சீக்கியர்களின் பத்தாவது மற்றும் இறுதி குரு கோவிந்த் சிங்(1666-1708). ஓர் ஆன்மீக வழிகாட்டியாகவும் சீக்கிய மக்களின் தலைவனாகவும் அவரது செல்வாக்கு தவிர்க்க முடியாதது. இன்றும் சீக்கியர்கள் கடைப்பிடிக்கும் முடி வளர்த்தல், தலைப்பாகை, இரும்பு காப்பு, குறு வாள் வைத்துக்கொள்ளுதல் போன்ற நம்பிக்கைகளைத் தோற்றுவித்தவர். அக்காலத்திற்கே உரியப் பிராந்தியங்களுக்கு இடையிலான போர் வன்முறைகளை எதிர்கொள்ளும் பொருட்டு ‘கல்சா’ என்ற சீக்கிய இளைஞர் படையை உருவாக்கினார். தனது தந்தை குரு தேஜ் பகதூரை முகலாயப் பேரரசுக்கு எதிரான போரில் இழந்தவர், இளம் வயதிலேயே ஓர் இனக்குழுவின் தலைவனாக உருவெடுத்தார். பின்னாளில், தனது நான்கு மகன்களையும் அதேபோன்றொரு போரில் இழந்த குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் நினைவில் நீங்காத தியாக உரு.
குரு கோவிந்த் சிங் பற்றிய மோடியின் உரை
ஒளரங்கசீப்பிற்கு எதிரான போரில் தனது உறவுகள் அனைவரையும் பறிகொடுத்த குருவின் தியாகத்தை நினைவு கூற, 2022ம் ஆண்டு டிச.26ம் தேதியை ‘வீர் பால் திவாஸ்’ நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. புதிய வேளாண் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தன்னெழுச்சி பெற்ற சீக்கியர்கள் ஆறுதலடைய இது கைகூடும் என நினைத்தார் பிரதமர். ஆனால், அதையும் கடந்த அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தியது பிரதமரின் தியாகத் திருநாள் உரை.
”அங்கு ஒரு புறம் பயங்கரவாதமும் மற்றொரு புறம் ஆன்மீகவாதமும் இருந்தது. மதவெறி தாக்குதல் ஓரிடம் என்றால் மற்றொரு இடத்தில் விடுதலை ஏந்தப்பட்டது. லட்சம் பேர் கொண்ட போர்ப் படைகளைச் சிறிய அளவிலான வீர தியாகிகளால் எதிர்கொள்ள முடியாமல் போனது. குரு கோவிந்த் சிங்கின் அப்பாவி குழந்தைகளை வாள் கொண்டு மதமாற்றம் செய்ய முயன்ற ஒளரங்கசீப் படை, அதன் காரணமாகவே அவர்களைக் கொன்றது. இந்தியாவை மாற்ற நினைத்த ஒளரங்கசீப்பின் பயங்கரவாதத்தை எதிர்த்து மலைபோல் உயர்ந்து நின்ற குரு கோவிந்த் சிங்கை நினைவு கூறுவோம். இத்தகைய பெருமைமிகு வரலாறு கொண்ட எந்தவொரு நாடும் தன்னம்பிக்கையுடனும் சுய மரியாதையுடனும் செயல்படும். அப்படியிருக்கையில், இட்டுக்கட்டப்பட்ட வரலாற்றுப் போதனைகள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை நம் மீது திணித்துள்ளன. கடந்த காலத்திலிருந்து வருங்காலத்தை நோக்கி முன்னேற அதுபோன்ற குறுகிய விளக்கங்களை நாம் கைவிட வேண்டும்” என்றார் பிரதமர் நரேந்திர மோடி.[1]
இந்திய நிலப்பரப்புக்குள் இரு ராஜ்யங்களுக்கு இடையே நடந்த போரில் இன்று ‘ஒரே’ இந்தியாவை ஆளும் பிரதமர் எடுக்கும் பக்கச் சார்பு புரிந்துகொள்ளக் கூடியது. இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டியவர்கள் என்ற இந்துத்துவ பட்டியலில் முதல் வெறுப்பிற்குரிய நபர் ஒளரங்கசீப். ஆறு மற்றும் ஒன்பது வயதுடைய குருவின் மகன்களை ஒளரங்கசீப்பின் ஆளுநர் கொன்றார். ஆனால், மத்திய காலத்திற்கே உரிய இந்த போர் இழிவுகளைக் கடந்து பிரதமர் முன்னெடுக்கும் பிரச்சாரம் கவனிக்க வேண்டியது.
பயங்கரவாதம் என்ற சொல்
நிகழ்காலத்தில் இஸ்லாமியர்களை மற்றமையாக வெளிநிறுத்த முயல்வது போல், வரலாற்றில் முஸ்லீம் ஆட்சியாளர்களை ‘அந்நியர்கள்’, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று உருவகப்படுத்தப்படுகிறார்கள். அதனைக் கடந்து ஒளரங்கசீப் செயலை ‘பயங்கரவாதம் (Terrorism)’ என்று குறிப்பிடுகிறார் பிரதமர் மோடி. பயங்கரவாதம் என்ற சொல் நவீன காலத்திற்குரியது. குறிப்பாக, தேசிய அரசுகள் உருவாக்கத்திற்குப் பிறகே அதன் பயன்பாடு செயலூக்கம் பெற்றது. 20ம் நூற்றாண்டிற்குப் பிறகு தோன்றிய தேசிய அரசுகள் தங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளையும் கலகக்காரர்களையும் குறிப்பிடுவதற்கு ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லைப் பிரயோகிக்கத் தொடங்கின[2]. ஒளரங்கசீப்பின் மன்னராட்சி கால போரைப் பயங்கரவாதத்திற்குள் உள்ளடக்குவது, நிகழ்காலத்தில் அவர்மீதான வெறுப்பைக் கிளர்ந்தெழச் செய்ய உதவும். ஆனால், அது வரலாற்றுச் சூழலுக்குப் பொருத்தமற்றது மட்டுமின்றி நியாயமற்றது. மௌரிய அரசன் பிரகத்ரதனை கொன்று அரியணை எரிய புஷ்ய்மித்ர சுங்கனின் செயலை அவ்வாறு வர்ணிக்க இயலுமா.
முகலாய – ராஜ்புத் கூட்டணி; வரலாற்றை மதிப்பிழக்கச் செய்யும் பிரதமர்
சீக்கியர்கள்-இஸ்லாமியர்கள் என்ற பகைமையை நிறுவ முயல்வது பிரதமர் உரையின் மற்றொரு சாரம். 1704ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ‘சம்கவ்ர் போரில்’ (Battle of Chamkaur) குருவின் நான்கு மகன்கள் கொல்லப்பட்டது உண்மை. தனது குடும்பத்திற்கு பாதுகாப்பாளிப்பதாகக் கூறி, வாக்கை மீறிய ஒளரங்கசீப்பின் செயலை வருத்தத்துடன் ‘ஜாஃபர்நாமாவில்’ பதிவு செய்கிறார் குரு கோவிந்த் சிங்[3]. ஆனால், அந்த துயர்மிக்க போர் மூண்டது ஏன் என்ற காரணம் பிரதமர் வசதியாக மறந்த விஷயம். சீக்கியர்களுக்கு எதிராகப் போரிட்டது முஸ்லீம் முகலாயப் படை மட்டுமல்ல, பெருமைமிகு சத்திரிய ராஜ்புத் படையும் என்பதுதான் அந்த செய்தி.
சீக்கிய இளைஞர் போர்ப்படையான கல்சாவை நிறுவிய குரு கோவிந்த் சிங்கைக் கண்டு அருகருகே உள்ள மலைவாழ் ராஜ்புத் அரசுகள் கலக்கமடைகின்றன. 1686ல் ராஜ்புத் அரசர் பீம் சந்துக்கும் குரு கோவிந்த் சிங்குக்கும் இடையே நடந்த பாங்கனி போரில் குருவின் வெற்றிக்கு கல்சாவின் பங்கு முதன்மையானது. தொடர்ந்து இதன் பொருட்டே சீக்கிய தலைமையை எதிர்த்துப் போரிடுமாறு ஒளரங்கசீப்பை ராஜ்புத் அரசர்கள் அழைக்கிறார்கள்[4]. சம்கவ்ர் போர் முகலாய-ராஜ்புத் கூட்டணி படையினாலேயே அரங்கேற்றப்பட்டது. மத்திய கால போர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்ட பிராந்திய நாடு பிடிக்கும் நலனைக் கொண்டிருந்தது என்பதற்கு இது ஓர் சான்று.
ஆனால், இஸ்லாமிய ஆட்சியாளர்களை வெளிநிறுத்த மதத்தை முன்னிலைப்படுத்தும் பிரதமர் மோடி, அதற்கு எதிரான வரலாற்றை ஒற்றை வார்த்தையில் மதிப்பிழக்கச் செய்கிறார். ‘இட்டுக்கட்டப்பட்ட (அல்லது கட்டமைக்கப்பட்ட – Concocted Narration) போதனை’ என்று பிரதமர் கூறுவது இந்திய வரலாற்றின் மீதான நேரடி தாக்குதல். இந்த வரலாற்றால் இந்தியர்கள் குறுகிய மனப்பான்மைக்கு ஆட்பட்டுவிட்டதாகக் கூறுபவர், மாற்று வரலாற்றைக் கோருகிறார். அதுவே இந்துத்துவ இயக்கங்களின் நூற்றாண்டு முனைப்பாகவும் உள்ளது.
*
வரலாற்றை மறுவரையறை செய்யும் திட்டம்
2017ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் அப்போதைய ஒன்றிய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா முன்னெடுப்பில் மத்திய டெல்லியில் சில அறிஞர்கள் கொண்ட குழு கூடுகிறது. அவர்கள் விவாதித்ததின் பொருள் என்பது ‘இந்த தேசத்தின் வரலாற்றை மறு வரையறை’ செய்வது. அகழ்வாராய்வு, டிஎன்ஏ சோதனைகள் போன்றவற்றின் மூலம் இந்துக்கள் மூத்த மற்றும் நேரடியான மண்ணின் மக்களாகவும், இந்துப் புராணங்கள் யாவும் கற்பனை அன்றி வரலாற்று உண்மைகளாகவும் நிறுவுவது. 130 கோடி மக்கள் மீதான அதிகாரம் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களைக் கடந்து அவர்களுக்கு ஒரு பொது தேசிய அடையாளம் தேவைப்பட்டது. அது என்னவென்றால், இந்தியா இந்துக்களின் தேசம்.
”முற்கால வரலாற்றின் குறிப்பிட்ட அம்சங்களை மறு வரையறை (rewrite) செய்ய ஓர் ஆய்வறிக்கை தயாரிக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது” என்று கூறினார் 14 பேரடங்கிய அக்குழுவின் தலைவர் கே.என். தீக்ஷித் [5]. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உட்பட அனைவரும் பொது அடையாளத்தைக் கொண்டவர்கள். அவர்கள் இந்தியர்கள் எனும் பட்சத்தில் ‘பாரத மாதாவின்’ சந்ததிகளாக தங்களை ஏற்க வேண்டும். அதற்கு வரலாற்றைப் பரிசீலனை செய்வது தேவை என்பது அமைச்சர் மகேஷ் சர்மாவின் வாதம். 12 ஆயிரம் ஆண்டு இந்தியக் கலாச்சார பரிணாமங்களை முழுமையாகக் கண்டறிந்து, அதனைப் பாடநூல் வரை நடைமுறைப்படுத்துவதற்கு இக்குழுவின் முடிவுகள் உதவும் என்றார். ஆர்எஸ்எஸ் இயக்கமும் இதனைத் தீர்மானமாக அடியொற்றி பிரச்சாரம் செய்தது. ”இந்தியாவின் பெருமை என்பது முற்கால இந்து புராணங்கள் மட்டுமே. அவை நடந்த உண்மையே தவிர புனைவல்ல. அதை மீட்டுருவாக்கும் நேரம் இதுதான்” எனக் கூறினார் ஆர்எஸ்எஸ் வரலாற்று ஆராய்ச்சி அணித்தலைவர் பால்முகுந்த் பாண்டே.
புராண வர்ணனைகளும் தொல்லியல் முடிவுகளும்
அகழ்வாராய்வுத் துறையில் மூத்த அதிகாரியாக இருந்த தீக்ஷித், புராண வர்ணனைகளுக்கும் தொல்லியல் முடிவுகளுக்கும் உள்ள ஒப்புமையை நிறுவுவது தங்கள் ஆய்வின் பிரதான நோக்கமாகக் கருதினார். ராமாயணத்தைச் சரித்திர ஆவணமாகக் கருதும் அமைச்சர் மகேஷ் சர்மா, அதை நவீன ஆய்வுகளில் நிரூபிப்பதில் உறுதியாக இருந்தார். வேதங்களில் குறிப்பிடப்பட்ட ‘சரஸ்வதி நதியைக் கண்டறிய’ 2015ம் ஆண்டு தனி ஆய்வுக் குழுவையே நியமித்தார். பைபிள், குரான் போன்றவை வரலாற்றுத் தரவுகளாகக் கருதப்படும்போது இந்திய வரலாற்றின் ஆவணமாக இந்து வேதங்கள் இருப்பதை ஏற்பதில் என்ன பிரச்சனை? என்பது அமைச்சர் வந்தடையும் கேள்வி. அதனாலேயே, ”பள்ளி கல்லூரிகளில் போதிக்கப்படும் நிகழும் வரலாற்றைக் கேள்வி கேட்க எந்த அரசுக்கும் இல்லாத தைரியம் எங்களுக்கு இருப்பதாக” இந்த அரசு சூளுரைக்கிறது.
2015ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அப்போதைய ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி (பாஜக) ஓர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். ‘அனைத்து வகுப்புகளிலும் வேதகால கணிதவியலைப் போதித்தல், ‘இந்தியக் கலாச்சாரத்திற்கு’ முக்கியத்துவம் கொடுப்பது, வரலாற்றில் புதிய தேசிய மற்றும் பிராந்திய நிகழ்வுகளைச் சேர்த்தல் போன்ற விஷயங்களை உள்ளடக்கிய பாடநூல்கள் வடிவமைக்க அதில் முடிவு செய்யப்பட்டது. அறிவியலை வேத கதைகள் கொண்டு விளக்குவது, சதி போன்ற மூடப்பழக்கங்களைப் புனிதப்படுத்துவது, வன்முறையை கேள்விக்கிடமின்றி ஆதரிப்பது போன்றவை கற்றலில் சேர்க்கப்பட்டன. 165 குழு உறுப்பினர்களால் வெறும் மூன்றே மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட மாநில பாடநூல்கள், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பரிந்துரைத்த மாதிரியிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டது. தேர்வுக்குழுவில் இடம்பெற்ற பெரும்பாலானவர்கள் ஆர்எஸ்எஸ்-சை சார்ந்தவர்கள். ஆதலால், இதனை எதிர்த்து ’அரசு ஆசிரியர்கள் சங்கத்தினர்’ போராடினார்கள் [6].
NCERT பாடநூல் கழக திருத்தங்கள்
‘இந்துக்களைத் தவறாகச் சித்தரித்தது மட்டுமின்றி, அவர்களின் வரலாறு ‘மதச்சார்பின்மை அடிப்படைவாதிகளால்’ (secular fundamentalists) சிதைக்கப்பட்டது’ என்ற வாதத்தை முன்வைத்து பாடநூல் வரலாற்றுக்கு எதிரான இயக்கத்தை 1999ல் தொடங்கியது பாஜக. குதுப்மினாரைக் கட்டியது சந்திரகுப்தர், அலாவுதீன் கில்ஜி இந்துக்கள் மீது ஐம்பது சதவீதத்திற்கு மேல் நிலவரி விதித்தார், மதத்தையும் கற்பையும் காக்கவே பெண்கள் உடன்கட்டை ஏறினர், குழந்தை திருமணம், சதி போன்ற மூடத்தனங்கள் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் வந்த பிறகே தோன்றியது எனத் தேசிய பாடநூல் கழகத்தில் ‘திருத்தங்கள்’ தொடங்கின. குறிப்பாக, 2002-04 ஆண்டுகளில் நடந்த பாடநூல் (NCERT) திருத்தங்கள் சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டைக் கைவிட்டு, அதனை ஓர் பண்பாட்டு நடைமுறையாக மென்மைப்படுத்தின [7]. இன்று, மோடி அரசு மேற்கொள்ளும் பாடநூல் கழக திருத்தம் முதல் பல்கலைக்கழக மானிய குழுவின் நேரடி தலையீடு வரை வரலாறு பல சோதனைக்கு உள்ளாகி வருகிறது.
*
தேசியவாத வரலாறு காலனியத்தால் மறைத்து அழிக்கப்பட்டதா?
வாரணாசியில் உள்ள இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த குப்த அரசர் ‘ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யாவை’ போற்றும் விழாவில் (அக் 17, 2019) கலந்துகொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரை கவனிக்க வேண்டியது. ”நமது வரலாற்றை எழுதுவது நமக்கான பொறுப்புணர்வு சார்ந்தது. நாம் அதனை மறுபார்வை செய்யாதது நம்முடைய குறைபாடே. இன்னும் எத்தனை காலத்திற்குப் பிரிட்டிசை குறைகூறிக் கொண்டிருப்போம். வரலாறு முன்பு எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்ற எவ்வித சர்ச்சைக்கும் ஆட்படாமல், அதனை மறந்து புதிதான ஒன்றை எழுதுங்கள். அது நம் மண் சார்ந்தவையாகவும் தேசியவாத கண்ணோட்டத்தைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்” என்றார்.
உள்துறை அமைச்சர், பிரதமர் தொடங்கி பிற இந்துத்துவ சங்பரிவாரங்களின் தொடர் அறைகூவலாக வரலாறு மீதான மறுகட்டமைப்பு இருக்கிறது. மண் சார்ந்த வரலாற்றைக் கோருவதன் மூலம் காலனிய வரலாற்றிலிருந்து விடுபட நினைக்கிறார்கள் என்று இதனை எண்ணலாம். அப்படியென்றால், இவர்கள் கேட்கும் தேசியவாத வரலாறு காலனியத்தால் மறைத்து அழிக்கப்பட்டதா?., அதை மீட்டுருவாக்கும் பணியை இந்துத்துவ இயக்கங்கள் தொடர்ந்து மேற்கொள்கின்றன என்று புரிந்துகொள்ளலாமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், இங்கு காலனிய நீக்கச் சுதேச இறையாண்மை எனப்படுவதற்கு மாறாக, இந்துத்துவ வரலாற்று மீட்சி காலனிய மேலாதிக்கத் துணை கொண்ட பாசாங்கு என்பதே வெளிப்படை.
மாக்ஸ் முல்லர் மற்றும் ஜேம்ஸ் மில்
காலனிகளின் சமூக பண்பாட்டு வரலாற்றை அறிவதன் மூலம் அதனைச் சுலபமாக நிர்வகிக்கலாம் என்று பிரிட்டிசார் நினைத்தார்கள். அதற்கு முன்பு வரை கிபி 1000க்கு பிறகான இடைக்கால வரலாறு பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இருந்தாலும், முற்கால இந்திய வரலாறு என்பது போதிய வெளிச்சமின்றி இருந்தது. எனவே, ஆரியர்-ஆரியரல்லாதோர் போன்ற இந்திய வரலாற்றின் குறிப்பிட்ட சிந்தனை முறையைக் காலனிய அரசே வெளிப்படுத்தியது. அதுவரை வேதங்கள் கூறிய ஆரிய தேசம் என்பது நிலப்பகுதியை மட்டுமே குறித்தது. அதுவும் பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டு மனுவின் காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே ஆரிய நிலம் என்ற உச்ச வரையறையை அடைகிறது [8].
ஐரோப்பியரான மாக்ஸ் முல்லர் சமஸ்கிருதம் பேசும் ஆரியரைத் தனித்த இனக்குழுவாகப் போற்றுகிறார். ‘இந்தோ-ஐரோப்பிய’ ஒப்பீட்டு மொழியியல் ஆய்வின் விளைவாக, ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புகொண்ட, சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களைத் தனிச்சிறப்பு குழுவாக நிறுவுகிறார்கள். காலனிய நிர்வாகத்திற்காக இந்திய வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் மில், முதன்முதலாக இந்து-முஸ்லீம் (பிறகு பிரிட்டிஷ்) இந்தியா என்று வகைப்படுத்துகிறார். இன்று, முத்தரப்பு வரலாற்றுப் பார்வையை (முற்கால இந்து இந்தியா, இடைக்கால முஸ்லீம் இந்தியா, நவீனக்கால பிரிட்டிஷ் இந்தியா) முன்வைக்கும் பார்ப்பனிய வரலாற்றாசிரியர்கள் மில்லின் வாதத்தால் ஆதர்சம் பெற்றனர். இந்துத்துவ பிதாமகரான சாவர்கரின் இரு தேச கோட்பாடு இதன் தொடர்ச்சி எனலாம். ஏனெனில், காலனிய அரசின் ஆரிய விதந்தோதல் இந்துமத சிந்தனையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. ”இந்து மதத்தின் மூல ஆற்றல் விளக்கம் பெறுவதற்காகவே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி கடவுளால் விதிக்கப்பட்டது” என்று தனது ஆனந்த மடம் நாவலில் எழுதினார் பக்கிம் சந்திர சட்டர்ஜி.
ஆனால், பின்னாட்களில் வரலாற்றியலில் கைக்கொள்ளப்பட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் பல ‘உண்மைகளை’ வெளிக்கொண்டு வந்தன. ஆரியர் படையெடுப்புக்கு முன்பான நாகரிகத்தைக் கண்டடைந்த சிந்து சமவெளி தொல்லியல் ஆய்வும், ஒருபடித்தான (monolithic) இன வரையறையை மறுத்து தமிழர் நிலப்பகுதியில் கண்டறிந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வும் இந்திய வரலாற்றில் மாபெரும் திறப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து, வரலாற்று எழுதலில் ஏற்பட்ட நவீன முன்னேற்றங்கள் இந்துத்துவர்களின் கற்பனாவாத (utopian) சமூக சித்தரிப்பைத் தகர்த்தன.
முற்கால இந்திய வரலாறும் அம்பேத்கரின் எழுத்துகளும்
இந்துத்துவர்களின் வாழ்நாள் குறிக்கோளான ‘இந்து ராஷ்டிராவை’ கட்டமைக்க அடித்தளம் தேவை. அதுவே, அவர்கள் யதார்த்தையும் கடந்து முன்னிறுத்தும் வேதகால சமூகம். ஆனால், அச்சமூகம் கண்டறியப்பட்ட வரலாறுகளில் பலவீனமாக இருக்கிறது. முற்கால இந்து சமூகம் என்பதைக் கடந்து, ‘இந்தியத் தேச சமூகம்’ என்று தேசியவாதத்தைத் துணைக்கு அழைப்பது அந்த பலவீனத்தைப் போக்கும். இதனாலேயே, அரவிந்தர் போன்ற இந்துத்துவ மேதைகள், ‘தேசியம் என்பது கடவுளால் அருளப்பட்ட மதம், தேசியவாதியாக விரும்பினால் இந்த தேசிய (இந்து) மதத்திற்கு இசைய வேண்டும்’ என்று இந்து மதத்தைத் தேசியவாதத்தோடு நீக்கமற பிணைத்தார்கள். அதுவே, விடுதலைக்கு பிறகான இந்தியாவிலும் ஒற்றை எதேச்சதிகாரத்திற்குக் காரணமாகியது. இந்துத்துவம் கூறும் ஒருபடித்தான கலாச்சாரத்தை மறுத்து பன்மைத்துவத்தை ஆதரிக்கும் முற்போக்கு தாராளவாத சிந்தனையாளர்கள் கூட, தனித்த பார்ப்பனிய மேலாண்மை, இந்தியத் தேசியம் போன்றவற்றிற்கு மாறாக முழு அளவிலான கவனம் செலுத்தவில்லை.
அனைத்தையும் கடந்து எஞ்சியிருப்பது இடைக்கால முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு முன்பு வரையிலான (வட) இந்திய வரலாறு போதிய கவனமின்றி ஏன் இருந்தது? என்ற கேள்வியே. ”வம்சாவளி குறிப்புகள், புராணங்கள், சமய மட பதிவேடுகள் போன்ற வரலாற்று மரபுக்கு ஏற்ற அலகுகள் இருந்தாலும், அவை முழுமையான விவரிப்பு அல்ல” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்[9].
முற்கால இந்திய வரலாறு ஏன் முழுமையற்று போயின என்பதன் பின்னுள்ள அரசியலை அறிய டாக்டர் அம்பேத்கரின் எழுத்துகள் உதவுகின்றன. இந்துத்துவர்கள் ‘முதல் காலனியாதிக்கம்’ என்று முஸ்லீம் ஆட்சியாளர்களைக் கூறுவதன் மூலம் அவர்களுக்கு முன்புவரை இந்தியாவில் தனித்த ஒற்றுமையான சமூகம் இருந்தது போன்ற தோற்றத்தை அளிக்கிறார்கள். ஆனால், முற்கால இந்திய வரலாறு என்பது இந்து மதத்திற்கும் பௌத்தத்திற்கும் இடைப்பட்ட போர் என்று கூறுகிறார் அம்பேத்கர். பௌத்த இலக்கியங்கள் மீது குப்பை கூளங்களைக் கொட்டிய பிராமணர்கள் வரலாற்றைச் சிதைத்துவிட்டதாகக் கண்டிக்கிறார் [10].
முற்கால இந்தியாவில் கலாச்சாரங்களுக்கு இடையிலான எண்ணற்ற பகைமைகள் நிலவியதற்கு அம்பேத்கர் பல சான்றுகளை வழங்குகிறார். ஆரியர்கள் தாம் பறைசாற்றும் ஒருபடித்தான இந்தியாவுக்கு அது பாதகமாக இருப்பதாலேயே ‘தெளிவற்றதாக கைவிட்டுவிட்டதாக’ அனுமானிக்கலாம். ஆதலால், பொருள் அடிப்படையிலான வரலாற்றை மறுத்து லட்சியக் காலத்தை அடைய நினைக்கிறார்கள். அந்த லட்சிய சமூகமும் மீட்க நினைக்கும் கனவு ராஷ்டிராவும் கற்பனைக்கு அப்பாலான எச்சரிக்கைகள்.
– மு. அப்துல்லா (ஊடகவியலாளர்)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
Notes
1. The print, 26 Dec 22.,
2. Britannica Encyclopedia, terrorism
3. Zafarnamah – போருக்கு பிறகு குரு கோவிந்த் சிங்கால் ஒளரங்கசீப்பிற்கு பெர்சிய மொழியில் எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பு.
4. Col Jaibans Singh, The Battle of Chamkaur: An epic that changed the course of Indian history
Read more at: http://www.indiandefencereview.com/news/the-battle-of-chamkaur-an-epic-that-changed-the-course-of-indian-history/
5. Rupam Jain and Tom Lasseter, By rewriting history, Hindu nationalists aim to assert their dominance over India, Reuters March 6, 2018
6. Caitlin Westerfield, The Saffronization of Indian Textbooks, A Study of the Extent and Implications of BJP Textbook Manipulation 2002 – 2018
7. ibid; p3, p8
8. ரொமிலா தாப்பர், வரலாறும் கருத்தியலும், p7
9. ibid p3, p25
10. டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும், முன்னுரை