அமலாக்கத்துறை

யார் கையில் அமலாக்கத்துறை (ED)? ஏன் எதிர்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது? – குமரன்

எங்கு பார்த்தாலும் இதே பேச்சு… அமலாக்கத் துறை… அமலாக்கத் துறை… அமலாக்கத் துறை!

‘என்ன ஆச்சு’ எனக் கேட்டபடி நகர்ந்துவிடக் கூடாது என்பதே நிலைமை! நிகழும் அரசியல் போக்கில் அமலாக்கத்துறையை செயல்பாடுகளை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து போய்விடக்கூடாத அரசியல் நிலைமையில் இருக்கிறோம்.

ஒன்றிய அரசின் நிதித்துறையின் கீழ் இயங்குகிறது அமலாக்கத்துறை. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், தப்பியோடிய பொருளியல் குற்றவாளிகள் சட்டம், பண மோசடி தடுப்புச் சட்டம் போன்ற சட்டத்தின் கீழ் சட்டப் புறம்பான  வழிகளில், பணப் பரிமாற்றம், குற்றச் செயல்களின் மூலம் சொத்து சேர்ப்பு ஆகிய குற்றங்களை விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை 1956-ல் அமைக்கப்பட்டது.

மிகப் பழமையான விசாரணை அமைப்பு என்றாலும் அண்மைக் காலங்களில் அமலாக்கத்துறையின் பெயர் ஊடகங்களிலும் பாஜக அல்லாத எதிர்க்கட்சி வட்டாரங்களிலும் மிகுதியாக பேசப்படும் ஒரு துறையாக மாறியிருக்கிறது.

அதுவும் 14-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசின் முகவாண்மை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து பக்கச் சார்புடன் விசாரணைக்காக ஏவி விடப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஒன்றிய அரசின் முகவாண்மை அமைப்புகளுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதினர்.

இவ்வாறு ஒன்றிய அரசின் முகவாண்மை அமைப்புகளுக்கு எதிராக அதுவும் குறிப்பாக அமலாக்கத்துறைக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றன.

பத்தாண்டுகளுக்கு முன்னான ஊழல் வழக்கில் தமிழ்நாட்டின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகளை கவனித்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருப்பிடம் மற்றும் தலைமைச் செயலகத்தில் அவருடைய அலுவலகம் அமலாக்கத்துறையால் சோதனை இடப்பட்டது.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்தும் அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளை ஒடுக்க திட்டமிட்டு ஏவிவிடப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டி கண்டன அறிக்கைகள் வெளியிட்டதோடு ஒரு மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தையும் நடத்தியுள்ளன.

கைது செய்து கொண்டு செல்லப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாவது ஏன்?

கடந்த 2014-ல் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து அமலாக்கத்துறை 121  அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதில் 115 பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

அதுமட்டுமல்ல அமலாக்கத்துறை பண மோசடி சட்டம் செயலுக்கு வந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து பதிவு செய்த வழக்குள் 4700; அவற்றில் 2186 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் ஏற்படுத்திய நெருக்கடி

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே

2019 – மகாராட்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலை  சிவசேனா – பாஜக கூட்டணியாகச் சந்தித்தது.   தேர்தல் முடிவுக்குப் பிறகு  சிவசேனா -பாஜக கூட்டணி  உள்முரண்களால் முறிவுக்கு வந்தது.

சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. சிவசேனா ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே பண மோசடிச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து  அதன் முதன்மை கட்சித் தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை தொடர்ந்து அழைப்பாணைகளை அனுப்பிக் கொண்டிருந்த்து.

சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத் , சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க அமலாக்கத்துறை தனக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் அவ்வாறு கவிழ்க்கவில்லை எனில் அமலாக்கத்துறை சோதனைகளுக்கு ஆளாக நேரும் என மிரட்டல் விடுவதாக மாநிலங்களவைத் தலைவருக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார்.

அமலாக்கத்துறை கொடுத்த நெருக்கடியின்  விளைவாக சிவசேனா கட்சியின் ஏக்நாத் சிண்டே  தலைமையிலான  40 சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய போட்டிக் குழு உருவாகி பாஜக -ஏக்நாத் சிண்டே கூட்டணி அரசு உருவானது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த பிறகே அமைதியாக உறங்குகிறேன் என மராட்டியத்தின் கர்சவர்தன் பாட்டீல் அமலாக்கத்துறையின் சோதனை, நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

குறிவைக்கப்பட்ட கேரளாவின் தாமசு ஐசக்

கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் தாமசு ஐசக்

கேரள அரசின் உள்கட்டமைப்பு – முதலீட்டு வாரியம் வெளிநாட்டு பத்திரங்களை  வெளியட்டதற்காக அமலாக்கத்துறை  கேரள முன்னாள் நிதி அமைச்சர் தாமசு ஐசக் மீது வழக்கு தொடுத்தது. பிப்ரவரி 2018 ல் கேரள அரசு நிறுவனம் வெளியிட்ட பத்திரங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கிய உண்மையை ரிசர்வ வங்கி கேரள உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 2023 ல் தெரிவித்தது.  அமலாக்கத்துறை அவர் பண மோசடியில் ஈடுபட்டதற்கான எந்த குற்றச்சாட்டினையும் உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக்

பாலிவுட் திரைக்கலைஞர் சாருக்கானின் மகன் ஆர்யன்கான் மீது ஒன்றிய அரசின் போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு திட்டமிட்டு பொய் வழக்கு பதிவுசெய்ததை  தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவரான நவாப் மாலிக் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பிறகு நீதிமன்றத்தால் ஆர்யன்கான் மீதான வழக்கு முழுமையாக நீக்கப்பட்டது தனிக்கதை.

இதனைத் தொடர்ந்து நவாப் மாலிக் மீது 2003 ,2005 ஆம் ஆண்டுகளில் சட்டப்புறம்பாக பணபரிமாற்றத்தில்  ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

மும்பையின் குர்லா பகுதியில் உள்ள கவுலா குடியிருப்பை இரண்டு தவணைகளில் நவாப் மாலிக் 2003 , 2005 காலங்களில் பணம் செலுத்தி வாங்குகிறார். இந்த குடியிருப்பை வாங்கியதற்கான முறையான பத்திர பதிவும் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களும் நவாப் மாலிக் தரப்பில் காட்டப்பட்டிருக்கிறது.

மேற்படி இடத்தை மும்பை நிழல் உலக வில்லன் தாவூத்தின் கூட்டாளியின் ஓட்டுநரிடம் இருந்து பெற்றதாக அமலாக்கத்துறை பதிந்த வழக்கைத் தொடர்ந்து தேசியப் புலனாய்வு முகமையும் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வில் இப்போது வழக்கு பதிவுசெய்திருப்பதும்  நவாப் மாலிக்கை சிறையில் இருந்து பிணையில் வெளிவராத வண்ணம் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை புனைந்து வருகிறது என அவரது வழக்குரைஞர் தரப்பு தெரிவித்திருக்கிறது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேசு பாகல்

பூபேசு பாகல்

சத்தீசுகர் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற இருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காக தங்களது குடும்பத்தோடு சத்தீசுகருக்கு வருகை தந்திருப்பதாக முதல்வர் பூபேசு பாகல் கூறுகிறார். மேலும் பாஜக ஆளக்கூடிய மாநிலங்களான குசராத் , உத்திரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் நடைபெறவில்லையா? அங்கெல்லாம் அமலாக்கத்துறை செல்ல மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சத்தீசுகரில் 2000 கோடி பெறுமான மதுபான ஊழல் வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அந்த மாநிலத்தின் கலால் வரி ஆணையரை துன்புறுத்தி முதல்வர் பூபேசு பாகலுக்கு எதிராக சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்துவதாக சத்தீசுகர் அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் மாநிலத்தில் அச்ச உணர்வை உருவாக்க வேண்டாம் என அமலாக்கத்துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

வருகின்ற தேர்தலுக்குள் எதிர்க்கட்சியினர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி பாஜக வெற்றிபெற அமலாக்கத்துறை பயன்படுவதாக நேரடியாக பாகல் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேற்குவங்கத்தில் பாஜகவிற்கு மாறிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்

மேற்குவங்கத்தில் நடைபெற்ற சாரதா ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரசின் முகுல்ராய், சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் பாஜக கட்சிக்கு மாறிய பிறகு சாரதா ஊழல் வழக்கு விசாரணை அமலாக்கத்துறையால் கைவிடப்பட்டிருக்கிறது.

பாஜகவிற்கு தாவிய அசாம் முதல்வர்

பாஜகவில் இணைந்த பிறகு அசோமின் முதல்வர் ஹிமாந்த் பிசுவா சர்மா

லூயிஷ் பிசர் எனும் அமெரிக்க கட்டுமானப் பொறியியல் மேலாண்மை நிறுவனத்தின் ஊழல் 2015-ல் வெளிவந்தது. அந்நிறுவனம் 1998 -2010 காலகட்டத்தில் கட்டுமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 6 கோடி ரூபாய் கையூட்டு அளித்திருப்பதாக வழக்கு. அதன் ஊழியர்களில் ஒருவர் நியூசெர்சியில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர் மீது தண்டத்தொகை விதிக்கப்பட்டிருக்கிறது.

லூயிசு பிசர் நிறுவனம் கோவா மற்றும் அசாம் அரசுகளுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்த பிறகு அசோமின் முதல்வர் ஹிமாந்த் பிசுவா சர்மா பாஜகவில் இணைந்து 2021-ல் பாஜக சார்பாக முதல்வராயினார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முதல்வர் ஹிமாந்த் பிசிவா சர்மா மீதான வழக்கில் மெத்தனப் போக்கைக்  கடைபிடித்து வருவதாக அங்குள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

லூயிஷ் பிசர் வழக்கில் 2018-ல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அசாமை விட்டு கோவாவை நோக்கி தனது கவனத்தைத் திருப்பியது.

கோவாவில் பாஜகவிற்கு தாவிய காங்கிரஸ் தலைவர்கள்

கோவா காங்கிரசு கட்சியின் முன்னாள் முதல்வர் தகம்பர் காமத் மற்றும் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சர்ச்சில் அலெமோ ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன. பின்னாளில் கோவாவின் குதிரைபேரம் நடத்தவும் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு கட்சி தாவுவதற்கும் லூயிஸ் பிசர் வழக்கு பயன்பட்டது. அலெமா வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தனது ஒப்புதலைக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசுமீரில் கெடுபிடி

காசுமீரின் 370 சிறப்புரிமை நீக்கப்பட்ட பிறகு காசுமீரில் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது அமலாக்கத்துறை கெடுபிடிகள் கூடுதலாகியுள்ளன.

குறிவைக்கப்படும் ஆம் ஆத்மி

தில்லி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்திர செயின் நடத்தி வரும் நகைக்கடை நிறுவனத்திற்கு கொல்கத்தாவில் இருந்து ரூபாய் 4.80 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. நிறுவனச் சட்டத்தின் படி அதில் சத்யேந்திர செயினின் பங்குத்தொகை வெறும் ரூபாய் 57 இலட்சமாக இருக்கும்போது  வரம்பில் வராத குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பில் இருந்து வாக்குமூலமாக பெற்று அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து  கைதுசெய்துள்ளது.

அதேபோல ஆம்ஆத்மியின் கல்வி அமைச்சர் மதுபான ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல்

நேசனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்குச் சென்ற ராகுல்

எல்லோராலும் நன்கு அறியப்பட்ட நேசனல் ஹெரால்டு ஊடக வழக்கில் காங்கிரசு கட்சியின் தலைவர்களான சோனியா மற்றும் ராகுல் மீது சுப்பிரமணியசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. 2015 வரை அமலாக்கத்துறை ஒரு வழக்கை விசாரிக்க வேண்டுமெனில் சிபிஐ , வருமான வரித்துறை , மாநில காவல்துறை அல்லது அரசின் ஏதாவது  முகவாண்மை அமைப்பு பணமோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.

2015 ல் அமலாக்கத்துறையின் இயக்குநராக பதவியேற்ற கர்னைல்சிங் வேறு புலனாய்வு அமைப்புகள் வழக்கு பதிவு செய்யாமலே அமலாக்கத்துறை பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இசைவாக ஒரு உள்ளக சுற்றறிக்கையை அனுப்புகிறார். அதனடிப்படையில் அமலாக்கத்துறை நேசனல் ஹெரால்டு ஊடக வழக்கில் வழக்குபதிவு செய்து சோனியா மற்றும் இராகுலிடம் விசாரணை செய்கிறது.

ஒரு பெரிய நகைச்சுவை என்னவெனில் நேசனல் ஹெரால்டு பணமோசடி தொடர்பாக புகார் அளித்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்பாக எவ்வித சான்று ஆவணங்களையும் நீதிமன்றத்தில் கையளிக்கவில்லை. பின்னர் தான் தொடர்ந்த வழக்கில் புலனாய்வு செய்வதற்கு உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார். வழக்கின் முதன்மை புகார்தாரர் மேல் நடவடிக்கைக்கு தடை பெற்றிருந்த போதிலும் நேசனல் ஹெரால்டு வழக்கு இன்றும் தொடர்கிறது.

பீகார் & ஆந்திரா

பீகாரில் துணை முதல்வர் தேசஷ்வி மீதும் அவருடைய உறவினர்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து வருகிறது. அதேபோல ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை கவிதா மீதும் அமலாக்கத்துறை விசாரணை நீண்டு வருகிறது.

நாடு முழுவதும் பாஜக அல்லாத பல்வேறு எதிர்கட்சியினரை மிரட்ட அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என்பது குற்றச்சாட்டு மட்டுமல்ல அது உண்மையும் ஆகும். அதே நேரத்தில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் வந்த குற்றஞ்சாட்டப்பட்டோர் பாஜக கட்சியில் சேர்ந்தவுடன் அவர்கள் மீதான அமலாக்கத்துறை நெருக்குதல்கள் மறைந்து போய்விடுகின்றன என்பதும் இங்கே கவனிக்கதக்கதாகும்.

குடியாட்சி அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இறுகும் அமலாக்கத்துறைச் சட்டங்கள்!

பன்னாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பயங்கரவாத செயல்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் ஆகியவற்றின் மூலம் சட்டப்புறம்பாக பணம் கைமாறுவதைத் தடுப்பதற்காகவே பண மோசடி தடுப்புச் சட்டம்( PMLA ) 2002-ல் இயற்றப்பட்டு 2005-ல் நடைமுறைக்கு வந்தது.

இந்தச் சட்டம் கொண்டுவரப்படும் போதே எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் பழிவாங்கல் முயற்சிகளுக்கு பயன்படப் போகிறது என குடியாட்சி உரிமை செயற்பாட்டாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டது.

வெவ்வேறு காலங்களில் இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் அதனை அரசு முகவாண்மை அமைப்புகளின் விருப்பங்களுக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2015 வரை பண மோசடி தடுப்புச் சட்டம் நாடாளுமன்ற வாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. 2019 ல் பணச் சட்ட முன்வடிவு (Money Bill ) முறையில் மாநிலங்கவையில்  வாதங்களுக்கு உட்படுத்தப்படாத வகையில் நிறைவேற்றப்பட்டது.

பணச் சட்ட முன்வடிவின் மூலம் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது செல்லத்தக்கதல்ல எனக் கோரி தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் கிடப்பில் உள்ளது.

இதுவரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டம் அரச அமைப்புகளால்  குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக உள்ள அனைத்து பிரிவுகளும் இச்சட்டத்தில் நீக்கப்பட்டு ஒரு கொடுஞ்சட்டமாக பண மோசடி தடுப்புச் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. எப்படி மக்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளை தேசியப் புலனாய்வு முகமையும் , ஊபா சட்டமும் ஒடுக்கி வருகிறதோ இதே போல தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள் , குடியாட்சி செயற்பாட்டாளர்கள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் என அனைவரையும் குறிவைத்து ஒடுக்குவதற்கு இச்சட்டம் வழிவகுத்துள்ளது. பிணை பெறும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கைது செய்கிறவர்களிடம் பெறக்கூடிய ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லும்; மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டு விவரங்களைத் தரத் தேவையில்லை போன்ற கடும் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

படம்: நன்றி – scroll.in

இப்படியான நடைமுறைகளைக் கொண்டுள்ள அமலாக்கத்துறையால் உழவர்களுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் கருப்புச் சட்டங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியமைக்காக ஆய்வாளர் நவ்சரண்சிங் அமலாக்கத்துறை சோதனைக்கு ஆளாகினார்.

குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிராக பேசிய முன்னாள் ஆட்சிப் பணி உறுப்பினரும் மாந்த உரிமைச் செயற்பாட்டாளருமான ஹர்சு மந்தர் , குசராத் இனப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு உடனிருந்த முன்னாள் டிஜிபி சிரிகுமார் , குசராத் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளான  பில்கிஷ் பானு வழக்கை நடத்திய தீஷ்டா செடால்வாத் போன்றோரும் அமலாக்கத்துறை சோதனைக்கு ஆளாகினர்.

காசுமீரில் மீறப்படும் மாந்த உரிமைகள் தொடர்பாக கண்டன அறிக்கைகள் வெளியிட்ட ஆம்னஷ்டி இண்டர்நேசனல் அமைப்பின் வங்கிக் கணக்குகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டன.

மோடி அரசின் மக்கள் பகைக் கொள்கைகளை விமர்சித்து எழுதும் ஊடகங்களும் அமலாக்கத்துறையின் நெருக்கடிக்கு தப்பவில்லை.

இதுவரை பாஜக ஆட்சியில் 15-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள், தனிப்பட்ட ஊடகவியலாளர்கள் அமலாக்கத்துறையின் சோதனைக்கும் வழக்குகளுக்கும் ஆளாகியுள்ளனர். ரபேல் ஊழல் பற்றி எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகவியலாளர், குசராத் கோப்புகள் என 2002 மோடி ஆட்சியில் நடைபெற்ற முசுலீம் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் ராணா அயூப், மோடியின் கேள்விகள் எனும் ஆவணப்படத்தை வெளியிட்ட BBC ஊடக நிறுவனம் , The News click, Newslaundry, Times Group, The Greater Kashmir, Dainik bhaskar மற்றும் உபி கத்ராசில் தலித் இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த குற்றம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மலையாள ஊடகவியலாளர் சித்திக் கப்பன் என பணமோசடி தடுப்புச் சட்ட வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு சோதனைகள், விசாரணைகளுக்கு ஆளான ஊடகவியலாளர்கள் பட்டியல் நீள்கிறது.

படம்: நன்றி – Newslaundry

ஒட்டுண்ணி முதலாளிகளும் அமலாக்கத்துறையும்!

தாராளமய பொருளியல் கொள்கை செயல்படுத்தப்பட்ட பிறகு அரசின் கைகளில் உள்ள பொதுச் சொத்துகளை தனியார் பெருங்குழும முதலாளிகள் மலிவான விலைக்கு கொள்ளையிடுவதும் அதற்காக அரசின் சட்ட திட்டங்களை  வளைப்பதுமான போக்கு இருக்கிறது. மேலும் அரசின் நிறுவனங்களைப் பயன்படுத்தி பங்குச்சந்தை மோசடிகளில் ஈடுபடுவதும், பொதுத்துறை வங்கிகளின் மூலம் கடன்களைப் பெற்று வாரக் கடன்தாரர்களாக சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படுவதும் ஒரு பொதுப்போக்காக மாறியிருக்கிறது.

அண்மையில் ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி அதானி நிறுவனம் தனது பங்குகளுக்கு பல மடங்கு விலையேற்றியிருப்பதும் பல்வேறு போலிப் பெயர்களில் துணை நிறுவனங்களை உருவாக்கி சட்டப் புறம்பான பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதும் அம்பலமாகியிருக்கிறுது. இதனை கண்டறியும் செபி போன்ற அமைப்புகள் அதானி நிறுவனங்களின் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டாக முன்வைத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் ஒன்றிய பாஜக அரசு ஒப்பவில்லை. அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட  எல்ஐசி போன்ற அரசு நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன.

ஒன்றியத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்திய ரபேல் விமான ஊழல் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டன.

மோடியின் ஆட்சியில் அதானி  உள்ளிட்ட  கனிமவளக் கொள்ளையர்கள் பயன்பெறும் வகையில் நிலக்கரிச் சுரங்கங்கள் அடிமாட்டு விலைக்கு தாரைவர்க்கப்பட்டதை The Reporters collective  எனும் புலனாய்வு ஊடகம் அம்பலப்படுத்தயிருக்கிறது. ஏல விதிமுறைகள் ஒரு சில பெருநிறுவனங்கள் இலாபமீட்டும் வகையில் நீர்த்துபோகச் செய்யப்பட்டுள்ளதையும் போட்டியாளர்கள் இல்லாமல் நிலக்கரி சுரங்கங்கள் விலைக்கு விற்கப்பட்டதையும் தலைமை கணக்காயரின் உள்ளக அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பது ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய இலட்சம் கோடிக்கணக்கான தொகைகள் இலாபமாக பெருநிறுவனங்களின் வசமாகியுள்ளன.

பாஜக ஆட்சியில் அமர்ந்ததில்  இருந்தே பொதுத்துறை வங்கிகளை ஏய்த்து கடன் பெற்று வெளிநாட்டிற்கு தப்பியோடும் குற்றவாளிகள் அதிகரித்துள்ளனர்.

ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொடுத்த தகவல்படி கிட்டதட்ட 33 பேர் இவ்வாறு வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விஜய் மல்லையா 9000 கோடி ரூபாய் கடனாகப் பெற்று வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவரும் , லலித் மோடியும்  தப்பியோட அன்றைய வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் மற்றும் இராசஸ்தானின் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜேவும் உதவி செய்தனர் என்பது குறப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேசனல் வங்கியில் 13000 கோடி ரூபாயை ஏமாற்றி மோசடி செய்த முகுல்சோக்சி , நீரவ் மோடி போன்றவர்கள் பற்றிய குற்றங்களை  தொழிலதிபரான வைபவ் குரானியா 2015ல் ஒன்றிய அரசின் கார்பரேட் அமைச்சகத்திற்கு கடிதமாக எழுதியுள்ளார். முகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தி மக்களை ஏய்த்ததும் போலி கடன் ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி கடன்பெற்றதும் தனிநபரால் தில்லி பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் கண்டுகொண்டன. அப்போது அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடி இருந்தனர்.

விஜய் மல்லையா, முகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி

அமலாக்கத்துறை முகுல் சோக்சியின் நிறுவனத்தை பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்திருப்பது அந்த வழக்கின் விசாரணையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மேலும் மிகப்பெரிய ஐசிஐசிஐ வங்கியில் 22000 கோடி ரூபாய்  வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட ரிசி அகர்வாலின் ABG கப்பல் கட்டுமான நிறுவனத்தின் மோசடியை எர்ன்ஸ்ட் & யங்க் எனும் கணக்கு தணிக்கை ஆய்வு நிறுவனம் 2012 -2017 காலகட்டத்தில் செய்த பணமோசடிகளை ஆய்ந்து கண்டறிந்த பிறகே 2019 எஸ்பிஐ அந்நிறுவனத்தின் மீது புகார் அளிக்கிறது.

இந்த நிறுவனம் 2006 ல் குசராத் அரசின் கடற்போக்குவரத்து வாரியத்திடம் பெற்ற நிலத்திற்கு குத்தகை தொகை 2 கோடியை தரவில்லை என தலைமை கணக்காயர் அலுவலகம் எச்சரிக்கை செய்திருந்தது.

மேலும் இந்நிறுவனம் மோடி குசராத்தின் முதல்வராக இருந்த போது வைப்ரண்ட் குசராத் நிகழ்வில் பங்கேற்று குசராத் அரசின் உதவியால் பல்வேறு வங்கிகளில் கடன்பெற்று வளர்ந்தது.

2022 ல் சிபிஐ ABG நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்தது. அதன்பிறகு ஓராண்டு கழித்தே அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் இந்த நிறுவனம் வந்தது.

கடந்த 8 ஆண்டுகள் மோடி ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் கிட்டதட்ட 12 இலட்சம் கோடி ரூபாயை பெருநிறுவனங்கள் பெற்ற வாரக்கடனால்  இழந்துள்ளது. வாரக்கடன் பெற்ற பெருநிறுவனங்கள் குறுக்குவழியில் தப்பிக்கும் வழியில் ரிசர்வ் வங்கி கடன் செலுத்தாத நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பொருளியல் குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டிய அரசின் முகவாண்மை அமைப்புகளின் கண்காணிப்பு இன்மையும் அரசின் ஒட்டுண்ணி முதலாளிய ஆதரவு கொள்கையும் பெருநிறுவனங்கள் மக்கள் பணத்தைக் கொள்ளையிட துணைபோயுள்ளது. இவற்றில்  அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பெரும் கேள்விக்குறியேயாகும்.

இந்துராஷ்டிர பாசிச ஆட்சி அமைப்பின் ஏவல் அமைப்புகளாக ஒன்றிய அரசின் முகவாண்மை அமைப்புகள்!

ஆர்எஸ்எஸ் எனும் சனநாயகப் பகை பாசிச அரசியலால் வழிநடத்தப்படும் அரசியல் கட்சியாக பாஜக எனும் தேர்தல் அரசியல் கட்சி ஒன்றிய அரசின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

 ஆர்எஸ்எஸ் இன் நூற்றாண்டான வருகிற 2024 க்குள் இந்து ராஷ்டிரத்தை சட்டப்பூர்வ வழியில்  அமைப்பதற்கு  பாஜக முயன்று வருகிறது. அதற்கு ஒன்றியத்தின் அனைத்து சனநாயக நிறுவனங்களின் தன்னாட்சியை அழித்து வருகின்றது.

இந்திய ஒன்றிய சனநாயக அலகுகளான மாநிலக் கட்சிகளை ஒழித்துவிட்டு ஒரே கட்சி, ஒரே தலைமை எனும் பாசிச வழிமுறையை கையாண்டு வருகிறது.

எதர்க்கட்சிகளை , மக்கள் இயக்கங்களை அச்சுறுத்தி மிரட்டவும் , பணியவும் வைப்பதற்கு சிபிஐ, வருமான வரித்துறை , தேசிய புலனாய்வு முகமை , அமலாக்கத்துறை   என்ற ஒன்றிய அரசின் முகவாண்மை அமைப்புகள் பயன்பட்டு வருகின்றன.

நேரடியாக இவை சனநாயக விழுமியங்களையும் குரல்களையும் நசுக்கி வருகின்றன. தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாத  மாநிலங்களில் அமலாக்கத்துறையினை வைத்து மாநில கட்சிகளை பிளக்கவும் , விலைக்கு வாங்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில கட்சிகளை ஊழல் கட்சிகளாக சித்தரித்தும் மாநில மக்களிடம் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை குலைப்பதை ஒரு தேர்தல் யுக்தியாக பயன்படுத்தி வருகிறது. அதற்கான கருவிகளாக இந்த முகவாண்மை அமைப்பு பயன்படுத்தப்படுகின்றன.

அரசமைப்பில் சட்டம் –  ஒழுங்கு  மாநில அரசின் பட்டியலில் இருந்து மெல்ல மெல்ல இத்தகைய புலனாய்வு அமைப்புகளிடம் பறிபோவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது.

பாசிச சக்திகள் பரப்பி வரும் ஊழல் ஒழிப்பு என்ற போலி மாயைப் பரப்புரைக்குள் வீழாமல் பாசிச சக்திகளை எதிர்த்து போராடவும் , மாநில உரிமைகளைக் காக்கவும் , சனநாயகத்தை வலுப்படுத்தவும் ,  அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் முகவாண்மை அமைப்புகளின் மக்கள் பகைப் போக்கை எதிர்த்து அனைத்து சனநாயக ஆற்றல்களும் ஒன்றுபட வேண்டும்.

உதவிய இணைப்புகள்

  1. https://m.thewire.in/article/government/tracking-the-ed-case-by-case-puzzling-questions-emerge-in-its-handling-of-opposition-leaders
  2. https://scroll.in/article/1027571/how-the-modi-government-has-weaponised-the-ed-to-go-after-indias-opposition
  3. https://www.aljazeera.com/amp/economy/2023/3/1/modi-govt-allowed-adani-coal-deals-it-knew-were-inappropriate
  4. https://www.aljazeera.com/economy/2023/2/27/how-india-allowed-rp-sanjiv-goenka-firms-to-beat-coal-auctions

– குமரன்

குமரன்

குமரன் அவர்கள் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் முக்கியமான செயல்பாட்டாளர் ஆவார். நிகழ்கால அரசியல் குறித்த பல்வேறு உரையாடல்களை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருபவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *