V.P.Singh OBC Reservation

ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது என்பது, இந்தியாவில் மதச்சார்பின்மை கேள்விக்குள்ளான நாளாகவே வரலாற்றில் பார்க்கப்படும். அடிக்கல் நாட்டலைத் தொடர்ந்து பாஜக-வின் தலைவர்கள் பாபர் மசூதியை இடித்த வன்முறையாளர்களை தியாகிகளாக கொண்டாடிய விதமானது, இந்தியாவின் சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடு ஆகியவற்றை காலில் போட்டு மிதித்ததாகவே ஜனநாயகவாதிகளால் உணர முடிகிறது. 

இந்துத்துவ சக்திகளின் இந்த சர்வாதிகார ஆட்டத்தின் கீழ் சிறுபான்மையினரைப் போலவே, பிற்படுத்தப்பட்ட சமூக(OBC) மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆம் இந்துத்துவ சித்தாந்தம் என்பது வெறும் பார்ப்பனிய உயர்சாதி நலன் சார்ந்ததாகத்தான் இங்கு செயல்படுகிறது.

எது முக்கியம் ஆகஸ்ட் 5 அல்லது ஆகஸ்ட் 7?

தற்போது ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டல் என்பதுதான் இன்று முக்கியக் கொண்டாட்டமாகவும், விவாதமாகவும் இருக்கிறது. பல்வேறு தியாகங்களைச் செய்து சமூகநீதியை நிலைநாட்ட முயன்ற பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்களின் உழைப்பு இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட (OBC) சமூக மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த இட ஒதுக்கீடானது, இந்துத்துவ பார்ப்பனிய சித்தாந்தவாதிகளால்  பறிக்கப்படுவதைக் கூட மறந்துவிட்டு ராமர் கோயில் கொண்டாட்டங்களில் OBC பிரிவினர் மூழ்கியுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர்(OBC) உரிமை மீட்பு என்ற அடிப்படையில் ஆகஸ்ட் 5 என்ற தேதியை விட, ஆகஸ்ட் 7 என்பதுதான் வரலாற்றில் முக்கியமான நாள். எதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டுமோ, எதைக் கொண்டாட வேண்டுமோ அதை அடியோடு மறந்துவிட்டவர்கள் பின்நோக்கி பார்க்க வேண்டிய தருணம் இது.

இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக அனைத்து அதிகாரத்தினையும் பிறப்பின் வழியாகப் பெற்று, அதிகாரவர்க்கமாகவும், நிலவுடமையாகவும், பார்ப்பனிய உயர்சாதி வர்க்கம் ஆக்கிரமித்து வருகிறது. இத்தகைய சமமற்ற போக்கை சரிசெய்யும் விதமாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க ஒரு நெடிய போராட்டம் இந்த மண்ணில் நிகழ்ந்தது. 

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், 1990 ஆகஸ்ட் 7-ம் தேதி விபி.சிங் அரசு மத்திய அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டை OBC என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கி உத்தரவிட்டது. OBC மக்களின் நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது. 

அந்த இடஒதுக்கீட்டு கொள்கைகளை  மையமாக வைத்துதான் 80-களில் பல்வேறு தலைவர்கள் இந்தியாவில் உருவானார்கள். தான் சார்ந்த பிற்படுத்தப்பட்டோரை ஒன்றுதிரட்டும் விதமாக பல கட்சிகள் வலுப்பெற்றது. 

அந்த ஒன்றுதிரட்டல் என்பது இந்தியாவின் புராதன பாரப்பனிய அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நின்று மரபு. அந்த போராட்டத்தினூடாக அரசியல் அதிகாரம் அடைந்த தலைவர்களும் கட்சிகளும் தங்களது போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவிக்க மறந்துவிட்டனர். ஏன் குறைந்தபட்சம் இந்த ஆகஸ்ட் 7  என்ற தேதியைக் கூட நினைவுகூர்ந்து கொண்டாட மறந்துவிட்டனர்.

27% OBC இடஒதுக்கீட்டினூடாக இன்று படித்து, அரசு வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கு அதற்குப் பின்னால் இருக்கும் போராட்டத்தையும், அதற்கு எதிராக நடந்த சூழ்ச்சிகளையும் நினைவுபடுத்த மறுக்கிறார்கள். 

இட ஒதுக்கீட்டின் வரலாறு

1902-ம் ஆண்டு கோலாப்பூரில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீடு முதன்முதலாக உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மைசூர் மகாராஜா 1921-ம் ஆண்டு தனது சமஸ்தான பதவிகளில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். இவற்றை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாருக்கு 48% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. 

சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் 1953-ம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை வழங்கியது. ஆனால் அது அன்றைய உள்துறை அமைச்சர் ஜிபி பான்ட்(GB Pant)-ஆல் நிராகரிக்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன காரணம் இடஒதுக்கீட்டால் நிர்வாக செயல்திறன் குறைந்துவிடும் என்பதுதான்.

பின் 1978-ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை நிறுவியது. 1980-ம் ஆண்டு மண்டல் குழு OBC பிரிவினருக்கு மத்திய அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீட்டை வழங்க பரிந்துரைத்தது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதற்குள் இந்திரா காந்தி ஆட்சி வந்ததால் அது கிடப்பில் போடப்பட்டது. பின் பல்வேறு தடைகளைத் தாண்டி 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாள் நடைமுறைக்கு வந்தது. 

அன்றைய குடியரசுத் தலைவர் கியானி செயில் சிங் அவர்களிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் B.P.மண்டல்

இடஒதுக்கீட்டு உரிமையை வென்றெடுக்க ஏறத்தாழ 90 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்த நெடிய போராட்டத்தின் சுவடுகளையும் மறந்து, சமூக அரசியல் போராட்டங்களின் நியாயங்களை புறந்தள்ளி அனைவரின் மனதிலும் ஆகஸ்ட் 5 என்ற ராமர் கோயில் நிகழ்வை நம் மனதில் பதிய வைக்கும் நிகழ்வு ஆபத்தானது.

பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்ட ராமர் சிலை

இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகள் ஒன்று கூடி டிசம்பர் 22, 1949 அன்று இரவோடு இரவாக பாபர் மசூதியின் மதில்சுவரின் மீது ஏறி குதித்து, ராமர் சிலையை அங்கே வைத்துவிட்டு ராமர் பிறந்த இடத்தில் திரும்பவும் அவதரித்துவிட்டார் என்ற ஒரு பரப்புரையில் ஈடுபட்டனர். அதற்குப் பின் அயோத்தியை சுற்றியிருந்த இந்துக்களை அழைத்து ராமரை வழிபடுவதாக கூட்டம் சேர்த்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

அதை சமாளிக்க அன்றைய காங்கிரஸ் அரசு பாபர் மசூதியைப் பூட்டியது. பின் ராமர் சிலையை வழிபட நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டது. பல்வேறு அத்துமீறல்களுக்குப் பிறகு 1986 பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாபர் மசூதிக்குள் இருக்கும் ராமர் சிலையை வழிபட நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால் இஸ்லாமியர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. பின் 1992-ம் ஆண்டு பல்வேறு ரதயாத்திரைகள் நடத்தி, ராமர் நிலத்தை மீட்டெடுக்க பாபர் மசூதியை இடிப்போம் என்று அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் கரசேவகர்களை ஒன்றுதிரட்டி 1992 டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்திய குடிமக்களின் மனதில் டிசம்பர் 6 என்ற தேதி கசப்பான நினைவுகளை பதியவைத்து விட்டது. 

ஜெய் மண்டல் எனும் முழக்கமே தேவை

ஆகஸ்ட் 7-ம் தேதியை மையமாக வைத்து இந்துத்துவா சக்திகள் ஒரு மாற்று நினைவைக் கட்டியமைத்துள்ளது. அந்த நினைவு பார்ப்பனிய சித்தாந்தம்  இடஒதுக்கீட்டினை ஒழிக்க முயல்வதையும், சமூகநீதியை புறக்கணிப்பதையும் மறைக்கிறது. இந்துத்துவா சக்திகள் சாதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரை ஒன்று திரட்டி சிறுபான்மையினருக்கு எதிராக நிறுத்தும் இந்த போக்கை முறியடிக்க, நாம் ஆகஸ்ட் 7-ன் நினைவுகளை மீண்டெழுப்ப வேண்டும். இங்கு மண்டல் என்ற பதம் பெரும் முழுக்கமாக முழங்கப்படவேண்டும். 

பிற்படுத்தப்பட்டோர்-ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை சிதைப்பு

1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இந்துத்துவா சக்திகள் பெரும் எழுச்சி பெற்றது. இருந்தும் 1993-ம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. அதற்கு பிற்படுத்தப்பட்ட மக்களும்(OBC) ஒடுக்கப்பட்ட மக்களும்(SC/ST) சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் ஒன்றிணைந்து நின்றதுதான் காரணம். இந்த போக்கை உணர்ந்த இந்துத்துவா சக்திகள் 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோருக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் இடையிலான அரசியல் ஒற்றுமையை சிதைத்தது. பின் அந்த வெறுப்பின் மூலமாகத்தான் அறுவடை செய்து வருகிறது.  

இன்றைய சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்படும் கிரீமி லேயர் முறையை தடுத்திட வேண்டுமென்றால், அதற்கு பிற்படுத்தப்பட்டோர்-ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை முக்கியம். அதேபோல் அரசியல் சாசனத்திற்கு மாறாக கடந்த ஆண்டு  பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50% ஆகத் தான் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை அது மீறுகிறது. அப்படியிருந்தும் உச்சநீதிமன்றம் அதனை எதிர்க்கவில்லை. ஆனால் மண்டல் பரிந்துறையை உச்சநீதிமன்றம் எதிர்த்தது.

OBC இட ஒதுக்கீடு பறிப்பு

2017-ம் ஆண்டிலிருந்து மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகிதம் மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 11000 மருத்துவ இடங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் இழந்துள்ளனர். கடந்த வாரத்தில்தான் இதுகுறித்து மத்திய அரசு ஒரு குழு அமைத்து சரிசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில்வே துறை துவங்கி, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தி வருவதால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்கள் தங்களது உரிமையை இழந்து வருகின்றனர். தனியார்மயம் முற்றிலுமாக சமூகநீதிக்கு எதிராக நிற்கிறது. இன்று பெரும்பான்மையான குரூப்-4 அரசு வேலைகள் தனியாரிடம் அவுட்சோர்சிங் மூலமாக பெறப்படுகிறது. இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான  மக்கள் நிரந்தர வேலைவாய்பை இழக்கின்றனர். 

இன்றைய சூழ்நிலையில் மருத்துவம், பொறியில், சட்டம் போன்ற உயர்கல்விப் பிரிவுகளை ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மாநில இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்குவதாக அமைகிறது. இது ஆளும் இந்துத்துவா சக்திகளின் திட்டமிட்ட செயல். மக்கள் தொகையில் 52 சதவிகிதமாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை  27% உச்சவரம்பாக வைத்துள்ளது. இது அநீதியானது. இந்த போக்கு சமூகநீதிக்கு எதிரானது. உரிய இடஒதுக்கீட்டைத் தடுப்பதும், ஏற்கனவே இருக்கும் உரிமைகளை தடுப்பதும் OBC மக்களுக்கு எதிரான செயல்முறையாகும். சமூகநீதிக்கு எதிரான இந்த பார்ப்பனிய மனோபாவத்தைத் தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 

இதுபோன்று சமூகநீதிக்கு எதிரான சூழ்ச்சிகளை இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து OBC மற்றும் தலித்மக்கள் மீது திணித்துவருகிறது. இந்துக்களாக ஒன்றிணைவோம் என்ற முழுக்கத்திற்குள் சாதியாக, வர்க்கமாக பிரித்து மைய சிக்கல்களை நோக்கி நகராமல் மக்களைப் பார்த்துக் கெள்கிறது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய ஆகஸ்ட் 5 என்ற தேதி நினைவில் கொள்ள வேண்டிய நாள் அல்ல. ஆதிக்க வர்க்கத்திடமிருந்து பிற்படுத்தப்பட்டோர் உரிமையைப் பெற, ஒன்று திரண்டு நிற்கவேண்டிய அரசியல் தேவையை உணர்த்தும் நாள் ஆகஸ்ட் 7.  இந்திய ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கீட்டை பெறுவதற்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமையை உணர்த்தும் குறீயிடுதான் ஆகஸ்ட் 7. 

ஜெய் மண்டல் என்று முழங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *