new parliament

புதிய பாராளுமன்றம் பாஜக அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி

புதிய பாராளுமன்றத்தை கடந்த ஞாயிறன்று ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய பாராளுமன்றம் சாவர்க்கர் பிறந்த தினத்தில் திறந்து வைக்கப்பட்டதும், திறப்பு விழாவின் போது ஜனநாயக மாண்புக்கு எதிராக மன்னராட்சி கால அடையாளமான செங்கோல் தூக்கிப் பிடிக்கப்பட்டதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது;  பாராளுமன்றத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியது அரசியலமைப்புச் சட்டமே தவிர, செங்கோல் அல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டது. 

பாராளுமன்ற வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வடிவமைப்புகள், அலங்காரங்கள் பல சனாதன சின்னங்களாக உள்ளன.  இந்நிலையில் இதுபற்றி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

அதில் அவர், “புதிய நாடாளுமன்றத்தின் எல்லா சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலைப் போராட்டம் ஆகிய எதுவும் இவர்களின் நினைவில் இல்லை.

நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்தசாஸ்திரத்துக்கு என்ன வேலை?

கட்டடத்தின் நடுவில் சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாடபுத்தகங்களில் இருந்து ஜனநாயகக் கோட்பாடுகளை நீக்குவதும் நாடாளுமன்றத்தைப் புராணக் காட்சிகளாக மாற்றுவதும் நேரடி இந்துத்துவா நடவடிக்கையாகும்.

அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால்போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளதாக சொல்லப்பட்டு அதற்கு நேர் எதிரான கருத்துகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் கோட்பாடுகளால் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாவர்க்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக்கொண்டு, சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை. இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது.” என்று தனது விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *