விவசாய விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் டெல்லி எல்லைகளில் கடந்த 12 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை டெல்லி நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
மேலும் இந்த பொது வேலைநிறுத்தம் அமைதியானதாக இருக்கும் என்றும், கடைகள் மற்றும் நிறுவனங்களை வலுக்கட்டாயமாக மூடும்படி நெருக்கடிக்கு உள்ளாக்க மாட்டோம் என்றும் விவசாயத் தலைவர்கள் தெரிவித்து இருந்தனர்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்திய தேசிய லோக் தளம் போன்ற அரசியல் கட்சிகளும் பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த மாநிலங்களில் அழைப்பு விடுத்து இருந்தனர்.
வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், ஆனால் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தாக ‘NDTV’ செய்தி வெளியிட்டது. எனினும் ஊழியர்கள் வேலை நேரத்தில் கருப்பு பேட்ஜ்களை அணிவார்கள் என்றும் வேலை நேரத்திற்குப் பிறகோ அல்லது அதற்கு முன்னரோ ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 மாநிலங்களில் சுமார் 10,000 இடங்களில் நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றதாக ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்ததாக ‘PTI’ செய்தி வெளியிட்டது.
இன்று நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டுக் குழு நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வேளாண் விரோத சட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்ததாக என்று ‘ANI’ செய்தி வெளியிட்டது.
பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களில் சிறு தொகுப்பு:
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்வாபிமானி ஷெட்கரி சங்கத்னா உறுப்பினர்கள் புல்தானா மாவட்டத்தில் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக பி.டி.ஐ தெரிவித்தது.
மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வேலைநிறுத்தத்தை ஆதரித்ததால், நவி மும்பையில் உள்ள கல்யாண் மற்றும் வாஷி ஆகிய இடங்களில் உள்ள மொத்த வியாபார சந்தைகள் மூடப்பட்டன. மேலும் புனே, நாசிக், நாக்பூர் மற்றும் ஒளரங்காபாத் போன்ற முக்கிய நகர மொத்த சந்தைகளும் மூடப்பட்டதாக ‘டைம்ஸ் நவ் செய்தி’ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
பீகார்
தர்பங்கா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்தியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டது.
மேலும் மகா கூட்டணியைச் சேர்ந்த கட்சியினர் NH83 மற்றும் NH110 ஆகிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ‘டைம்ஸ் நவ் செய்தி’ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
மேற்கு வங்கம்
கொல்கத்தாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் ரயில் நிலையத்தில் இடது கட்சிகளின் ஆதரவாளர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டது.
ஆம் ஆத்மி கட்சியினர் காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டு இருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை காவல்துறையினர் வீட்டுக் காவலில் சிறைப்படுத்தி உள்ளதாக அக்கட்சி ட்விட்டரில் பதிவிட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போராட்டங்களை நடத்தியதாக பி.டி.ஐ தெரிவித்தது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மக்கள் நீதி மய்யம் கட்சியினர், ஆம்ஆத்மி கட்சியினர், தமிழ் மையத்தினர், பூவுலகின் நண்பர்கள், அமைப்புசாரா தொழிலாளர் சங்கதினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்
ஆதரவு அளித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் அதிமுக-பாஜக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டது.
டெல்லி
டெல்லியின் சரோஜினி நகர் சந்தையை சேர்ந்த கடைக்காரர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்கள் கைகளில் கருப்பு ரிப்பன்களைக் கட்டி இருந்ததாக ‘ANI’ செய்தி வெளியிட்டது.
தெலுங்கானா
தெலுங்கானாவின் காமரெட்டி பகுதியை சேர்ந்த போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கியதாக
‘டைம்ஸ் நவ் செய்தி’ நிறுவனம் செய்தி வெளியிட்டது
போராட்டத்தில் ஈடுபட்ட ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர்
அசாம்
கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பினர் பலர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர்
பொது வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதற்காக போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஜம்முவில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருவதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது.
கர்நாடகா
பலவேறு அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இணைந்து பெங்களூரில் உள்ள டவுன்ஹால் முன் விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்புத்தெரிவித்து வந்ததாக ‘ANI’ செய்தி வெளியிட்டது.
எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் ஜெயா நகர் சந்தை பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தகர்கள் மற்றும் சிறு கடை வியாபாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
ஆந்திரப் பிரதேசம்
விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் விஜயவாடாவில் போராட்டம் நடத்தினர்.
ஒடிசா
விவசாயிகளுக்கு ஆதரவாக புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே இரயில் மறியலில் ஈடுபட்டனர்.
குஜராத்
அகமதாபாத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்கள் சங்கம் தனது ஆதரவை நேற்றே வழங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் ஓடாது என ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தெரிவித்ததாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டது.
குஜராத்தில் கிராமப்புறங்களில் மூன்று நெடுஞ்சாலைகளை மக்கள் முற்றுகையிட்டு தடுத்து வைத்ததாக என ‘டைம்ஸ் நவ் செய்தி’ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
சத்தீஸ்கர்
காங்கிரஸ் மற்றும் சத்தீஸ்கர் கிசான் மஜ்தூர் மகாசங் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களும் சத்தீஸ்கரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் இயங்கவில்லை என ‘டைம்ஸ் நவ் செய்தி’ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பஞ்சாப், உ.பி., ஹரியானாவைச் சேர்ந்த 14 தொழிற்சங்கத் தலைவர்களுடன் இன்று இரவு 7 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
“இன்றைய கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ‘ஆம் அல்லது இல்லை’ என்பதை முன்வைப்போம் இதற்கிடையில் வேறு எதுவும் இல்லை” என விவசாயிகள் தலைவர் ருத்ரு சிங் மான்சா தெரிவித்ததாக ‘PTI’ செய்தி வெளியிட்டது.