சுக்பீர் சிங் பாதல்

பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!

விவசாய சட்டங்களை எதிர்த்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பாரதிய ஜனதா கட்சியினர் தான் உண்மையான துக்டே துக்டே கும்பல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.   

துக்டே துக்டே கும்பல் என்பது என்ன?

துக்டே துக்டே கும்பல் என்ற சொல்லாடலை ஒன்றிய அரசை எதிர்த்து போராடுபவர்களை நோக்கி பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறியதைப் போன்று, விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து துக்டே-துக்டே கும்பல் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். துக்டே துக்டே என்ற வார்த்தை நாட்டை பிளக்க நினைப்பவர்கள் என்ற அர்த்தத்தில் பாஜகவினரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

சிரோமணி அகாலிதளம்

சிரோமணி அகாலிதளம் கட்சியானது பாஜக-வின்  நீண்டகால கூட்டணி கட்சியாகும். கடந்த செப்டம்பர் மாதம் விவசாய சட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உறவை முறித்துக் கொண்டது. இதன் முன்னணி தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டத்தை குற்றம்சாட்டும் பாஜக தலைவர்கள்

முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட் ஊடுருவல் என்றும், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அமித் மாளவியா போராட்டத்தின் பின்னணியில் காலிஸ்தான் இயக்கத்தினர் உள்ளனர் என்றும் கூறி வந்தனர். இந்நிலையில் நீண்ட காலமாக பாஜக கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலிதளம் தலைவர் தற்போது  பாஜவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவினர் தான் துக்டே துக்டே கும்பல்

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுக்பீர்சிங் பாதல், 

பாஜக தான் நாட்டின் உண்மையான துக்டே துக்டே கும்பல் ”என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் “பாஜக வெட்கமேயில்லாமல் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டிவிட்டு தேசிய ஒற்றுமையை துண்டித்தது. இப்போது பஞ்சாபி இந்துக்களை தங்கள் சீக்கிய சகோதரர்களுக்கு எதிராக குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது” என்று கூறியுள்ளார். மேலும்  பாஜக  கட்சி தேசபக்தி கொண்ட பஞ்சாபை வகுப்புவாத தீப்பிழம்புகளுக்குள் தள்ளுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டங்களில் தேசவிரோத சக்திகள் இருப்பதாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறுவதையடுத்து பாதல் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். 

மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் சொல்வதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் தேசபக்தர்கள். இல்லையென்றால் அவர்கள் தேசத்துரோகிகள், தீவிரவாதிகள் அல்லது துக்டே துக்டே கும்பல். இதுதான் பாஜகவினரின் வாதமாக இருக்கிறது. மத்திய அமைச்சகத்திலிருந்து ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், தனது பத்மவிபூஷன் விருதை திருப்பி அனுப்பிய எஸ்.பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் தேசத் துரோகிகளா? விவசாயிகள் போராட்டத்தை சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்குமான பிரச்சினையாக சித்தரிக்க முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை முதலில் டெல்லியில் தொடங்கினார்கள். தற்போது பஞ்சாபிற்குள்ளும் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.” என்று சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *