ஜல்லிக்கட்டு காட்டுப்பள்ளி துறைமுகம்

காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 9 செய்திகள்

1) புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்குபெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு 2017-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு தடை மீண்டு நடத்தப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்துகொள்ளலாம். பார்வையாளர்கள் வெப்பப் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கோவிட்-19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.

இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், இளைஞர்கள் இப்போதே விளையாட்டு போட்டியை நடத்தவும், கலந்துகொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

2) தமிழ்நாட்டில் கொரோனா

தமிழகத்தில் நேற்று 1,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,10,080 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,88,742 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,131 பேர் குணமடைந்துள்ளனர்.

 தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை 12,024 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,23,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3) புரெவி புயல் சேதம் – நிபுணர் குழு வருகை

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகத்துக்கு வர உள்ளனர். அவர்கள் வருகிற 28-ம் தேதி இங்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குழுவில் மத்திய உள்துறை, நிதித்துறை, சுகாதாரத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

4) ராமதாஸ் மனு தள்ளுபடி

தமிழகத்தில் 1989-ம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி மூலம் அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களின் சாதி வாரியான பட்டியலை அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிடக் கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

5) காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக் கேட்பு கூட்டம் 

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டம் தொடர்பாக ஜனவரி 22-ம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளி கிராமத்திற்கு அருகில் காமராஜர் துறைமுகத்திற்கு வடக்கே அமைந்துள்ளதுதான் காட்டுப்பள்ளி துறைமுகம். அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இந்த துறைமுகம் தற்போது 110 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தனர். இந்த விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் எண்ணூர் பகுதியில் மிகவும் மோசமான கடல் அரிப்பு ஏற்படும் எனவும், அருகில் உள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் பழவேற்காடு ஏரி அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், ஏற்கனவே எண்ணூர் பகுதி அதிக அளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த துறைமுகம் விரிவாக்கப்பட்டால் கூடுதலாக காற்று மாசுபடும் அபாயம் இருப்பதாகவும் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

6) 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு; திமுக வழக்கு

2021-ம்  ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தபால் ஓட்டைப் பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரி தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அதனால் அந்த முறையை திரும்பப்பெற வேண்டும் என டிசம்பர் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது.

அதேசமயம் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமகன்களுக்கு என தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் திமுக மனு மீது தேர்தல் ஆணையம் உரிய முடிவெடுக்கவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

7) குடியரசுத் தலைவரை சந்திக்கும் ராகுல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து வழங்குகிறார் ராகுல் காந்தி.

8) பாஜக எம்.எல்.ஏ-வுக்கு DNA டெஸ்ட்

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள உத்தரகாண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நீகி, நாளை (டிச.24) ஆஜராகி டி.என்.ஏ மாதிரிகளை வழங்க நீதிமன்றம் உத்தரவு.

9) மகாராஷ்டிராவில் ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த போது அதில் அதிகமாக பாதிப்பிற்கு ஆளானது மகாராஷ்ட்ரா மாநிலம் தான். எனவே புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிற சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது அம்மாநில அரசு. இன்று முதல் ஜனவரி 5-ம் தேதி வரை இரவு நேரங்களில் வெளியே வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *