1. புயல் நிவாரணம் தாமதம் ஏன்?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கி ஒரு வாரம் ஆகியும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்த உதவியும் வழங்காதது ஏன்?
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000; விவசாயிகளுக்கு ரூ.10000 – என முதற்கட்ட இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்குங்கள்!
வழக்கம் போல, இதிலும் முதலமைச்சர் திரு. பழனிசாமி காலம் தாழ்த்தி கபடநாடகம் ஆட வேண்டாம்.
2. ஊராட்சி மன்றங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி தரவில்லை; பணிகள் முடங்கி விட்டன – வைகோ அறிக்கை
தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் பொறுப்பு ஏற்று பத்து மாதங்கள் கடந்து விட்டன. ஊர் ஆட்சி மன்றங்களுக்கு, மாநில நிதிக்குழு மானியம் வழங்கினால்தான், குடிநீர், மின்விளக்குப் பணிகளை மேற்கொள்ளமுடியும்;; ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும்,
ஆனால், பத்து மாதங்கள் ஆகியும், மானிய உதவிகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.
அது மட்டும் அல்ல; நடுவண் அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு உரிய நிதியினையும் வழங்காமல் காலம் கடத்தி வருவது, மத்திய-மாநில அரசுகள் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.
எனவே, காலம் கடத்தாமல், மாநில நிதிக்குழு மானியத்தையும், மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியினையும் மத்திய மாநில அரசுகள் உடனே வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
3. அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டணக் கொள்ளை – வேல்முருகன் கண்டனம்
கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி!
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசுடைமையாக்கிக் கொண்டதற்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைக் கடந்த 2019-2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நிதி உரையில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரி தற்போது அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டணமாக ரூ.13,600 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கடந்த கல்வியாண்டியில் ரூ.400,000 வசூலித்து, பகல் கொள்ளையில் ஈடுபட்டது கல்லூரி நிர்வாகம். தற்போது அதை விட கூடுதலாக ரூ.5,44,370 – யை வசூலிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக்கட்டணம் என்பது தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துக்கல்லூரியில் வசூலிக்கப்படும் தொகையை விட கூடுதலானது.
இராஜா முத்தையா மருத்துவகல்லூரி, அரசு மருத்துவகல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கட்டணம் 13,600 மட்டுமே கல்லூரி நிர்வாகம் வசூலிக்கும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்து காத்திருந்தனர். ஆனால், நடப்பாண்டின் கட்டணமாக ரூ.5,44,370, சென்ற ஆண்டு நிலுவைத்தொகை ரூ.1,47,370 மற்றும் விடுதி கட்டணம் ரூ.80,000 என மொத்தம் ரூ.7,80,000-யை உடனடியாக செலுத்தக்கோரி கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி கற்க வரும் மாணவர்களை, பணம் கொழிக்கும் மரமாக கருதி வரும் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையானது வன்மையாக கண்டிக்கதக்கது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், எப்படி ரூ.7,80,000 கட்டணத்தை கட்டணத்தை கட்ட முடியும் என்று தமிழக அரசு சிந்தித்து பார்க்காதது மிகவும் வேதனையளிக்கிறது.
எனவே இராஜா முத்தையா மருத்துவகல்லூரியை அரசுடைமையாக்கி கொண்டதற்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும், கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையும் திரும்ப பெற வேண்டும் எனவும் . இவ்விவகாரத்தில் தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும் அலட்சியம் காட்டும் பட்சத்தில், மாணவர்களையும், பெற்றோர்களையும் , மக்களையும் அணி திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
4. கொரோனா போன்ற தொற்று நோய்களை அதிகரிக்க விரும்புகிறாரா அமைச்சர் கடம்பூர் ராஜூ? – பூவுலகின் நண்பர்கள்
8 வழிச்சாலை திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படவில்லை. மத்திய அரசு வழங்கியுள்ள அற்புதமான திட்டம் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
10,000 ஏக்கர் விவசாய நிலம், நூற்றுக்கணக்கான நீர்நிலைகள், ஆயிரக்கணக்கான கிணறுகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், வீடுகள், சிறு வணிக வளாகங்கள், 19 கி.மீ தூரத்திற்கு காப்பு காடுகள், பல்லாயிரக்கணக்கான மரங்கள் என இவை அனைத்தையும் அழித்து 277 கி.மீ தூரத்திற்கு அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த சாலையினால் ஏற்படும் ஏதாவது ஒரு நன்மையை சொல்ல முடியுமா அமைச்சரே?
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையில் நினைத்த இடத்தில் எல்லாம் இணைய முடியாது. சாலையின் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போடப்படும் இந்த சாலையில் மூன்று இடங்களில் மட்டுமே இணையமுடியும். இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது, கார்கள், பேருந்துகள், பெரிய ட்ரக்குகள் மட்டுமே செல்லமுடியும், அப்படியெனில் யாருக்கானது இந்த சாலை?
அமைச்சரே, நீங்கள் இந்தியாவின் அன்றைய “போர்த்துறை அமைச்சரும்”, இன்றைய நிதித்துறையின் அமைச்சருமான திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், மாமல்லபுரத்தில் “பாதுகாப்பு தளவாடக் கண்காட்சியை” துவக்கி வைத்து, சென்னை “ஐஐடி”யில் ஆற்றிய உரையை கேட்டுள்ளீர்களா?
அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் இதுதான்; “தமிழகத்தில் விவசாய உற்பத்தி குறைந்துவருகிறது, அதனால் இனிமேல் விவசாயம் செய்யாமல், போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் செய்வோம்” என்றார். அதோடு மட்டுமல்லாமல், தமிழக்தில் அறிவிக்கப்பட்டுள்ள “போர்தளவாட உற்பத்தி கேந்திரம்”, ஓசூர், கோயம்பத்தூர், திருச்சி, ஆவடி, கல்பாக்கம், காட்டுப்பள்ளி என இந்த ஊர்களை எல்லைகளாக கொண்டு இந்த பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென இந்த எல்லைகளுக்குள் 1,00,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
இந்த எட்டுவழிச்சாலை சரியாக இந்த பகுதியில் ஊடறுத்துச் சென்று காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குச் செல்லும் “சென்னையில் வெளிவட்ட சாலையில்” முடிவுறுகிறது, அதாவது, பெரு நிறுவனங்கள் உற்பத்திசெய்யப்போகும் போர் தளவாடங்களை ஏற்றுமதி செய்யவோ, அல்லது பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லவே இந்த சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
தளவாடங்களை உற்பத்தி செய்ய கையகப்படுத்தப்படும் நிலம் அமைத்துள்ள பகுதிகள் முழுவதும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்றுவிடும். சாதாரண மக்களுக்கு என்ன பயன்? கூடுதல் தகவலாக சொல்கிறேன், ஏற்கனவே தமிழகத்திற்கு தேவைப்படும் அரிசியில் மூன்றில் ஒரு மடங்கு பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அரிசிக்கே இந்த நிலை என்றால் மற்ற தானியங்களைப் பற்றி கேள்வியே இல்லை.
காலநிலை மாற்றத்தாலும், பல்லுயிரிய அழிவுகளினாலும் 30% நிலப்பரப்பு பாலையாகி வருகிறது, பயிர்களின் ஊட்டச்சத்து குறைந்துவருகிறது என தொடர்ச்சியான தாக்குதலுக்கு தமிழகம் ஆளாகிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த திட்டம் தேவையா ? சொல்லுங்கள் அமைச்சரே!
இன்னொரு தகவலும், காடுகள் அழிக்கப்பட்டு, காட்டுயிர்களின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுதான் கொரோனா போன்ற “விலங்கியல் நோய்கள்” அதிகரிப்பதற்கு காரணம் என நுண்ணுயிர் நிபுணர்கள் தெரிவித்துவருகிறார்கள், இந்த சாலை 19கி.மீ காப்பு காடுகளின் வழியாக செல்லவிருக்கிறது, அங்கு வாழும் காட்டுயிர்கள் பாதிக்கப்படும், அதனால் நமக்குள் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா கடம்பூராரே?
சென்னை-சேலம் இடையே ஏற்கனவே உள்ள மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தினாலே போதும், புதிதாக ஒரு நெடுஞ்சாலை தேவையில்லை.
5. மோடி ஆட்சியில் வேலைவாய்பின்மை அதிகரித்திருக்கிறது. ஜோதிமணி எம்.பி குற்றசாட்டு
மோடி ஆட்சியில் பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. 45 ஆண்டுகளாக இல்லாத அளவில் வேலைவாய்பின்மை அதிகரித்திருக்கிறது. தொழில்கள் நசிவடைந்துவிட்டன.
விவசாயத்தின் மீது மோடி அரசு தொடுத்துள்ள இரக்கமற்ற தாக்குதலை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். கூடுதலாக கொரோனா பாதிப்புவேறு. இச்சூழலில் எந்தவொரு அரசும் மக்களைப்பற்றி கவலைப்படாமல் 20,000 கோடிசெலவில் புதிய நாடாளுமன்றமும், ஆடம்பர மாளிகைகளும் கட்டிக்கொண்டிருக்காது.
மக்கள் துயரத்திலும்,வறுமையிலும் வாடும்போது,விவசாயிகள் போராடும்போது அவர்களது உழைப்பைச் சுரண்டி அவசியமில்லாமல் ஆடம்பரத்திற்காக மோடி அரசால் உருவாக்கப்படும் நாடாளுமன்றக் கட்டிடத்தில் கால்வைக்கவேண்டும் என்று நினைத்தாலே மனது கூசுகிறது. இந்த கூச்சம் இரக்கமற்ற ஆட்சியாளர்களுக்கு இருக்காதா? என்று தன் முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.