பெரியார் ஓவியம்

பார்ப்பனர் அல்லாதோர் உரிமைக்காக காங்கிரசுக்குள் பெரியார் செய்த கலகங்கள்

தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – 2

பொதுவாக பெரியார் காங்கிரசில் கதர் விற்றார், கள்ளுகடைகளை எதிர்த்து தென்னைகளை வெட்டினார் என்றுதான் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால் பெரியார் காங்கிரசில் கலகம் செய்த வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.

காங்கிரசுக்குள்ளேயே பார்ப்பனரல்லாதாரை சென்னை மாகாண சங்கம் உருவாக்கம்

ஈரோட்டில் 1879 செப்டம்பர் 17-ல் பெரியார் பிறந்தார். இயல்பாக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெரியார் 1908 முதல் காங்கிரஸ் மாநாடுகளுக்கு செல்லத் துவங்குகிறார். 1917-ல் காங்கிரசில் சுயராஜ்ஜியத்திற்கும் வகுப்புவாரி உரிமைக்கும் காங்கிரசில் உள்ள பார்ப்பனர் அல்லாதவர்களை இணைத்து சென்னை மாகாண சங்கம் என்பதை உருவாக்குகிறார்கள். 

இது திரு.கேசவபிள்ளையை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வ.உ.சிதம்பரனார், வரதராஜ நாயுடு, சர்க்கரை செட்டியார் உள்ளிட்ட முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அதில் இருந்தார்கள். சென்னை மாகாண சங்கம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திவிடக் கூடாது, அந்தச் சங்கம் நிலைபெற்றுவிடக்கூடாது, அதன்மூலம் காங்கிரசுக்குள் பிராமணர் அல்லாத மக்களின் செல்வாக்கு உயர்ந்துவிடக்கூடாது என்று பார்ப்பன தலைவர்கள் நினைத்தனர். 

சென்னை மாகாண சங்கம் வழியாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான தீர்மானங்கள்

1919-ல் சென்னை மாகாண சங்கம் தனது இரண்டாவது மாநாட்டை நடத்துகிறது. இரண்டிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்வைத்து மிகத்தீவிரமான தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். 1919 திருச்சி காங்கிரஸ் மாநாட்டிலும் வகுப்புவாரி உரிமைக்கு தீர்மானம் கொண்டுவர முயன்ற பெரியார், அதோடு நில்லாமல் தொடர்ச்சியாக காங்கிரசில் வகுப்புவாரி உரிமைக்கான போரை தொடர்ந்து நடத்தினார். 1919-க்குப் பின் சென்னை மாகாணச் சங்கத்தின் கூட்டங்கள் நடைபெறாமல் தடுக்கிறார்கள். அதனை பொறுக்காமல் சென்னை மாகாண சங்கதின் தலைவர் கேசவ பிள்ளை காங்கிரசிலிருந்து விலகி நீதிக்கட்சியில் சேர்ந்து விட்டார்.

நெல்லை காங்கிரஸ் மாநாட்டிலும் தீர்மானம்

1920 நெல்லை காங்கிரஸ் மாநாட்டில் அரசுப் பணிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப வகுப்புவாரி உரிமை தரவேண்டும், பள்ளிகளில் சமஸ்கிருதத்திற்கு கொடுக்கப்படும் மரியாதையை தமிழுக்கும் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார் பெரியார். ஆனால் சீனிவாச ஐயங்கார் இந்த தீர்மானத்தை நிராகரித்தார். 

தஞ்சை மாகாண மாநாட்டிலும் தீர்மானம் நிராகரிப்பு

1921-ல் தஞ்சை காங்கிரசின் தமிழ் மாகாண மாநாட்டிலும், 1923-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டிலும் பெரியார் கொண்டுவந்த வகுப்புவாரி உரிமை தீர்மானத்தை ராஜாஜி தடுத்து நிறுத்தினார்.

காங்கிரசின் தலைவராக இருந்து மீண்டும் கொண்டுவந்த தீர்மானம்

1924-ல் காங்கிரசின் தலைவராக பெரியார் இருந்தபொழுது நடந்த மாநாடு எல்லாவற்றிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை முதன்மை இலக்காக வைத்து பெரியார் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பார்ப்பனர்களும், பார்ப்பன ஆதரவாளர்களும் அதை நிறைவேற்ற விடாமல் தடுத்தார்கள். 

இதே காலகட்டத்தில் காங்கிரசின் பார்ப்பன தலைவர்களை மீறி அனைத்து மக்களும் ஆலயம் நுழையும் தீர்மானம் மற்றும் வைக்கம் போராட்டம் என்று காங்கிரசின் வேலைத்திட்டத்தில் இல்லாத சமத்துவத்திற்கான கிளர்ச்சிகளில் முக்கியப் பணியாற்றினார். 

சேரன்மகாதேவி குருகுலப் போராட்டம்

வாவேசு ஐயர் காங்கிரசின் கொள்கையையும், தேசிய உணர்வையும் பரப்ப கல்லிடைக்குறிச்சியில் ஒரு குருகுலத்தை நடத்தி வந்தார். அது பிற்காலத்தில் சேரன்மகாதேவி குருகுலமாக மாற்றப்பட்டது. பல காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் அங்கு படித்து வந்தனர். அதில் பிற்காலத்தில் சென்னை மாகாண முதல்வராக வந்த ஓமந்துர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் மகனும் ஒருவர்.

இது காங்கிரஸின் நிதியில் நடைபெற்ற குருகுலம் ஆகும். இங்கு பார்ப்பனர்களுக்கு தனி உணவும், பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனி உணவும் பரிமாறப்பட்டது. தனித்தனி இடங்களில் அமர்ந்து உண்ணும் படி அமைக்கப்பட்டது. உணவின் தரமும் வேறுபட்டிருந்தது. தனித்தனி தண்ணீர் குவளைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சாதிப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டனர்.  

பார்ப்பனர்களுக்கு வைத்திருந்த குவளையில் நீர் அருந்தியததற்காக, ஓமந்தூராரின் மகனை வ.வே.சு ஐயர் அடித்தது அங்கிருந்த சாதியப் பாகுபாட்டை வெளிக்கொண்டு வந்தது. இதனை ஓமந்தூரார் பெரியாரிடம் கொண்டு சென்றார். 1925-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டி அனைவருக்கும் சமமான உணவு வழங்கக் கோரியபோது வ.வே.சு ஐயர் மறுத்தார். 

இறுதியாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு பெரியாரின் கோரிக்கை பெரும்பான்மையினர் ஆதரவில் வெற்றிபெற்றது. ஆனாலும் வ.வே.சு ஐயர் அக்கோரிக்கையை நிறைவேற்றாததால், குருகுலத்திற்கு காங்கிரஸ் கொடுக்கும் நிதி நிறுத்தபட்டது.

பார்ப்பனியத்தின் சாதி வெறிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்த சப்பைக்கட்டுகள்

ஒரு தனிமனிதனுக்கு சாதாரணமாக ஜாதியின் அமைப்பை மாற்ற அதிகாரம் கிடையாது என்று சொல்லியிருக்கிறார் வ.வே.சு.அய்யர். தாழ்வாகக் கருதப்பட்டவர்களுக்கு சடங்கு ஒன்றைச் செய்து உயர்வானவர்களுக்குச் சமமானவர்களாக மாற்றிவிடலாம் என்றும் வ.வே.சு ஆலோசனை சொன்னார். அனைவருடனும் கலந்து உண்ண சில குழந்தைகள் மறுத்தால், அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று காந்தி சொன்னார். குருகுலத்தை உருவாக்குவது கடினம் அதனால் அதன் நிர்வாகத்தில் நாம் தலையிடக் கூடாது என்றார் ராஜாஜி. இவை எல்லாம் காங்கிரசிற்குள் இருந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.

காங்கிரஸ் மாநாட்டு மேடைகளில் அமர மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் பார்பனர்கள் மற்றும் ஆதிக்க சாதியினராக இருந்தார்கள். காங்கிரஸ் மாநாட்டு மேடைகளில் மேல் சாதியினர் மட்டும் அமர அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட தொண்டர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர். இவை அனைத்தும் பெரியாருக்கு காங்கிரசின் மீது இருந்த நம்பிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கச் செய்தது.

காஞ்சிபுரம் மாநாட்டிற்கு முதல் நாளே பெரியார் செய்த கலகம்

காஞ்சிபுரத்தில் 1925 நவம்பர் 25 அன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு முதல் நாள் காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்றினை அணிதிரட்டினார் பெரியார். அதில் வகுப்புவாரி உரிமை தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

”தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்தும், தேசிய ஒற்றுமையை உத்தேசித்ததும் அரசியல் சம்பந்தமான சகல பதவிகளிலும், இந்து சமூகத்தில் பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதோர் என்போர் ஆகிய இந்த மூன்று சமூகத்தாருக்கும் அவரவர் ஜனத் தொகையை அனுசரித்துப் பிரதிநிதி ஸ்தானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமாய் மாகாண மாநாட்டைக் கேட்டுக் கொள்வதாடு, இத் தீர்மானத்தை மாகாண மாநாடு மூலமாய் காங்கிரசை வலியுறுத்தும்படியும் தீர்மானிக்கிறது.” (குடிஅரசு – 16.12.1925)   என்ற தீர்மானத்தை காங்கிரசின் காரியக் கமிட்டிக்கு கொண்டு சென்றபோது 25 பேர் கையெழுத்து இருந்தால் தான் அந்த தீர்மானத்தை காங்கிரஸ் மாநாட்டில் வைக்க முடியும் என்று புதிதாக ஒரு விதியை சொன்னார்கள். 

காங்கிரசை தூக்கி எறிந்து வெளியேறிய பெரியார்

பெரியார் 50 பேரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார். இது வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசில் கொண்டுவந்த ஆறாவது தீர்மானமாகும். சென்னை மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திரு.வி.கலியாணசுந்தரனார், பார்ப்பன தலைவர்களின் கைப்பாவையாக இருந்து பெரியார் கொண்டுவந்த இடஒதுக்கீடு தீர்மானத்தை ஏற்க மறுத்தார்.

வெறுத்துப்போன பெரியார் அந்த மாநாட்டில் இருந்தும், காங்கிரசில் இருந்தும் வெளியேறினார்.

முகப்பு ஓவியம்: நன்றி – ஓவியர் சிகரன் (https://www.facebook.com/oviyarchikaran.prabakaran/)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *