வேல்முருகன்

வீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்

தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டில் சமூக அக்கறையுடன் இயங்குபவர்கள் பலர் ஆதரிக்கும் வேட்பாளர்களில் ஒருவராக திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் இருக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சொரத்தூர் இரா.ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

பாமகவிலிருந்து பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சியில் இணை பொதுச் செயலாளராக இருந்தவர். 2011-ம் ஆண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற புதிய கட்சியைத் துவங்கினார். ஏற்கனவே இந்த தொகுதியில் இரண்டு முறை பாமக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுதிமொழி கமிட்டி தலைவராக இருந்தவர். பாமக-வில் இருந்து வந்தவர் ஜாதி அரசியலையே கையிலெடுக்கக் கூடும் என எல்லோரும் பேசிய நிலையில், அதற்கு மாறாக கட்சியின் பெயருக்கேற்ப தமிழகத்தின் வாழ்வுரிமைக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 

கட்சி துவங்கியதுமே கூடங்குளம் போராட்டம்

கட்சி துவங்கிய ஆரம்பத்திலேயே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையிலும் போராட்டங்களை முன்னெடுத்தவர். 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் இடிந்தகரையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அதைக் கண்டித்து அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இடிந்தகரை நோக்கி பயணித்த தலைவர்களில் வேல்முருகனும் ஒருவர்.

கடலூர் மாவட்ட சிப்காட்டில் ரசாயன ஆலைகளில் ஆய்வு

கடலூர் மாவட்டம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சித் துறையிடம் அனுமதி பெறாமல், சட்டத்திற்குப் புறம்பாக, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தபொழுது அதை எதிர்த்து போராட்டங்களை அறிவித்தார். இதனால் சுற்றுப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு, புற்று நோய், இருதய நோய், நுரையீரல் நோய், கருச்சிதைவு, மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுகிறது என்பதை அம்பலப்படுத்தினார்.

சட்டசபை உறுதிமொழி கமிட்டியின் தலைவராக இருந்தபோது, சிப்காட் தொழிற்சலைகளை ஆய்வு செய்து, பல தொழிற்சாலைகள் அனுமதியின்றி ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்ததைக் கண்டறிந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடுமாறு பரிந்துரை செய்தவர். அந்த காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் நடந்த ஆய்வுகளில் வேல்முருகனின் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

தாமிரபரணியில் பெப்சி, கொகொ கோலா ஆலைகளை எதிர்த்து

திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொகொ கோலா, பெப்சி ஆலைகள் தாமிரபரணி நீரை உறிஞ்சி எடுப்பதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. நெல்லை அருகே கொகொ கோலா, பெப்சி குளிர்பான ஆலைகள் அமைவதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். அதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்ளிட்ட 500 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கங்கை கொண்டானில் பெப்சி, கொகொ கோலா ஆலைகளுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

தூத்துக்குடியில் வருமான வரித்துறை அலுவலக முற்றுகை

தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுவரும் தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தினை நடத்தினார்.

100க்கும் மேற்பட்ட அமைப்புகளை இணைத்து தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான அமைப்புகளை இணைத்து இவர் உருவாக்கிய தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தமிழக உரிமைகளுக்கான போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியது.

ஏழு தமிழர் விடுதலை, காவிரி விவகாரம், பாலாறு பிரச்சினை, கெயில், ஈழத் தமிழர் பிரச்சனை என தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த கையோடு, திராவிட இயக்கங்கள், தமிழ்த்தேசிய இயக்கங்கள், இடதுசாரிகள், இஸ்லாமிய, கிறித்துவ சிறுபான்மை இயக்கங்கள், கட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு மையப் புள்ளியாகவும் வேல்முருகன் உருவெடுத்தார்.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளையும், இயக்கங்களையும் ஒருங்கிணைத்து பிரமாண்ட பேரணியை வேல்முருகனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி நடத்தியது.   

நெய்வேலி என்.எல்.சி, சுங்கச் சாவடிகள், சி.ஏ.ஏ

நெய்வேலியில் என்.எல்.சி-க்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுங்கள் என்று போராட்டம் நடத்தியதற்காக பல வழக்குகளைச் சந்திக்கிறார்கள் அக்கட்சியினர். சுங்கச்சாவடி கட்டடணத்துக்கு எதிராகப் போராடியதால் தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டன. என்.ஆர்.சி., சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடியதற்காகவும் வழக்குகளை வாங்கியவர்.

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டு உடல்நலக்குறைவு

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியபோது,  நேரடியாக மக்களை சந்திக்க தூத்துகுடிக்குச் சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்தது காவல்துறை. தனியாக ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டார் வேல்முருகன். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வழக்கைக் காட்டி கைதுசெய்த காவல்துறை, அடுத்தடுத்து வழக்குகளை பதிந்தனர். சிறையில்  உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நீர் சத்து குறைவின் காரணமாகவும், சிறுநீரக பிரச்சினையாலும் வேல்முருகன் சிகிச்சை பெற்றார்.

நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ள வேல்முருகன்

தற்போது கூட கட்சியின் 9-வது ஆண்டு விழாவையும், தமிழக வாழ்வுரிமை மாநாட்டையும் சேலத்தில் நடத்தினார். ’தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே’  என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தபட்ட மாநாடு அது.

தமிழ்நாட்டு உரிமைகளுக்காக வேல்முருகன் நடத்திய போராட்டங்கள் அவருக்கான பலமாக இருக்கிறது. இத்தனை காலம் தமிழ்நாட்டிற்காக தான் நடத்திய போராட்டங்களை முன்வைத்து வேல்முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருடன் போராட்டங்களில் இணைந்து நின்ற கட்சி சாராதவர்களும் வேல்முருகன் வெற்றி பெற வேண்டும் என்பதை முக்கியமானதாகப் பார்க்கிறார்கள்.

இன்னொரு புறம் பாமக, வேல்முருகன் வெற்றிபெறக் கூடாது என பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. அதைத் தாண்டியும் தனது சொந்த பலத்துடன் பண்ருட்டி தொகுதியில் நம்பிக்கையுடன் வலம்வருகிறார் வேல்முருகன். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருப்பதும் வேல்முருகனுக்கு அத்தொகுதியில் கூடுதல் பலமாகும். 

இதன் காரணமாக பண்ருட்டி தொகுதி அனைவராலும் உற்றுநோக்கப்படும் நட்சத்திரத் தொகுதியாக இந்த தேர்தலில் மாறியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *