எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தினை புறக்கணித்து வெளியேறிய நிலையில் 7 மசோதாக்களை இன்று ஒரே நாளில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இரண்டு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் முறையான வாக்கெடுப்பு வாக்கெடுப்பு நடத்தப்படாமல், குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலங்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற ஜனநாயகம் மீறப்பட்டிருப்பதாக மசோதாவை கிழித்தெறிந்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
அவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த அவைத் துணைத் தலைவரான ஹரிவான்ஷ் மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தினைக் கொண்டுவந்தனர். ஆனால் அந்த தீர்மானம் அவைத் தலைவர் வெங்கைய நாயுடுவால் நிராகரிக்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் 8 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து அமைச்சர் முரளீதரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் 8 உறுப்பினர்களும் பாராளுமன்ற வளாகத்திலேயே இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 8 உறுப்பினர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாநிலங்களவை கூட்டத்தினை புறக்கணிப்பதாக அறிவித்தனர். நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, அவை நிறைவேற்றப்படும் வரை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன.
நான்கு கோரிக்கைகள்
- அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலைக்குக் (Minimum Support Price – MSP) கீழாக விவசாயிகளிடம் தனியார் முதலாளிகள் கொள்முதல் செய்ய முடியாதவகையில் கூடுதலாக ஒரு மசோதாவினை அரசு கொண்டுவர வேண்டும்.
- குறைந்தபட்ச ஆதார விலை என்பது சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
- அரசுத் துறை நிறுவனங்களான இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India – FCI) போன்றவை குறைந்த பட்ச ஆதார விலைக்குக் கீழாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யக் கூடாது.
- எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட வேண்டும்.
இந்த நான்கு கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் கூட்டத்தொடரில் பங்கேற்போம் என்று எதிர்க்கட்சிகளின் சார்பாக குலாம் நபி ஆசாத் உரையாற்றினார். காங்கிரஸ், இடது சாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் ஜனநாயக விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர்.
பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாய மசோதாக்களை முற்றிலுமாக திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழ்நாட்டில் வரும் 28-ம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை அறிவித்துள்ளன. பாஜக இந்த நாட்டின் அவமானம் என்று அறிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் வெளியேறிய பிறகு ஒரே நாளில் 7 முக்கிய மசோதாக்களை ஆளும் கட்சியான பாஜக தனது கூட்டணி கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு நிறைவேற்றியுள்ளது,
ஏழு மசோதாக்கள்
- புதிதாக உருவாக்கப்பட்ட 5 ஐ.ஐ.டி-களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கும் மசோதா.
- அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு பொன்றவற்றை நீக்கும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா. அப்பொருட்களை எவ்வளவு அளவுக்கு தேக்கி வைக்கலாம் எனும் வரம்பையும் இம்மசோதா நீக்குகிறது (Essential Commodities (Amendment) Bill).
- கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் (RBI) கீழ் கொண்டுவரும் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா (Bank Regulation Act).
- நிறுவனங்களின் சில குற்றங்களின் மீதான அபராதத்தினை ரத்து செய்யும் வகையில் நிறுவனங்கள் (திருத்த) மசோதா.(Companies (Amendment) Bill)
- தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா (National Forensic Sciences University Bill)
- தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மசோதா (Rashtriya Rakasha University Bill)
- கொரோனா பெருந்தொற்றினை மையமாக வைத்து ஜி.எஸ்.டி கட்டுவதற்கும், வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கும் உள்ள காலக்கெடுவினை தளர்வு செய்யும் மசோதா (Taxation and Other Laws (Relaxation and Amendment of Certain Provisions) Bill)
இந்த 7 முக்கிய மசோதாக்களை எதிர்க்கட்சிகளே இல்லாத அவையில் பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஒருங்கிணைந்த ஜனதா தளம், அதிமுக, பிஜூ ஜனதா தளம், YSR காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டும் அவையில் இருந்தனர்.
இதில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதாவானது, ஏற்கனவே நாடு முழுவதும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் மூன்று விவசாய மசோதாக்களின் ஒரு பகுதியாகும். இரண்டு விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறையை எதிர்த்ததற்காகத் தான் 8 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதனுடைய மூன்றாவது மசோதாவும் எதிர்க்கட்சிகள் இல்லாமலே நிறைவேற்றப்பட்டது. காலை 10.29க்கு ஆரம்பித்த கூட்டம் 14.03 மணிக்கு முடிவடைந்தது. வெறும் இந்த மூன்றரை மணிநேரத்தில்தான் இந்த 7 முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவர் கையெழுத்திட்டவுடன் சட்டமாக்கப்படும்.