சுக்பீர் சிங் பாதல்

விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி

பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார். 

நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையினை அழிக்கக் கூடியவை என்றும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் விவசாயிகள் விடயத்திலும் சரி, பஞ்சாப் மற்றும் சீக்கியர்களின் விடயத்திலும், பஞ்சாபி மொழி விவகாரத்திலும் கூட பாஜக ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  

விவசாயிகளின் பிரச்சினைகளும், அவர்களின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படாமல் இந்த மசோதாக்களை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரக் கூடாது என்று சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதனை பாஜக ஏற்கவில்லை. 

அதன் பிறகு விவசாய மசோதாக்களை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அக்கட்சியால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனையும் பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. 

இதன் காரணமாக இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் சார்பாக ஒன்றிய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் செப்டம்பர் 17-ம் தேதி பதவி விலகியிருந்தார்.  

அதன்பிற்கு கூட்டணியில் தொடர்வதா இல்லையா எனும் நிலை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என அறிவித்திருந்த சிரோமணி அகாலி தளம் தற்போது கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் என்பது தீவிரமடைந்து வருகிறது. ரயில் தண்டவாளங்களின் மீது கூரையைப் போட்டு அமர்ந்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. 

பஞ்சாபின் முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங் ஏற்கனவே இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநிலங்களின் உரிமையை பறிக்கக் கூடியவை என்று தெரிவித்ததுடன், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது வழக்குகள் பதியப்படாது என்றும் உறுதியளித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் சார்ந்த வாக்கு வங்கி என்பது மிகப் பெரியதாகும். 2022-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக கொண்டு வந்த இந்த மசோதாக்களால் அதனுடன் கூட்டணியில் இருப்போர் விவசாயிகளின் ஆதரவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விவசாயிகளிடையே ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சியானது உடனடியாக கூட்டணி முறிவு குறித்து முடிவெடுக்கும் நிலைக்கு சிரோமணி அகாலி தளம் கட்சியினை தள்ளியிருக்கிறது.

1997-ம் ஆண்டிலிருந்து கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) அங்கமாக இருந்து வந்த சிரோமணி அகாலி தளம் கட்சியினாது வெளியேறி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பான கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் சிரோமணி அகாலி தளம் கட்சியே பஞ்சாபின் ஆளுங்கட்சியாக இருந்தது.

ஏற்கனவே வேறு சிக்கல்களை மையப்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவ சேனா கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் வெளியேறிய நிலையில் தற்பொது விவசாய மசோதாக்களை மையப்படுத்தி சிரோமணி அகாலி தளம் வெளியேறியுள்ளது.

”தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தூண்களாக இருந்ததே சிவசேனாவும், சிரோமணி அகாலி தளமும் தான். இந்த இரண்டும் இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஒன்றே கிடையாது” என்று சிவசேன கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *