சமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்து

வே. ஆனைமுத்து இந்தியத் துணைக்கண்ட சமூகநீதி தளத்தின் மிக முக்கியமான பெயர். சமூகநீதி அரசியல் மிகப் பிரதானமாக இருந்த, இருக்கிற தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியா நோக்கி அந்த தளத்தை விரிவு செய்தவர். சமூகநீதி அரசியலின் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டிற்கு, சாதி புரையோடிப் போயிருக்கும் இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் சமூகநீதி அரசியலை விரிவு செய்ய வேண்டிய பொறுப்பிருந்தது. தமிழ்நாட்டின் அந்த வரலாற்றுப் பொறுப்பை தன் தோளில் தூக்கி சுமந்தவர் வே. ஆனைமுத்து அவர்கள்.

அண்ணல் அம்பேத்கரின் கடும் முயற்சியால் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டே பட்டியல் சாதியினருக்கும் அடுத்த ஆண்டு பட்டியலின பழங்குடி மக்களுக்குமான இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற நிலையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக- பொருளாதார நிலையறிந்து அவர்களுக்குரிய இட ஒதுக்கீடை வழங்குவதற்கு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பது அம்பேத்கர் அவர்களின் மிக முக்கிய கோரிக்கை; தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தற்கு இக்கோரிக்கையும் ஒரு காரணமாகும்.

அம்பேத்கர் மறைவுக்குப் பின்ப் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை அரசியல் இந்திய துணைக்கண்டத்தின் வெகுமக்கள் பரப்பை சென்றடைந்ததற்கு வே.ஆனைமுத்து அவர்களின் முயற்சியும் ஒரு முக்கிய காரணமாகும்.

தந்தை பெரியாரின் முன்னிலையில் ஆனைமுத்து உரை

பெரியாருடன் பயணித்து இயங்கியவரான வே.ஆனைமுத்து அவர்கள் பெரியார் மறைவுக்கு பின், 1976 ல் ‘பெரியார் சம உரிமைக் கழகத்தை’ தொடங்கினார். பெரியாரின் கொள்கை முழக்கங்களில் மிக முக்கியமானதான,’கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் சாதி வாரியாக திராவிட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை போராடியாவது பெற்றே தீருவது’, என்ற கொள்கையோடு பெரியார் சம உரிமை கழகம் இயங்கத் தொடங்கியது.

(‘திராவிட’ என்பதனை பெரியார் வெவ்வேறு சூழலில் மொழி, இனம், நிலப்பரப்பு ரீதியில் ஒடுக்கப்பட்டவர்களை குறிக்க பயன்படுத்தினாலும், இங்கே அச்சொல்லை ‘இந்திய துணைக்கண்ட சூத்திர மக்களை’ குறிக்கும் வகையில் ‘திராவிட மக்கள்’ என சுட்டப் பெறுகிறது)

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்காக டெல்லி பயணம்:

ஒன்றிய (மத்திய) அரசில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்காக 1978-இல் வே.ஆனைமுத்து, சீர்காழி மா.முத்துசாமி, சேலம் தாதம்பட்டி எம்.ராஜூ ( பெரியாரின் அண்ணன் மருமகன்) ஆகியோர் கொண்ட குழு டெல்லிக்கு பயணமானது. டெல்லியில் அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் இந்திரா காந்தி ஆகியோரை சந்தித்து தங்களது ‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு’ கோரிக்கையை வலியுறுத்தினர்.

முசாபார்நகர் உரை :

தொடர்ந்து டெல்லியில் அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தலைவர்களையும் சந்தித்து தங்களது கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினர். அவர்களில் இராம் அவதேஷ் சிங் மூலம் உத்திரப் பிரதேச மக்கள் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட முசாபர்நகர் பொதுக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு தேவையைக் குறித்து வே.ஆனைமுத்து அவர்கள் உரையாற்றினார்.

அக்கூட்டம் நடைப்பெற்ற 1978 மே 7ம் நாள், இடஒதுக்கீடு தேவை என்ற கருத்தை தமிழரொருவர் வடமாநில மக்களின் மத்தியில் பதித்த நாளாக அந்நாள் இருந்தது.

பெரியார் பிறந்த நாள் விழா:

பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி பீகாரின் அனைத்து மாவட்டங்களிலும் பெரியார் பிறந்தநாள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.வே.ஆனைமுத்து அவர்கள் தோழர்களோடு சென்று அக்கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, அக்கூட்டங்களின் இறுதி நிகழ்வாக பாட்னாவில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பேரணியின் முடிவில் நடந்த கூட்டத்தில் அன்றைய பீகார் முதல்வர் கர்ப்பூரி தாகூர் கலந்து கொண்டு பேருரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உத்திரபிரதேச அரசும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 15சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது. இப்படியாக பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்துவின் வடநாட்டு சமூகநீதிப் பயணம் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே இடஒதுக்கீடு உரிமைக்கான பெரும் அரசியல் எழுச்சியையும், அதனை தொடர்ந்து இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு தொடர் வெற்றியையும் ஈட்டியது.

சென்னையில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாடு:

வட மாநிலங்களில் ஏற்படுத்திய இடஒதுக்கீட்டு உரிமைக்கான அரசியல் எழுச்சியின் தொடர்ச்சியாக 24.6.1978 சென்னையில், “அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டை”,நடத்தினார். இம்மாநாட்டில் அன்றைய மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் தனிக்லால் மண்டல் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இப்படியான பிற்படுத்தப்பட்ட மக்களின் இடதுக்கீட்டிற்கான தொடர் செயல்பாடுகளின் தாக்கத்தாலும், அரசியல் அழுத்தத்தாலும் 1979-ம் வருடம் சனவரி முதல் நாள் பிதேஷ்வர மண்டல் தலைமையில், பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக- பொருளாதார நிலைமையை அறிந்து இடஒதுக்கீட்டை நிறைவேற்ற பரிந்துரைப்பதற்கான மண்டல் குழு அமைக்கப்பட்டது.

பி.பி மண்டலுடன் சந்திப்பு

மண்டல் குழு அமைக்கப்படுவதற்கு முன்னரே பி.பி மண்டல் அவர்களை 29.4.1978 ­அன்றும்,10.5.1978 அன்றும் நேரில் சந்தித்து, ‘பிற்படுத்தப்பட்டோருக்கு ஏன் இடஒதுக்கீடு அவசியம்..?’,என்று வலியுறுத்தி ஆனைமுத்து அவர்களின் வடநாட்டு பயணக்குழுவானது விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆனைமுத்து தொகுத்த பெரியார் எழுத்துக்கள்

மண்டல் குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கை முழக்கத்தை பிரகடனப்படுத்தும் விதமாக, வே.ஆனைமுத்து அவர்கள் 1979ம் ஆண்டு மார்ச் 23ந் தேதி பல்லாயிரக்கணக்கானோரைத் திரட்டி டெல்லியில் பேரணி நடத்தினார். பேரணி முடிவில் நடந்த மாநாட்டில் அன்றைய துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

மீண்டும் 1980ம் ஆண்டு சேலத்தில் இந்திய துணைக்கண்ட தலைவர்களை கூட்டி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடத்தினார்.

மண்டல் குழு தனது அறிக்கையினை சமர்பித்த பிறகு,அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றித் தரும்படி அன்றைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங்கை 25.01.1982 அன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இப்படியாக ஆனைமுத்து அவர்களின் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்கான அயராத முயற்சியும் மற்றும் கடும் உழைப்பும் மண்டல் குழு பரிந்துரையின் வழி பிற்படுத்தப்பட்ட மக்கள் 27 சதவீத இடஒதுக்கீடு பெற முக்கியக் காரணியாக அமைந்தது.

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் மண்டல் குழுவின் பரிந்துரைக்கும்,அதையொட்டி ஏற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் மிக முக்கிய பாத்திரமுண்டு. 70, 80களில் வே.ஆனைமுத்து போன்றவர்கள் வடநாட்டில் பற்ற வைத்த சமூகநீதியெனும் பெரு நெருப்பை அணைப்பதே ஆரிய- இந்துத்துவ அமைப்புகளின் பிரதான பணியாக மாறியது .

பாஜகவின் அயோத்தி ராமர் கோயில்-

இராம ரத யாத்திரை அரசியலின் உள்நோக்கமே ‘மண்டலா’ ‘கமண்டலா’ என,வடநாட்டின் சமூக நீதி அரசியலின் எழுச்சியை அழிப்பதாகதான் இருந்தது. அதிலிருந்து தொடங்கிய பாஜகவின் அரசியல் இன்று எங்கு வந்து நிற்கிறது என்பதை நாமறிவோம். சமூக நீதிப் பாதையில் நாம் எட்ட வேண்டிய தூரம் மிக அதிகம். ஆனால் அதற்குள்ளாகவே, 40 ஆண்டுகள் போராடிப் பெற்ற குறைந்தபட்ச சமூகநீதி உரிமைகள் அனைத்தும்,30 ஆண்டுகளுக்குள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசின் பாசிசப் போக்கை எதிர்ப்பதற்கு, இந்திய துணைக்கண்ட முழுமைக்குமான ஒருங்கமைவை ஏற்படுத்த வேண்டிய வரலாற்றுப் பொறுப்பை,காலமானது தமிழ்நாட்டின் தோளில் தூக்கி வைத்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் அதற்கான ஒரு முன்னோட்டமாக அமையலாம்.

அத்தேர்தல் நாளில் மறைந்த ஐயா வே.ஆனைமுத்து அவர்களின், தமிழ்நாட்டின் எல்லையை கடந்த சமூகநீதிக்கான பெரும் பணியானது, பாசிசத்தை வீழ்த்தக்கூடிய இந்தியத் துணைக்கண்ட ஒருங்கமைவை ஏற்படுத்தும் நமது வரலாற்றுப் பணிக்கு வழிகாட்டியாகவும், ஆயுதமாகவும் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *