எட்டுவழிச் சாலை

காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்

1) எட்டுவழிச் சாலைக்கு எதிராக போராட்டம் 

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 28-ம் தேதி 5 மாவட்டங்களில் பெருந்திரள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28-ல் 5 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குடும்பத்துடன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2) மீண்டும் இந்தி கடிதம் 

மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி சு.வெங்கடேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைகளை சுட்டிக்காட்டும் கடிதங்களுக்கு இந்தியில் மட்டும் பதிலளிக்கும் நடைமுறையை மத்திய அரசு  பின்பற்றுகிறது. இது இந்தி பேசாத மாநில உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உரிமையை மீறுவதாகும். எனவே தமிழக மக்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதவும், மத்திய அமைச்சர் எனக்கு இந்தியில் எழுதிய கடிதத்தை ஆங்கிலத்தில் தரவும், இதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் வழக்கறிஞர் விக்டோரியா கவுரி ஆஜராகி, மதுரை எம்.பி-க்கு ஆங்கிலத்திலும் சேர்த்து கடிதம் எழுதப்பட்டது. தவறுதலாக இந்தியில் எழுதிய கடிதம் சேர்ந்துள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து மத்திய அமைச்சர்  தரப்பில் மீண்டும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதப்பட்டது’’ என்றார்.  

மனுதாரர் வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆஜராகி, இரண்டாவதாக அனுப்பியதாக கூறப்படும் ஆங்கிலக் கடிதம் வந்து சேரவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழும் இந்தியில் தான் கிடைத்தது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு. இங்கு மொழி தொடர்பான பிரச்னைகள் மீண்டும் தொடரக்கூடாது’’ என கூறினர். பின்னர் நீதிபதிகள், மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 18-க்கு  ஒத்தி வைத்தனர்.

3) கல்வி உதவித் தொகை

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான ஆணைகளை  அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிப்பர். அதன்படி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,

”முதுகலை படிப்பு முதல் பாலிடெக்னிக் தொழிற்படிப்பு வரை  படிப்பவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும், விண்ணப்பப் படிவங்களை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் பெற்று கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கும், கோப்புகளை சமர்ப்பிப்பதற்கும் வருகிற 31-ம் தேதி கடைசி நாள் ஆகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) மழையால் விவசாயிகள் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த தென்னல் மற்றும் எஸ்.கொளத்தூர் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் நெல்லைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்வது அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது.

புயல் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து முளைவிட்டு நாற்று போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

5) தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

”தேனி மாவட்டத்தில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி, தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் 253.64 ஏக்கரில் ரூ.265.87 கோடி மதிப்பில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

புதிதாக அமையவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது மதுரை, விருதுநகா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கான மருத்துவத் தேவையைப் பூா்த்தி செய்யும். இந்தக் கல்லூரி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால் பால், இறைச்சி, கால்நடை உற்பத்திப் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

6) தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் மேலும் 1,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 313 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,18,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 10,392 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7) துணை முதல்வர் வீட்டைத் தாக்கிய பாஜக

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் இல்லத்தை தாக்கிய   குற்றவாளிகள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தில்லி காவல்துறையினர் நேற்று தெரிவித்துள்ளனர்.

இதனை தில்லி துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) ஈஷ் சிங்கால் பத்திரிக்கைகளிடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பாஜக உறுப்பினர்கள். அவர்கள் துணை முதல்வரின் இல்லத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அதை நாங்கள் நிராகரித்தோம். அதன்பின் பாஜக-வைச் 150 பேர் வியாழக்கிழமை நண்பகல் 11:30 – 12 மணியளவில் துணை முதல்வர் வீட்டின் முன் கூடினர். நாங்கள் அந்த கூட்டத்தை கலைத்தபோது இந்த ஆறு பேரை மட்டும் கைது செய்துள்ளோம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

8) சக்திதாசன் மறைவு தலைவர்கள் அஞ்சலி

தமிழக குடியரசு கட்சியின் தலைவர் சக்திதாசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அம்பேத்கர், பெரியார் கொள்கைகளிடத்தில் அழுத்தமான பற்று கொண்டவர் சக்திதாசன் என கி.வீரமணி கூறியுள்ளார்.  மக்கள் பிரச்சனைகளில் முன்னின்று போராடக் கூடியவர்,  புத்த மார்க்கத்தை வாழ்வியலாகக் கொண்டவர் எனவும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 9) மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

அலோபதி மருத்துவர்கள் செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி, முதுநிலை படிப்பை முடித்த ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஒன்றிய அரசின் அறிவிப்பைக் கண்டித்து டிசம்பர் 11-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

கொரோனா சிகிச்சைப்பிரிவு, அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தவிர பிற மருத்துவ சேவைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறக்கணிக்கும்படி இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டது

அதன்படி இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *