முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.

முல்லைப்பெரியாறு அணை ஒரு வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கும் ஒரு வாட்டர் பாம் என்றுதான் கேரளாவில் பரப்புரை செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் மக்களின் உயிர் போய்விடும் என்று தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. மலையாள நடிகர்கள் ப்ரித்விராஜ் போன்றோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அணை கட்டி 100 ஆண்டுகளுக்கும் மேலே ஆகிறது. அவர்களின் அச்சத்தில் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது என்று நமக்கு தோன்றலாம். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் முக்கியம் தான். ஆனால் அதைவிட கேரள மக்களுக்கு அவர்களின் உயிர் முக்கியம் தானே என்றும் ஒரு கேள்வி எழலாம்.

இப்போது நாம் இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான வாதங்களை ஒதுக்கிவைத்து விட்டு, உண்மைகள் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம். முல்லைப் பெரியாறு அணை உடையுமா, ஒருவேளை உண்மையிலே உடைந்தாலும் அதனால் என்ன பாதிப்பு வரும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முல்லைப்பெரியாறு அணை அறிமுகம்

முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 176 அடியாகும். அதில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தும் உரிமையை தமிழ்நாடு வைத்திருந்தது. முல்லைப் பெரியாறு அணையின் அமைவைப் பொறுத்தவரை கீழிருந்து 104 அடி வரை உள்ள தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே 104 அடி வரையிலான தண்ணீரைப் பயன்படுத்தவே முடியாது. இந்த 104 அடியை டெட் ஸ்டோரேஜ் என்று சொல்வார்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டிற்கு பயன்படுத்த முடிந்த 152 அடி தண்ணீர் என்பதில் வெறும் 48 அடி தண்ணீரைத் தான் தமிழ்நாட்டிற்கு பயன்படுத்த முடியும். அதுவும் பின்னாட்களின் 142 ஆக குறைக்கப்பட்டு விட்டதால் தற்போது வெறும் 38 அடி தண்ணீர் தான் தமிழ்நாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனையும் 136 அடியாக குறைப்பதற்கான வேலைகளை கேரள அரசு தொடர்ந்து செய்து வந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை டெட் ஸ்டோரேஜ்

முதலில் முல்லைப் பெரியாறு அணை குறித்த வரலாற்றினைப் பார்ப்போம்.

17, 18-ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. ஏராளமானோர் பசியினாலும், நோயினாலும் மாண்டனர். தண்ணீர் பஞ்சமும், உணவுப் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அதே சமயத்தில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் சிவகிரி பகுதியில் உருவான பெரியாறு கேராளவுக்குள் பாய்ந்து அங்கு முல்லையாற்றுடன் கலந்து பெரிதாக எந்த பயன்பாடுமின்றி அரபிக் கடலில் கலந்து கொண்டிருந்தது.

அப்போது 1778-ம் ஆண்டில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் அமைச்சர் முத்து அருளப்பிள்ளை முதன்முதலில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து பெரியாற்றின் தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திருப்பி விடுவதற்கு வழி இருக்கிறதா என ஆராய்வதற்கு அனுப்பினார். அக்குழுவினர் ஆராய்ந்து பெரியாற்றின் தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திருப்புவதற்கு அனைத்து சாத்தியக் கூறுகளும் இருப்பதை தெரிவித்தனர். ஆனால் அத்திட்டத்தினை அமல்படுத்துவதற்கு போதிய நிதி வசதி இல்லாததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

அதன்பிறகு 1884-ல் 62 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆங்கிலேய அரசு பெரியாற்றின் குறுக்கே அணை கட்ட முடிவெடுத்தது. 1887-ல் முல்லைப்பெரியாறு அணையை ஆங்கில அரசு கட்டத் துவங்கியது. 1889-ல் பென்னிகுயிக் எனும் பொறியாளரால் கட்டி முடிக்கப்பட்டது. இடையில் பல்வேறு வெள்ளங்கள் காரணமாக பாதியிலேயே அணைக் கட்டுமானங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், இதற்கு மேலும் நிதி ஒதுக்க முடியாதென்று ஆங்கிலேய அரசு அணை கட்டுவதை பாதியிலேயே நிறுத்தியது. அப்போது அணையின் பொறியாளராக இருந்த பென்னி குயிக் அவர்கள் மக்களின் நிலையைப் பார்த்து மனமிறங்கி லண்டனுக்குச் சென்று தனது சொத்தை விற்று பணம் கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

கட்டுமானத் தொழிலாளர்களுடன் பென்னிகுயிக்

இதற்காக அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்துடன் ஆங்கிலேய அரசு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அணையின் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு 8000 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. அதற்காக 999 வருட காலத்திற்கு 8000 ஏக்கர் நிலங்களின் உரிமையை தமிழ்நாட்டிற்கு அளிக்கும் வகையிலான ஒப்பந்தம் போடப்பட்டது. அணையின் பராமரிப்பு பணிகளையும் தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதியில் இருக்கிறது. இப்பகுதியில் பெரும்பாலும் தமிழர்கள்தான் வசிக்கிறார்கள். கூனியாறு தமிழ் சமஸ்தானத்தின் கீழ்தான் இப்பகுதி இருந்து வந்தது. இப்பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக நினைத்து ஆங்கிலேயர்கள் திருவாங்கூர் மன்னருடன் அணை கட்ட ஒப்பந்தம் போட்டனர். அதற்குப் பிறகு 1956-ல் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருவாங்கூர் சமஸ்தானம் கேரளாவோடு இணைக்கப்பட்டது. அப்போது 90% சதவீதம் தமிழர்கள் வாழ்ந்த தேவிகுளம், பீர்மேடு பகுதியும் கேரளாவோடு இணைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் இன்றுவரை நடைபெறும் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக மாறிவிட்டது.

பெரியாறு ஆறு தமிழ்நாட்டில்தான் உற்பத்தியாகிறது. பெரியாறு தமிழ்நாட்டில் சிவகிரி மலையில் தொடங்கி முல்லை ஆற்றில் கலந்து முல்லைப் பெரியாறாக மாறி கேரளாவில் பாய்கிறது. அதன் காரணமாக முல்லைப் பெரியாறு நீரின் மீதான முழுமையான உரிமை தமிழர்களுக்கு இருக்கிறது.

முல்லைப் பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டிற்கு எப்படி வந்து சேருகிறது?

இப்போது தமிழ்நாட்டின் எல்லை குமுளி பகுதியோடு முடிகிறது. முல்லைப்பெரியாறு அணை குமுளியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கிறது. அணை கேரளாவில் இருந்தாலும், அணையை இயக்குவது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை தான்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் 2 கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டி தேக்கடி பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. தேக்கடியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் 2 கி.மீ தூரத்துக்கு சுரங்கம் குடையப்பட்டு, அதன் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்து சுருளி ஆற்றோடு கலக்கிறது. இந்த சுரங்கம் கட்டும் பணி மிகச் சவால் வாய்ந்ததாய் இருந்ததால் பலரும் இப்பணியை பாதியில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் லோகன் என்ற ஆங்கில பொறியியலாளர் இச்சவாலை உறுதியாக ஏற்று சுரங்கத்தை முடித்தார்.

கட்டுமானத்தின் போது முல்லைப்பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு தண்ணீரைப் பயன்படுத்தி 2,08,000 ஏக்கர் விவசாயம் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் நடக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு இந்த தண்ணீர் தான் முக்கிய ஆதாரம். 400 கோடி மதிப்பிற்கு உணவு உற்பத்தி இதன் மூலம் நடைபெறுகிறது. 10 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த நீரை நம்பித்தான் இருக்கிறது. மேலும் மிக முக்கியமாக 4 மாவட்டங்களில் 60 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லைப் பெரியாறு தண்ணீர் விளங்குகிறது.

சிக்கலின் துவக்கமும், காரணமும்

1979-ம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட அணை கட்டி 80 ஆண்டுகளுக்கு அணை தொடர்பாக பெரிய பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்தன. அவை அவ்வப்போது கலையப்பட்டது.

ஆனால் 1976-ல் நீர்மின்சாரம் தயாரிப்பதற்காக கேரள அரசாங்கம் இடுக்கி பகுதியில் ஒரு மிகப்பெரிய அணையைக் கட்டியது. இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரியதாகும். இந்த அணையைக் கட்டிய பிறகு பெரிய அளவிற்கு நீர்வரத்து இல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கி வைப்பதால் தான் இடுக்கி அணைக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை என்று கருத்து எழுப்பப்பட்டது.

இடுக்கி அணை

அந்த நேரத்தில் தான் 16.10.1979 அன்று மலையாள மனோரமா பத்திரிக்கை முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது என்று ஒரு பொய்யான கட்டுரையை வெளியிட்டது. அணையில் இருந்த சின்னச் சின்ன துளைகளை படமெடுத்து அணையில் நிலநடுக்கத்தால விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் அணை உடையப் போகிறது என்று அச்சத்தைப் பரப்பியது. இன்றுவரை முல்லைப் பெரியாறு அணை குறித்து இரண்டு மாநிலங்களுக்கு இடையிலும் நடக்கும் சர்ச்சைக்கு மலையாள மனோரமா பத்திரிக்கையே மூல காரணமாக இருக்கிறது.

மலையாள மனோரமா இப்படி கட்டுரை வெளியிட்ட பிறகு, கேரள அரசாங்கமும் அணை உடையப் போகிறது என்று சொல்ல ஆரம்பித்தது. ஒன்றிய நீர்வள ஆணையத்தில் அப்போது தலைவராக இருந்த கே.சி.தாமஸ் அணையைப் பார்வையிட்டார். முதலில் அணை வலுவாக இருக்கிறது என்று தெரிவித்த அவர், அடுத்த 2 நாட்களில் திருவனந்தபுரம் சென்று அணையை பலப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும் என்று மாற்றிப் பேசினார். அப்போது தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அணையை 3 கட்டங்களாக பலப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. பலப்படுத்தல் பணிகள் முடியும் வரை முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் அதிகபட்ச தண்ணீரின் அளவை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. இது முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட முதல் பின்னடைவாகும்.

100 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதால் அணையை உடைக்க வேண்டுமா?

முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால், அணை பலமிழந்துவிட்டது, அதனால் இந்த அணையை உடைக்க வேண்டும் என்பதுதான் கேரளாவில் நடைபெறும் பிரச்சாரத்தின் முதன்மையான விடயமாக இருக்கிறது. அப்படிப்பார்த்தால் இந்தியாவில் 209 அணைகள் 100 ஆண்டுகளுக்கும் பழைய அணைகள் தான். குறிப்பாக 7 அணைகள் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. கர்நாடகாவின் தொன்னூர் டேங்க் அணை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கரிகாலன் கட்டிய கல்லணையும் 2000 ஆண்டுகளைத் தாண்டி இன்னும் வலிமையோடு நிற்கிறது. உலகின் பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இன்னும் பயன்பாட்டில் இருக்கிற அணைகள் இருக்கவே செய்கின்றன.

முல்லைப் பெரியாறு அணை இரண்டு பக்கங்களிலும் சுண்ணாம்புக் காரை கொண்டு பூசப்பட்ட ஒரு கருங்கல் கட்டிடமாகும். அணையின் உயரம் 162 அடி. சிமெண்ட் கான்கிரீட் கொண்டு அணையின் கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், வழக்கமாக 90லிருந்து 100 அடிக்கு அடித்தளம் போடப்படும். ஆனால் சுண்ணாம்புக் காரையால் பூசப்பட்ட முல்லைப்பெரியாறு அணையில் 140 அடி அகலத்திற்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது.

மூன்று கட்டமாக நடந்த பலப்படுத்தல் பணிகள் பின்வருமாறு

  1. ஆர்.சி.சி கேப்பிங் (RCC Caping)
  2. கேபிள் ஆங்கரிங் (Cable Anchoring)
  3. ஆர்.சி.சி பேக்கிங் (RCC Backing)

ஆர்.சி.சி கேப்பிங்

முல்லைப் பெரியாறு அணையை புவி ஈர்ப்பு அணை (Gravity Dam) என்று குறிப்பிடுவர். அதாவது அணையின் தண்ணீர் கொடுக்கிற அழுத்தம், நில அதிர்வு இவை இரண்டையும் அணையானது தனது எடையின் பலத்தால் தாங்குகிறது. அணையின் எடை எவ்வளவு கூடுகிறதோ அவ்வளவிற்கு அணை வலுவானதாக மாறும்.

முல்லைப் பெரியாறு அணையில் 21 அடி அகலத்திற்கு ஒரு கான்கிரீட் அமைப்பு செய்யப்பட்டு அது அணைக்கு மேலாக ஒரு கேப் மாதிரி பொருத்தப்பட்டது. இதன்மூலமாக அணையின் எடை 12,300 டன் அதிகப்படுத்தப்பட்டது. இதுதான் ஆர்.சி.சி கேப்பிங் என்று சொல்லப்படுகிறது.

ஆர்.சி.சி கேப்பிங் மாதிரி வரைபடம்

கேபிள் ஆங்கரிங்

கேபிள் ஆங்கரிங் என்று ஒரு அமைப்பு அணைக்குள் பொருத்தப்பட்டது. அதாவது இதனை நங்கூரம் அடிப்பதைப் போன்றது. அணைக்கு மேல் பகுதியில் இருந்து அடியில இருக்குற பாறையின் கீழ் 30 அடி வரைக்கும் 4 இன்ச் அளவுக்கு பல துளைகள் அணையில் போடப்பட்டது. அந்த துளைகளில் 7 மி.மீ அளவுள்ள 34 கம்பிகளை ஒன்றாக சேர்த்து கட்டி, உள்ளே அனுப்பப்பட்டது. இதன் மூலமாக அணையினை அடித்தளப் பாறையோடு இணைத்து இழுத்துப் பிண்ணி பலப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதுபோல் அணையில் ஒவ்வொரு 9 அடிக்கும் ஒரு துளை போடப்பட்டு மொத்தம் 95 துளைகள் போடப்பட்டு கம்பிகள் அதிக விசையில் உள்ளே அனுப்பப்பட்டன. இதன் மூலமாக அணையின் மேற்பரப்பினை பாறைகள் வலுவாக பிடித்துக் கொள்வதற்கன ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலமாக நில அதிர்ச்சி வந்தால் கூட அணையை இந்த கம்பிகள் இழுத்துப் பிடித்து வைத்திருக்க முடியும்.

கேபிள் ஆங்கரிங்

ஆர்.சி.சி பேக்கிங்

எளிமையாக இதனை சொல்வதென்றால் தாங்கு அணை என்று சொல்வார்கள். அணையை பின்னாலிருந்து தாங்கிப் பிடிப்பது போல அணையின் பின்பகுதியில் 32 அடி அகலத்திலான ஒரு கான்கிரீட் சுவரை பொருத்துவது. அடித்தளத்திலிருந்து 10 அடியில் தொடங்கி, அணைக்கு மேலே 145 அடி வரைக்கும் அணையை தாங்கிப் பிடிப்பது போன்ற ஒரு உறுதியான சிமெண்ட் கான்கிரீட் போடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை முன்பே உறுதியான அணைதான் என்றாலும், 1979-க்குப் பிறகு அது இன்னும் பல மடங்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆர்.சி.சி பேக்கிங் மாதிரி வரைபடம்

அணையில் நீர்க்கசிவு அணை உடைவுக்கான எச்சரிக்கையா?

அணையில் நீர்க்கசிவு நிறைய இருப்பதாகச் சொல்லி, அணை ஆபத்தில் இருப்பதாக தொடர்ச்சியா பரப்பப்படுகிறது. ஆனால் அணையை மூன்று கட்டங்களாக பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட போது அணையில் இரண்டு முக்கியமான புதிய வடிவமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. அதில் முதலாவதாக இரண்டு ட்ரெயினேஜ் கேலரிகள் கட்ட்டப்பட்டது. இந்த கேலரிகள் மூலமா நாள்தோறும் எவ்வளவு தண்ணீர் அணையில் இருந்து கசிகிறது என்று அளவிட்டுக் கொண்டே வருகிறார்கள். அதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், ஒரு அணையில் இருந்து அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் வரை கசியலாம் என்பதற்கு சேஃப்டி அளவு (Safety Value) என்ற அளவு நிர்ணயிக்கப்பட்டு பொருத்திப் பார்க்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் முல்லைப் பெரியாறு அணையில் கசிவதாக சொல்கிற தண்ணீர் மிகமிகக் குறைவு என்றும், அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

ஒன்றிய நீர்வள ஆணையம் முல்லைப் பெரியாறு அணைக்கு நிர்ணயித்த Safety Valueவான அதிகபட்ச நீர்க்கசிவின் அளவு ஒரு விநாடிக்கு 748 லிட்டர், ஆனால் 2001-ம் ஆண்டு நிலநடுக்கம் வந்தபோது கூட அணையிலிருந்து வெளியேறிய அதிகபட்ச நீர்க்கசிவு ஒரு விநாடிக்கு 40.874 லிட்டர் தான்.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு அணையில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு தண்ணி கசிவாக வெளியில் சென்றால்தான் அந்த அணை பாதுகாப்பானதென்று உறுதி செய்யப்படும் என்று முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர் வீரப்பன் தெரிவிக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் வெளியேற்றும் திறன் அதிகப்படுத்தப்பட்டது

அணையைப் பலப்படுத்தும்போது ஏற்படுத்திய இரண்டாவது கட்டுமானம் மதகுகளை பெரிதுபடுத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்தியதாகும். ஒருவேளை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் 152 அடிக்கு மேலே வந்தால், அணையைப் பாதுகாப்பதற்காக உபரி தண்ணீரை வெளியேற்றுவதற்கு ஒரு விநாடிக்கு 1,22,000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு மதகுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒரு விநாடிக்கு 66,000 கன அடி தண்ணீரை வெளியேற்றினாலே 3 நாட்களில் 16 டி.எம்.சி அளவுக்கு தண்ணீரை வெளியேற்றிவிட முடியும். எனவே முல்லைப்பெரியாறு அணையின் நீர் வெளியேற்றும் திறன் இதனைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். அதனால் எவ்வளவு கன மழை பெய்தாலும் தண்ணீரை வெளியேற்ற முடியும்.

முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள்

அணையின் பலத்தை தினந்தோறும் சோதிக்கும் வழிமுறை

அணையின் பலத்தை சோதிக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அடியாக தண்ணீரை உயர்த்தலாம். ஒவ்வொரு நாளும் அணையில் தண்ணீர் அதிகமாவதால் அணையில் ஏற்படும் அழுத்தத்தினை strain gauge எனும் கருவியைப் பயன்படுத்தி கணக்கிடலாம். ஒவ்வொரு முறை தண்ணீரை அதிகப்படுத்தும்போதும் ஸ்ட்ரெயின் காஜ் கருவியில் பாதுகாப்பான அழுத்தத்தின் அளவு எவ்வளவு என்பதைக் காண்பிக்கும். அந்த அளவை வைத்து அணை எத்தனை அடி வரை தண்ணீரைத் தாங்கும் என்று அளவிடலாம் என்று முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர் ஆர்.வி.எஸ்.விஜயகுமார் கூறுகிறார்.

மீண்டும் பிடிவாதம் பிடித்த கேரள அரசு

அணையைப் பலப்படுத்தும் வேலை என்பது 1981-ல் ஆரம்பித்து 13 ஆண்டுகள் நடைபெற்றது. 1994-ல் தான் நிறைவுற்றது. இந்த பணிகள் முடிவுற்றால் தமிழ்நாடு அரசு அணையில் மீண்டும் 152 அடிக்கு தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் கேரள அரசு அதை அனுமதிக்கவில்லை.

தமிழ்நாட்டிற்கு ஆதரவான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. 2000-ம் ஆண்டில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்த குழு அணையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. 136 அடியில் இருந்து 142 அடிக்கு அணையின் கொள்ளளவை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டது. பேபி அணையை பலப்படுத்துவதற்கும் கேரளா ஒத்துழைக்க வேண்டும் என்றும், அந்த வேலை முடிந்ததும் பழையபடி 152 அடிக்கே தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மீண்டும் உச்சநீதிமன்றம் சென்ற விவகாரம்;தீர்ப்பு தமிழ்நாட்டிற்கே சாதகம்

அதையும் கேரள அரசு மதிக்கவில்லை. 136 அடிக்கு மேலாக உயர்த்தக் கூடாது என்று சட்டமன்றத்தில் சட்டமே கொண்டுவந்தது. மீண்டும் பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. நீதியரசர் ஆனந்த் அவர்களின் தலைமையில் மற்றொரு குழுவினை உச்சநீதிமன்றம் அமைத்தது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அந்த குழு மீண்டும் அணையை ஆய்வு செய்தது. 2014-ல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்தது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பே வந்தது. 142 அடிக்கு தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஒவ்வொரு முறையும் மழைக்காலத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என்ற பிரச்சாரம் தொடர்ந்து கேரள மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு பேச்சுக்கு உடைந்தால் என்ன நடக்கும்?

அணை உடைந்தால் 35 லட்சம் மக்கள் பலியாவார்கள் என்று ஒரு பீதி தொடர்ந்து பரப்பப்படுகிறது. அணை உடையவே உடையாது. ஒருவேளை இயற்கையில் ஏதேனும் மிகப்பெரிய சீரழிவு ஏற்பட்டு, அவர்கள் பரப்புரை செய்வதுபோல் அணையில் உடைப்பு ஏற்பட்டு, மொத்த தண்ணீரும் வெளியேறினால் கூட, இங்கே பயம் காட்டப்படுகிற அளவிற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் நடக்காது. முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே பல பெரிய மலை பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. அந்த பள்ளத்தாக்குகள் வழியாக ஓடுகிற தண்ணீர் இடுக்கி அணையில் தான் போய்ச் சேரும். இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையை விட 7  மடங்கு பெரியது. அதாவது முல்லைப்பெரியாறு அணையின் கொள்ளளவு 7.5 டி.எம்.சி. இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டி.எம்.சி. 7 டி.எம்.சி தண்ணீரை 70 டி.எம்.சி அணையில் எளிதாக தேக்க முடியும்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் போய் சேர்வதற்கான மாதிரி வரைபடம்

ஒருவேளை இடுக்கி அணையும் முன்பே நிரம்பியிருப்பதாகக் கொள்வோம். அப்படி இருந்தாலும் முல்லைப் பெரியாறு அணையின் வெள்ளம் இடுக்கி அணைப்பகுதிக்கு போக வேண்டுமென்றால் 45 கிலோமீட்டர் தாண்டி போக வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது ஆகும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த கால இடைவெளியில் இடுக்கி அணையின் தண்ணீரை தேவையான அளவிற்கு வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துவிட முடியும். ஏனென்றால் இடுக்கி அணையில் இருந்து ஒரு விநாடிக்கு 4 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

முல்லைப் பெரியாறு அணை கடல் மட்டத்திலிருந்து 2709 அடி உயரமாகும். இடுக்கி அணை கடல் மட்டத்திலிருந்து 1853 அடி உயரத்தில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணை 856 அடி தாழ்வாக பள்ளத்தில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே இருக்கிற பள்ளத்தாக்குகள் 200 அடியிலிருந்து 500 அடி வரை ஆழம் கொண்டவை. அதனால் பெரியாறு அணையில இருந்து ஓடுகிற வெள்ளத் தண்ணீர் 100 அடி உயரத்துக்கு ஓடினால் கூட அந்த மலைப்பகுதியில இருக்கிற கிராமங்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் வராது.

மேலும் இடைப்பட்ட பகுதியில் இருக்கிற பல ஊர்கள் பள்ளத்தாக்குகளுக்கு மேலாக மலைப்பகுதியில் உயரமான இடத்தில் இருக்கின்றன. வண்டிப்பெரியார் பகுதி 2722 அடி உயரத்திலும், ஏலப்பாறை பகுதி 3749 அடி உயரத்திலும், பாம்பனார் பகுதி 3488 அடி உயரத்திலும் இருக்கின்றன. இவை முல்லைப்பெரியாறு அணையை விட உயரமான பகுதியில் அமைந்திருப்பதால் இப்பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து விடும் எனச் சொல்லும் வாதத்தில் உண்மை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

எனவே முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்று கேரளாவில் பரப்பப்படுகிற அச்சமூட்டும் பரப்புரை என்பது முற்றிலும் அபத்தமானது. இரு மாநில மக்களுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது. எனவே இப்பரப்புரையினை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும். கேரள ஜனநாயக அமைப்புகள் உண்மையை துணிந்து பேசி தமிழ்நாட்டின் பக்கம் நிற்க வேண்டும். பொய்யைப் பரப்பும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த விரிவான காணொளி Madras Review யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அக்காணொளியை கீழே உள்ள இணைப்பில் காணலாம். அவசியம் Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.

உதவிய தரவுகள் : தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *