இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார். தமிழீழ இனப்படுகொலைக்கு தொடர்ச்சியாக நீதி கேட்டுக் கொண்டிருந்த அவரது மறைவு தமிழினத்திற்கே பேரிழப்பாகும்.
இராயப்பு ஜோசப் அவர்கள் 1940ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவில் பிறந்தவர். தனது 27 வயதில் திருச்சபையில் முனைவர் பட்டம் பெற்று பணியைத் துவங்கினார். 1992-ம் ஆண்டு மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு நிகழ்த்தும் அநீதியைக் குறித்து கேள்வி கேட்டதாலேயே தொடர் கண்காணிப்புகளுக்கும், தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்.

ராயப்பு ஜோசப் அவர்களின் பங்களிப்புகள்
- 2001-ம் ஆண்டு ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற சமாதானப் பேரணியில் பங்காற்றியதோடு, அப்பேரணியில் உரையாற்றவும் செய்தார். மேலும் அனைத்து மதப் பிரதிநிதிகளும் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் சமாதானத்திற்காக பேசியதில் முக்கியப் பணிகளை மேற்கொண்டவர்.
- 2003-ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துள்ள வீடுகள், சொத்துகள் மற்றும் வழிபாட்டு இடங்கள் அனைத்திலிருந்தும் ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், எங்கள் மக்களை இலங்கையில் மற்ற பகுதியில் உள்ள மக்கள் வாழ்வதைப் போன்று நிம்மதியாக வாழ விடுங்கள் என்றும் இலங்கை ராணுவ அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
- 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்! ராணுவத்தினரே, திரும்பிச் செல்லுங்கள்!” என்ற முழக்கத்துடன் மன்னாரில் 30,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற பொங்குதமிழ் பேரணியில் முன்னிலை வகித்தார்.


- 2004-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்து உரையாற்றினார். விடுதலைப் புலிகள் முன்வைத்த ஆவணமான “இடைக்கால நிர்வாக சபை (Interim Self Governing Authority – ISGA)” என்பதிலிருந்தே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் எனும் புலிகளின் கோரிக்கையை அறிவித்தார்.

- 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி தாக்கிய பிறகு ஐ.நா பொதுச்செயலாளராக இருந்த கோபி அன்னான் இலங்கைக்கு வந்து கொழும்புவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது ராயப்பு ஜோசப் அவர்கள், கோபி அன்னான் முல்லைத் தீவிற்கு வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்தித்து மறுசீரமைப்புக்கான செயல்திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

புலிக்கொடி தமிழர்களின் தேசியக் கொடி
- மாவீரர் வாரத்தில் புலிக்கொடி ஏற்றிய மக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியபோது, அதைக் கண்டித்து “புலிக்கொடி தமிழர்களின் தேசியக் கொடி; தமிழ்த்தேசம் தங்களின் தேசியக் கொடியை ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை. அதை ஏற்றுவதால் அமைதிக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று பேசினார்.
- 2005-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், தொடர்ச்சியாக வட கிழக்கு பகுதிகளில் தாக்குதல் நடைபெறுவதை முடிவுக்குக் கொண்டுவரவும் பாதிரியார்களை அழைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்தார்.

- மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கு 2006-ம் ஆண்டு மன்னாரில் மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அது உருவாக துணைநின்றார்.
- 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் படகுத்துறை பகுதியில் இலங்கை விமானப் படை குண்டுவீசியதில் 15 தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் 7 குழந்தைகளும், ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் உள்ளடக்கம். அப்போது ராயப்பு ஜோசப் அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆவணப்படுத்தி சர்வதேசத்தின் முன்பு வைத்தார்.

- 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் கம்போடியா, ஜப்பான், நார்வே, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் அமைதிக்கான மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிலும் ராயப்பு ஜோசப் முக்கியப் பங்காற்றினார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு
- 2009 இறுதிப் போரில் மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். எவருக்கும் உறுதியான கணக்கு தெரியாத நிலையில், அரசாங்கத்தின் பல்வேறு முகமைகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புகளையும், ஐ.நாவின் அப்டேட்டுகள் அடிப்படையிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டு 1,46,679 தமிழர்கள் இப்போரில் கொல்லப்படவோ, காணாமலோ ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆவணத்தை 2011-ம் ஆண்டு வெளியிட்டார். சர்வதேச அளவில் இந்த ஆய்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
- 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 4,29,059 ஆக இருந்த மக்களின் எண்ணிக்கையானது, 2009 ஜூலை 10 அன்று ஐ.நாவின் அப்டேட்டில் 2,82,380 ஆக குறைந்திருக்கிறது. இதிலிருந்து அக்டோபர் 2008க்கும், ஜூலை 2009-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1,46,679 தமிழர்கள் கணக்கில்லாமல் போயிருப்பதாக தெரியவந்தது.
- இந்த ஆவணத்தை வெளியிட்டதற்காக ராயப்பு ஜோசப் அவர்களுக்கு இலங்கை அரசின் CID துறையானது தொடர்ச்சியாக மிரட்டல்களையும், தொல்லைகளையும் கொடுத்துவந்தது.
சர்வதேச விசாரணை கோரிக்கை
- 2014-ம் ஆண்டு அமெரிக்க தூதுக்குழுவை சந்தித்த போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்று கூறினார். மேலும் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டது, No Fire Zone கள் தாக்கப்பட்டது என பலவற்றையும் அவர்களிடம் விளக்கினார். சர்வதேச விசாரணை தேவை என்பதை அவர்களிடம் உறுதியாகச் சொன்னார்.

- 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு செயல்பாட்டாளர்களை இணைத்து தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக Tamil Civil Society Forum (TCSF) என்பதை உருவாக்கினார். தமிழர்களின் சுயநிர்ணய நிர்ணய உரிமையைப் பாதுகாப்பது இதன் கொள்கையாக இருக்கிறது.
- மாந்தை பகுதியின் தேவாலயத்திற்கு அருகில் 61 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. தேவாலயத்தில் காணமல் போன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வேண்டுதல் கூட்டத்தில் பங்கேற்ற ராயப்பு ஜோசப், “உண்மையை கண்டறியும் போராட்டத்தினை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அரசு பொய்களை மட்டுமே சொல்லிக் கொண்டு கடக்க முடியாது. உள்நாட்டு நீதி முறைகளில் நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். சர்வதேச விசாரணையே நமக்கு தேவை” என்று பேசினார்.
- தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ராயப்பு ஜோசப், ”போரின்போது அரசாங்கம் செய்த அனைத்துமே சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதுதான். உணவையும், மருந்தையும் கூட போரில் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இங்கே தூதரங்கள் அனைத்தும் அப்போது குருடாகவே கிடந்தன.” என்று பேசினார்.
- 2014-ம் ஆண்டு இலங்கை அதிபரின் காணமல் போனோருக்கான ஆணையம் உருவாக்கப்பட்டபோது, அதனை வெறும் கண்துடைப்பு என்று சொல்லி நிராகரித்தார். அதன் முன்பு சாட்சியங்களை முன்வைக்க மறுத்தார்.
2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவின் காரணமாக ராயப்பு ஜோசப் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
போர்ச் சூழல்களில் மக்களுக்கு துணை நின்றார். எத்தனையோ கொலை முயற்சிகள் நடந்தபோதும் தன் உயிரைப் பணயம் வைத்து தமிழர்களின் நீதிக்காக பேசினார். மக்களை நேசித்து, மக்களால் நேசிக்கப்பட்டு தமிழீழ விடுதலை உரிமைக்காக இறுதிவரை நின்ற அருட்தந்தை ராயப்பு ஜோசப் அவர்கள் தனது 80 வயதில் உயிர் நீத்திருக்கிறார். அவரது இழப்பு நீதிக்காக போராடும் தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
முகப்புப் படம்: 2007-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் அவர்களை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் சந்தித்து பேசியபோது.