இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்ட அசாம் பேச்சுவார்த்தைக்கான குழுவின் இதுவரை வெளிவராத அறிக்கையினை அனைத்து அசாம் மாணவர் சங்கம் நேற்று (11-8-2020) வெளியிட்டுள்ளது. 1951-க்கு முன்பு அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்களாக கருதப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
1971-ல் வங்கதேச பிரிவின் போதும், அதற்கு முன்பான காலங்களிலும் ஏராளமான வங்கதேசத்தவர்கள் அசாமில் குடியேறினர். அக்குடியேற்றங்கள் அசாமின் பழங்குடி மக்களின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் அமைவதாக அசாம் முழுதும் போராட்டங்கள் எழுந்தன. 1985-ம் ஆண்டின் போது போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து அசாம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வண்ணம் ”அசாம் ஒப்பந்தம் (Assam Accord)” போடப்பட்டது.
அந்த ஒப்பந்தம் அசாமில் யார் இந்திய குடிமக்கள் என்பதை வரையறை செய்தது. மார்ச் 24, 1971 என்ற தேதிக்கு முன்பு வந்த அனைவரையும் இந்தியக் குடிமக்களாகவும், அதற்கு பின்பான காலங்களில் குடியேறியவர்களை வெளிநாட்டவர்களாகவும் அறிவித்தது. இந்த சரத்தானது இந்தியக் குடிமக்களுக்கான உரிமைகளை உறுதி செய்யும் விதத்தில் அமைந்தது.
மேலும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பாக அசாமிய பூர்வகுடி மக்களின் சமூக-அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்காக பிரிவு 6 (Clause 6 of Assam Accord) என்ற பகுதி சேர்க்கப்பட்டது.
பிரிவு 6 என்ன சொல்கிறது?
அசாமிய மக்களின் கலாச்சாரம், மொழி, சமூக உரிமைகள், பண்பாடு போன்றவற்றினை பாதுகாத்து மேம்படுத்துவதற்காக, அரசியல் சாசன அளவிலும், சட்டப்பூர்வ வழியிலும், நிர்வாக அளவிலும் பாதுகாப்புகள் வழங்கப்படும் என்று அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6 சொல்கிறது.
“Constitutional, legislative and administrative safeguards, as may be appropriate, shall be provided to protect, preserve and promote the cultural, social, linguistic identity and heritage of the Assamese people.” – Clause 6 of Assam Accord
1985-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அசாம் ஒப்பந்தமானது, அசாமியர்களின் 6 வருட கால கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டதாகும். அந்த ஒப்பந்தத்தில் யார் இந்தியக் குடிமக்கள் என்பது 1971-ம் ஆண்டினை வைத்து வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ”யார் அசாமியர்கள்” என்ற வரையறைக்குள் யாரெல்லாம் வருவார்கள் என்று வரையறை செய்யவில்லை. இதன் காரணமாக அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6 சர்ச்சைக்குரிய பிரிவாக தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படாமலே இருந்து வந்தது.
1985-க்கு பின்பான காலங்களில் பல்வேறு ஆணையங்கள் உருவாக்கப்பட்டு பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. பிரிவு 6 குறித்த அந்த பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை சட்ட மசோதாவை இந்திய அரசு கொண்டுவந்த போது, அதனை எதிர்த்து அசாமில் மீண்டும் போராட்டங்கள் தீவிரமடைய ஆரம்பித்தன. அப்போது பிரிவு 6-ன் மீதான உரிமையை அசாமிய இயக்கங்கள் கோரின. அசாமிய சமூகத்தை சமாதானப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் போது, அரசு பிரிவு 6 குறித்து பேசுவதைத் துவங்கியது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பிப்லாப் குமார் சர்மா தலைமையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், அனைத்து அசாம் மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் (AASU) உள்ளிட்டோர் அடங்கிய குழுவினை உருவாக்கியது. அக்குழு பல்வேறு ஆலோசனைகளுக்கும், ஆய்வுக்கும் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி அறிக்கையினை அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்களிடம் ஒப்படைத்தது. பின்னர் அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த அறிக்கையில் என்ன இருந்தது என்பது அரசு பொதுவில் வெளியிடவில்லை.
இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து அந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி அனைத்து அசாம் மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அறிக்கையின் பகுதிகளை பொதுவில் வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில் என்ன இருக்கிறது?
அந்த அறிக்கை முக்கியமாக ”யார் அசாமியர்கள்” என்பதற்கான வரையறையைக் கோருகிறது. மேலும் அசாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது.
யார் அசாமிய மக்கள் என்பதனை அந்த அறிக்கை 5 பகுதிகளாக வரையறுக்கிறது.
- அசாமிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்து, 1951 ஜனவரி 1ம் தேதிக்கு முன்பு வரை அசாமில் குடியிருந்த அனைத்து இந்திய குடிமக்களும்.
- ஜனவரி 1, 1951-க்கு முன்பு அசாமில் இருந்த அனைத்து அசாமிய ’பழங்குடி’ மக்கள் சமூகங்களும்.
- ஜனவரி1, 1951-க்கு முன்பு அசாமில் இருந்த அனைத்து அசாமிய சுயாதீன மக்கள் சமூகங்களும்.
- ஜனவரி 1, 1951-க்கு முன்பு அசாமில் வசித்த அனைத்து இந்திய குடிமக்களும்.
- மேலே குறிப்பிட்ட அனைத்து பிரிவினரின் வாரிசுகளும்.
1970-களில் நடைபெற்ற போராட்டத்தின் போது, 1951-க்கு பின்பான காலத்தில் அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் கண்டறிந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் அசாம் ஒப்பந்தமானது 1971 என்பதைத் தான் வரையறையாக வைத்தது.
பிரிவு 6 என்பது அசாமியர்களின் கலாச்சார, பண்பாட்டு, அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது என்றும், அது 1951 முதல் 1971 வரையிலான காலங்களில் அசாமில் நுழைந்தவர்களுக்கு பொருந்தாது என்றும் இக்குழுவினர் வாதிடுகிறார்கள்.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால் 1951 முதல் 1971 வரையிலான காலத்தில் அசாமில் குடியேறியவர்கள், அசாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியக் குடிமக்களாக கருதப்படுவார்கள், ஆனால் அசாமியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பு உரிமைகள் இவர்களுக்கு பொருந்தாது.
பிரிவு 6-ன் கீழ் என்னென்ன சிறப்பு உரிமைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன?
- அசாமில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் 80 முதல் 100% சதவீதம் வரையிலான இடங்கள் அசாமியர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும்.
- இதேபோல் சட்டமன்றத் தொகுதிகள், உள்ளாட்சி நிர்வாக இடங்கள் அனைத்திலும் அசாமியர்களுக்கு 80 முதல் 100% இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட வேண்டும்.
- ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றின் வேலைவாய்ப்புகளிலும் 80 முதல் 100% அசாமியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- அசாமில் இயங்கும் தனியார் நிறுவனங்களிலும் 70 முதல் 100% அசாமியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- அசாமியர்களின் நில உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அசாமியர்கள் அல்லாதவர்களுக்கு நிலங்கள் மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
- மாநிலத்தில் அசாமிய மொழியே அலுவல் மொழியாக இருக்கவேண்டும்.
- போடோ, மிஷிங், கார்பி, டிமாசா, கொச்-ராஜ்போங்ஷி, ரபா, டெயூரி, டிவா, டாய் போன்ற அனைத்து பழங்குடி மொழிகளையும் வளர்க்க கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும்.
இப்படி பல்வேறு பரிந்துரைகளை அந்த குழு அறிக்கையில் அளித்துள்ளது.
6 மாதங்களாக காத்திருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இந்த அறிக்கையை பொதுவெளிக்கு கொண்டுவருவதாக அனைத்து அசாம் மாணவர் ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் சமுஜ்ஜல் குமார் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை என்ன ஆனது என்று மக்கள் தினந்தோறும் கேட்கத் தொடங்கி விட்டதால், இதை மக்களுக்கு வெளியிடும் முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் பதில்
அசாமை ஆளும் பாஜக அரசின் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், இதற்கு முன்பு எந்த அரசாங்கமும் பிரிவு 6-ஐ அமல்படுத்துவதற்கு விருப்பம் காட்டியதில்லை என்றும், தாங்கள் தான் அது குறித்து பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு இது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதற்கு உரிய கால அவகாசம் அளிக்காமல், குழுவின் அளிக்கையினை பொதுவெளிக்கு கொண்டுவந்தது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.