வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதி ஆகிக் கொண்டிருக்கின்றன. 2001 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றத் தேர்தலில் பிரதான கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு சிறு கட்சிகள் மற்றும் சாதி சங்கங்களின் மேல் சவாரி செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. கடந்த காலங்களில் தங்கள் வாக்கு வங்கியைக் காட்டுவதற்காக அவர்களை தங்கள் சின்னங்களில் போட்டியிட வைத்து பலன் அடைந்துவந்த பாஜக, தற்போது தங்கள் கூட்டணியில் அவர்களுக்கு எந்த இடமும் இல்லாமல் செய்துவிட்டு தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டுள்ளது.
அப்படி பாஜக-வை நம்பி அவர்களுக்காக வேலை செய்து, தற்போது எந்த சீட்டும் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் சில கட்சிகளைப் பார்ப்போம்.
பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்
1. ஏ.சி.சண்முகம், புதிய நீதிக் கட்சி
2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், தனது கட்சியின் அடையாளத்தை விடுத்து பாஜக-வின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டு 3,24,326 வாக்குகள் பெற்றார் ஏ.சி.சண்முகம். அதே தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா பெற்றது 1,33,763 வாக்குகள் மட்டும்தான்.
புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் தனது சொந்த செல்வாக்கில் தாமரை சின்னத்தில் நின்று வாங்கிய வாக்குகளை, பாஜக தனது வாக்கு வங்கியை பெருக்கிக் காட்டுவதற்கு பயன்படுத்திக் கொண்டது.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்ற பாஜக ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 8,19,577 வாக்குகள் தான் பெற்றது. ஆனால் 2014 பாராளுமன்றத் தேர்தலில் தனது வாக்குவங்கியை பெரிதுபடுத்தவும், சின்னத்தை பிரபலப்படுத்தவும், கட்சியை வளர்க்கவும் மிக சாதூர்யமாக ஏ.சி.சண்முகத்தை பயன்படுத்தியது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் அவரை கழட்டிவிட்டது.
பின்னர் மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேரதலில், திமுக-வின் பலமான வேட்பாளரான கதிர் ஆனந்தை வீழ்த்தும் நோக்கத்துடனும், தங்கள் தேர்தல் செலவினங்களுக்கான நிதிக்கும் ஏ.சி.சண்முகத்தை பயன்படுத்திக் கொண்டது. தற்போது மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு கூட்டணியில் எந்த இடமும் பெற்றுத் தராமல், பாஜக பெற்ற இடத்திலும் எதையும் தராமல் வெளியேற்றியுள்ளது.
2. வின் டிவி தேவநாதன்
2016 சட்டமன்றத் தேர்தலில் 24 தொகுதிகளில் பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியை கூட்டிக் காட்டவும், தமிழக கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளைகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்ட தேவநாதன், கடைசியாக மோடி வந்தபோது கால் கடுக்க காத்திருந்தாலும் கூட்டணியில் ஒரு இடம் கூட கொடுக்காமல் தவிர்த்திருக்கிறது பாஜக.
3. வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் கே.கே.செல்வகுமார்
முத்தரையர் சங்கத்தின் ஒரு பிரிவினைப் பயன்படுத்தி சாதிக் கலவரம் ஒன்று தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. அந்த விவகாரத்தின் பின்னணியில் முக்கியமானவராக பேசப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராக செயல்பட்ட கே.கே.செல்வகுமார்.
தொடர்ச்சியாக தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகள் அந்த சமூகத்தை புறக்கணிப்பதாக ஒரு போலி பிரச்சாரத்தை நடத்தி அந்த சமூக மக்களிடம் வலுவாக ஆர்.எஸ்.எஸ் ஊடுருவியது. தற்போது ஆர்.எஸ்.எஸ்-சின் விசுவாசியாக செயல்பட்டு முத்தரையர் சாதி மக்களுக்குள் பாஜக-வினை வளர்க்க வேலை செய்த, வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வகுமருக்கு எம்.எல்.ஏ ஆசையை ஊட்டிவிட்டு தற்போது கழட்டிவிட்டுள்ளது.
அதனால் தான் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அறிவித்த நிலையில் நேற்று வீர முத்தரையர் முன்னேற்ற சங்கமும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
பாஜகவுக்கு அறிமுகம் இல்லாத கிராமங்கள் வரை அவரகளை அழைத்துச் சென்ற சாதிக் கட்சிகள் அவர்களுக்கு இனி தேவை இல்லை பாஜக முடிவெடுத்துவிட்டது.
4. மருத்துவர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம்
90-களின் துவக்கத்தில் தென் மாவட்டங்களின் சமுக நீதி மற்றும் சாதி ஒழிப்பு அரசியல் பேசி வலுவான கட்சியாக உருவானது புதிய தமிழகம். 1996 தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி. 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இரண்டு சட்டமன்ற தொகுகளை பெற்று இரண்டிலும் வெற்றி பெற்றது புதிய தமிழகம் கட்சி.
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர்ந்த புதிய தமிழகம் தென்காசி தொகுதியில் போட்டியிட்டது. தேர்தல் உடன்பாட்டோடு நிற்காமல் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பட்டியல் வெளியேற்றம் எனும் ஆர்.எஸ்.எஸ்-சின் பிரச்சாரத்தை தென் மாவட்டங்கள் முழுவதும் கொண்டு சென்றார்.
ஏற்கனவே பல தொண்டு நிறுவனங்கள் வழியாக இந்த பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் தற்போது தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் மாற்ற அறிவிப்பினை செய்ததோடு மட்டும் நில்லாமல், சென்னையில் மோடி பேசும் போது ”நான் நரேந்திரன் நீங்கள் தேவேந்திரர்” என்று பெருமையை தூண்டிவிட்டு ஆழமாக அந்த சமூகத்திற்குள் ஊடுருவியது.
தற்போது புதிய தமிழகத்தை கறிவேப்பிலையாக வெளியே எடுத்து வைத்துள்ளது. இதனை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கூட்டணி குறித்து ஒரு பேட்டி கூட கொடுக்க முடியாமல் நிற்கிறார் மருத்துவர் கிருஷ்ணசாமி.
பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்-சும் தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தில் பல்வேறு சாதி சங்கங்களையும், கட்சிகளையும் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொண்டு தற்பொழுது அவர்களை தூக்கி எறிந்துள்ளது. பாஜகவின் அதிவிசுவாசியாக மாறி நிற்கும் சிறு கட்சிகளுக்கும், சாதி சங்கங்களுக்கும் இந்த நான்கு கட்சிகளின் நிலையே பாடமாக மாறியுள்ளது.