அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: அம்பானி-அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம், சென்னையில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்

1. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருபுறம் பேச்சுவார்த்தை – மறுபுறம் மத்திய அமைச்சர் மூலம் பழிதூற்றுவது நியாயந்தானா? – கி.வீரமணி 

பிரதமர் மோடி தனது அமைச்சர்களை ‘நா காக்க’ அறிவுறுத்தி அமைதி வழியில் தீர்வு காண வேண்டும்- விவசாயிகளின் குரலை புறந்தள்ளக்கூடாது; அதுதான் ஜனநாயக வழிமுறை!

குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சியினர் மனு!

விவசாயிகளின் போராட்டம் உலகமே வியக்கத்தக்க வகையில், அறவழியில் டில்லி புறநகர் எல்லைப் பகுதிகளில் 15 நாள்களாக தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி  அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  மசோதாக்களை விவசாயிகளின் நலனுக்கு விரோதமான வகையில், அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதைபோல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளனர். நிறைவேற்றிய முறை – குறிப்பாக மாநிலங்களவையின் அமளி துமளியில் – ஓட்டெடுப்பு குரல் வாக்கின்மூலம் நிறைவேறியது என்று அவையின் துணைத் தலைவர், மாநிலங்களவையில் அறிவித்ததை எதிர்த்தே குடியரசுத் தலைவர் வரை எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் மனு அளித்து, தங்களது நியாயத்தைச் சுட்டிக்காட்டி ஜனநாயக முறை காப்பாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்!

மத்திய அரசுக்குத் ‘தலையாட்டும் தம்பிரான்களாக…’

இச்சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கே என்று பிரதமரும், அவரது ‘‘ஹிஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்’’ அமைச்சர்களும், தமிழ்நாட்டில் உள்ள – மத்திய அரசுக்குத் ‘தலையாட்டும் தம்பிரான்’களாக உள்ள அ.தி.மு.க. ஆட்சியாளரும் கோரஸ் பாடுகிறார்கள்!

1. விவசாயிகளிடம் முதலில் கலந்து பேசி, கருத்திணக்க முறையை (Consensus) கையாண்டிருந்தால், இந்நிலை வந்திருக்குமா?

2. மாநிலப் பட்டியலில் – ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள சில அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துக்கொண்டு சட்டம் இயற்றுவதற்கு முன்பு, ஒத்திசைவினை, மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டு – விவசாயிகளைக் கலந்திருந்தால் இப்படி ஒரு அறப்போர் தலைநகர் குலுங்க, உலகமே வியக்க – பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டு இருக்குமா? ஒரு சிறு அசம்பாவிதம், வன்முறை என எதுவுமின்றிப் போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது, தண்ணீர் பீய்ச்சி அடித்தபோதும், கண்ணீர் புகை வீசி  தடுத்த நிலையிலும்கூட, அறவழியில் அதனை எதிர்கொண்டனர்.

உணவுப் பொருள்களை அவர்களே கொண்டு வந்து சமைத்து, பரிமாறி உண்டு, ‘சாத்வீக’ முறையில் போராட்டம் – பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் நடத்தப் பெறுகிறது! டில்லியில் கடுங்குளிரில் நடுரோட்டில் 14 நாட்களாக அமர்ந்துள்ளனர்!

ஆரம்பத்தில், இந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டன என்று ஒரு பொய்ப் பிரச்சாரத்தைக் கூறியது ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், அதன் குரல் ஒலிக்கும் சில ஊடகங்களும்!

மத்திய அமைச்சர்மூலம் பழி தூற்றுவது நியாயந்தானா?

அது எடுபடவில்லை என்றவுடன், மத்திய மோடி அமைச்சரவையின் அமைச்சரான – நுகர்வோர் துறை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே என்பவர், ‘‘டில்லியிலும், பிற மாநிலங்களிலும் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்துகொண்டு தூண்டிவிடுவதாக’’, ஒரு அபாண்ட பழியை சுமத்திப் – பேசி, எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றிடும் முயற்சியில் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்!

இதுபோன்று தனது அமைச்சக சகாக்கள் பேசும்போது, அதனை பிரதமர் கண்டிக்கவேண்டாமா?

ஒருபுறத்தில் – 5, 6 முறை பேச்சுவார்த்தைக்கு விவசாயப் போராட்டப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதும், மறுபுறத்தில் இப்படி மத்திய அமைச்சர்மூலம் பழி தூற்றுவதும் நியாயந்தானா?

பிரதமர் மோடி, ஜனநாயகத்தின்  பெருமை பற்றியெல்லாம் நேற்று (10.12.2020) புதிய நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கூறியுள்ளார்!

உண்மையாகவே அவர்கள் ஜனநாயகத்தை மதிக்கிறார்கள் என்றால், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடி கருத்திணக்கம் கண்டு, நிறைவேற்றுவதுதானே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்!

வீண் பழி – அபவாதங்கள் தொடரலாமா?

அணைக்கத் தேவையானதை விட்டுவிட்டு, அத்தீ மேலும் கொழுந்துவிடும் வகையில் மத்திய அமைச்சர்கள் பேச்சுகள் – கருத்துக் கூறல் – வீண் பழி – அபவாதங்கள் தொடரலாமா?

பிரதமர் தனது அமைச்சர்களை ‘நா காக்க’ அறிவுறுத்தி, அமைதி வழியில் தீர்வினை எட்ட, விவசாயிகளின் குரலை புறந்தள்ளக்கூடாது – அதுதான் ஜனநாயக வழிமுறையாகும்!

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2. சென்னையில் சுங்கச் சாவடிகளை அகற்றும்வரை போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின்

சட்ட விதிகளை மீறி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தைக் காட்டுகிறது.

மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்! என்று தெரிவித்துள்ளார்.

3. நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1150 கோடி டெண்டர் ஊழல்: விசுவரூபம் எடுக்கும் வினாக்களுக்கு விடை என்ன?வைகோ 

தமிழக முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விடுவதில் நடைபெறும் ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கின்றது.

தஞ்சாவூரில் சாலைப் பணிகளுக்கு ரூ.1150 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை மாதம் பிபிஎம்சி டெண்டர் (Performance Based Maintance Contract -PBMC) விடப்பட்டபோது, மிகவும் நல்ல நிலையில் உள்ள சாலைகள் பராமரிப்புக்காக இந்த டெண்டரில் சேர்க்கப்பட்டதையும், டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு இந்தப் பணிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்குச் சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் புகார் செய்தது. எனவே அந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டது.

ஆனால் அதே பிபிஎம்சி டெண்டர் வேறு ஒரு பெயரில் (Area Based Comprehensive Road Improvements Strengthening Maintenance -AB-CRISM) இரண்டு டெண்டராகப் பிரிக்கப்பட்டது.

அதில் ஒன்று 208 கி.மீ. சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு ரூ.656 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, நவம்பர் 18 ஆம் தேதி திறக்கப்பட்டது. இன்னொன்று 254 கி.மீ. சாலை ரூ.494 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, நவம்பர் 19 ஆம் தேதி திறக்கப்பட்டது.

மேற்கண்ட இரு டெண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே அறப்போர் இயக்கம் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “இந்த ஒப்பந்தப் பணிகள் இரண்டு நிறுவனங்களுக்கு (RR Infra construction, JSV) என்று தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்து இருக்கின்றது. இது முறைகேடானது” என்று சுட்டிக்காட்டி இருந்தது.

அதன்பின்னர் டெண்டர் திறக்கப்பட்டு, அதில் இந்த இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் இ-டெண்டர் முறை என்பதால், இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் இ-டெண்டர் முறையில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியை அளித்தாலும், குறிப்பிட்ட நிறுவனத்திற்குத்தான் அந்த டெண்டர் என்று முன்கூட்டியே எப்படி முடிவு செய்யப்பட்டது? இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யார்?

இதுவரை பிபிஎம்சி டெண்டர்களில் ஒரு கிலோ மீட்டருக்கு, ரூபாய் ஒரு கோடி என திட்ட மதிப்பீடு செய்து வந்த நெடுஞ்சாலைத் துறை, ரூ.656 கோடி டெண்டரில் ஒரு கிலோ மீட்டருக்கு 3.15 கோடி என மதிப்பீட்டை உயர்த்தியதும், அதே போல் ரூ.494 கோடி டெண்டரில், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.95 கோடி என்று மதிப்பீட்டை அதிகரித்ததும் ஏன்?

ஆதாரங்களுடன் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்தும், குறிப்பிட்ட அந்த இரண்டு நிறுவனங்களுக்கு ரூ.1150 கோடி டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பின்னணியில் உள்ள ஊழல் நபர்கள் யார்?

தஞ்சாவூரில், நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரிலும், பராமரிப்பு என்ற பெயரிலும் பட்டியலில் இணைத்து ரூ.1150 கோடிக்கு டெண்டர் விடுவதற்கு காரணமானவர்கள் யார்?

விசுவரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில்கூற வேண்டும்.

வைகோ இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

4. தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று – சிபிஐ (எம்) சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்

மூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐ முற்றாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 9 அன்று, 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த போது மத்திய அரசு ஆணவப் போக்கோடு நடந்து கொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது.

டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகமையில் இருக்கும் மாநில விவசாயிகள் டில்லியை நோக்கி புறப்பட வேண்டுமென்றும், அதே தேதியில் இதர மாநிலங்களில் ஆதரவு இயக்கம் நடத்திட வேண்டுமென்றும் அறைகூவல் வந்துள்ளன.

கடும் குளிரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லி மாநகரத்தை முற்றுகையிட்டு உறுதியாக தொடர்ந்து போராடுகிற போது அப்போராட்டத்தை ஆதரிக்கின்ற அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல வடிவங்களில் இயக்கங்கள் நடத்திட வேண்டுமென விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் டிசம்பர் 14ந் தேதியன்று காத்திருக்கும் போராட்டத்தை துவக்குகிறார்கள். அகில இந்திய விவசாய சங்கத்தின் கூட்டமைப்பின் அறைகூவலின் அடிப்படையில் நாடு முழுவதும் அம்பானி, அதானி பொருட்களை புறக்கணிக்கும்  இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் டிசம்பர் 14ந் தேதியன்று ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க், ஜியோ விற்பனை கடைகள் முன்பு ரிலையன்ஸ் பொருட்களை புறக்கணியுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

தேசம் காக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நடக்கக் கூடிய “அதானி, அம்பானி பொருட்களை புறக்கணிக்கும்” இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

5. சென்னை புறநகர் ரயில் சேவையை மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்த பின்னரும் முழுமையாக தொடங்கப்படாதது ஏன்? – வேல்முருகன்

மக்கள் தங்கள் வேலை இடங்களுக்கு வந்து செல்ல நெருக்கடியான பேருந்துகளையும் அல்லது அதிக கட்டணம் கொடுத்து தனியார் வண்டிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

தொழிலகங்களும், அலுவலகங்களும் 100 விழுக்காடு  திறந்த பிறகு இன்னமும் அவர்களின் பொது போக்குவரத்தை நிறுத்தி வைத்திருப்பது கேள்விக்குரியதாகும்.

மாநில அரசு அனுமதி அளித்த பின்பும் இரண்டு மாதங்களாக ரயில்வே அமைச்சகம் இதன் மீது முடிவு எடுக்காதது ஏன் என்று மக்களுக்கு ரயில்வே அமைச்சகம் விளக்க வேண்டும். 

இனிமேலும் காலதாமதம் செய்யாமல், ஏழை மக்களின் நலன்  கருதி உடனடியாக சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க வேண்டும்.

இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *