாளராக இருந்த நான் விடுத்த அறிக்கையை தினமணி நான்கு வரிகள் செய்தி வெளியிட்டது. அப்போது அதிர்ஷ்டம் லாட்டரி இதழில் பணியாற்றிய ஐவகர் அவ்விதழில் கால்பக்கம் எனது அறிக்கையை வெளியிட்டு போராட்டத்தை தமிழகம் அறியச் செய்தார்.
தொடர்ந்து அ.ப.அவர்களுடன் அவரை நேரில் பலமுறை சந்தித்து இருக்கிறேன். பழகுவதற்கு இனிய தோழர்.
நக்கீரனில் கம்யூனிசம் குறித்தும்+ மகளிர் நாள் குறித்தும் இன்னபிற குறித்தும் அவர் எழுதி உள்ள நூல்கள் அவரின் மார்க்சிய ஞானத்திற்கும் …மக்கள் பால் கொண்ட அன்பிற்கும் அடையாளமாகும்.
காலமெல்லாம் மக்களின் பெருவாழ்விற்காக சிந்தித்த தோழர் இரா.ஜவகர் அவர்களின் இழப்பு மனித குலத்தின் பேரிழப்பாகும்.
தோழர் இரா.ஜவகர் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.