தமிழர் கடல்: அமெரிக்கா, சீனா தொடர்பில் பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தனது சமீபத்திய ஊடக நேர்காணலில் பழ.நெடுமாறன் பேசியது உலகத் தமிழர்களிடத்திலே மிக முக்கியமான பேசுபொருளானது. 2009-க்குப் பிறகு பலமுறை பழ.நெடுமாறன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இருந்தபோதிலும் குறிப்பாக இந்தியப் பெருங்கடலாக அறியப்படும் தமிழர் கடல் சார்ந்த புவிசார் அரசியல் போக்குகளையொட்டி அவர் குறிப்பிட்டவை கவனத்திற்குட்படுத்த வேண்டியது. 


“விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்த காலக்கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என இந்திய அரசைக் கேட்டுக் கொண்டார் பழ.நெடுமாறன். 

இந்துமாக் கடலாக பழ.நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும் தமிழர் கடல் (சோழ மண்டலக் கடல்) தொடர்பான அரசியலில், நாம் இந்தியா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்த நிலைப்பாடு மற்றும் உறவுகளை இக்காலத்தோடு பொருத்தி மீள மதிப்பிட வேண்டியிருக்கிறது.

தமிழ் ஆயுதக் குழுக்களை பயன்படுத்த முயன்ற இந்தியா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்குண்டு. தன்னிச்சையாக வரலாறு தந்த படிப்பினைகளின் அழுத்தத்தில் மேலெழுந்த தமிழ் ஆயுதப் போராட்டக் குழுக்களை மேலதிக ஆயுத பாணிகளாக மாற்றியது இந்தியாவாகும். தனது பிராந்திய அரசியல் நலனுக்காக மட்டுமே தமிழ் போராளி குழுக்களை பயன்படுத்த முனைந்தது இந்தியா.

இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டு தெற்காசிய பரப்பை உளவு பார்க்க, ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி சேவையை அமெரிக்கா நிர்மாணித்தது. அமெரிக்க, ரஷ்ய பனிப்போர் காலத்தில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டிலிருந்தும், தனது பிராந்திய பாதுகாப்புக்காகவும், அமெரிக்க ஆதரவு சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ் போராளிக் குழுக்களை பயன்படுத்தியது இந்தியா.

விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு

இக்குறிப்பிட்ட காலத்தின் பிராந்திய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய வெளியுறவுக் கொள்கை கையாண்ட முயற்சிகளை, தமிழீழ விடுதலைக்கு ஆதரவான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவாக பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் நம்பினர். ராஜூவ் காந்தி காலத்தில் இந்திய ஆக்கிரமிப்புப் படையின் செயல்பாடுகள் அதனது எதார்த்தத்தை வெளிப்படுத்தியது. தமிழீழ தாயக மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இந்தியப் படையே இருந்தாலும், அவர்களை எதிர்ப்பது என்பதுதான் விடுதலைப் புலிகளினுடைய நிலைப்பாடு.


ஆனால், 1987-க்குப் பிறகும் இந்திய வெளியுறவுக் கொள்கையின் மீதான இவர்களது நம்பிக்கை பொய்க்கவில்லை.


”2009-ல் இந்தியாவின் போரைத் தான் நாங்கள் நடத்தினோம்” என தமிழினப்படுகொலை குற்றவாளிகள் கூறிய பின்னரும் கூட இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழீழ விடுதலைக்கு ஆதரவானது என்கிற தங்களது மூட நம்பிக்கையை பழ.நெடுமாறன் போன்றோர் கைவிடவில்லை. 


ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியா குறித்த தெளிவோடே இருந்தார். 1984-ல் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்-க்கு வழங்கிய நேர்காணலின் போது, ”தாங்கள் இந்தியாவை எதிர்க்கின்ற சூழ்நிலை வரும்” என முன் அனுமானித்திருந்தார். 

சமாதான பிராந்திய நோக்கத்தில் புலிகள் எடுத்த நிலை

இந்தியா தொடர்பாக பிராபகரன் மிகுந்த கவனத்துடன் கூடிய அரசியல் தந்திரோபாய நிலையையே கடைபிடித்தார். இந்தியா ஒரு தெற்காசிய பிராந்திய வல்லரசு என்கிற நிலையில் இந்த பிராந்தியத்திற்குரிய ஒரு பொது அச்சுறுத்தல் தொடர்பிலே அவர் இந்தியாவின் ஆதரவு சக்தியாக தங்களை, தமிழீழத்தை அடையாளப்படுத்திக் கொண்டார்.

சண்டே டைம்சுக்காக அனிதா பிரதாப்பிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் ராணுவ உதவியானது தமிழீழப் போராட்டத்திற்கு மட்டும் எதிரானதல்ல; இந்தியாவின் கேந்திர பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் என்பதை விளக்குகிறார். தமிழீழப் பகுதியிலிருக்கும் திரிகோணமலைத் துறைமுகத்தை கைப்பற்றி தெற்காசியப் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக ஒரு படைத்தளத்தை அமைப்பது தான் அமெரிக்காவின் கபட நோக்கம் என்பதை சுட்டிக்காட்டுகிறார். இதை இந்தியாவும் உணராமல் இல்லை.


தெற்காசியப் பிராந்தியத்தினுடைய பாதுகாப்பின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு சாத்தியம் கொண்டது சர்வதேச வல்லரசான அமெரிக்கா. அத்தகைய அமெரிக்கா தங்களது நேரிடை எதிரியான சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்கிறது. இது மறுபுறம் பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கும் அச்சுறுத்தல்! பிராந்திய பாதுகாப்பு நிலைத்தன்மையைக் குலைக்க வாய்ப்ப்புள்ள பொது எதிரிக்கு எதிரான கூட்டு ஒத்திசைவே இந்தியாவின் பாலான விடுதலைப் புலிகளுடைய அணுக்கப் போக்கு.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற்றம்

பொது எதிரிக்கு எதிரான ஒரு பொது வேலைத்திட்ட அம்சம் என்றளவிலும், தாங்கள் சார்ந்த பிராந்தியத்திற்கு தங்களது போராட்டத்தின் மூலமாக ஒரு பொதுநலனை முன்னிறுத்தும் நோக்கத்திலும், அந்த காலத்திய பிராந்திய புவிசார் அரசியல் போக்கை கணக்கில் கொண்டு இந்தியா முன்வைத்த ‘சமாதான பிராந்தியக் கொள்கையை’ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள். 
ஆனால் காலப்போக்கில் இந்தியா ‘சமாதான பிராந்தியக் கொள்கையை’ கைவிட்டது. மேலும் தமிழீழ தேசத்திற்கு தானே ஒரு அச்சுறுத்தலாக மாறியது மட்டுமல்லாமல், ஒரு ஆக்கிரமிப்புப் படையாக தமிழீழத்தில் படுகொலைகளை நிகழ்த்தியது. 

யதார்த்தம் இவ்வாறு இருக்க மேற்கூறிய 1980-ம் ஆண்டைய இந்திரா காலத்து இந்திய வெளியுறவுக் கொள்கையின் போக்கை கணக்கிலெடுத்துக் கொண்டு இந்திரா காங்கிரஸ் பாரம்பரியத்திலிருந்து திரு. பழ.நெடுமாறன் இன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவானதாகக் குறிப்பிடுவது அவரது தேக்கநிலையையே வெளிப்படுத்துகிறது. 

1980களின் காலமும், தற்போதைய குவாட் (QUAD) அரசியல் சூழலும்


1980-களுக்கும் தற்போதைய சூழலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியா மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு விதமான நேரெதிர் நிலைகளுக்கு நகர்ந்துள்ளன.

இந்திய மற்றும் தமிழீழத்திற்குரிய பொது அம்சமான பிராந்திய புவிசார் அரசியல் சூழலை கணக்கிலெடுத்துக் கொண்டாலும் இந்தியா 1980-ன் போக்குகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக, ‘சமாதான பிராந்திய கொள்கையை’ குலைக்கும் நிலையில் உள்ளது.

சீனாவுக்கு மாற்றான உற்பத்தி சந்தையையும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப இந்திய முதலீடுகளின் பெருக்கத்தையும்,  அடுத்தகட்ட வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்தியா அமெரிக்காவுடன் இணைந்த ஒரு பிராந்திய கூட்டமைப்பின் அங்கமாக இருக்கிறது. இந்தியாவானது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளுடன் இணைந்து செயல்படும் குவாட் கூட்டமைப்பின் நோக்கங்களில் முதன்மையானது ‘சீனாவினுடைய பிராந்திய மேலாதிக்கத்தையும், முதலீடுகளையும்’ கட்டுப்படுத்துவது ஆகும்.

1980-களில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் படைத் தளம் உருவாக்கப்படுதலை எதிர்த்தே, ’இந்தியா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையேயான’ ஒத்திசைவுப் போக்கு நிகழ்ந்தது. ஆனால் அன்று எதை முன்னிட்டு இந்தியா அமெரிக்காவை எதிர்த்ததோ, இன்று அதுவாகவே இந்தியா மாறியிருக்கிறது. குவாட் கூட்டமைப்பின் வழி அமெரிக்காவினுடைய தெற்காசிய படைத்தளமாக இந்தியா மாறியிருக்கிறது.

இந்த சூழல் போக்கிலே அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதியாக, குவாட் கூட்டமைப்பினுடைய நோக்கங்களின் கட்டமைப்புகாக இலங்கைத் தீவில் இந்தியாவின் தலையீடு நிகழ்கிறது. 

13வது சட்டத்திருத்தம் எனும் போலி

இலங்கைத் தீவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன ஒடுக்குமுறை பிரச்சனைகளுக்குரிய இந்தியாவின் தீர்வாக இதுநாள் வரையிலும் ’13வது சட்டத் திருத்தம்’ மட்டும் உள்ளது. அது காங்கிரசாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி. இவர்களின் இலங்கைத் தீவு தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையால் தமிழர்களுக்கு முன் வைக்கும் தீர்வு ’13வது சட்டத் திருத்தம்’ மட்டுமே!

‘தமிழீழம்’ என்றளவில் இந்தியாவானது இலங்கை ஒற்றையாட்சி அதிகார அரசியலமைப்பையே ஆதரிக்கும்.

தற்போது பாஜக தலைமையிலான இந்திய ஆட்சியின் மேலதிக தலையீடு என்பது இலங்கைத் தீவில் சீனாவுக்கு மாற்றான இந்திய முதலீடுகளுக்குரிய ஆதரவுச் சூழலை உருவாக்குவது எனபதன் பேரிலே நிகழ்கிறது.

இலங்கைத் தீவில் இந்தியாவினை நிலைப்பெறச் செய்ய இந்தியாவிற்கு அரசு ரீதியான ராஜதந்திர போக்குகளை மட்டும் நம்பவில்லை. இத்தனை ஆண்டு காலத்தில் இந்திய அரசின் ராஜதந்திரம் 13வது சட்டத்திருத்தத்தைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது.

தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு 13வது சட்டத்திருத்தம் எவ்வகையிலும் தீர்வைத் தரப் போவதில்லை என்றாலும் கூட, இலங்கைத் தீவில் தமிழர் இனப் பிரச்சனைக்கு இந்தியா கண்டடைந்த தீர்வாக நம்புகின்ற அதனைக் கூட நிறைவேற்றிட முடியாத இடத்தில் தான் இந்தியாவின் ராஜதந்திர நிலையிருக்கிறது. மேலும் இந்தியாவிற்கு 13வது சட்டத்திருத்தையும் உளப்பூர்மாக நடைமுறைப்படுத்திடுகிற முனைப்பும் இருப்பதாக நம்புவதற்கில்லை. இன்றுவரையும் சிங்கள ஆட்சியாளர்களிடத்திலே தனது வெளியுறவு தலையீட்டிற்கான ஒரு கருவியாகவே 13வது சட்டத்திருத்தத்தை இந்தியா பாவிப்பதாகவே தோன்றுகிறது. 

சீனாவைக் கட்டுப்படுத்த முடியாத இந்தியாவின் ராஜதந்திரம்


மேலும் இந்தியாவின் இலங்கை தொடர்பான ராஜதந்திரம் கொழும்பு துறைமுக முனைய ஒப்பந்தம் தொடர்பில் வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது. அதானிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, சீனாவுக்கு வழங்கப்பட்ட நிலையானது இந்தியா தனது வழமையான இலங்கையுடனான ராஜதந்திரப் போக்கை கேள்விக்குள்ளாக்கியது. இலங்கையுடான இந்தியாவின் நேரிடையான ராஜதந்திர போக்கு இலங்கைத் தீவில் சீனாவின் இருப்பைக் கட்டுப்படுத்துவாகத் தெரியவில்லை.

சிங்கள ஆட்சியாளர்களை பொறுத்தமட்டில் அது யாராக இருந்தாலும், இந்திய ராஜ தந்திரத்தின் யதார்த்த நிலை இதுதான். எனவே இந்திய வெளியுறவுத் துறைக்கு சிங்கள ஆட்சியாளர்களுடனான நேரிடையான  ராஜதந்திர உறவுகள், தலையீடுகளைக் கடந்து வேறுவகையிலான தலையீடுகளும் தேவையாக உள்ளது.

தமிழர்களை இந்துப் பண்பாட்டு ரீதியில் முன்னிறுத்தும் இந்தியாவின் திட்டம்


இந்த நிகழ்வுப் போக்கின் அடிப்படையில் இந்தியா சீனத்தையும், சிங்களத்தையும் ‘பெளத்தப் பண்பாட்டு’ ரீதியாக ஒர் அணியாக முன்னிறுத்தி, தன்னை ‘இந்து பண்பாட்டு’ ரீதியில் தமிழர்களுடன் இணைத்து முன்னிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது. இலங்கைத் தீவில் நேரிடையான ராஜதந்திர தலையீடுகளைக் கடந்து, பண்பாட்டு ரீதியான தலையீடுகளை நிகழ்த்த தமிழர்களுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. 

மறவன்புலவு சச்சிதானந்தம், அர்ஜூன் சம்பத், அண்ணாமலை, எல்.முருகன் போன்றோர் இந்த அரசியல் நோக்கிலிருந்துதான் இயக்கப்படுகிறார்கள். இந்துத்துவ பண்பாட்டு கட்டமைப்புகளை இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதிகளில் நிறுவுவதன் வழி இந்திய முதலீடுகளுக்கான, அமெரிக்க/ இந்திய- குவாட் அரசியலுக்கான தலையீட்டு வெளி உருவாக்கப்படுகிறது.

இதுசார்பான இந்திய வெளியுறவுக் கொள்கையின் தலையீட்டையே இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு,  தமிழீழத்திற்கு ஆதரவான நிகழ்வுப் போக்குகளாக பழ. நெடுமாறன் போன்றோர் நம்புகின்றனர்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனக் கூறி, அடுத்தகட்ட தமிழீழ விடுதலைப் போராட்ட நகர்வுகளை ‘இந்திய ஆதரவு நிலையிலிருந்து சீனாவை எதிர்க்கக் கோருகின்றனர்’.

பிரபாகரன் அவர்களின் சமாதான பிராந்தியக் கொள்கைக்கு எதிராக நடக்கும் பரப்புரை  


இந்தியா அன்று அமெரிக்காவை முன்னிறுத்தி என்ன காரணத்திற்காக தமிழ் ஆயுதக் குழுக்களை பயன்படுத்த முனைந்ததோ, இன்று அதே காரணத்திற்காக  சீனாவை முன்னிறுத்தி தமிழர்களிடம் ‘பிரபாகரன் அவர்களை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது’.

ஆனால் தெற்காசியப் பிராந்தியத்தில் குறிப்பாக சோழ மண்டலக் கடற்கரையாக அறியப்படும் தமிழர் கடற் பிராந்தியத்தில் வல்லரசுகள் தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், அதன் தலைவர் பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு என்பதும், ‘இப்பிராந்தியம் போர் நடவடிக்கைகளற்ற சமாதான பிராந்தியமாக நிலவ வேண்டுமென்பதே’!

ஆனால் விடுதலைப் புலிகளது, அதனது தலைவர் பிரபாகரனது நிலைப்பாட்டிற்கு விரோதமாக சீனாவை முன்னிட்டு அமெரிக்க+இந்திய குவாட் முகாம் இப்பிராந்தியத்தை போர்ச் சூழலுக்கு இட்டுச் செல்கிறது. அதற்கான முன் தயாரிப்புகளை, கட்டமைப்புகளை ஒழுங்கமைக்கிறது. அதனது ஒரு கண்ணியே இலங்கைத் தீவிற்குள் தமிழர்களிடையே இந்துத்துவ கட்டமைப்புகளையும், இந்திய வெளிவுறவுக் கொள்கையின் பரந்துபட்ட தலையீட்டிற்கான வெளியையும் உருவாக்குவது. பிரபாகரன் அவர்களது பெயரினை முன்னிறுத்தி சிலர் தெரிந்தோ, தெரியாமலோ இம்முயற்சிகளுக்கு துணைபோவதால், ஒட்டுமொத்த தமிழீழ விடுதலைப் போராட்ட முயற்சிகளையும் பிரபாகரன் அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக மாற்றியமைத்திட இயலாது. 

‘பிரபாகரனது சமாதான பிராந்தியக் கொள்கைக்கு விரோதமாக’ இந்தியாவோ, சீனாவோ, அமெரிக்காவோ/ பிராந்திய வல்லரசோ, சர்வதேசிய வல்லரசோ, தமிழர் வாழும் பிராந்தியத்தை யுத்த பிராந்தியமாக்கும் முயற்சியை ஈழத் தமிழர்களும், பிரபாகரனது ஆதரவாளர்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

இறுதியாக ஒன்றை குறிப்பிட்டு நிறைவு செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. தமிழினப்படுகொலை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயங்களை ஒருங்கிணைக்கும் சிங்கள இடதுசாரி செயற்பாட்டாளர் விராஜ் மெண்டிஸ் புலிகள் தொடர்பாக குறிப்பிடும் செய்திகளிலொன்றே அது. அது என்னவெனில்,

”புலிகள் தொடர்ந்து தங்களது பிரச்சார ஏடுகளில் தமிழர் கடற்பிராந்தியம் சமாதான பிராந்தியமாக நிலவ வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து வந்தனர். பிரபாகரன், திரிகோனமலையை சமாதான பிராந்தியமாக பிரகடனம் செய்தார். விடுதலைப் புலிகளை அமெரிக்கா அழித்ததற்கு முக்கியமான காரணங்களில் இதுவொன்று’.

– பாலாஜி தியாகராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *