1. IIT இடஒதுக்கீட்டை ஒழிக்க சதி – கி.வீரமணி
மாணவர்களே, பெற்றோர்களே, அய்.அய்.டி.,களில் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி – புரிந்துகொள்ளுங்கள்!
ஆராய்ச்சிக்கு முன்னுரிமை என்ற முடிவெடுக்கப்பட்டு பரிந்துரையாம்!
ஒடுக்கப்பட்டோரே, களம் காண வாரீர் – தேர்தலில் பாடம் புகட்டுவீர்! வீரமணி
பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மத்திய ஆட்சியின் வேலைத் திட்டங்களில் முதன்மையானது சமூகநீதி – இட ஒதுக்கீட்டை – ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் படித்து வேலைக்குப் போய் தங்களது வாழ்வை உயர்த்திக் கொள்வதைத் தடுத்து, பழைய வர்ணாசிரம, மனுதர்ம யுகத்திற்கே நாட்டைக் கொண்டு செலுத்துவதேயாகும்!
அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்டு, பல்வேறு அரசமைப்புச் சட்டத் திருத்தங்களால் அமுலில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தருவதை ஒழிப்பதிலேயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மத்திய காவிகள் ஆட்சியின் செயல்கள் பகிரங்கமாக கூச்சநாச்சமின்றி நடைபெற்று வருகின்றது!
புதுப்புது ஏற்பாடுகளும், அறிவிப்புகளும் மத்திய அரசின்மூலம் வந்துகொண்டே உள்ளன!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆணை வெளிப்படையாக முன்பு வந்தது; இப்போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இட ஒதுக்கீட்டில் கைவைத்து, குழிதோண்ட நாளும் புதுப்புது ஏற்பாடுகளும், அறிவிப்புகளும் மத்திய அரசின்மூலம் வந்துகொண்டே உள்ளன!
மக்கள் வரிப் பணத்தில் நடைபெறும் அய்.அய்.டி. (IIT) என்ற மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. – தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எனப் போராடி பெற்ற இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு, ‘ஆடுகளை அம்மனுக்கு பலி கொடுப்பதைப்போல அதற்குமுன் அதற்கு மாலை போட்டு’ நடத்துவதற்கொப்ப, ராம்கோபால ராவ் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஒரு கமிட்டி, அய்.அய்.டி.,களை உயர்தர கல்வி அமைப்பாக Centre of Excellence என்று அறிவித்து ஆராய்ச்சிக்கு முன்னுரிமை என்ற முகமூடி போட்டு, அந்த சாக்கில் இட ஒதுக்கீட்டை இந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்கவேண்டியதில்லை – அந்த முறை இந்த கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது; ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று முதற்கட்டமாகத் துவங்கி – பின்னர் மாணவர் சேர்க்கையிலும் இதனை ஒழித்து, முழுக்க முழுக்க இதனை உயர்ஜாதி முன்னேறிய பார்ப்பனருக்கே பகற்கொள்ளையாக்கி விடும் திட்டத்தோடுதான் அக்கமிட்டி பரிந்துரைத்துள்ளது – தகவல் அறியும் சட்டத்தினால் இது இப்போது வெளியாகி உள்ளது!
தொடர் போராட்டத்தினால் முதலில் கல்வியில் இட ஒதுக்கீடு
அய்.அய்.டி. (IIT) நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பல்லாண்டு காலமாய் மறுக்கப்பட்டு, தொடர் போராட்டத்தினால் முதலில் கல்வியில் இட ஒதுக்கீடு கதவு லேசாகத் திறந்தது!
அதுவும் அடிக்கடி மூடிக்கொள்ளும் – தட்டிக் கொண்டே இருப்பதன்மூலம் திறந்து திறந்து மூடும்! மண்டல் பரிந்துரையினால் கிடைத்த ஒரு சிறு வாய்ப்பு இது!
பிறகு, அய்.அய்.டி. ஆசிரியர் நியமனங்களிலும் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதற்காகப் போராடி, மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க. ஆட்சியில் 2005 இல் 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக செயல்படுத்த வைத்து, 15 ஆண்டுகள்தான் ஆகின்றன.
அங்கு சேர்க்கப்படும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு எப்போதும் மன உளைச்சலைத் தந்து, மன அழுத்தத்தினால் அவர்கள் தற்கொலை வரைகூட சென்ற வரலாறு மறுக்க முடியாத ஒன்று.
கல்விக் கண்ணைக் குத்துகின்ற கொடுமையைக் கண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது!
இந்நிலையில், இப்போது வெளிப்படையாக ஒரு குழுவின் பரிந்துரை என்ற சாக்கில், அரசமைப்புச் சட்டத் திருத்தம்மூலம் பெற்ற உரிமைகளைக்கூட மத்திய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சி பறிக்க ஆயத்தமாகியுள்ளது.
மாணவர்களே, பெற்றோர்களே, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கண்ணைக் குத்துகின்ற இந்தக் கொடுமையைக் கண்டு நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?
மருத்துவக் கல்வியில் ‘நீட்’ தேர்வு, என்ற கொடுவாள் மூலம், ஒடுக்கப்பட்டோர் – கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இப்போது பொறியியல் துறையிலும் இப்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு இல்லாததாக்கத் திட்டமிடுகின்றனர், கவனமாக இருங்கள்!
நீதிக்கட்சி என்ற திராவிடர் ஆட்சிதான் சரியாக ஒரு நூற்றாண்டுக்குமுன் ஆட்சி பீடமேறி – தனக்குப் பிரிட்டிஷ் அரசு தந்த குறைந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதன்முதலில் வகுப்புரிமை – சமூகநீதிக் கொடியை ஏற்றியது.
திராவிடர் கழகத்தின் இடையறாத உழைப்பினால் 69 சதவிகித இட ஒதுக்கீடு
தந்தை பெரியார், அவர்தம் இடையறாத போராட்டம் – இதனைப் பரவலாக்கியது!
அதைத் தொடர்ந்து காமராசர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி இதனை விரிவாக்கியது!
இடையில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் பொருளாதார ‘கரடி’ புகுந்ததை விரட்டிய பின், அது மேலும் விரிவாகி, ஜெயலலிதா ஆட்சியில் 69 சதவிகிதம் சட்டம் காலத்தின் கட்டாயமாகி, திராவிடர் கழகத்தின் இடையறாத உழைப்பு, வியூகத்தினால் 9 ஆவது அட்டவணை பாதுகாப்போடு 69 சதவிகிதம், தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக அமலில் உள்ளது!
தமிழ்நாடு பெரியார் மண், சமூகநீதி மண், திராவிடம் வென்றதன் விளைவாக ஏற்பட்ட விளைச்சல் இது!
இதனை ஒழித்திட, காவி, மதவெறி ஆட்சி சமூகநீதியை சாய்க்க நாளும் முயன்று வருகிறது.
ஒடுக்கப்பட்டோரை ஒன்று திரட்டி, போராட்டக் களம் காணுவோம் – வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாடம் புகட்டத் தவறாதீர்! தவறாதீர்!! தவறாதீர்!!!
2. விவசாயிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை – பிருந்தா காரத்
அவர்களுடைய போராட்டம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கானது. அரசியலமைப்பு சட்டப்படியான வாழ்வுரிமைக்கானது.
அவர்களுடைய போராட்டம் ஜனநாயகத்துக்கானது, தங்களுடைய கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற உரிமைக்கானது.
அவர்களுடைய போராட்டம் உங்களுக்கானது, எனக்கானது. ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்குமான போராட்டம் அது – பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
3. மீனவர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை – மு.க.ஸ்டாலின்
கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும் எதிர்பாராததாகவும் உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 36 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி கருவிகளையும் பாதுகாப்பாக தாயகம் மீட்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
4. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்கவேண்டும்!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 15 நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்த்தியிருப்பது பகற் கொள்ளையைவிட மோசமானது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை சுரண்டும் இந்த விலை உயர்வை மோடி அரசு உடனே திரும்பப்பெற்று பழைய விலைக்கே கொடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தி லிட்டர் 40 ரூபாய்க்கு விற்கவேண்டிய பெட்ரோலை 86 ரூபாய்க்கு விற்று மக்களை சுரண்டுகிறது மோடி அரசு. அது போதாதென்று சமையல் எரிவாயு விலையையும் தன் விருப்பம்போல் உயர்த்தி வருகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி சிலிண்டர் விலை 610 ரூபாயிலிருந்து 660 ரூபாயாக உயர்த்தப்பட்டது. டிசம்பர் 15 முதல் அது 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மோடி அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.
கொரோனா பெருந்தொற்றால் வேலையோ வருமானமோ இல்லாமல் அவதிப்படும் மக்களிடம் இப்படி அப்பட்டமாகக் கொள்ளையடிக்கும் அரசாங்கம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. ‘கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி; ஏழை மக்களுக்கு விலை உயர்வு’ என்பதுதான் மோடி அரசின் தாரக மந்திரமாக உள்ளது. ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றிலடிக்கும் இந்த விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும். பழைய விலைக்கே எரிவாயு சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
5. ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு ரத்தா? அபத்தமான பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது! .மருத்துவர் ராமதாஸ்
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. அடிப்படை இல்லாத, சமூகநீதிக்கு எதிரான, மிகவும் அபத்தமான இந்த பரிந்துரை கண்டிக்கத்தக்கது.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டுமின்றி, மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டை பயனுள்ள வகையில் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தில்லி ஐ.ஐ.டி இயக்குனர் ராம்கோபால் ராவ் தலைமையில் ஒரு வல்லுனர் குழுவை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உயர்கல்வித்துறை அமைத்தது. அக்குழுவின் அறிக்கை கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்டு, இப்போது அரசின் ஆய்வில் உள்ளது. வல்லுனர் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பற்றி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விவரங்களில் தான் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்திருப்பது தெரியவந்துள்ளது.
‘‘கற்பித்தல், ஆராய்ச்சி, திறமையான மாணவர்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும் என்பது தான் ஐ.ஐ.டி-க்களின் இன்றையத் தேவையாகும். அதற்கு ஐஐடி-க்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குத் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இட ஒதுக்கீடு வழங்க வேண்டியத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, ஐ.ஐ.டிக்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தகுதியான ஆட்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து கிடைப்பதில்லை’’ என்று அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தான் அபத்தமான வாதம் என்று கூறுகிறேன்.
இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதியும், திறமையும் பின்னுக்குத் தள்ளப்படுவதாக கூறப்படுவதே சமூகநீதிக்கு எதிரான சதியாகும். இட ஒதுக்கீடு எந்த வகையிலும் தகுதியை பாதிப்பதில்லை என்பது பல்வேறு தருணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.ஐ.டிக்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தகுதியான ஆட்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் இல்லை என்று வல்லுனர் குழு கூறியிருப்பது இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை சிறுமைப்படுத்தும் செயலாகும். ஐ.ஐ.டி பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்குமான தகுதி சம்பந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதும், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டிருப்பதும் தான். இந்தத் தகுதிகளைக் கொண்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினர் ஏராளமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு இத்தகுதி இல்லை என்ற முடிவுக்கு எந்த அடிப்படையில் வல்லுனர் குழு வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஐ.ஐ.டிகள் எனப்படுபவை ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தமான தனி உலகம். அங்கு தகுதிகள் அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது என்பதே குரூரமான நகைச்சுவை தான். ஒன்றாம் வகுப்புக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு கூட முதலில் தகுதித் தேர்வு, பின்னர் போட்டித்தேர்வு என்று இரு தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தான் நியமனங்கள் நடைபெறுகின்றன. ஆனால், ஐ.ஐ.டி ஆசிரியர் பணிக்கு அத்தகையத் தேர்வுகள் எதுவும் கிடையாது. நேர்காணல் அடிப்படையில் தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதிலும் கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் விண்ணப்பங்கள் ஆய்வு நிலையிலே நிராகரிக்கப்பட்டு, ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு வேண்டியவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தாராளமாக மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, பணி வழங்கப்படுகிறது. இப்படி ஒரு சார்பான ஆள்தேர்வு முறையை வைத்துக் கொண்டு இடஒதுக்கீடுப் பிரிவினருக்கு போதிய தகுதி இல்லை என்று கூறுவதை விட மோசமான மோசடி இருக்க முடியாது.
ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் ஐ.ஐ.டிகளின் தரம் உயர்ந்து விடும் என்று கூறுவதும் ஏமாற்று வேலை தான். ஐ.ஐ.டி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட, அது நடைமுறையில் இல்லை; ஏட்டளவில் மட்டும் தான் உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்கு 49.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும் கூட, ஐ.ஐ.டிகளின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் விகிதம் ஒற்றை இலக்கத்தைக் கூட தாண்டவில்லை என்பது தான் உண்மை. தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் உயர்வகுப்பினர் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருந்தாலும் கூட, ஐ.ஐ.டிகளின் தரம் உயரவில்லை. அத்தகைய சூழலில், இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டால் ஐ.ஐ.டிகளின் தரம் உயர்ந்து விடும் என்பது நச்சுத்தன்மை கலந்த பரிந்துரையாகும். இப்படி கூறுவதை விட ஐ.ஐ.டிகளில் ஓ.பி.சி, பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இடமில்லை என்று அவற்றின் நுழைவாயிலில் அறிவிப்புப் பலகை வைத்து விடலாம்.
ராமகோபால்ராவ் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே இட ஒதுக்கீட்டை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காகத் தான். ஆனால், அந்த குழுவோ இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது நகைமுரண் ஆகும். இதன் மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் இன்னும் எவ்வளவு காலம் தான் ஏமாற்றப் படுவார்களோ என்பது தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. மாறாக ஐ.ஐ.டிகளில் பணி நியமனத்தை வெளிப்படையானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லுனர் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினரை திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.
6. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்! வேல்முருகன்
தங்களின் வாழ்வாதாரத்தை காக்க டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், நாட்டு மக்களின் அடுத்த கட்ட தாக்குதலை நடத்தியுள்ளது பாசிச மோடி அரசு. அதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணி பார்க்க முடியாத நிலைக்கு உயர்த்தியுள்ளது மோடி அரசு.
குறிப்பாக, எரிவாயு சிலிண்டர், இம்மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிசம்பர் தொடக்கத்தில் ரூ.610-க்கு இருந்த எரிவாயு சிலிண்டர், தற்போது ரூ.710-க்கு, விநியோகம் செய்யப்படுகிறது. இம்மாதமே இன்னும் முடியாத நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயரலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சமயத்தில், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது மோடி அரசு.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரியை குறைக்காமல், பாஜக அரசு உயர்த்தியே வந்துள்ளது. இதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ. 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பெட்ரோல் விலை ரூ. 86 ஆகவும், டீசல் விலை ரூ.79 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த ஆறரை ஆண்டுகளில் மோடி அரசு, ரூ.19 லட்சம் கோடியை கலால் வரியின் மூலம் கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. 2020- ஆம் ஆண்டில் மட்டும், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதன் மூலம் கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
கொரோனா காலத்தில் நாட்டு மக்கள் வேலையின்றி, வருமானத்தை இழந்து வரும் இந்நேரத்தில், மக்களின் மீது வரி சுமையை உயர்த்தி, கஜானாவை நிரப்புவதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கொரோனா காலத்தை தனது நல்ல வாயப்பாக பயன்படுத்திக்கொண்ட பாசிச மோடி அரசு, விடிந்தால் ஒரு சட்டம், இரவானால் ஒரு சட்டம் கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடியால் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு, கோடி கணக்கான ரூபாய்களை நாடாளுமன்றம் கட்டுவதற்கும் பிரதமர் மோடிக்குப் புதிய விமானம் வாங்கவும், நாள்தோறும் விளம்பரச் செலவுக்கும் மோடி அரசு பயன்படுத்த நினைக்கிறது. மோடி அரசுக்கு ஒன்றை நினைவுப்படுத்துகிறேன், உலகத்தில் எந்த இடத்திலும் சர்வாதிகாரம் நிலைத்து நிற்கவில்லை என்பதை உணர வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு சிலிண்டர் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
எனவே, மக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறைக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாருக்கு வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
7. ஐ.ஐ.டி..யில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு சதித்திட்டமிட்டுள்ளதற்கு வன்மையான கண்டனம் – பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வியகத்தில் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக வந்துள்ள தகவல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐ.ஐ.டி களை உயர்தகுதி மிக்க கல்வி நிறுவனமாக (Institute of Excellence) அறிவிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ள குழு ஒன்று பரிந்துரைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும் நிறுவனங்கள் இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் மத்திய கல்வி அமைச்சர் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெரும் முயற்சியால் அரசு நிறுவனமாக உருவாக்கப்பட்டவை ஐ.ஐ.டி.க்கள். நாட்டின் தலைசிறந்த நிறுவனமாக இன்று ஐ.ஐ.டி.க்கள் உயர்ந்துள்ளதற்கு ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது எவ்வகையிலும் தடையாக இருக்கவில்லை. இடஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஐ.ஐ.டி. யின் ஏராளமான பேராசிரியர்கள் தமது துறையில் உலகம் போற்றும் சாதனைகளை படைத்துள்ளார்கள்.
எடுத்துக்காட்டாக சென்னை ஐ,ஐ.டி.யின் கணித துறையில் பணியாற்றிய முனைவர் வசந்தா கந்தசாமி உலகம் போற்றும் கணித பேராசிரியராக திகழ்கிறார்.
சமூக நீதிக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சரவை இந்த பரிந்துரையை செய்துள்ளது.
இப்போது ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழிக்க முனையும் பாஜக நாளை மாணவர்கள் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டை ஒழிக்க முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூத்தினருக்கும் எதிரான பாஜக வின் இந்த சமூக நீதி விரோத கொள்கையை முறியடிக்க சமூக நீதியில் நாட்டம் உள்ள அனைவரும் ஒன்று சேர்வது காலத்தின் கட்டாயமாகும்.
8. குஜராத்தி முதலாளியான அதானியை கைவிட முடியுமா? பொறியாளர் சுந்தர்ராஜன்
குவிக்கப்பட்ட மின் உற்பத்தி முறையைக் கைவிடுவதே சூழலை காப்பதற்கான முதல் படி. உலகம் முழுவதும் பரந்துபட்ட மின்னுற்பத்தியை நோக்கி பயணிக்கையில் இந்தியா இன்னமும் பழைய பாதையில் தொடர்வது கவலையளிக்கிறது. குஜராத்தில் 1,75,000 ஏக்கர் நிலப்பரப்பில் 30,000 மெகாவாட், ஒருங்கிணைந்த புதுப்பிக்கக் கூடிய. ஆற்றல் மின்உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர். இதில் இரண்டு செய்திகள், குஜராத் மாநிலம் மித்திவிர்தியில் அணுவுலைகளை அமைப்பதால் குஜராத்திகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அந்த திட்டங்கள் கைவிடப்படுகின்றன. ஆனால் குஜராத்தி முதலாளியான அதானியைக் கைவிட முடியுமா? இந்தியா, ஆஸ்திரேலியா முழுவதும் அதானிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றாலும், அவர்களுக்கென இவ்வளவு பெரிய சூரிய மின்சக்தித் திட்டத்தை அரசு தாரைவார்க்கிறது. இதே அதானி குழுமம் கமுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஏமாற்றி கையகப்படுத்தி சூரிய மின்திட்டத்தை அமைத்துள்ளது.