உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்திற்குள் விசாரணைகள் நடத்துவதற்கு மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு(CBI) கொடுக்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்துள்ளார். 1989-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட இந்த உரிமத்தை இப்போது திரும்பப் பெற்றிருக்கிறது.

இந்த ரத்து நடவடிக்கைக்குப் பின் மகாராஷ்டிர மாநிலத்தில் சிபிஐ ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றால் முதலில் அம்மாநில அரசிடம் உத்தரவு பெற்ற பிறகே விசாரணையை தொடங்க முடியும். இது தொடர்பான உரிமையை ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலம் இவ்வருட தொடக்கத்தில் ரத்து செய்தது. மேலும் மேற்கு வங்காளம், சட்டீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகள் 2019-ம் ஆண்டே இவ்வுரிமையை ரத்து செய்துள்ளனர்.

ரிபப்ளிக் டிவியின் டி.ஆர்.பி முறைகேடு வழக்கில் பாஜக தலையீடு

TRP முறைகேடு தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் தொலைக்காட்சி, பாக்ஸ் சினிமா மற்றும் ஃபக்டி மராத்தி என்கிற மராத்தி தொலைக்காட்சி ஆகியவற்றின் டி.ஆர்.பி மதிப்பீடுகள் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பை காவல் துறை இவ்வழக்கினை விசாரித்து வந்தது. 

ஆனால் இந்த மோசடியுடனான தொடர்பில் உத்திரப் பிரதேசத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கினை சிபிஐ எடுத்து விசாரிக்கத் தொடங்கியது. இவ்விசாரணையை சிபிஐ மேற்கொள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா அரசாங்கம் கருதுவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது. சிபிஐ மூலமாக சில அரசியல் கணக்குகள் நடத்தப்படுவதாகவும், அது நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த அனுமதியினை திரும்பப் பெற்றுள்ளோம் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவின் ஆளும் கட்சி தலைவர்கள் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான டி.ஆர்.பி மோசடி வழக்கினை நீர்த்துப் போகச் செய்வதற்கே சி.பி.ஐ கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு

மகாராஷ்டிராவில் நடிகர் சுஷாந்த் சிங் இறந்த வழக்கிலும் விசாரணையினை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கையானது சுஷாந்த் சிங் வழக்கில் சிபிஐ-க்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது எனவும், அந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி சுஷாந்த் சிங் பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்து கிடந்தார். மும்பை காவல்துறை அவரது மரணத்தை தற்கொலை வழக்கு என்று பதிவு செய்தது. நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பாட்னாவில் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தாக்கல் செய்த வழக்கையடுத்து சிபிஐ ஆகஸ்ட் மாதம் முதல் விசாரணை நடத்தத் தொடங்கியது.

இதையடுத்து அக்டோபர் 7-ம் தேதி, சுஷாந்த் சிங்கின் குடும்பம் சிபிஐக்கு ஒரு கடிதம் எழுதியது, அதில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின்(AIIMS) அறிக்கையில் சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை என்று தெரிவித்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் சுஷாந்த் சிங்கின் குடும்பம், அதன் வழக்கறிஞர் விகாஸ் சிங் மூலம், “சந்தேகத்திற்குரிய” பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை மீண்டும் ஆய்வு செய்ய ஒரு புதிய மருத்துவக் குழுவை அமைக்குமாறு புலனாய்வு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் சிபிஐ-க்கு சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில்,ஆறு பேர் கொண்ட தடயவியல் மருத்துவர்கள் குழு, விஷம் கொடுக்கப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், சுஷாந்த் சிங்கின் மரணம் “ தூக்கு போட்டு இறந்த தற்கொலை வழக்கு” ​​என்பதை உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *